பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 22, 2020

பெருநாள் தக்பீர் ஓர் ஆய்வு


 பெருநாள் தக்பீர் ஓர் ஆய்வ

 பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா?


 *திருக்குர்ஆனை மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில்  இருந்து உங்கள் பார்வைக்கு*

 *✍️✍️பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா?✍️✍️* 

 *✍️அறிவீனமான வாதங்களுக்குத் தக்க பதில்✍️* 

 *✍️✍️✍️நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.✍️✍️✍️* 

 *971* – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: «كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ العِيدِ حَتَّى نُخْرِجَ البِكْرَ مِنْ خِدْرِهَا، حَتَّى نُخْرِجَ الحُيَّضَ، فَيَكُنَّ خَلْفَ النَّاسِ، فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ، وَيَدْعُونَ بِدُعَائِهِمْ يَرْجُونَ بَرَكَةَ ذَلِكَ اليَوْمِ وَطُهْرَتَهُ»

 *✍️✍️✍️பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள குமரிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக் கூடப் புறப்படச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம். பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும் போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள். ஆண்கள் பிரார்த்திக்கும் போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி)* 

 *நூல் : புகாரி 971* 


 *✍️✍️✍️✍️தக்பீர் கூறுதல் என்றால் அல்லாஹூ அக்பர் என்ற வாசகத்தைக் கூறுவது தான்✍️✍️✍️.* 

 *✍️✍️✍️கப்பர என்ற அரபி வார்த்தைக்கு அல்லாஹூ அக்பர் என்று கூறினான் என்பது தான் பொருளாகும். இதிலிருந்துதான் தக்பீர் என்ற சொல் பிறந்துள்ளது. மேலும் இந்த தக்பீர் வாசகத்தைப் பெருநாளன்று நபியவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள் என்பதற்கோ, அல்லது மக்களுக்கு சப்தமிட்டுக் கூறுமாறு கட்டளையிட்டார்கள் என்பதற்கோ ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழிகளும் கிடையாது.✍️✍️✍️* 

 *பொதுவாக இறைவனை நினைவு கூரும் போது சப்தமிடக் கூடாது என்பது தான் அல்லாஹ்வின் கட்டளையாகும்.* 

وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآَصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ *7:205* 

 *உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!*

 *(திருக்குர்ஆன்: 7 : 205)* 

 *2992* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنَّا إِذَا أَشْرَفْنَا عَلَى وَادٍ هَلَّلْنَا وَكَبَّرْنَا ارْتَفَعَتْ أَصْوَاتُنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ فَإِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبًا إِنَّهُ مَعَكُمْ إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ تَبَارَكَ اسْمُهُ وَتَعَالَى جَدُّهُ  رواه البخاري

 *அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பள்ளத்தாக்கிலிருந்து ஏறும் போது, லா இலாஹ இல்லல்லாஹ் என்றும், அல்லாஹு அக்பர் என்றும் கூறி வந்தோம். அப்போது எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன். அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது  என்று கூறினார்கள்.* 

 *நூல் : புகாரி 2992* 

காது கேட்காதவனையோ, தூரத்தில் உள்ளவனையோ அழைக்கும் போது தான் சப்தமிட்டு அழைக்க வேண்டும். நாம் அல்லாஹ்வைச் சப்தமிட்டு திக்ரு செய்தால் இறைவன் செவிடன் என்றும் தூரத்தில் உள்ளவன் என்றும் நாம் கருதியதாக ஆகும். எனவே பெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் கூறுவது மேற்கண்ட இறை வசனத்திற்கும் நபிமொழிக்கும் எதிரானதாகும்.

 *ஆனால் மேற்கண்ட எந்த அடிப்படைகளையும் அறியாமல் காயல்பட்டிணம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் இருந்து அறிவீனமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சில ஸஹாபாக்களின் சுயமான செயல்களைக் குறிப்பிட்டு,, பெருநாள் அன்று சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என்பதற்கும், அல்லாஹூ அக்பர் என்ற வாசகத்தை விட அதிகப்படியான வாசகங்களைக் கூறுவதற்கும் அந்தத் தீர்ப்பை வழங்கியவர்கள் கூறும் காரணத்தைப் பாருங்கள்.* 

 *ஆட்சேபணை இல்லாவிட்டால் வணக்கமாகுமா?* 

பெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் சொல்லக் கூடாது என்பதற்கு ஹதீஸில் எந்தத் தடையும் காணப்படவில்லை. பெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் சொல்லலாம் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் நேரடி ஹதீஸ் இல்லாவிட்டாலும் மூல ஆதாரமாக எடுக்க முடியாத சஹாபாக்களின் மேற்கண்ட செயல்களுக்கு ஏனைய எந்த சஹாபியும் ஆட்சேபனை தெரிவிக்காத காரணத்தினால் சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களின் முழு வழிகாட்டுதலோடு தான் செய்திருப்பார்கள். வழிகாட்டல் இல்லையென்றால் எந்த ஸஹாபியாவது ஆட்சேபனை தெரிவித்திருப்பார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அடிப்படையில் தான் நாமும் பெருநாளன்று தக்பீரை சப்தமிட்டு கூறுகிறோம்.

 *(ஃபத்வா பக்கம் : 4* 

 *குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்ட ஃபத்வாவாக இது தெரிகின்றதா?* 

ஒரு ஸஹாபி ஒரு செயலைச் செய்து அதற்கு வேறு எந்த ஒரு ஸஹாபியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் அது மார்க்கச் சட்டமாகி விடும், இறைச் செய்தியாகிவிடும் என்ற விதியைப் புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்த விதி பெருநாள் தக்பீருக்கு மட்டுமா? அல்லது அனைத்து சட்டங்களுக்குமா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

 *ஏனெனில் நபித்தோழர்களின் செயலை எந்த நபித்தோழரும் ஆட்சேபிக்காவிட்டால் அது மார்க்கமாகி விடும் என்ற இவர்கள் கண்டுபிடித்த நவீன விதிமுறை நூற்றுக்கணக்கான சட்டங்களை இவர்களே மாற்றிக் கொள்ளும் நிலைக்கு இவர்களைத் தள்ளிவிடும் என்பதைக் கூட இவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர்.* 

 *தடையில்லாவிட்டால் மார்க்கமா?* 

பெருநாள் அன்று சப்தமிட்டு தக்பீர் சொல்லக் கூடாது என்பதற்கு எந்தத் தடையுமில்லை எனவே சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என ஆயிஷா சித்தீக்கா கல்லூரி சார்பில் மார்க்கத் தீர்ப்பு வழங்கியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இறைவனை சப்தமிட்டு திக்ர் செய்வது எவ்வளவு பெரிய பாவம், வரம்பு மீறுதல் என்பதற்கான குர்ஆன் வசனம் (7 : 205) மற்றும் நபிமொழியை (புகாரி 2992) நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம். அதன் அடிப்படையிலே சப்தமிட்டு தக்பீர் சொல்வதற்கு நேரடியான தடை உள்ளது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

 *ஒரு வாதத்திற்கு மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் இல்லையென்றாலும் அமல்கள் விசயத்தில் தடையில்லா விட்டால் செய்யலாம் என்பது அறியாமையாகும். வணக்க வழிபாடுகளுக்கும், உலகப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் தனித்தனி நிலைபாடுகள் இஸ்லாத்தில் உள்ளன. உலகப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளதா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தடை உள்ளதா என்று பார்த்தால் போதும். தடை இல்லாவிட்டால் அனுமதிக்கப்பட்டது என்று தான் அர்த்தம்.* 

ஆனால் கொள்கை, இபாதத் எனும் வணக்கவழிபாடுகளைப் பொருத்தவரை தடை உள்ளதா என்று பார்க்கக் கூடாது. அனுமதியோ, கட்டளையோ உள்ளதா என்றுதான் பார்க்க வேண்டும். இது தான் உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கொள்கையில் உள்ள ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்ட விதியாகும். மிஃராஜ் நோன்பு வைக்கலாமா? பராஅத் நோன்பு வைக்கலாமா என்று கேட்டால் அதற்குத் தடை இல்லை என்று இவர்கள் பாதை அமைக்கிறார்கள். இப்படி ஒரு நோன்பு இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) செய்திருப்பார்கள்; அல்லது சொல்லி இருப்பார்கள் என்ற அடிப்படையில் தான் அதை நாம் பித்அத் என்று கூறி வருகிறோம்.

 *வணக்க வழிபாடுகளைப் பொறுத்த வரை நபியவர்கள் செய்திருந்தால் மட்டும் தான் அதைச் செய்ய வேண்டும். நபியவர்கள் செய்யாத ஒன்றைச் செய்தால் அது நம்மை நரகத்தில் தள்ளுகின்ற பித்அத் ஆகிவிடும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.* 

 *3243* عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ رواه مسلم

 *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நாம் கட்டளையிடாத ஒரு அமலை யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்விடம்) மறுக்கப்படும்.* 

 *(நூல் : முஸ்லிம் 3541)* 

பெருநாள் தொழுகையில் சப்தமிட்டு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கு நபியவர்கள் எந்தக் கட்டளையும் இடாத காரணத்தினால் சப்தமிட்டு தக்பீர் கூறுவது பித்அத் ஆகும். இங்கு தடையில்லாவிட்டால் செய்யலாம் என்று கூறுவது அறியாமையாகும்.

 *தவறான ஆதாரங்களும் தக்க விளக்கங்களும்* 


 *சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என்பதற்கு இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்ற செய்திகளின் நிலைகளைக் காண்போம்.* 

وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا صحيح البخاري

 *இப்னு உமர் (ரலி), அபூ ஹூரைரா (ரலி) ஆகிய இருவரும் பத்து நாட்களும் கடைவீதிக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். மக்களும் அவர்களுடன் தக்பீர் கூறுவார்கள்.* 

 *நூல் : புகாரி* 

இந்தச் செய்தியை இமாம் புகாரி அவர்கள் முஅல்லக் (அறிவிப்பாளர் தொடர் இல்லாத) செய்தியாகத் தான் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இந்தப் பலவீனத்தைக் கூட கவனிக்காமல் ஏதோ புகாரியில் இடம் பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் போன்று சித்தரித்துள்ளனர். நபித்தோழரின் சுயமான செயல்கள் மார்க்க ஆதாரம் ஆகாது என்பதோடு மட்டுமல்லாமல் இந்தச் செய்தி அறவிப்பாளர் தொடர் இல்லாத செய்தியாகும்.

 *இதனை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தம்முடைய ஃபத்ஹூல் பாரி என்ற நூலிலே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.* 

لم أره موصولا عنهما وقد ذكره البيهقي أيضا معلقا عنهما وكذا البغوي فتح الباري

 *இப்னு உமர் (ரலி), அபூ ஹூரைரா (ரலி) ஆகிய இருவர் வழியாக முழுமையான அறிவிப்பாளர் தொடர் கொண்டதாக இதனை நான் பெற்றுக் கொள்ளவில்லை. பைஹகி அவர்களும் இந்த இருவர் வழியாக (முஅல்லக்) அறிவிப்பாளர் தொடர் இல்லாத செய்தியாகத் தான் கூறியுள்ளார்கள். இவ்வாறு தான் பகவீ அவர்களும் கூறியுள்ளார்கள்.* 

 *நூல் : ஃபத்ஹூல் பாரி* 

நபித்தோழர்கள் கூற்று மார்க்க ஆதாரம் என்று கூறுபவர்கள் கூட இதனை ஆதாரம் காட்ட முடியாது. இது பலவீனமான செய்தியாகும். மேலும் இந்தச் செய்தியில் பெருநாள் திடலில் தக்பீர் கூறுவார்கள் என்று இடம் பெறவில்லை. மேலும் துல்ஹஜ் பிறை முதல் பத்து நாட்களில் தக்பீர் கூறியதாகத் தான் இதில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து நோன்புப் பெருநாளைக்கு சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என்ற சட்டத்தை எடுக்க முடியுமா?

 *துல்ஹஜ் பத்து நாட்கள் கடைவீதியில் தக்பீர் சப்தமிட்டு கூறியதாகத் தான் மேற்கண்ட பலவீனமான செய்தியில் கூறப்பட்டுள்ளது. பெருநாள் திடலில் கூறியதாகக் கூறப்படவில்லை. இந்தச் செய்தியை மிகப் பெரிய சான்றாகக் காட்டுவோர் ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து கொண்டு கடைவீதிக்குச் சென்று ஏன் தக்பீர் கூறி சப்தமிடுவதில்லை? இதனை நபிவழியாகக் கருதினால் இதனைச் செய்வதற்கு அவர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்? என்பதைத் தெளிவுபடுத்துவார்களா?* 

கடைவீதியில் போகும் போதும், வரும் போதும் ஒன்று சேர்ந்து சப்தமிட்டு தக்பீர் கூறிக் கொண்டே செல்லுங்கள் என்று மக்களுக்குப் போதிப்பார்களா? நபித்தோழரின் கூற்று மார்க்கம் ஆகாது என்பதுடன், மேற்கண்ட செய்தி பலவீனமானது என்பதுடன், பெருநாள் திடலில் சப்தமிட்டு தக்பீர் கூற வேண்டும் என்பதற்கு மேற்கண்ட நபித்தோழர் செயலில் எள்ளளவு கூட ஆதாரமில்லை என்பது தான் உண்மையாகும். பெருநாள் திடலில் ஆண்களும், பெண்களும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் சப்தமிட்டு தக்பீர் கூற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியவர்கள் தங்கள் தீர்ப்புக்குச் சான்றாக மற்றொரு செய்தியையும் ஆதாரம் காட்டுகின்றனர்.

وَكَانَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ يُكَبِّرُ فِي قُبَّتِهِ بِمِنًى فَيَسْمَعُهُ أَهْلُ الْمَسْجِدِ فَيُكَبِّرُونَ وَيُكَبِّرُ أَهْلُ الْأَسْوَاقِ حَتَّى تَرْتَجَّ مِنًى تَكْبِيرًا وَكَانَ ابْنُ عُمَرَ يُكَبِّرُ بِمِنًى تِلْكَ الْأَيَّامَ وَخَلْفَ الصَّلَوَاتِ وَعَلَى فِرَاشِهِ وَفِي فُسْطَاطِهِ وَمَجْلِسِهِ وَمَمْشَاهُ تِلْكَ الْأَيَّامَ جَمِيعًا وَكَانَتْ مَيْمُونَةُ تُكَبِّرُ يَوْمَ النَّحْرِ وَكُنَّ النِّسَاءُ يُكَبِّرْنَ خَلْفَ أَبَانَ بْنِ عُثْمَانَ وَعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ لَيَالِيَ التَّشْرِيقِ مَعَ الرِّجَالِ فِي الْمَسْجِدِ (صحيح البخاري

 *உமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும் நாட்களில்) தமது கூடாரத்திலிருந்த படி தக்பீர் கூறுவார்கள். அதைக் கேட்டு பள்ளியில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். கடை வீதிகளில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். எந்த அளவிற்கென்றால் மினா முழுவதும் தக்பீர் முழக்கத்தால் அதிரும்.* 

இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும்) இந்த நாட்களில் தக்பீர் கூறுவார்கள். எல்லாத் தொழுகைகளுக்குப் பிறகும், தமது படுக்கையில் இருக்கும் போதும், தமது கூடாரத்தில் இருக்கும் போதும், அமரும் போதும் நடக்கும் போதும் அந்த அனைத்து நாட்களிலும் தக்பீர் கூறுவார்கள்.

 *மைமூனா (ரலி) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.* 

(அப்துல் மலிக் பின் மர்வான் காலத்தில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அபான் பின் உஸ்மான், (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) ஆகியோருக்குப் பின்னால் அய்யாமுத் தஷ்ரீக் (11, 12, 13) நாட்களில் பள்ளிவாசலில் ஆண்களுடன் பெண்களும் தக்பீர் கூறுவார்கள்.

 *நூல் புகாரி* 

நபித்தோழர்களின் செயல்கள் மார்க்க ஆதாரம் ஆகாது என்பதோடு மட்டுமல்லாமல் மேற்கண்ட செய்திகளுக்கு புகாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடரைக் குறிப்பிடவில்லை. புகாரி என்று சொன்னால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டு இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் பாடத் தலைப்பில் கூறிய செய்திகளை மார்க்கச் சட்டத்தைத் தீர்மானிப்பதற்கு ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

 *இதில் இடம் பெற்றுள்ள மைமூனா (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியைப் பற்றி இமாம் இப்னு ஹஜர் தன்னுடைய ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் கூறுவதைப் பாருங்கள்* .

وكانت ميمونة أي بنت الحارث زوج النبي صلى الله عليه و سلم ولم أقف على أثرها هذا موصولا فتح الباري

 *மைமூனா (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியை முழுமையான அறிவிப்பாளர் தொடருடன் நான் பெற்றுக் கொள்ளவில்லை.* 

 *ஃபத்ஹுல் பாரி* 

இதில் நபித்தோழர் மீது இட்டுக்கட்டிய குற்றத்தையும் செய்திருக்கிறார்கள். நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டிய குற்றத்தையும் செய்திருக்கிறார்கள். மேலும் அபான் பின் உஸ்மான், உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) ஆகியோர் நபித்தோழர்கள் கிடையாது. இவர்கள் நபித்தோழர்களின் காலத்திற்கு மிகவும் பிந்தியவர்கள். இவர்களுடைய செயலையும் மார்க்க ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

 *நபித்தோழர்களின் சுயக் கருத்துகளை மார்க்கச் சட்டமாக்க முயன்றவர்கள் போகிற போக்கில் நபித்தோழர்கள் அல்லாதவர்களின் கூற்றுகளையும் ஆதாரம் போன்று காட்டியிருப்பது இவர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இதில் இன்னும் பரிதாபம் என்னவென்றால் மேற்கண்ட செய்தியும் அறிவிப்பாளர் தொடரில்லாத பலவீனமான செய்தியாகும். இதைத் தெரிந்து கொண்டே தான் மேற்கண்ட செய்தியை ஆதாரம் போன்று காட்டியுள்ளனர்.* 

ஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்திகள் ஆதாரமானவை என வைத்துக் கொண்டாலும் இவை அனைத்துமே மினாவில் தங்கியிருக்கும் போது தக்பீர் கூறியதாகத் தான் வந்துள்ளது. பெருநாள் திடலில் அதுவும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் திடலில் ஆண்களும், பெண்களும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் சப்தமிட்டு தக்பீர் கூறினார்கள் என்று மேற்கண்ட செய்திகளில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இவர்கள் ஆதாரம் காட்டிய அனைத்தும் பலவீனமானவையாக இருப்பதுடன் அந்தச் செய்திகளில் பெருநாள் திடலில் சப்தமிட்டு தக்பீர் கூற வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தான் உண்மையாகும்.

 *தக்பீர் வாசகத்திலும் பித்அத்* 


 *அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துங்கள்; நினைவு கூருங்கள் என்று வருகின்ற காரணத்தினால் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் நினைவு கூரும் முகமாக* 

ألله أكبر الله أكبر ألله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد

 *அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து* 

என்ற வாசகத்தையோ, இது போன்ற இறைவனைப் பெருமைப்படுத்தும் நினைவு கூறும் வாசகங்களையோ கூறலாம் என உணர முடிகிறது.

 *(ஆயிஷா சித்தீக்கா கல்லூரி தீர்ப்பு பக்கம் 5)* 

 *இந்த வாசகத்தை இவர்கள் எந்த நபிமொழியிலிருந்து எடுத்தார்கள்? குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாமல் இவர்கள் உணர்கின்ற விஷயங்களெல்லாம் மார்க்க ஆதாரமாகிவிடுமா? இவ்வாறு மார்க்கத்தில் இல்லாத பித்அத்களை உருவாக்குபவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி இது போன்ற செயல்களை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும்.* 

இவர்கள் எதைக் கூறுகிறார்களோ அதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் தடை இல்லாததால் இவர்கள் அதைக் கூறுவார்களாம். ஆனால் சுன்னத் ஜமாஅத்தினர் பெருநாள் தக்பீரில் இதை விட அதிகமாகக் கூறுகிறார்களே அது கூடாதாம். ஆதாரம் இல்லாமல் இவர்கள் மட்டும் எதையாவது உணர்வார்களாம். மற்றவர்கள் இப்படி உணர உரிமை இல்லையாம்.

 *இவர்கள் எந்த அடிப்படையில் தாங்கள் உண்டாக்கிய தக்பீரை நியாயப்படுத்துகிறார்களோ அதே அடிப்படை இவர்கள் பித்அத் என்று தீர்ப்பளித்துள்ள தக்பீருக்கும் பொருந்தத்தானே செய்யும். இவர்கள் உண்டாக்கிய தக்பீருக்குத் தடை இல்லை என்றால் சுன்னத் ஜமாஅத் உண்டாக்கிய தக்பீருக்கும் தடை இல்லை தானே?* 

 *சிரமப்பட்டதினால் தடையா? சப்தமிட்டதினால் தடையா?* 

புகாரி 2992 ஹதீஸில் ஸஹாபாக்கள் சப்தமிட்டு தக்பீர் கூறிய போது நபியவர்கள் தடை செய்தார்கள் என்று வந்துள்ளது. இதற்கு இவர்கள் அளிக்கும் அரிய விளக்கத்தைப் பாருங்கள்!

 *மேற்கண்ட ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் إرتفعت أصواتنا என்பதற்கு மேட்டுப் பகுதியில் ஏறும் சமயம் தங்களை வருத்திக் கொள்ளும் விதமாக தக்பீர் கூறியதைத் தான் நபி (ஸல்) அவர்கள் إربعوا என்று கூறினார்கள். أربعوا என்பதற்கு لا تكلفوا أنفسكم (உங்களைக் கஷ்டப்படுத்தும் விதமாக உங்களை வருத்திக் கொள்ளும் விதமாக சப்தம் போடாதீர்கள்) என்ற அர்த்தம் ஆகும். எனவே மேற்கண்ட ஹதீஸை ஆதாரம் காட்டி பெருநாள் உடைய தக்பீர்களைச் சப்தமிட்டு கூறுவது தடை என பொத்தாம் பொதுவாகக் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.*

 *(ஆயிஷா சித்தீக்கா கல்லூரி தீர்ப்பு பக்கம் : 6)* 

இவர்கள் தங்கள் மனோ இச்சைக்குத் தோதுவாக ஹதீஸ்களின் கருத்தைத் திரிப்பவர்கள் என்பது மேற்கண்ட அவர்களின் விளக்கத்திலிருந்து தெளிவாகிறது.

 *ஸஹாபாக்கள் சப்தமிட்டு தக்பீர் கூறிய போது ஏன் தடை செய்தார்கள் என்கின்ற காரணத்தையும் சேர்த்தே கூறுகிறார்கள். ஸஹாபாக்கள் சிரமப்பட்டுக் கூறினார்கள் என்பதற்காக நபியவர்கள் தடை செய்யவில்லை. இதோ நபியவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்.* 

எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன அருகிலிருப்பவன். அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது  என்று கூறினார்கள்.

 *காது கேட்காதவனையோ, தூரத்தில் உள்ளவனையோ அழைக்கும் போது தான் சப்தமிட்டு அழைக்க வேண்டும். நாம் அல்லாஹ்வைச் சப்தமிட்டு திக்ரு செய்தால் இறைவன் செவிடன் என்றும் தூரத்தில் உள்ளவன் என்றும் உறுதிப்படுத்துகிறோம். சப்தம் போட வேண்டாம் என்று தடை செய்ததற்கு நபியவர்கள் தெளிவான காரணம் கூறி விட்டார்கள். ஆனால் அதை  இருட்டடிப்பு செய்து பொய்க்காரணம் கற்பித்துள்ளனர்.* 

 *✍️✍️✍️எனவே பெருநாட்களில் சப்தமிட்டு தக்பீர் கூறுவது நபியவர்கள் காட்டித்தராத பித்அத் ஆகும். இது போன்ற வழிகேடுகளிலிருந்து அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுகாப்பானாக.✍️✍️✍️* 


அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்


 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment