ஏகத்துவம் மார்ச் 2007
விமர்சிக்கப்படும் ஹதீஸ்கள்
பி. ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.
இதில் ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் வளைந்து கொடுத்ததில்லை. இந்த அடிப்படைக் கொள்கையில் நம்மிடம் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு அதை அவ்வப்போது பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
நம்மை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிலை ஏற்படாத எந்த அறிஞரும் உலகத்தில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை.
அறிவிப்பாளர் குறித்த விமர்சனங்கள் அடங்கிய அனைத்து நூல்களும் கிடைக்கப் பெறாமை
பொதுவாக மனிதரிடம் காணப்படும் மறதி, கவனமின்மை
ஒருவரைப் பற்றி செய்த விமர்சனத்தை அதே பெயருடைய மற்றவருக்குப் பொருத்தி விடுதல்
இந்தத் துறையில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் செய்த விமர்சனங்களில் தவறு ஏற்படாது என்று எண்ணி அப்படியே அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளுதல்
இது போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.
தவ்ஹீத் ஜமாஅத் மூத்த அறிஞர்களைப் பொறுத்த வரை அவர்கள் அனைவருமே மத்ஹபை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கூடங்களில் தான் கற்றனர். அவர்கள் கற்ற கல்விக் கூடங்களில் ஹதீஸ் கலை குறித்து முறையாகக் கற்பிக்கப்படாததால் அந்தக் கலையைக் கூட சுய முயற்சியால் கற்கும் நிலையில் இருந்தனர்.
இதன் காரணமாகத் தான் துவக்க காலங்களில் சில ஹதீஸ்கள் குறித்து நிலை மாற்றம் ஏற்பட்டது.
தற்போது ஹதீஸ் கலை தொடர்பான அனைத்து நூல்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் நாம் பேசிய, எழுதிய, அங்கீகரித்த ஹதீஸ்களில் பலவீனமானவை உள்ளனவா? என்பதை நமது வாழ்நாளிலேயே மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டது.
மேலும் கடந்த காலங்களில் மக்கள் மன்றத்தில் நாம் வைத்த ஹதீஸ்கள் குறித்து சில அறிஞர்கள் ஆங்காங்கே விமர்சனம் செய்வதும் நமது காதுகளை எட்டியது. மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இது மேலும் உறுதிப்படுத்தியது.
அதன் அடிப்படையிலேயே இந்த மறு ஆய்வுத் தொடரைத் துவக்கியுள்ளோம்.
மற்றவர்கள் செய்யும் விமர்சனங்கள் ஏற்புடையதாக இருந்தால் அதைப் பகிரங்கமாக ஏற்றுக் கொள்வதும், அவர்களின் விமர்சனங்கள் தவறு என்றால் அதைத் தக்க காரணங்களுடன், யாரையும் புண்படுத்தாமல் விளக்குவதுமே இத்தொடரின் நோக்கமாகும்.
சிக்கனமான திருமணமே பரக்கத்தான திருமணம் என்ற ஹதீஸ்
வரதட்சணைக்கு எதிராக நாம் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்ட போது திருமணம் மிகவும் சிக்கனமாக, குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தோம். இன்று வரை அவ்வாறு வலியுறுத்தி வருகின்றோம்.
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியையும் அடிக்கடி மேற்கோள் காட்டி வந்தோம்.
தவ்ஹீத் சகோதரர்களின் திருமண மேடைகளில் தவறாமல் எடுத்துக் காட்டப்படும் ஹதீஸாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.
இந்த ஹதீஸ் குறித்துக் கடந்த காலங்களில் அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தற்போது சில அறிஞர்கள், "இது பலவீனமான ஹதீஸ்” என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
திருமணம் எளிமையாகவும், சிக்கனமாகவும் தான் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆடம்பரத்தையும், வீண் விரயத்தையும் கண்டிக்கின்ற எண்ணற்ற சான்றுகள் உள்ளதால் அவர்களும் சிக்கனமான திருமணத்தையே வலியுறுத்துகின்றனர்.
ஆனால் மேற்கண்ட நபிமொழி பலவீனமானதாக உள்ளதால் அதை ஆதாரமாகக் காட்டக் கூடாது என்பது தான் அவர்களது விமர்சனத்தின் சாரமாக உள்ளது.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது என்ற நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் குறைபாடு உள்ளதால் இது பலவீனமான ஹதீஸாகும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
"இன்ன அஃலமன் நிகாஹி பரக(த்)தன் அய்ஸருஹூ முஃனதன்” (குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது) என்ற நபிமொழி குறித்து அவர்கள் செய்யும் விமர்சனங்களைப் பார்த்து விட்டு அவை சரியானவையா என்பதை ஆய்வு செய்வோம்.
இந்த ஹதீஸ் முஸ்னத் அஹ்மத், முஸ்னத் இஸ்ஹாக், முஸ்னத் தயாலிஸி ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த மஹர் கொடுத்து நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது என்ற கருத்தில் வேறு பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை நாம் இங்கே ஆய்வு செய்யவில்லை.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணத்தைச் சிறப்பித்துக் கூறும் மேற்கண்ட மூன்று ஹதீஸ்களை இங்கே ஆய்வு செய்யவுள்ளோம்.
எதிர் விமர்சனங்கள்
மேற்கண்ட மூன்று நூற்களிலும் கீழ்க்கண்ட அறிவிப்பாளர்கள் வழியாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்னத் அஹ்மத் நூலின் அறிவிப்பாளர் தொடர்
1. மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
2. ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.
3. காஸிம் பின் முஹம்மத் கூறியதாக இப்னுத் துபைல் பின் ஸக்பரா அறிவிக்கிறார்.
4. இப்னுத் துபைல் பின் ஸக்பரா கூறியதாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கிறார்.
5. ஹம்மாத் பின் ஸலமா கூறியதாக அஃப்பான் அறிவிக்கிறார்.
6. அஃப்பானிடம் நேரில் செவியுற்று அஹ்மத் பின் ஹன்பல் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
முஸ்னத் இஸ்ஹாக் அறிவிப்பாளர் தொடர்
1. மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
2. ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.
3. காஸிம் பின் முஹம்மத் கூறியதாக மூஸா பின் பக்ர் அறிவிக்கிறார்.
4. மூஸா பின் பக்ர் கூறியதாக வகீவு அறிவிக்கிறார்.
5. வகீவு கூறியதாக நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
முஸ்னத் தயாலிஸி அறிவிப்பாளர் தொடர்
1. மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
2. ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.
3. காஸிம் பின் முஹம்மத் கூறியதாக மூஸா பின் தலீதான் அறிவிக்கிறார்
4. மூஸா பின் தலீதான் கூறியதாக அபூதாவூத் அறிவிக்கிறார்
5. அபூதாவூத் கூறியதாக நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
முஸ்னத் அஹ்மதில் இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்பவரும்
முஸ்னத் இஸ்ஹாக்கில் மூஸா பின் பக்ர் என்பவரும்
முஸ்னத் தயாலிஸியில் மூஸா பின் தலீதான் என்பவரும்
அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இம்மூவரைத் தவிர மற்ற அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான். மேற்கண்ட மூவர் காரணமாகவே இந்த ஹதீஸ் விமர்சிக்கப்படுகின்றது. எனவே இம்மூவரைப் பற்றிய விமர்சனங்களை மட்டும் மறு ஆய்வு செய்தாலே இந்த ஹதீஸின் தரத்தைக் கண்டு கொள்ளலாம்.
இம்மூவரும் உண்மையில் மூன்று நபர்கள் அல்லர். ஒரே நபர் தான் இம்மூன்று பெயர்களால் குறிப்பிடப் படுகிறார்.
மேற்கண்ட அந்த அறிவிப்பாளர் ஈஸா பின் மைமூன் என்ற பெயராலும் குறிப்பிடப்படுகின்றார்.
ஈஸா பின் மைமூன் பற்றிய விமர்சனம்
இவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள் "முன்கருல் ஹதீஸ்’ (இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படும்) என்று விமர்சனம் செய்துள்ளார்கள்.
திர்மிதீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
இவர் நம்பகமானவர் இல்லை என்று நஸயீ கூறுகிறார்.
அம்ரு பின் அலீ, அபூஹாதம் ஆகியோர், "மத்ரூகுல் ஹதீஸ்’ (இவரது ஹதீஸ்கள் விடப்பட வேண்டியவை) என்று கூறியுள்ளனர்.
"இவர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர்’ என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
"இவர் ஹதீஸ் கலையில் பலவீனமானவர்’ என்று அபூஸுர்ஆ கூறுகிறார்.
"இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறத்தக்க பல ஹதீஸ்களை நம்பகமானவை என்ற பெயரில் இவர் அறிவித்துள்ளார்’ என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.
"இவரது ஹதீஸ்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்று யஃகூப் கூறுகிறார்.
"இவரை அனைவரும் பலவீனராகக் கருதியுள்ளனர்’ என்று தஹபீ கூறுகிறார்.
மூஸா பின் பக்ர் என்றும்,
மூஸா பின் தலீதான் என்றும்
இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்றும்
ஈஸா பின் மைமூன் என்றும்
குறிப்பிடப்படும் இவரைப் பற்றி மேற்கண்டவாறு அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தற்கால அறிஞர்கள் அல்பானி, ஷுஐப் அல்அர்னாவூத் ஆகியோரும், இன்னும் பலரும் மேற்கண்ட ஹதீஸைப் பலவீனமானது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
ஒரு அறிவிப்பாளரைப் பற்றி மேற்கூறப்பட்ட விமர்சனங்கள் இருக்குமானால் அவர் நிச்சயம் பலவீனமானவர் என்பதிலும் அவர் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸ் பலவீனமானது என்பதிலும் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்க முடியாது.
ஆனால் ஆழமாக நாம் ஆய்வு செய்த போது இந்த விமர்சனங்களுக்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று தெரிய வருகிறது.
விமர்சனங்கள் மறு ஆய்வு
ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இரண்டு அறிவிப்பாளர்கள் சம காலத்தில் இருந்துள்ளனர். இருவருமே திருமணம் தொடர்பான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்தது என்ற நபிமொழியை ஒரு ஈஸா பின் மைமூன் அறிவிக்கிறார்.
திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள்!’ என்ற ஹதீஸை மற்றொரு ஈஸா பின் மைமூன் அறிவித்துள்ளார். இருவருமே ஈஸா பின் மைமூன் என்றே குறிப்பிடப்படுகின்றனர்.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பற்றிய ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் நம்பகமானவர்.
"திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள் ‘ என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் பலவீனமானவர்.
இந்த இரண்டாமவரைப் பற்றித் தான் மேலே நாம் சுட்டிக் காட்டிய அறிஞர்கள் மேற்கண்ட கடுமையான விமர்சனம் செய்துள்ளனர். மேற்கண்ட விமர்சனம் எதுவும் முதலாவதாகக் குறிப்பிட்ட ஈஸாவைப் பற்றியது அல்ல என்பது நமக்குத் தெரிய வருகிறது.
இவ்விருவரின் பெயரும் ஈஸா, இவ்விருவரின் தந்தை பெயரும் மைமூன் என்று அமைந்தது போல் இவ்விருவரும் யாரிடம் கேட்டு திருமணம் தொடர்பான ஹதீஸ்களை அறிவிக்கிறார்களோ அவர் பெயர் காஸிம் ஆகும். காஸிம் என்பவரின் தந்தை முஹம்மத் ஆகும்.
ஆனால் இரண்டு காஸிம்களும் வெவ்வேறு நபர்களாவர்.
"திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் கஅப் என்பவரின் பேரனும் முஹம்மத் என்பவரின் மகனுமாவார்.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பற்றிய ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் அபூபக்கர் (இஸ்லாத்தின் முதல் கலீஃபா) அவர்களின் பேரனும் முஹம்மத் என்பவரின் மகனுமாவார்.
இவ்விருவர் பெயரும் ஈஸா பின் மைமூன் என்று இருப்பதாலும் இவ்விருவரின் ஆசிரியர்கள் பெயர் காஸிம் பின் முஹம்மத் என்று இருப்பதாலும் சில அறிஞர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு தவறான முடிவுக்கு வந்துள்ளனர்
இவ்விருவர் பெயரும், இவ்விருவரின் ஆசிரியர் பெயரும், இவ்விருவரின் தந்தை பெயரும் ஒன்று பட்டதால் குழப்பம் ஏற்பட்டாலும் வேறு சான்றுகள் மூலம் இவ்விருவரையும் வேறுபடுத்தி அறிய முடியும்.
ஈஸா பின் மைமூன் என்ற பெயரில்
இருவர் என்பதற்கான ஆதாரங்கள்
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன், (மூஸா) இப்னு தலீதான் என்றும் குறிப்பிடப்படுவார். இவர் அபூகுஹாபாவின் வழித்தோன்றல் ஆவார். இவர் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் போது இப்னு ஸக்பரா என்று இவரைக் கூறுவார். வகீவு, அபூநயீம் ஆகியோர் யார் வழியாக அறிவிக்கிறார்களோ அந்த ஈஸா தான் இவர். இவரிடம் குறைபாடு இல்லை. "திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்’ என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர். இவர் முஹம்மத் பின் கஃபு என்பவர் வழியாக ஹதீஸை அறிவிக்கும் ஈஸா ஆவார்.
நூல்: தாரீகு அஸ்மாயிஸ் ஸிகாத், பாகம்: 1, பக்: 176
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பார், இப்னு தலீதான் என்றும் கூறப்படுவார். இவர் அபூகுஹாபாவின் வழித் தோன்றலாவார். இவரிடம் தவறு இல்லை. இப்னு ஸக்பரா எனக்கு அறிவித்தார் என்று ஹம்மாத் பின் ஸலமா கூறுவது இவரைத் தான். இவர் முஹம்மத் பின் கஅப் வழியாக எதையும் அறிவித்ததில்லை. முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர். இவர் வேறொரு ஈஸா ஆவார்” என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்.
ஆயிஷா, காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாதவர்’ என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக அப்பாஸ் அத்தவ்ரீ கூறிவிட்டு மற்றொரு இடத்தில் "இந்த ஈஸா என்பவர் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான ஈஸா தான் இவர். இவர் தான் பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாதவர்’ என்று தெளிவுபடுத்துகிறார்.
நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 23, பக்: 48
ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் இருந்ததையும் அதில் ஒருவர் தான் பலவீனமானவர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். மேலும் பலவீனமானவர் யார் என்பதற்கு மூன்று அடையாளங்களையும் கூறுகிறார்கள்.
1. திருமணத்தைப் பிரகடம் செய்யுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர்.
2. முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவர்.
3. குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர் அல்ல.
இந்த மூன்று அம்சம் உள்ள ஈஸா தான் பலவீனமானவர்.
மற்றொரு ஈஸா பலவீனமானவர் அல்லர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். இதற்கும் மூன்று அடையாளங்களைக் கூறுகிறார்கள்.
1. குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர்
2. இவருடைய மாணவர் ஹம்மாத் பின் ஸலமா
3. வகீவு, அபூநயீம் ஆகியோர் இவர் வழியாக அறிவித்திருப்பார்கள்.
அம்ரு பின் அலீ, புகாரி, நஸயீ உள்ளிட்டோர் செய்த விமர்சனங்கள் இவரைப் பற்றியதல்ல என்பதைப் பின்வரும் கூற்றுக்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவருமான ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவர் பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று தவ்லாபீ கூறுகிறார்.
முஹம்மத் பின் கஅப் வழியாக நிராகரிக்கத்தக்க ஹதீஸ்களை அறிவித்துள்ள ஈஸா பின் மைமூன் அல்மதனீ, முன்கருல் ஹதீஸ் (இவரது ஹதீஸ்கள் நிரகாரிக்கப்படும்) என்று புகாரி கூறினார்.
முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை என்று அம்ரு பின் அலீ கூறுகிறார்.
முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை என்று நஸயீ கூறுகிறார்.
நூல்: அல்காமில் ஃபில்லுஅஃபா, 5/240
முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸாவையே புகாரி, அம்ரு பின் அலீ, நஸயீ உள்ளிட்டோர் விமர்சனம் செய்துள்ளனர் என்பது இந்த விமர்சனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் புகாரி அவர்கள் எந்த ஈஸாவை விமர்சனம் செய்தார்கள் என்பதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
முஹம்மத் பின் கஅப் மூலம் அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பாரின் ஹதீஸ்கள் நிராகரிக்கப்படும்.
நூல்: புகாரியின் தாரீகுல் கபீர், 6/401
முஹம்மத் பின் கஅப் மூலம் அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அறிவிக்கும் ஹதீஸ்கள் நிகாரிக்கத்தக்கவை.
நூல்: புகாரியின் லுஅஃபாவுல் கபீர், 1/86
ஈஸா பின் மைமூன் என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை என்று நஸயீ அவர்கள் யாரைக் குறிப்பிடுகிறார்கள் என்பதைப் பின்வரும் ஆதாரத்திலிருந்து அறியலாம்.
முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை.
நூல்: நஸயீயின் அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன் 1/76
மேற்கண்ட விமர்சனங்களில் பலவீனமான ஈஸா என்பதைத் தெளிவுபடுத்தும் போது முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவர் என்று குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொள்க!
இப்னு ஹஜர், திர்மிதீ உள்ளிட்டோர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டதும் இரண்டாவது ஈஸாவைப் பற்றித் தான் என்பதைப் பின்வரும் ஆதாரத்திலிருந்து அறியலாம்.
"திருமணத்தைப் பகிரங்கப் படுத்துங்கள்! அதற்காக தஃப் என்னும் முரசு கொட்டுங்கள்!” என்று திர்மிதீ, பைஹகீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர். திர்மிதீயின் அறிவிப்பில் ஈஸா பின் மைமூன் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று திர்மிதியே குறிப்பிட்டுள்ளார்.
நூல்: இப்னு ஹஜரின் தல்கீஸ் 4/201
திருமணத்தைப் பகிரங்கப்படுத்தி, முரசு கொட்ட வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரைத் தான் திர்மிதீ பலவீனப்படுத்தியுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இதைத் திர்மிதீயின் கீழ்க்கண்ட ஹதீஸிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
திர்மிதி அவர்கள் ஈஸா பின் மைமூன் பலவீனமானவர் என்று கூறுவதுடன் "திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்! அதற்காக தஃப் என்னும் முரசு கொட்டுங்கள்!” என்ற ஹதீஸை அறிவிப்பவர் என்பதையும் இணைத்துக் கூறுகிறார்கள்.
இவரை அனைவரும் பலவீனப்படுத்தியுள்ளனர் என்று தஹபீ கூறியதும் இரண்டாவது ஈஸாவைப் பற்றியது தான். இதைப் பின்வருவதிலிருந்து அறியலாம்.
ஈஸா பின் மைமூன் என்பவருடன் அல்மதனீ என்ற அடைமொழியை இணைத்து அவரைப் பலவீனமானவர் என்று தஹபீ கூறுவது இதற்கு ஆதாரமாக உள்ளது.
நூல்: அல்காஷிஃப் 2/113
ஈஸா பின் மைமூன் என்ற பெயருடன் அல்மதனீ என்ற அடை மொழியையும் தஹபீ இனைத்துக் கூறுகிறார். இவர் "திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்! அதற்காக தஃப் என்னும் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர்.
காஸிம் பின் முஹம்மத் என்ற பெயரில்
இருவர் என்பதற்கான ஆதாரம்
இவ்விருவரின் பெயரும் ஈஸா, இவ்விருவரின் தந்தை பெயரும் மைமூன் என்று அமைந்தது போல் இவ்விருவரும் யாரிடம் கேட்டு திருமணம் தொடர்பான ஹதீஸ்களை அறிவிக்கிறார்களோ அவர் பெயர் காஸிம் ஆகும். காஸிம் என்பவரின் தந்தை முஹம்மத் ஆகும்.
ஆனால் இரண்டு காஸிம்களும் வெவ்வேறு நபர்களாவர்.
"திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் கஅப் என்பவரின் பேரனும் முஹம்மத் என்பவரின் மகனுமாவார்.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பற்றிய ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் அபூபக்கர் (இஸ்லாத்தின் முதல் கலீஃபா) அவர்களின் பேரனும் முஹம்மத் என்பவரின் மகனுமாவார் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கான ஆதாரம் வருமாறு;
ஹம்மாத் பின் ஸலமாவின் ஆசிரியரும், இப்னு தலீதான் என்றும் ,துûஃபல் பின் ஸக்பரா என்றும் அழைக்கப்படுபவருமான ஈஸா பின் மைமூன் என்பார், அபூபக்ர் ஸித்தீக் அவர்களின் பேரனும் முஹம்மதின் மகனுமான காஸிமின் அடிமையாவார்.
நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 23, பக்: 48
கஅப் என்பாரின் பேரனும் முஹம்மத் என்பாரின் மகனுமாகிய காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரே பலவீனமானவர்.
நூல்: லுஅஃபாவுல் உகைலீ, பாகம் 3, பக்கம் 387
ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் உள்ள இருவரில் ஒருவர் காஸிம் வழியாகவும் அறிவித்துள்ளார்; முஹம்மத் பின் கஅப் வழியாகவும் அறிவித்துள்ளார். இந்தக் காஸிம் என்பவர் காஸிம் பின் முகம்மத் பின் கஅப் ஆவார். இந்த இருவர் வழியாகவும் அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்ற அறிவிப்பாளர் தான் பலவீனமானவராவார்.
இன்னொருவர் காஸிம் வழியாக மட்டுமே அறிவித்துள்ளார். இதில் இடம் பெற்றுள்ள காஸிம் என்பவர் காஸிம் பின் முகம்மத் பின் அபீபக்கர் ஆவார். இவர் தான் "குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது என்ற செய்தியை அறிவித்துள்ளார். இவர் உறுதியானவராவார்.
இருவருமே காஸிம் வழியாக அறிவிப்பதாக பல நூற்களில் கூறப்பட்டிருப்பதாலும்,, காஸிம் என்ற பெயரில் இருவர் இருப்பதைப் பலர் அறியாத காரணத்தினாலும் அறிஞர்களுக்கு மத்தியில் பெயர் குழப்பம் ஏற்படுவதற்கு காரணமாகி விட்டது. இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில் தான் யஹ்யா பின் மயீன் அவர்கள் தந்த விளக்கம் அமைந்துள்ளது.
அதாவது, "திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்’ என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பலவீனமானவர். (இந்த ஹதீஸை இவர் காஸிம் வழியாகவே அறிவித்துள்ளார்.) இந்த காஸிம் என்பவர் காஸிம் பின் முகம்மத் பின் கஅப் ஆவார்.
திருமணத்தைச் சிக்கனமாக நடத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர் பலவீனமானவர் அல்ல. இவரும் காஸிம் வழியாகவே அறிவித்துள்ளார். இந்த காஸிம் என்பவர் காஸிம் பின் முகம்மத் பின் அபீபக்கர் என்பவராவார்
இதன் காரணமாகத் தான் இமாம் அபூதாவூத் அவர்கள் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.
நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 23, பக்: 51
எனவே குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணங்கள் பரகத் நிறைந்தவை என்ற கருத்தைத் தரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்றே நமக்குத் தோன்றுகிறது. மேலும் எளிமையான திருமணமே சிறந்த திருமணம் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.
யஹ்யா பின் மயீன் அவர்கள் கவனத்தில் கொண்ட நுணுக்கமான வேறுபாட்டை சிலர் கவனத்தில் கொள்ளாத காரணத்தால் ஆள் மாறாட்டம் நடைபெற்று மேற்கண்ட ஹதீஸை பலவீனமானது என்று கூறுகின்றனர் என்றே நமக்குத் தோன்றுகிறது.
நாம் இவ்வாறு கருதுவது தவறு என்று யாரேனும் கருதினால் அதற்கான காரணங்களோடு தங்கள் மறுப்பைத் தெரிவித்தால் அதை அப்படியே வெளியிடத் தயாராகவுள்ளோம். சரியாக இருக்கும் பட்சத்தில் நமது முடிவை மாற்றிக் கொள்ளவும் தயாராகவுள்ளோம். விமர்சனங்களை வரவேற்று முடிக்கிறோம்
No comments:
Post a Comment