நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்யுமாறு கூறியுள்ளனர். அந்த அடிப்படையில் நல்லடியார்களின் அடக்கத்தலம் சென்று ஸியாரத் செய்வதும், அவர்களது துஆக்களை வேண்டுவதும் எப்படித் தவறாகும் என்று சிலர் கேட்கின்றனர்.
இந்த வாதத்திலும் பல தவறுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலம் வரை அல்லாஹ்விடம் தங்களுக்காகச் துஆச் செய்யுமாறு நபித்தோழர்கள் கேட்டதுண்டு. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு அவர்களது அடக்கத்தலம் வந்து நபித்தோழர்கள் யாரும் எங்களுக்காக துஆச் செய்யுங்கள் என்று கேட்டதில்லை. அடக்கத்தலம் வராமல் இருந்த இடத்திலிருந்தும் இவ்வாறு கேட்டதில்லை.
எனவே ஸியாரத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தால் அதை மற்றொரு செயலைச் செய்வதற்கு ஆதாரமாகக் காட்டக் கூடாது.
இனி ஸியாரத் விஷயத்திற்கு வருவோம்.
அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். அறிந்து கொள்க! இனிமேல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள்! ஏனெனில் அது மறுமையை நினைவு படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: திர்மிதி 974
இது தான் ஸியாரத் பற்றி பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸாகும்.
ஆரம்ப காலத்தில் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் தான் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அனுமதி வழங்கினார்கள்.
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக ஆய்வு செய்தால் இந்த ஹதீஸ் அடக்கத்தலங்களில் பிரார்த்தனை செய்வதற்கு எதிரானதாக அமைந்துள்ளதைக் காணலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதிக்கும் போது அனுமதி அளிப்பதற்குரிய காரணத்தையும் சேர்த்துக் கூறியுள்ளனர். இது முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மறுமையை நினைவுபடுத்தும் என்பது தான் அவர்கள் கூறிய காரணம். வேறு சில அறிவிப்புகளில் மரணத்தை நினைவு படுத்தும் என்றும் மற்றும் சில அறிவிப்புகளில் உலகப் பற்றைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடக்கத் தலங்களுக்கு நாம் செல்லும் போது ‘இவர்களைப் போல் நாமும் ஒரு நாள் மரணிக்க வேண்டி வரும்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வது தான் ஸியாரத் அனுமதிக்கப்பட்டதற்கான ஒரே காரணம்.
அடக்கம் செய்யப்பட்டவர்கள் மகான்கள் என்பதற்காகவோ, அல்லது அவர்களின் ஆசியை வேண்டுவதற்காகவோ இந்த அனுமதி அளிக்கப்படவில்லை.
இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால் நல்லடியார்களின் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் எனக் கூறாமல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் என்று பொதுவாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே இந்த அனுமதி பொதுமக்கள் அடக்கப்பட்டுள்ள பொது அடக்கத்தலத்தையே குறிக்கிறது.
ஸியாரத் என்ற இந்த நபிவழியை நடை முறைப்படுத்துவதற்காக எந்த வெளியூருக்கும் போகத் தேவையில்லை. எந்த ஊராக இருந்தாலும் அங்கே நிச்சயம் அடக்கத்தலம் இருக்கத் தான் செய்யும். அங்கே போய் வந்தால் ஸியாரத் செய்த நன்மையைப் பெற்று விடலாம்.
இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் தர்காக்களுக்குச் செல்வதால் நபிகள் நாயகம் (ஸல்) கூறிய நோக்கம் நிறைவேறாது என்று கூற முடியும்.
ஏனெனில் அங்கே நடக்கும் காரியங்கள் மறுமையின் நினைவை மறக்கச் செய்வதாகவே உள்ளன. ஆடம்பரமான கட்டடங்கள் நறுமணப் புகை, ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வது, சிறப்பான நாட்களில் நடக்கும் ஆடல் பாடல் ஆபாசக் கூத்துக்கள் யாவும் மறுமையின் சிந்தனையை மறக்கடிக்கச் செய்வதாகவே உள்ளன.
எந்த நோக்கத்துக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்ய அனுமதித்தார்களோ அந்த நோக்கத்தை தர்காக்கள் நாசப்படுத்துகின்றன என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.
நல்லடியார்களின் அடக்கத்தலம் செல்வது தான் ஸியாரத் என்று நினைப்பது முற்றிலும் தவறானது என்பதற்கு மற்றொரு நபிமொழியும் சான்றாகவுள்ளது.
என் தாயாருக்கு பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். அவன் அனுமதிக்க மறுத்து விட்டான். என் தாயாரின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்ய அனுமதி கேட்டேன். அல்லாஹ் அனுமதித்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1621, 1622
எந்த ஒரு முஸ்லிமுடைய பாவத்துக்காகவும் பாவ மன்னிப்புத் தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்காக மட்டுமே பாவ மன்னிப்புத் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
(அல்குர்ஆன் 9:113)
நபிகள் நாயகத்தின் தாயாருக்காக பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ் அனுமதி மறுக்கிறான் என்பதிலிருந்து அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை என விளங்கலாம். முஸ்லிமாக இல்லாத தாயாரின் அடக்கத் தலத்தை ஸியாரத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்துள்ளதிலிருந்து ஸியாரத்தின் நோக்கத்தை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஸியாரத் நல்லடியார்கள் என்பதற்காக நடத்தப்பட வேண்டிய காரியமல்ல. மாறாக மரணத்தை நினைவுபடுத்தும் காரியமே. முஸ்லிமல்லாதவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்தும் கூட இந்த நோக்கத்தை அடைந்து கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்காக்கள் குறித்து கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர். தர்காக்கள் இருக்கவே கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறிருக்க இடிக்க வேண்டிய ஒன்றை ஸியாரத் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்களா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610,
தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816,
அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873,
இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்னத் அல் ஹுமைதி
என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) எதைத் தடை செய்தார்களோ அதைத் தேடிச் செல்வதை வணக்கமாகக் கருதுவது தகுமா? என்று சிந்திக்க வேண்டும்.
எனவே ஸியாரத்துக்கும் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் போய் பிரார்த்தனை செய்வதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
No comments:
Post a Comment