பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, April 23, 2020

வைர, வைடூரியக் கற்களுக்கு ஜகாத் கொடுப்பது அவசியமா?

*வைர, வைடூரியக் கற்களுக்கு ஜகாத் கொடுப்பது அவசியமா? தங்கம், வெள்ளிக்கு ஜகாத் என்று குர்ஆனில் வருவதால் வைரத்திற்கு ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்று சிலர் கூறுகிறார்களே! இதற்கு விளக்கம் என்ன?*

பதில்:

ஜகாத் என்பது நம்முடைய செல்வத்தினைத் தூய்மைப்படுத்துவதற்காக இறைவன் கடமையாக்கிய ஒரு வணக்கமாகும்.

*‘தங்கத்தையும், வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக’ (9:34)* என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், ‘உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்’ என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது’ என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை’  என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1417

நம்முடைய பொருளாதாரத்தில் எஞ்சிய செல்வத்தை அனுமதிக்கப்பட்டதாக இறைவன் ஆக்க வேண்டும் எனில் அதற்கு ஜகாத் வழங்க வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஜகாத் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவுபடுத்தி விட்டார்கள். கால்நடைகளுக்கும், விளைபொருட்களுக்கும் உரிய ஜகாத் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் தங்கம், வெள்ளிக்கும் உரிய ஜகாத்தும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், பிளாட்டினம் போன்றவைகளுக்கு ஜகாத் உண்டு என்று மார்க்கத்தில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனாலும் செல்வங்களுக்கு ஜகாத் உண்டு என்று பொதுவாகச் சொல்லப்பட்டதில் மேற்கண்டவையும் அடங்கும்.

*(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.*
அல்குர்ஆன் 9:103

இந்த வசனத்தில்  ‘அவர்களின் செலவங்களில் இருந்து தர்மத்தை எடுப்பீராக’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மதிப்புமிக்க அனைத்துமே செல்வங்களில் அடங்கிவிடும். தங்கம், வெள்ளி ஆகியவை மதிப்புமிக்க செல்வமாக இருந்தது மட்டுமின்றி அவை அன்றைக்கு நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் காரணமாகவே தங்கம், வெள்ளி என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுக்களுக்கு ஜகாத் உண்டு என்று என்பதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். தங்கம், வெள்ளி பற்றித் தான் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது; அதனால் ரூபாய்களுக்கு ஜகாத் இல்லை என்று யாரும் சொல்வதில்லை.
ரூபாயை வைத்து தங்கம், வெள்ளியை வாங்க முடியும் என்பதால் ரூபாய்களுக்கும் ஜகாத் உண்டு என்று புரிந்து கொள்கிறோம்.

அதுபோல் தான் வைரம், வைடூரியம் போன்ற கற்களைக் கொண்டு தங்கம், வெள்ளியை வாங்க முடியும். எனவே ரூபாய்களை எப்படி நாம் தங்கமாக, வெள்ளியாகக் கணக்கிட்டு ஜகாத் கொடுக்கிறோமோ அது போல் மதிப்பு மிக்க கற்களுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். 

நேரடியாகச் சொல்லப்பட்டவைகளுக்கு மட்டுமே ஜகாத் என்று சொன்னால் ஜகாத் என்ற அம்சமே சமுதாயத்தில் இல்லாமல் போய்விடும்.
தனக்கு வரும் கோடானுகோடி ரூபாய்களை வைரமாக ஒருவன் பெற்றுக் கொண்டு ஜகாத் கொடுக்காமல் தப்பித்துக் கொள்வான். ஒருவருக்கு நாம் பத்து லட்சம் ரூபாய்களை அல்லது அதன் மதிப்பிலான தங்கத்தை அன்பளிப்பாகக் கொடுக்கிறோம். அன்பளிப்பாகப் பெற்றவருக்கு இது வருமானமாக சொத்தாக அமைந்துள்ளதால் அதற்கு அவர் ஜகாத் கொடுக்க வேண்டும்.
ஆனால் ரூபாய்களாகவோ, தங்கமாகவோ கொடுக்காமல் பத்து லட்சம் மதிப்புள்ள வைரத்தை வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்தால் அவருக்கு ஜகாத் இல்லை என்ற நிலை ஏற்படும். அதுபோல் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை ஒருவன் பெற்றால் அதற்கு ஜகாத் இல்லை என்ற நிலை ஏற்படும். பல கோடி மதிப்புள்ள வீடு ஒருவனுக்குக் கிடைத்தால் அதற்கு அவன் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ற நிலை இதனால் ஏற்படும்.
நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளதா என்ற கேள்வி, செல்வந்தர்கள் ஜகாத் கொடுக்காமல் தப்பிக்க வழி வகுக்கும். எனவே வைரம், வைடூரியம் போன்றவைகளுக்கும் ஜகாத் உண்டு என்பதே சரியானதாகும். கற்களுக்கு ஜகாத் இல்லை என்று சில நபிமொழிகள் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமானவையாகும்.

السنن الكبرى للبيهقي (4/ 245)
7590 – رَوَى عُمَرُ بْنُ أَبِي عُمَرَ الْكَلَاعِيُّ الدِّمَشْقِيُّ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ لَا زَكَاةَ فِي حَجَرٍ “. أَخْبَرَنَاهُ أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ , أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ , ثنا يَزِيدُ بْنُ عَبْدِ اللهِ بِحِمْصٍ , ثنا كَثِيرُ بْنُ عُبَيْدٍ , ثنا بَقِيَّةُ , عَنْ عُمَرَ الْكَلَاعِيِّ فَذَكَرَهُ. وَرَوَاهُ أَيْضًا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْوَقَّاصِيُّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ مَرْفُوعًا وَرَوَاهُ [ص:246] مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ الْعَرْزَمِيُّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ مَوْقُوفًا , وَرُوَاةُ هَذَا الْحَدِيثِ عَنْ عَمْرٍو كُلُّهُمْ ضَعِيفٌ وَاللهُ أَعْلَمُ

“எந்தக் கல்லுக்கும் ஜகாத் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து ஷுஐப் என்பவர் அறிவிக்கின்றார்.
ஷுஐப் என்பவரிடமிருந்து அவரது மகன் அம்ரு அறிவிக்கின்றார்.
அம்ரு என்பவரிடமிருந்து உமர் பின் அபீ உமர், உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் ஆகிய இருவர் அறிவிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் பலவீனமானவர்கள் ஆவார்கள்.
இந்தச் செய்தியை சுனனுல் குப்ரா எனும் தனது நூலில் இமாம் பைஹகீ அவர்கள் பதிவுசெய்து விட்டு, இச்செய்தியை அம்ரு என்பவர் வழியாக அறிவிக்கும் அனைத்து அறிவிப்பாளர்களும் பலவீனமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர்களில் ஒருவரான உமர் பின் அபீ உமர் என்பவர் பற்றிய குறைகள்:

تهذيب الكمال 742 (21/ 475)
قال أبو أحمد بن عدي (1) : عُمَر بن أَبي عُمَر الدمشقي منكر الحديث عن الثقات (2). وَقَال أبو بكر البيهقي : وهو من مشايخ بقية المجهولين ، وروايته منكرة ، والله أعلم (3).

இவர் ஹதீஸில் மறுக்கப்படக் கூடியவர் என்று இப்னு அதீ கூறியுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர் என்றும், இவரது அறிவிப்பு மறுக்கப்பட வேண்டியது என்றும் பைஹகீ கூறியுள்ளார்.
தஹ்தீபுல் கமால், பாகம் 21, பக்கம் 475

அறிஞர்கள் இது போன்ற குறைகள் இவர் மீது சொல்லியிருப்பதால் இவரை ஆதாரமாகக் கொள்ள இயலாது.
மற்றொரு அறிவிப்பாளரான உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றிய குறைகள்:

تهذيب الكمال 742 (19/ 426)
قال ابراهيم بن عَبد الله بن الجنيد (1) ، عن يحيى بن مَعِين : لا يكتب حديثه ، كان يكذب. وَقَال عَباس الدُّورِيُّ (2) ، عن يحيى بن مَعِين :ضعيف. وَقَال في موضع آخر (3) : ليس بشيءٍ. وَقَال علي بن المديني (4) :ضعيف جدا. وَقَال أبو حاتم (4) : متروك الحديث ، ذاهب (5). وقَال البُخارِيُّ (6) : تركوه (7).

இவர் பொய் சொல்பவர், மதிப்பற்றவர் என்றும் பலவீனமானவர் என்றும் இமாம் யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் மிகவும் பலவீனமானவர் என்று இமாம் அலீ இப்னுல் மதீனி அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் விடப்படக்கூடியவர் (பொய்யர்) என்று இமாம் அபூ ஹாதமும் நஸாயீயும் கூறியுள்ளார்கள். இவரை இமாம்கள் (பொய்யர் என்று) விட்டுவிட்டனர் என்று புகாரி இமாம் கூறியுள்ளார்.
தஹ்தீபுல் கமால், பாகம் 19, பக்கம் 426

இதுபோன்று இன்னும் ஏராளமான குறைகளை இவர் மீது அறிஞர்கள் குறிப்பிட்டிருப்பதால் இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். எனவே, இது தொடர்பாக வருகின்ற அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும்,
வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணக் கற்களுக்கு ஜகாத் இல்லை என்பதற்கு இவற்றை ஆதாரமாகக் கொள்ளலாகாது.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
www.onlinetntj.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

No comments:

Post a Comment