பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, March 16, 2011

வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது

வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது


9600 சதுர அடி கொண்ட எங்கள் குடும்ப வீட்டு மனையை 3 ஆண்கள் இரண்டு பெண்கள் எப்படி பிரித்துக் கொள்வது?


பாகப்பிரிவினை சம்மந்தமாக கேள்வி கேட்கும் போது சொத்துக்கு உரியவர் யார்? அவர் இறக்கும் போது யார் யார் உயிருடன் இருந்தனர் என்ற முழு விபரமும் சொல்ல வேண்டும். அதற்கேற்ப சட்டம் மாறுபடும்.

9600 சதுர அடிக்கு சொந்தக்காரர் இறக்கும் போது அவருக்கு தாயோ தந்தையோ கணவனோ மனைவியோ இல்லாமல் மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் மட்டும் இருந்தால் எப்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கப்படுகிறது. இவர்களைத் தவிர வேறு வாரிசுகள் இருந்தால் இந்தத் தீர்ப்பு பொருந்தாது.

இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண் குழந்தைக்கு இரண்டு பங்கும் பெண் குழந்தைக்கு ஒரு பங்கும் உண்டு என குர்ஆன் கூறுகின்றது.

"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் (4 : 11)

நீங்கள் குறிப்பிட்டுள்ள பாகப்பிரிவினையில் மூன்று ஆண்கள் இருப்பதால் ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் ஆண்களுக்கு ஆறு பங்குகள் உண்டு. இரண்டு பெண்கள் இருப்பதால் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பங்கு என்ற அடிப்படையில் பெண்களுக்கு இரண்டு பங்குகள் உண்டு. ஆக மொத்தம் எட்டு பங்குகளாக சொத்து பிரிக்கப்பட வேண்டும்.

9600 சதுர அடியை எட்டு பங்குகளாக வைத்தால் ஒரு பங்கு என்பது 1200 சதுர அடியாகும். எனவே பெண்கள் ஒவ்வொருவருக்கும் 1200 சதுர அடி இடம் உண்டு. ஆண்களில் ஒவ்வொருவருக்கும் 2400 சதுர அடி இடம் உண்டு.

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?


பயன்படுத்த இயலாத பழைய குர்ஆன் பிரதிகளை சிலர் எரித்துவிட வேண்டும் என்றும் சிலர் மண்ணில் புதைக்க வேண்டும் என்றும் சிலர் கிணற்றில் போட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.  ?????



ஆனால் இவ்விஷயத்தில் மார்க்கம் எந்த நிபந்தனைகளையும் இடவில்லை. குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாத காரணத்தால் இவ்விஷயத்தில் பலர் குழம்புகின்றனர். அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு எழுத்து வடிவில் காகிதத்தில் வரவில்லை. மாறாக ஓசை வடிவில் அருளப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம்.

எனவே தேவைப்படாத பிரதிகளை அழிப்பதற்கு நாம் விரும்பிய எந்த வழியை வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.

காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது

காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது


நான் ஒரு அரபியிடம் போன் கடையில் வேலை செய்து வந்தேன். அவன் ஹராமி என்று அடிக்கடி திட்டுவான். ஒரு நாள் என் முகத்தில் செருப்பால் அடித்தான். ஒரு போனில் சின்ன கிராச் ஏற்பட்டதற்காக ஒரு மாத சம்பளத்தை பிடித்துக் கொண்டான். திடீர் என்று கேன்ஸல் அடித்து விரட்டி விட்டான். நான் எனது நாடாகிய இலங்கை போகாமல் வேறு இடத்தில் பதுங்கி வேலை பார்த்து வருகிறேன். இப்படி சம்பாதிக்கும் வருமானம் ஹராமா? ஹலாலா?


இவரது கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் இவரது கேள்வியில் உள்ள பல விஷயங்களை சமுதாயத்துக்கு அறிவுறுத்தும் கடமை நமக்கு இருக்கிறது கேள்வியில் அடங்கியுள்ள பல விஷயங்களை சமுதாயத்துக்கு நாம் சுட்டிக்காட்டும் அவசியம் உள்ளது.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் சுகங்களை மட்டும் தியாகம் செய்யவில்லை. மானம் மரியாதையும் இழந்து வேலை செய்யும் அவல நிலையிலும் பலர் உள்ளனர் என்பது இவரது கேள்வியில் இருந்து தெரிகிறது. இப்படியெல்லாம் கெட்ட வார்த்தைகளால் ஏச்சு வாங்கி செருப்படி வாங்கி நாய் பிழைப்பு பிழைத்து சம்பாதிக்கும் பொருளாதாரத்தை தாயகத்தில் உள்ள உறவினரும் பெண்களும் பாழாக்கி வீண் விரயம் செய்வதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

குடும்பத்தினர் சொகுசாக வாழ்வதற்காக ஆண்கள் எத்தகைய இழிவுகளையெல்லாம் சுமக்கிறார்கள் என்பதை உணராமல் சில பெண்கள் துரோகச் செயலில் ஈடுபடுவதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆண்கள் படும் கஷ்டங்களை பெண்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தான் இதை மாற்றி அமைக்க முடியும்.

அரபுகளில் அதிகமானவர்கள் இன்னமும் அதே அறியாமைக் கால காட்டுமிராண்டிகளாகவே உள்ளனர் என்பது இவரது கேள்வியில் இருந்து தெரிகிறது. பணத் திமிர் காரணமாக ஆட்டம் போடும் காட்டு அரபிகளால் இஸ்லாத்தின் மரியாதை குறைந்து வருகிறது. மனித உருவில் வாழும் மிருகங்களிடம் போய் அடிமை வேலை பார்க்க வேண்டுமா என்று நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அடுத்ததாக இந்திய அரசாங்கம் தான் இது போல் தனது குடி மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு வெளிநாடுகளில் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு கொள்ளாமல் அநியாயம் செய்கிறது என்றால் இலங்கை அரசும் இந்தியாவைப் போலவே தனது குடிமக்களைக் காக்கத் தவறி வருகிறது என்பது இவரது மடலில் இருந்து தெரிய வருகிறது.

இது போல் எந்த அரபியாவது ஒரு அமெரிக்கனிடம் நடக்க முடியுமா? அமெரிக்கனையோ அல்லது வேறு நாட்டவரையோ அரபி ஒருவன் செருப்பால் அடித்தால் அந்த அரபியை செருப்பால் திருப்பி அடித்து விட்டு அவன் அமெரிக்க தூதரகத்துக்குள் அல்லது தனது நாட்டு தூதரகத்துக்கு போய் விட்டால் அவனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்தியா மற்றும் இலங்கை தூதரகங்களில் உள்ளவர்கள் சொரணையற்றவர்களாகவும் கடமை தவறியவர்களாகவும் உள்ளனர் என்பதற்கு இவரது நிலைமை ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது.

இனி இவரது கேள்விக்கு நாம் வருவோம்.

ஒரு மனிதன் உலகில் எங்கு வேண்டுமானாலும் பணி செய்யலாம். அப்படி பணி செய்து சம்பாதிப்பது ஹராமாக ஆகாது. ஆனால் உலக நாடுகள் வகுத்துக் கொண்ட சட்டப்படி அது குற்றமாகும்.

இந்தச் சட்டங்கள் மனிதர்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களாக இருப்பதால் அதைப் பேணி நடப்பது தான் நமக்கு பாதுகாப்பானது. மங்களூர் விமான விபத்தில் பலர் பலியான சம்பவத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். அதில் பலியானவர்களில் சிலர் ஆள் மாறாட்டம் செய்து பயணித்ததால் அவர்களின் முடும்பத்தினருக்குக் கிடைக்க இருந்த பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் கிடைக்கவில்லை.

அது போல் பணி செய்த இடத்தில் மரணித்து விட்டால் அந்த செய்தி கூட குடும்பத்துக்கு தெரிவிக்க வழியில்லாமல் போய் விடும். இன்னும் பல நன்மைகளை நாம் இழக்க நேரிடும். எனவே முறைப்படி அனுமதி இல்லாமல் வெளிநாடுகளில் பணி செய்வது நமக்குப் பல கேடுகளை ஏற்படுத்தி விடும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும் ???



இஸ்லாத்தை ஏற்பதற்கு எந்தச் சடங்கும் இல்லை. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அதாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று மனதால் நம்பி வாயால் மொழிந்தால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார். அதன் பின்னர் தனது வாழ்க்கையை திருக்குர் ஆன் போதனைபடியும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வழிகாட்டுதல் படியும் அமைஒத்துக் கொண்டால் அவர் முழுமையான முஸ்லிமாக ஆவார்

3861 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டிய போது தம் சகோதரரிடம், இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகின்ற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகின்ற இந்த மனிதரைக் குறித்த விபரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரது சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா! என்று சொன்னார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு அபூ தர்ரிடம் திரும்பிச் சென்று, அவர் நற்குணங்களைக் கைக்கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை நான் பார்த்தேன். ஒரு வாக்கையும் (செவியுற்றேன்). அது கவிதையாக இல்லை என்று சொன்னார். அபூ தர், நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை என்று கூறிவிட்டு, பயணச் சாதம் எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தனது தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூ தர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றார். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டது. அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ -ரலி- அவர்கள் அபூதர்ரிடம், வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்ல) அபூதர், அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும் வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல் பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும் வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா? என்று கேட்டு விட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்த போது அலீ (ரலி) அவர்கள் அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்க வைத்துக் கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா? என்று கேட்டார்கள். அவர், (நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன் என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி) அவர்கள், அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம். காலையானதும் நீங்கள் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகின்ற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போல நின்று கொள்வேன். நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள் என்று சொன்னார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலீ அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்த போது அவர்களுடன்அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களுடைய சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், நீங்கள் உங்கள் (ஃகிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள் என்று சொன்னார்கள். அபூதர், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இந்தச் செய்தியை (இறை மறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன் என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி சொல்கிறேன் என்று சொன்னார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (ஃகிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா? என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவர் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போலவே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டார்கள்.

நூல் புஹாரி 3861

விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால்

விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால் ???


நான் பத்து வருடங்களுக்கு முன் வாகனம் ஓட்டிச் செல்லும் என் வாகனத்தின் மூலம் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவரது நிலை என்னவானது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. இதை நினைத்து நான் வருத்தம் அடைகிறேன். இதற்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்குமா?

வேண்டும் என்றே செய்யும் காரியங்களுக்குத் தான் இறைவனிடம் தண்டனை உண்டு. அறியாமல் செய்யும் எந்தக் காரியத்துக்கும் அல்லாஹ்விடம் தண்டனை இல்லை என்பது இஸ்லாத்தின் முக்கியமான கோட்பாடாகும்.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. ''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

திருக்குர்ஆன் 2:286

மறதியாகவோ தவறுதலாகவோ செய்த காரியங்களுக்கு எங்களைத் தண்டித்து விடாதே என்று பிரார்த்திக்குமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருவதால் நம்மை மீறி நடந்த காரியங்களுக்கு அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான்.

ஆனால் நாம் செய்யும் தவறுதலான காரியங்களால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குப் பரிகாரம் செய்யும் கடமை நமக்கு உள்ளது. அதைச் செய்யத் தவறினால் அந்தக் குற்றம் நம்மைச் சேரும்.

உதாரணமாக நம் வாகனத்தின் மூலம் விபத்து ஏற்பட்டு அதனால் ஒருவர் இறந்து விட்டால் அவரைக் கொலை செய்த குற்றம் நமக்கு வராது. ஆனால் இறந்தவரின் குடும்பத்துக்கு நட்ட ஈடு கொடுக்கும் கடமை நமக்கு உள்ளது. அந்தக் கடமையில் இருந்து தவறினால் அந்தக் குற்றம் மட்டும் நம்மைச் சேரும். கொலைக் குற்றம் சேராது.

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப் பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:92

தவறுதலாகக் கொலை செய்தால் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு நட்ட ஈடு அளிக்க வேண்டும். இன்றைய காலத்தில் அடிமைகள் இல்லாததால் அடிமைகளை விடுதலை செய்ய முடியாது. ஆனால் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கும் கடமை இருக்கிறது.

ஆனால் இதுவும் கூட இன்றைய காலத்தில் சமுதாயப் பொறுப்பாக உலகம் முழுவதும் ஆக்கப்பட்டு விட்டது. வாகனங்களை நாம் வாங்கும் போதே இது போன்ற விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்காகவும் இன்ஷ்யூரன்ஸ் கட்டணம் நம்மிடமிருந்து பெறப்படுகிறது. இப்படி வாகனம் வாங்கும் அனைவரிடம் இருந்தும் பெறப்படும் தொகையில் இருந்து விபத்து நடக்கும் போது பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது.

இதை இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளிடம் இருந்து வாங்கிக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கமும் நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்கின்றன. நாம் விபத்து ஏற்படுத்தி விட்டு ஓடி விட்டாலும் அதற்கான நட்ட ஈடு பாதிக்கப்பட்டவருக்கோ பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கோ கிடைத்து விடக்கூடிய ஏற்பாடு உலக நாடுகள் அனைத்திலும் செய்யப்பட்டு விட்டது. நாம் செலுத்த வேண்டிய நட்ட ஈட்டை நம் சார்பில் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கி விடுவதால் நம் மீது எந்தக் குற்றமும் சேராது.

மேலும் விபத்து ஏற்படுத்தியவர் தப்பிச் செல்லாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தால் வெறிகொண்ட பொது மக்களால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்தால் அந்த நேரத்தில் மட்டும் அந்த இடத்தை விட்டு ஓடுவது கூட குற்றமாகாது. அப்படி இல்லாத பட்சத்தில் அந்த இடத்தில் செய்ய வேண்டிய மனிதாபிமான கடமைகளை நாம் தவிர்க்கக் கூடாது.

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை


சூரிய கிரகணத்தை காணும்போது தொழுங்கள் என்று ஹதீஸ் உள்ளது. கண்டால் மட்டும் தொழ வேண்டுமா? பல இடங்களில் தமிழ்நாட்டிலேயே இருந்தாலும் கிரகணம் தெரியவில்லை. அங்கு தொழ வேண்டுமா அல்லது காண முடியாததால் தொழக் கூடாதா ?


இது குறித்து பிறை ஓர் விளக்கம் எனும் நூலில் நாம் விளக்கியதையே பதிலாகத் தருகிறோம்

கிரகணத் தொழுகை

தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 1042

பிறையை எப்படித் தீர்மானிப்பது என்பதைப் பற்றிய ஆய்வில் கிரகணம் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவது அவசியமாகும். முதல் பிறை, பௌர்ணமி, அமாவாசை போன்றவை பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களாகும்.

இதே போல் சூரிய, சந்திர கிரகணங்களும் பூமி, சந்திர சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே நிகழ்வதால் கிரகணத்தைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் பிறை விஷயத்திலும் பிரதிபலிக்கும்.

இதைக் கவனத்தில் கொண்டு கிரகணம் குறித்து ஆராய்வோம்.

கிரகணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் தொழுவது நபிவழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது நமது கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா? சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத் தனம் என்று தான் அதைக் கூற வேண்டும்.

விஞ்ஞான அடிப்படையிலும் சரி தகவல் அடிப்படையிலும் சரி உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக்கூடியவர்கள் அமெரிக்காவில் தோன்றும் சந்திர கிரகணத்திற்கு இந்தியாவில் தொழ வேண்டும் என்று கூற மாட்டார்கள்.

1999ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கிரகணம் முதன் முதலில் லண்டனில் தோன்றியது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கிரகணம் என்பதால் உலகமெங்கும் இருந்து மக்கள் அந்தக் கிரகணத்தைக் காண லண்டனுக்குச் சென்றனர்.

லண்டனில் சூரிய கிரகணம் ஏற்படும் போது இந்திய நேரம் பிற்பகல் சுமார் 3 மணி. கிரகணத்தின் காரணமாக அங்கு இருட்டாகி இரவைப் போல் காட்சியளித்ததை பி.பி.சி தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தோம். அதே நேரத்தில் சென்னையில் சூரியன் ஒளிவீசிக் கொண்டிருந்தது. லண்டனிலிருந்து கிரகணம் படிப்படியாக துருக்கி ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து இறுதியில் சென்னையில் 6 மணியளவில் கிரகணம் ஏற்பட்டு விலகியது.

இப்படி ஊருக்கு ஊர் கிரகணம் வெவ்வேறு நேரங்களில் தோன்றியதை நாம் கண்கூடாகக் கண்டோம்.

கிரகணம் ஏற்படுவதாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா? அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா?

இந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தக் கோள்விகளை நாம் எழுப்பும் போது சிலர் வீம்புக்காக கிரகணம் ஏற்பட்ட தகவலைக் கேட்டும் கிரகணத் தொழுகை தொழலாம் என்று வாதிடுகின்றார்கள். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும் என்பது போல் மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் சூரியன் ஒளி வீசிக் கொண்டிருக்கும் போது சூரிய கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு அவ்வாறு கிரகணத் தொழுகை தொழ வேண்டும் என்று ஒப்புக் கொண்டாலும் எந்த நேரத்தில் தொழ வேண்டும்?

லண்டனில் சூரிய கிரகணம் தோன்ற ஆரம்பித்து முழுமையாக விலகும் வரை அங்குள்ள மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

தங்களுடைய நாட்டில் எப்போது கிரகணம் ஏற்பட்டதோ அந்த நேரத்தில் துருக்கி, ஈரான் மக்கள் தொழுது கொள்வார்கள்.

கிரகணமே ஏற்படாத பகுதியில் உள்ள மக்கள் எப்போது தொழ வேண்டும்? லண்டனுடைய கிரகண நேரத்திலா? துருக்கியுடைய கிரகண நேரத்திலா? அல்லது லண்டனிலிருந்து சென்னை வரை கிரகணம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரமும் சேர்த்துத் தொழ வேண்டும் என்று கூறப் போகிறார்களா?

இந்தக் கேள்விகளுக்கு அவர்களது மனோ இச்சைப் படி என்ன தான் பதில் கூறினாலும் கிரகணம் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதை அவர்களால் மறுக்க முடியாது.

இதற்கு இவர்கள் அளிக்கும் மறுப்பு வேடிக்கையாக உள்ளது.

கிரகணத்தைப் பிறையோடு பொருத்திப் பார்க்கக் கூடாது. ஏனெனில் கிரகணம் ஏற்பட்டாலும் அந்த நேரத்தில் பிறை உள்ளே இருக்கிறது என்று தான் விஞ்ஞானம் கூறுகின்றது. எனவே கிரகணத்தை ஆதாரமாகக் காட்டி பிறையையும் அவ்வாறு எடுத்துக் கொள்ளக் கூடாது. என்று இவர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறு கூறுவது இவர்களின் அறியாமையையே காட்டுகிறது. கிரகணம் ஏற்படும் போது தான் தலைப்பிறை என்று நாம் கூறவில்லை. மாறாக ஒரு பகுதியில் தெரிந்த சந்திர கிரகணம் மற்ற பகுதியில் ஏன் தாமதமாக ஏற்படுகிறது என்ற காரணத்தையே சிந்திக்கச் சொல்கிறோம். இந்தக் காரணம் தலைப் பிறைக்கும் பொருந்தும் என்பது தான் நமது வாதம்.

முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா

முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா



சலஃபிகள் இஸ்லாமிய அரசை விமர்சிக்கக் கூடாது என்ற நிலைபாட்டில் உள்ளனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஒரு இஸ்லாமிய அரசுக்குக் கீழ் வாழ்பவர்கள் அரசு செய்யும் தவறுகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்ட சக்தி இருக்குமேயானால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகின்றது. இதைப் பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

70 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلَاهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ وَهَذَا حَدِيثُ أَبِي بَكْرٍ قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلَاةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلَاةُ قَبْلَ الْخُطْبَةِ فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ رواه مسلم

முதன் முதலிலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார். (அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.) அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று, "சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும்'' என்று கூறினார். அதற்கு மர்வான் "முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டு விட்டது (இப்போது அது நடைமுறையில் இல்லை)'' என்று கூறினார். (அப்போது அங்கிருந்த) அபூசயீத் அல்குத்ரீ (ரலிலி) அவர்கள், "இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றி விட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்: உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப்
நூல் : முஸ்லிம் (78)

4138 أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ أَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ رواه النسائي

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எந்த அறப்போர் சிறந்தது? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கிரமம் புரியும் அரசனிடம் சத்தியத்தை எடுத்துரைப்பது எனப் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல் : நஸாயீ (4138)

யார் என்ன சொன்னாலும் சத்தியத்தைச் சொல்வதற்கு அஞ்சக் கூடாது என்று மார்க்கம் கூறுகின்றது.

7199 حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الْوَلِيدِ أَخْبَرَنِي أَبِي عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْمَنْشَطِ وَالْمَكْرَهِ وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ وَأَنْ نَقُومَ أَوْ نَقُولَ بِالْحَقِّ حَيْثُمَا كُنَّا لَا نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ رواه البخاري

நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்கüன் பழிப்புரைக்கு அஞ்சாமல் "உண்மையையே கடைப்பிடிப்போம்' அல்லது "உண்மையே பேசுவோம்' என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)
நூல் : புகாரி (7200)

10594 حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ سُلَيْمَانَ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَمْنَعَنَّ أَحَدَكُمْ هَيْبَةُ النَّاسِ أَنْ يَقُولَ فِي حَقٍّ إِذَا رَآهُ أَوْ شَهِدَهُ أَوْ سَمِعَهُ قَالَ وَقَالَ أَبُو سَعِيدٍ وَدِدْتُ أَنِّي لَمْ أَسْمَعْهُ رواه أحمد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் சத்தியத்தைக் கண்டால் அல்லது அதைச் செவியுற்றால் மக்களின் பயம் அதைக் கூறவிடாமல் அவரைத் தடுக்க வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூ சயீத் (ரலி)
நூல் : அஹ்மது (10594)

இன்றைக்கு அநேகமான இஸ்லாமிய நாடுகளில் உண்மையான இஸ்லாம் இல்லை. அந்நாடுகளை ஆழ்பவர்கள் பெயரளவில் மட்டும் முஸ்லிம்களாக இருக்கின்றனர். இந்த ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளைக் கண்டித்து பேசினால் தான் இவர்கள் தங்களுடைய தவறுகளை உணரும் நிலை ஏற்படும். மேலும் இந்த ஆட்சியாளர்களைப் பற்றிய சரியான கணிப்பீடும் மக்களிடம் ஏற்படும்.

அரசை விமர்சிக்கக் கூடாது என்று கூறி ஒதுங்கிவிட்டால் இந்த ஆட்சியாளர்கள் தங்களுடைய தவறுகளை உணர மாட்டார்கள். அதிலிருந்து திருந்த மாட்டார்கள்.

இஸ்லாமிய நாட்டை ஆள்பவர் இணை வைக்காத முஸ்லிமாக இருந்தால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இதைச் சிலர் காரணமாகக் கூறுகின்றனர்.

2955 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ح و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّمْعُ وَالطَّاعَةُ حَقٌّ مَا لَمْ يُؤْمَرْ بِالْمَعْصِيَةِ فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلَا سَمْعَ وَلَا طَاعَةَ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, தலைவரின் கட்டளையைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கடமையாகும். அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கூடாது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (2955)

ஆட்சியாளருக்குக் கட்டுப்பட வேண்டும் என்றால் அவர் செய்யும் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. நிர்வாக ரீதியில் மார்க்கத்திற்கு முரண் இல்லாத வகையில் அரசர் இடும் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதே இதன் பொருள்.

அரசருடைய தவறுகளை சுட்டிக்காட்டுவதும் அதை விமர்சனம் செய்வதும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற கட்டளைக்கு முரணான செயல் அல்ல. மாறாக ஒருவர் அரசருக்குக் கட்டுப்பட்ட நிலையில் அவருடைய தவறுகளை விமர்சனம் செய்யலாம். இவர் கட்டுப்பாட்டை மீறியவராக மாட்டார்.

அதே நேரத்தில் ஆயுதம் தாங்கி முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதையும் மறந்து விடக்கூடாது