பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, June 4, 2026

நபி (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா⁉️

நபி (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா⁉️

நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருக்கின்றது. இந்தக் கருத்துக்கு பின்வரும் ஹதீஸ் தான் ஆதாரமாகக் கூறப்படுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என்மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். (திர்மிதீ:3468)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவனிடம் என்னைப் பற்றி கூறப்பட்டு என்மீது அவன் ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனே கஞ்சனாவான். (திர்மிதீ:3469)

மேலுள்ள இரண்டு செய்திகளும் ஆதாரப்பூர்வமானவை என சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு முடிவெடுக்காமல் விரிவாக இதை ஆராய வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் ஸலவாத் கூற வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றமாக பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றுக்கு முரண்படாத வகையில்தான் இதற்கு நாம் பொருள் கொள்ள வேண்டும்.

தமது பெயரை உச்சரிக்கும் வகையில் எத்தனையோ வாசகங்களை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இவற்றை நாம் கூறும்போது ஸலவாத்தையும் சேர்த்துக் கூற வேண்டும் என அவர்கள் நமக்கு கற்றுக் கொடுக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (நபி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.
2. தொழுகையை நிலைநிறுத்துவது.
3. ஸகாத் வழங்குவது.
4. ஹஜ் செய்வது.
5. ரமளானில் நோன்பு நோற்பது.
(புகாரி:08)

ஒருவர் முஸ்லிமாக வேண்டுமென்றால் அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று மொழிவது கட்டாயம் என்று மேற்கண்ட செய்தி கூறுகிறது. இந்தக் கலிமாவை கற்றுக் கொடுத்த நபியவர்கள் முஹம்மது என்ற பெயரை உச்சரிக்கும் போது ஸலவாத்தைச் சேர்க்காமல் கூறுவதையே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

நபியவர்களின் பெயரை உச்சரிக்கும் எல்லா தருணங்களிலும் தம் மீது ஸலவாத்துக் கூறுவது அவசியம் என்றால் அதை இங்கே நபியவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.

நாம் கலிமா மொழியும் போதும், மற்றவருக்கு கலிமாவைச் சொல்லிக் கொடுக்கும் போதும் அன்ன முஹம்மதன் என்று தான் கூறுகிறோம். அன்ன முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுவதில்லை.

பாங்கு முடிந்த பிறகு நபியவர்களுக்காக நாம் கேட்க வேண்டிய பிரார்த்தனையில் முஹம்மது என்ற பெயரை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இங்கே ஸலவாத்தைச் சேர்க்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பாங்கைக் கேட்கும் போது “அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா ”என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.

துஆவின் பொருள்:
(இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலை நிற்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் (நபி) அவர்களுக்கு உரித்தான உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக) (புகாரி:614)

இந்த துஆவில் ஆ(த்)தி முஹம்மதன் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். ஆ(த்)தி முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கற்றுத்தரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கப்ரில் ஒரு இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் வானவர்கள் வருவார்கள். “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் அவர்கள் அவனுடைய தூதராவார்கள்” என அவர் வானவர்களிடம் சாட்சியம் கூறுவார். “எவர் நம்பிக்கை கொள்கிறாரோ அவர்களை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்” (14:27) என இதைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். (புகாரி:1369)

கப்ரில் விசாரிக்கப்படும் போது நல்லடியார் அன்ன முஹம்மதன் என்று கூறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. அன்ன முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுவதாகக் குறிப்பிடப்படவில்லை.

மேலும் நபியவர்களின் பெயரை உச்சரிக்கும் போதும், அதைச் செவியுறும் போதும் அவர்களின் மீது ஸலவாத்து கூற வேண்டும் என்ற நடைமுறை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை. இவ்வாறு செய்வது மார்க்கத்தில் இருக்குமேயானால் இதை நபியவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் புறக்கணித்து இருக்க மாட்டார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹாஜிர்களும், அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டி மண்ணைத் தம் முதுகுகள் மீது சுமந்து, (வேறிடத்திற்குக்) கொண்டு செல்லத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள், “நாங்கள் உயிர் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம் என்று முஹம்மத் அவர்களிடம் உறுதிமொழி கொடுத்திருக்கின்றோம்” என்று பாடலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை எதுவும் இல்லை. அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்கும் உன் பரக்கத் எனும் அருளைக் கொடு” என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.
(புகாரி:2835)

பாயவூ முஹம்மதன் என்று மட்டுமே நபித்தோழர்கள் நபியவர்கள் முன்னிலையில் பாடியுள்ளனர். பாயவூ முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று பாடவில்லை. நபியவர்களும் அதைத் திருத்திக் கொடுக்கவில்லை. நபியவர்களின் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட நபித்தோழர் அபூபக்ர் அவர்கள் நபியவர்களின் பெயரைக் குறிப்பிடுகையில் ஸலவாத்துக் கூறவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி) பக்கமிருந்து அபூபக்ர் (ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “உங்களில் யார் முஹம்மது அவர்களை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்து விட்டார்கள். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மது தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டார்கள்; அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்து விட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதி சீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (03:144) என்றார்கள். (புகாரி:1242)

யாரேனும் முஹம்மதை வணங்கினால், என்று தான் அபூபக்ர் (ரலி) கூறினார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தை வணங்கினால் என்று கூறவில்லை.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் நபியவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது ஸலவாத்துக் கூறவில்லை. இதை நபி (ஸல்) அவர்கள் தவறு என்று கூறவில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்? எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?” என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், “என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும் போது “முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், “இப்ராஹீம் அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்கள் மீதன்று)” என்று கூறினேன். (புகாரி:5228)

முஹம்மதின் இறைவன் என்று தான் ஆயிஷா (ரலி) கூறியுள்ளனர். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறைவன் என்று கூறவில்லை.

நபியவர்கள் காலத்தில் அவர்களின் பெயர் கூறப்பட்டால் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லும் வழக்கம் நபித்தோழர்களிடம் இருக்கவில்லை. இதை நபி (ஸல்) அவர்களும் கண்டிக்கவில்லை என்பதற்கு மேலுள்ள செய்திகள் அனைத்தும் ஆதாரங்களாக உள்ளன. இன்னும் ஏராளமான ஆதாரங்கள் இதற்கு உள்ளன.

நபிமொழிகளை மொழிபெயர்க்கையில் நபியவர்களின் பெயர் வரும் போது (ஸல்) என்று மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த வாசகம் அசலில் உள்ளதல்ல. நபி என்றும், அல்லாஹ்வின் தூதர் என்றும், முஹம்மது என்றும் மட்டுமே ஹதீஸ்களின் மூலத்தில் கூறப்பட்டுள்ள இடங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் தாமாக (ஸல்) என்று சேர்த்து இது கட்டாயக் கடமை போல் ஆக்கி விட்டார்கள்.

நபியவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது (ஸல்) என்று கூறும் வழக்கம் அண்மைக் காலத்தில் தான் அறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு எழுத வேண்டும் என்றோ, கூற வேண்டும் என்றோ மார்க்கம் நமக்குக் கட்டளையிடவில்லை.

அப்படியானால் நபி (ஸல்) அவர்களைப் பற்றி நினைவூட்டப்பட்டால் அவர்கள் மீது ஸலாவத்துச் சொல்ல வேண்டும் என்ற கருத்தில் முன்பு நாம் எடுத்துக்காட்டிய இரு ஹதீஸ்களின் சரியான விளக்கம் எது என்ற கேள்வி எழுகிறது.

நபிகளின் பெயரைக் கூறும் போதெல்லாம் ஸலவாத் கூற வேண்டும் என்பது மேற்கண்ட இரு ஹதீஸ்களின் அர்த்தமில்லை. மாறாக எந்த இடத்தில் ஸலவாத் கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டி உள்ளார்களோ அந்த இடத்தில் அவர்களைப் பற்றிக் கூறப்படும் போது ஸலவாத் கூற வேண்டும் என்பதே இதன் சரியான பொருளாக இருக்க முடியும்.

தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். அதை நாம் செயல்படுத்தியும் வருகிறோம். இது ஸலவாத் கூறும் இடங்களில் ஒன்றாகும்.

அது போல் பாங்கு சொல்லி முடித்த பின் ஸலவாத் கூறுமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது “ஸலவாத்’ சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒரு முறை “ஸலவாத்’ சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் “வஸீலா’வைக் கேளுங்கள். “வஸீலா" என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும். (முஸ்லிம்:628)

பாங்கு கூறுபவர் அஷ்ஹது அன்ன முஹம்மதன் என்ற வாசகத்தை பாங்கில் கூறுவார். இவ்வாறு அவர் கூறும் போது நபியவர்களின் பெயரைக் கூறுவதால் அங்கே ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்று நபியவர்கள் கூறவில்லை. பாங்கைச் செவியுறுபவர்கள் நபியவர்களின் பெயரைக் கேட்கும் போது நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக முஅத்தின் கூறுவதைப் போன்றே பாங்கைச் செவுயுறுபவரும் கூற வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள். பாங்கு சொல்லி முடித்த பின்னர் ஸலவாத் கூற வேண்டும்.

நபிமார்களின் பெயரைக் கூறும் போது அலைஹிஸ்ஸலாம் என்று கூறுவதும்,
நபித்தோழர்களின் பெயரைக் கூறும் போது ரளியல்லாஹு அன்ஹு என்று கூறுவதும், மற்றவர்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹி என்று கூறுவதும் இது போன்றதாகும்.

அதாவது பிரார்த்தனை என்ற அடிப்படையில் இவ்வாறு கூறினால் தவறல்ல. இவ்வாறு கூறுவது மார்க்கத்தில் கட்டாயம் என்று கூறக் கூடாது.

ஒரு சபையில் நபி (ஸல்) அவர்கள் குறித்து பேசப்பட்டால் ஆயிரம் முறை பேசப்பட்டாலும் சபை முடிவில் நபி (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் துஆவை ஓதினால் அது போதுமானது.

ஒரு சபையில் நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டால் ஒரு தடவை ஸலவாத் கூறினால் போதுமானது என்பதைப் பின் வரும் ஹதீஸ்கள் தெளிவாகவும் குறிப்பிடுகின்றன.
 
ஒரு கூட்டத்தினர் ஒரு சபையில் அமர்ந்து அதை விட்டுப் பிரிவதற்கு முன் அல்லாஹ்வை நினைவு கூராமலும், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமாலும் இருந்தால் அவர்கள் சொர்க்கம் சென்றாலும் இதனால் ஏற்பட்ட இழப்பை எண்ணி வருந்தாமல் இருக்க மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஹாகிம்,அஹ்மத்)

அல்லாஹ் மிக அறிந்தவன்.

Friday, May 1, 2026

பள்ளிவாசலில் விற்பதும், வாங்குவதும் கூடுமா⁉️


பள்ளிவாசலில் விற்பதும், வாங்குவதும் கூடுமா⁉️

பள்ளிவாசலில் வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. 

பள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும், வாங்குவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
நூல் : திர்மிதி 296

பள்ளிவாசலில் சப்தமிட்டு காணாமல் போன பொருளை ஒருவன் தேடுவதைக் கண்டால் அல்லாஹ் அதை உனக்கு திரும்பக் கிடைக்காமல் செய்யட்டும் என்று கூறுங்கள். ஏனெனில் பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்:568)

பள்ளிவாசலில் விற்பது, வாங்குவது வெளியே காணாமல் போன பொருள் பற்றி பள்ளிவாசலுக்குள் விசாரிப்பது ஆகியவற்றைச் செய்யக் கூடாது என்றும் பள்ளிவாசல் இதற்காகக் கட்டப்படவில்லை என்றும் நபி (ஸல்) அவர்கள் காரணத்துடன் இதைத் தடை செய்து விட்டார்கள். இதை மீறுவது பள்ளிவாசல் கட்டப்பட்ட நோக்கத்துக்கு எதிரானது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் மஸ்ஜித் (பள்ளிவாசல்) என்ற சொல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொழுகை நடத்துவதற்காக நாம் ஒதுக்கிக் கொண்ட இடம் தான் பள்ளிவாசலாகும். பள்ளிவாசல் என்பதன் நேரடிப் பொருள் இதுதான்.
ஆனால் தொழுகை தவிர வேறு மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளுக்காகவும் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை ஒதுக்கி இருப்போம். அவை பள்ளிவாசல் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு பள்ளிவாசலின் சட்டங்கள் கிடையாது.

ஆனாலும், அந்த இடங்களும் பள்ளிவாசல் என்று சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பின் வரும் ஆதாரங்களில் இருந்து அறியலாம். 

ஸஅது (ரலி) அவர்கள் அகழ்ப்போரின் போது தாக்குதலுக்கு உள்ளானார். அவரை அருகில் இருந்து பார்த்துக் கொள்வதற்காக நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் அவருக்கு ஒரு கூடாரம் அமைத்தார்கள். (புகாரி: 463)

ஒரு கருப்பு நிற அடிமைப்பெண் அரபுகளில் ஒரு குடும்பத்தாருக்குச் சொந்தமானவளாயிருந்தாள். (நீண்ட சம்பவம்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அந்தப் பெண்ணுக்கென ரோமத்தினாலான ஒரு கூடாரம் அல்லது சிறிய குடில் இருந்தது. (புகாரி: 439) 

நாங்கள் நபியவர்களுடன் இருக்கும்போது ஒரு மனிதர் ஒட்டகத்தில் ஏறி வந்தார். ஒட்டகத்தைப் பள்ளிவாசலில் படுக்கவைத்து அதைக் கட்டிப்போட்டார். (புகாரி: 63)

அபீசீனியர்கள் பள்ளிவாசலில் வீர விளையாட்டு விளையாடினார்கள். அதை நான் பார்க்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள். (புகாரி: 454)

விபச்சாரம் செய்த யூத ஆணும், யூதப் பெண்ணும் பள்ளிவாசலில் ஜனாஸா வைக்கும் இடத்தில் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். (புகாரி: 1329) 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப்படையை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் (சென்று) பனூஹனீஃபா குலத்தாரைச் சேர்ந்த (யமாமாவாசிகளின் தலைவர்) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூணில் கட்டி வைத்தனர். (புகாரி: 469)

பள்ளிவாசல் என்று இந்த ஹதீஸ்களில் கூறப்பட்ட இடங்கள் தொழுவதற்கான இடமல்ல. மாறாக பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களாகும். இதனால் தான் தொழுகையல்லாத மற்ற காரியங்கள் இங்கே நிகழ்த்தப்பட்டுள்ளன.

நமது காலத்தில் பள்ளிவாசல் வளாகத்தில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கே சென்று மலஜலம் கழிப்பதால் பள்ளிவாசலை அசுத்தமாக்கி விட்டதாகச் சொல்ல மாட்டோம். பள்ளிவாசல் வளாகத்தில் இமாம்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து இருப்பார்கள். அவை பள்ளிவாசல் வளாகத்தில் இருந்தாலும் அவை பள்ளிவாசல் அல்ல.

எனவே தொழுவதற்காக ஒதுக்கப்பட்ட புனிதமான இடம் தவிர மற்ற இடங்கள் பள்ளிவாசல் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு பள்ளிவாசலின் சட்டங்கள் கிடையாது. அது போல் பள்ளிவாசலாக ஆக்கப்படாத வளாகத்துக்குள் விற்பது, வாங்குவது ஆகியவை பள்ளிவாசலில் விற்பதாக ஆகாது.

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து வியாபாரம் செய்துள்ளனர். பின்வரும் ஹதீஸில் இதைக் காணலாம்.
 
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் நான் இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்!என்றேன். என்ன விஷயம்? என்று கேட்டார்கள். என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!என்றேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டினார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள். நான் ஏறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்து விட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னிகழிந்த பெண்ணைத் தான்! என்று நான் கூறினேன். கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்! என்றேன். இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன் நடந்து கொள்வீராக! என்று கூறிவிட்டு பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், சரி என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்று விட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்த போது அதன் நுழைவாயிலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போது தான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனத்திற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக! என்று சொன்னார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), புகாரி: 2097)

பள்ளிவாசலில் வியாபாரம் செய்யலாம் என்பதற்கு இதை ஆதாரமாக காட்டக் கூடாது. தங்கத்தை எடை போட்டுக் கொடுத்தது தொழுவதற்கான இடத்தில் அல்ல. அரசு கஜானாவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தான்.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.