💐நாம் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றும் போது அவசர வேலையின் காரணமாக பர்ளு தொழுகையை மட்டும் தொழுதால் போதுமா?
*இப்படித் தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுமா?* விளக்கம் தரவும்.
நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை.
நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் *இஸ்லாத்தைப் பற்றி கேட்டார்*. அப்போது நபி (ஸல்) அவர்கள், *இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்* என்றார்கள்.
உடனே அவர், *அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது* என் மீது கடமை உண்டா? என்றார். அதற்கு அவர்கள், *நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை* என்றார்கள்.
அடுத்து, *ரமலான் மாதம் நோன்பு* நோற்பதும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், *அதைத் தவிர வேறு ஏதேனும்* (நோன்பு) என் மீது கடமை உண்டா? என்றார். அதற்கு அவர்கள், *நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை;* என்றார்கள்.
அவரிடம் நபி (ஸல்) அவர்கள் *ஸகாத்* பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், *அதைத் தவிர வேறு* (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா? என்றார். அதற்கு அவர்கள் *நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை* என்றார்கள்.
உடனே அம்மனிதர், *அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்* என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், *இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்* என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
நூல்: *புகாரி 46, 1891, 2678, 6956*
இந்த ஹதீஸில் *கடமையைத் தவிர வேறு எதையும் செய்ய மாட்டேன் என்று கூறிய ஒருவரை வெற்றியாளர்* என நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து, *கடமையான வணக்கங்களை ஒருவர் நிறைவேற்றுவதே மறுமையில் வெற்றி பெறுவதற்குப் போதுமானது* என்பதை அறிய முடிகின்றது.
எனினும் கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் ஏற்படலாம். இந்தக் குறைபாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கி விடக் கூடாது. எனவே *கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை ஈடுசெய்வதாக* அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நிச்சயமாக ஓர் அடியான் *மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான்*. அதை அவன் நிறைவாகச் செய்திருந்தால் (அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும்.) அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி *என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள்* என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: *நஸயீ 463*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். *நான் என் அடியான் மீது கடமையாக்கி இருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன்*.
நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். *முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை.*
(ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கிறான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: *புகாரி 6502*
*உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும்* என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி விடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாகவும் அமைந்துள்ளன.
எனவே கடமையான தொழுகைகளுடன் இயன்ற வரை உபரியான தொழுகைகளையும் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
————————
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment