பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

நபி (ஸல்) அவர்களின் சளியை நபித்தோழர்கள் தங்கள் உடம்பில் பூசிக் கொண்டார்கள் என்று கூறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

 

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் சளியை நபித்தோழர்கள் தங்கள் உடம்பில் பூசிக் கொண்டார்கள் என்று கூறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

“அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரின் கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் உளூச் செய்தால் அவர் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவிற்குச் செல்வார்கள்.”

நூல்: புகாரி 2731 & 2732

இது அதாரப்பூர்வமான ஹதீஸா? ஆதாரமான ஹதீஸ் என்றால் இது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இல்லையே ?

ஜாஹிர் அஹமத்

பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்த ஹதீஸாக இருந்தாலும் அது திருக்குர்ஆனுக்கும் இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளுக்கும் மாற்றமாக இருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்ற நிலையை அடையாது. குறிப்பிட்ட நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் அல்லது அதைச் சொல்பவர் நம்பகமானவர் என்பது மட்டும் ஒரு ஹதீஸை ஆதாரப்பூவமானதாக ஆக்கிவிடாது.

நீங்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸ் பல பக்கங்களைக் கொண்ட நீண்ட ஹதீஸாகும். ஹுதைபியா உடன்படிக்கையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், எதிரிகளுக்கும் நடந்த உரையாடலும் ஒப்பந்தமும் அதில் இடம் பெற்றுள்ளன.

எதிரிகள் சார்பில் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த உர்வா பின் மஸ்வூத் என்பவர் அதாவது முஸ்லிமல்லாத ஒருவர் கூறியதாக நீங்கள் சுட்டிக் காட்டும் கருத்து இடம் பெற்றுள்ளது.

பிறகு உர்வா பின் மஸ்வூத்நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களைத் தமது இரு கண்களால் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார். அல்லாஹ்வின் மீதாணையாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும்உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர்தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும்மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொள்கிறார்கள். நபியவர்கள் அவர்கள் உளூ செய்து எஞ்சிய தண்ணீரைப் பிடித்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோடொருவர் சண்டை போடுமளவிற்குச் சென்று விடுகிறார்கள்.

அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), நூல்: புகாரி 2731

இது தான் நீங்கள் குறிப்பிடும் செய்தி. இதில் அறிவிப்பாளர்கள் ரீதியாக எந்தக் குறையும் இல்லை. என்றாலும் இது முஸ்லிமல்லாதவரின் கூற்றாகத் தான் இடம் பெற்றுள்ளது. ஒருவருக்கு முழுமையாகக் கட்டுப்படும் மக்களைக் காணும் போது இவரது சளியைக் கூட மேனியில் பூசிக் கொள்பவர்கள் என்று மிகைபடக் கூறும் வழக்கம் உள்ளது.

வெள்ளை வெளேர் நிறத்தில் உள்ளவரைப் பற்றி கூறும் போது இவரின் வெளிச்சம் இருக்கும் போது விளக்கு தேவைப்படாது என்று கூறுவது போல் இதையும் புரிந்து கொள்ள வேண்டும். நபித்தோழர்கள் நபிக்குக் கட்டுப்பட்டதைக் கண்டு வியந்த உர்வா பின் மஸ்வூத் என்பார் இவர் சளியைத் துப்பினால் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் அதைத் தாங்குவார்கள் போல் உள்ளதே என்று மிகைபடக் கூறினார் என்று இதை எடுத்துக் கொண்டால் இதற்கு நேரடிப் பொருள் கொள்ளக் கூடாது. அதிகம் கட்டுப்படுகிறார்கள் என்ற கருத்தைத் தான் கொள்ள வேண்டும்.

இது போல் வருகின்ற செய்திகள் அனைத்தையும் இப்படிப் புரிந்து கொண்டால் இதில் மார்க்க அடிப்படையில் குறைகாண முடியாது. இப்படி கருத்து கொண்டால் இது ஆதாரப்பூர்வமானது என்று ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் தேவை இல்லை.

அவ்வாறு இல்லாமல் நிஜமாக நபிகள் நாயகம் எச்சிலைத் துப்பும் போது அதைப் பிடித்து உடல் முழுவதும் பூசிக் கொண்டார்கள் என்று நேரடியான கருத்து என்று எடுத்துக் கொண்டால் அப்போது இது ஆதாரமற்ற செய்தி என்ற நிலைக்கு இறங்கி விடும்,

இந்தக் கருத்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், திருக்குர்ஆன் போதனைக்கும் ஏனைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரணாகவும் ஆகிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களின் ஒட்டு மொத்த அறிவுரைகள் மூலம் நாம் அறிந்து வைத்துளோம். இது போல் அவர்கள் முன்னால் நடந்து இருந்தால் அதைக் கண்டு வெறுப்பவர்களாகத் தான் அவர்கள் இருந்திருப்பார்கள். மனிதன் இயல்பாகவே அருவருப்படையும் செயலை தன் முன்னால் தனக்காகச் செய்யும் போது அதைக் கண்டு மகிழ்வது அவர்களின் நற்பண்புகளுக்கும் பொருந்தவில்லை.

நபியின் இந்தப் பொதுவான பண்புகளைக் கூறும் எல்லா ஆதாரங்களுடனும் இந்தச் செய்திக்கு நேரடிப் பொருள் கொடுத்தால் அது மோதுகிறது.

நபிகளார் எந்த ஒரு சமயத்திலும் தான் புகழப்பட வேண்டும், தனக்கு ஏனையோர் மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்பியதில்லை. ஆதலால் தான் தனக்காக எழுந்து நிற்பதைத் தடை செய்து பிறர் தனக்காக எழுந்து நிற்க வேண்டும் என்று விரும்புவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்தார்கள்.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும்இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அமருங்கள்‘ என்றார். தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்.

நூல்கள்: திர்மிதி 2769, அபூதாவூத் 4552

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார்.

நூல்கள்: அஹ்மத் 12068, 11895, திர்மிதீ 2678

நபிகள் நாயகத்தை அந்த மக்கள் நேசித்தது போல் எந்த மக்களும் எந்தத் தலைவரையும் நேசித்ததில்லை. ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) வரும் போது சபையில் இருக்கும் ஒருவரும் அவர்களுக்காக எழக் கூடாது என்பதைத் தெளிவாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஒரு மனிதனுக்குச் செய்யப்படும் சாதாரண மரியாதையைக் கூட மாபெரும் ஆன்மீகத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை. இதனால் மற்றவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். தனக்காக எழுந்து நிற்பதையே வெறுத்த நபிகள் நாயகம் தமது சளியை மக்கள் முகத்தில் பூசிக் கொள்வதை அனுமதித்திருப்பார்களா? இது எழுந்து நின்று மரியாதை செய்வதை விடவும் மிக மோசமானதும், அருவருக்கத்தக்கதும் இல்லையா? சுயமரியாதையை வலியுறுத்திப் போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தொண்டர்களின் சுயமரியாதைக்குப் பெரிதும் இழுக்கான இக்காரியத்தை எப்படி அனுமதித்திருப்பார்கள்?

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல் படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்த போது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். விடுங்கள் எனக் கூறி அந்தத்துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் எனவும் கூறினார்கள்.  (நூல்: தப்ரானி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ்தண்ணீர்ப் பந்தலின் பொறுப்பாளராக இருந்தார். அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பாரை அழைத்து, ‘வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காகக் குடிதண்ணீர் வாங்கி வா‘ என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தத் தண்ணீரையே தாருங்கள்‘ எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே‘ என்று அப்பாஸ் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள்‘ எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள். பின்னர் புனிதமான ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும்அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன்‘ என்று கூறினார்கள்.  (நூல்: புகாரி 1636)

ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். ‘சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்’ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

பார்க்க: நூல் இப்னு மாஜா 3303

சாதாரண இந்த மரியாதையையே ஏற்றுக் கொள்ளாத நபிகள் நாயகம் அவர்கள் தமது சளியைப் பிறர் முகத்தில் பூசி தனக்கு மரியாதை செய்வதை ஏற்றிருப்பார்களா? இப்படி மெய்யாகவே நடந்திருந்தால் இதைக் கண்டிக்காமல் மௌனியாக இருந்திருப்பார்களா?

நானும் மனிதனே ‘எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்’ என்று அழுத்தம் திருத்தமாக நபிகள் கூறினார்கள். அவ்வாறு கூற வேண்டும் என்று இறைவனே தமக்கு கட்டளையிட்டதாகக் கூறினார்கள். இந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். “இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்‘ என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து “நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்‘ என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?’ எனக் கேட்டார்கள். “மாட்டேன்‘ என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஆம்அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்‘ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி),  நூல்: அபூதாவூத் 1828

எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே!” என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும்அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்” என்றார்கள்.  (நூல்: அஹ்மத் 12093)

கிறித்தவ சமுதாயத்தினர் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வின் அடியானே. எனவே அல்லாஹ்வின் அடியான் என்றும் அவனது தூதர் என்றும் என்னைப் பற்றிக் கூறுங்கள்” என்று மேடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.  (நூல்: புகாரி 3445)

நபிகளாரின் சளியை மக்கள் தங்கள் முகத்தில் பூசிக் கொண்டு நபிகள் நாயகத்தின் தகுதியை விடவும் உயர்த்தும், வரம்பு மீறிய மரியாதையை அளிக்கும் இச் செயலை நபிகளார் அனுமதித்திருப்பார்களா?

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். (அல்குர்ஆன் 68:4)

நற்குணத்தை விரும்பும் நாமே இதைச் சகிக்க மாட்டோம் எனில் உயர்ந்த நற்குணத்தில் இருக்கிற நபிகளார் இதை எப்படி சகித்திருப்பார்கள்? நபிகளாரின் சளியை ஸஹாபாக்கள் தங்கள் முகத்தில் தேய்த்ததாகச் சொல்லப்படும் இந்தச் சம்பவம் அதன் நேரடிப் பொருளில் சொல்லப்பட்டு இருந்தால் இச்சம்பவம் குர்ஆன், ஹதீஸ் முழுதும் சொல்லப்பட்டிருக்கும் நபிகளாரின் நற்குணத்திற்கு எதிராக, மாமனிதர் என்ற நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதாக உள்ளது.

அதுமட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சளியை அருவருக்கத்தக்கது என்று சொல்லியிருக்கிறார்கள்.

கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு “உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றுகொண்டிருக்கும் போது “அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார்‘ அல்லது “அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்‘. ஆகவேஎவரும்  தமது கிப்லாத் திசை நோக்கிக்  கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்து கொள்ளட்டும்” என்று கூறிவிட்டுப் பிறகுதமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, “அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் ரலி,  நூல்: புகாரி 405

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளி வாசலின்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் “மூக்குச் சளியை‘ அல்லது “எச்சிலை‘ அல்லது “காறல் சளியைக் கண்டார்கள். உடனே அதை சுரண்டி (சுத்தப்படுத்தி)விட்டார்கள்..

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),   நூல்: புகாரி 407

உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் சளியை உமிழ்வதாக இருந்தால் அது முஸ்லிமின் மேனியில் பட்டு அல்லது அவரது ஆடையில் பட்டு அவருக்கு தொல்லை தராதவாறு சளியை மறைக்கட்டும் என நபிகள் நாயகம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ், நூல்: அஹ்மத் 1461

சளி அருவருக்கத்தக்கது என்றும் அது யாருடைய மேனியிலும் பட்டுவிடாதவாறு எச்சில் உமிழுமாறும் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். நமது எச்சில், சளி பிறருடைய மேனியிலோ, ஆடையிலோ படுவது அவருக்குத் தொல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.  மேலும் நபியவர்கள் சுத்தத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதை ஏராளமான குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களில் காண்கிறோம்.  இவை அனைத்துக்கும் மாற்றமாக நிச்சயம் நபித்தோழர்கள் செய்திருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

என் சகோதரிகளுக்கு என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா?

 

? என் சகோதரிகளுக்குச் சொந்தமாக வீடு உள்ளது. ஆனால் அவர்களுக்கு வருமானம் இல்லை. இந்த நிலையில் என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா? ஆனால் அவர்களிடம் 11 பவுன் நகைக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளது. விளக்கவும்.

முஹம்மத்

செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்குக் கொடுப்பதே ஜகாத் என்பதன் அடிப்படை.

இந்த அடிப்படையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

செல்வந்தர்கள், ஏழைகள் என்பது ஒப்பிட்டுப் பார்த்து வகைப்படுத்துவதாகும். ஒருவருடன் ஒப்பிடும் போது செல்வந்தராக காணப்படுபவர் இன்னொருவருடன் ஒப்பிடும் போது ஏழையாக இருப்பார்.

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் மக்களைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவர் சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார். அவருக்கு மாதம் இருபதாயிரம் சம்பளம் கிடைக்கிறது. இவர் தனது சொந்த ஊரில் செல்வந்தராகக் கருதப்படுவார்.

ஆனால் சவூதியில் இவருக்குச் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பார்வையில் இவர் ஏழையாவார். ஒரு அரபியின் வீட்டில் வேலை செய்தால் அந்த வீட்டின் உரிமையாளர் பார்வையில் இவர் பரம எழையாவார். இவரது தரத்தில் உள்ளவர்களுக்குத் தான் அரபிகளால் ஜகாத் கொடுக்க முடியும். இல்லாவிட்டால் அரபிகள் ஜகாத் கொடுக்க முடியாது.

அரபுகளிடம் ஜகாத் பெற்ற இவர் தனது ஊரில் உள்ள ஏழைகளுக்கு ஜகாத் கொடுக்கலாம். நானே ஜகாத் வாங்கியிருக்கிறேன்; நான் எப்படி ஜகாத் கொடுப்பது என்று கருதினால் அந்த ஊர் மக்களுக்கு ஜகாத் கிடைக்காமல் போய்விடும்.

மேலும் அந்த ஊரில் இவரை விட குறைந்த வருவாய் உள்ளவர்கள் கூட ஜகாத் கொடுப்பார்கள். ஆனால் அவர்களை விட அதிக வருமானம் உள்ளவர் நானே ஜகாத் வாங்கி இருக்கிறேன் நான் எப்படி ஜகாத் கொடுப்பது என்று வாதிடுவது வரட்டு வாதமாகவே அமையும்.

ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்குபவராக இருக்கக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருந்தால் இவ்வாறு வாதிடலாம். அவ்வாறு எந்தக் கட்டளையும் மார்க்கத்தில் இருப்பதாக நாம் தேடிப்பார்த்த வகையில் கிடைக்கவில்லை.

ஒரு ஊரில் பலகோடி ரூபாய்களுக்கு அதிபதியாக ஒருவர் இருக்கிறார். அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் லட்சாதிபதி அவர் பார்வையில் ஏழையாக உள்ளதால் இவருக்கு ஜகாத் கொடுக்கலாம். இவரும் வாங்கிக் கொள்ளலாம். அவ்வாறு வாங்கி விட்டு தனது வருமானத்தையும் தனக்கு ஜகாத்தாக கிடைத்த வருமானத்தையும் கணக்கிட்டு அதில் இருந்து தன்னை விட ஏழைகளுக்கு இவர் ஜகாத் கொடுக்கலாம்.

இதில் இன்னொரு விஷயமும் உள்ளது.

11 பவுன் தங்கம் வைத்து இருந்தால் ஜகாத் கடமை என்ற நிலையில் நாம் இருக்கிறோம். தங்கத்தை அளவுகோலாகக் கூறும் ஹதீஸில் விமர்சனம் உள்ளது. வெள்ளியை அடிப்படையாகக் கூறும் ஹதீஸ் விமர்சனம் இல்லாததாக இருக்கிறது. இது குறித்து ஜமாஅத் அறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். வெள்ளியை அளவுகோலாக கொள்ளும் ஹதீஸ் தான் சரியானது என்ற முடிவுக்கு வந்தால் இன்றைய மதிப்பில் ஐந்தாயிரம் ரூபாய் வைத்துள்ளவருக்கு ஜகாத் கடமையாகிவிடும்.

ஐந்து ஊகியா வெள்ளி வைத்து இருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகிறது. ஒரு ஊகியா என்பது 40 திர்ஹமாகும். அன்றைய ஒரு திர்ஹத்தின் இன்றைய எடை 3.6 கிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 200 திர்ஹத்தின் எடை 720 கிராம் ஆகும். அதாவது வெள்ளியை அளவுகோலாக கொள்ளும் ஹதீஸ் தான் சரியானது என்றால் இன்றைய மதிப்பில் 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் உள்ளவருக்கு ஜகாத் கடமையாகி விடும்.

தங்கத்தை அளவு கோலாக கொண்டால் 11 பவுன் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புடையதாகும்

தங்கத்தை அளவு கோலாகக் கொள்ளும் ஹதீஸ் சரி என்றால் மூன்று லட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு ஜகாத் கடமையாகாது. ஆனால் வெள்ளியை அளவுகோலாகக் கொள்ளும் ஹதீஸ் தான் சரியானது என்றால் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புக்கு பணம் அல்லது தங்கம் வெள்ளி இருந்தால் ஜகாத் கடமையாகி விடும்.

முப்பதாயிரம் ரூபாய் அல்லது அதன் மதிப்புடைய தங்கம், வெள்ளி, பணம் இல்லாதவர் மிகச் சிலரே இருப்பார்கள். அப்படியானால் ஊருக்குப் பத்து பேர் கூட ஜகாத் வாங்கத் தகுதி உடையவராக மாட்டார்கள். ஜகாத் என்ற அம்சம் வெறும் ஏட்டில் மட்டுமே இருக்கும். எனவே ஜகாத் வாங்குபவர் ஜகாத் கொடுப்பவராகவும் இருக்கலாம் என்ற நிலைபாடு இருந்தால் தான் ஜகாத் என்பது நடைமுறையில் இருக்கும்.

எனவே நமக்கு யாரும் ஜகாத் கொடுத்தால் அவர்கள் நம்மை விட மேல்நிலையில் தான் இருப்பார்கள், அவர்களிடம் இருந்து நாம் ஜகாத்தை வாங்குவது குற்றமில்லை. எனெனில் அவருடன் ஒப்பிடும் போது நாம் எழையாகத் தான் இருக்கிறோம். அதுபோல் நம்மைவிடக் கீழ் நிலையில் உள்ளவர்களுடன் ஒப்பிடும் போது நாம் அவரை விடச் செல்வந்தராக இருப்போம். அதனடிப்படையில் நாம் கொடுப்பவர்களாகவும் இருக்கலாம்.

அல்லாஹ் ஒருவன் மட்டுமே யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காமல் செல்வந்தன் என்ற பட்டத்துக்கு கனீ என்ற பட்டத்துக்கு உரியவன். மனிதர்களில் அப்படி ஒரு செல்வந்தனும் இல்லை.

மனைவி கணவருக்குத் தெரியாமல் ஆணிடம் தொடர்பு வைத்திருக்கிறாள்.இந்நிலையில் அந்தக் கணவன் என்ன செய்வது?

 

? மனைவி கணவருக்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்பிலிருந்து இப்போது வரையிலும் இன்னொரு ஆணிடம் தொடர்பு வைத்திருக்கிறாள். இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அந்தக் கணவன் என்ன செய்வது?

முஹம்மது

திருமணம் மூலம் அல்லாமல் கள்ளத் தொடர்பு வைக்கும் ஆண்களாயினும், பெண்களாயினும் இஸ்லாமிய ஆட்சியில் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். திருமணம் செய்யாத நிலையில் இது போல் விபச்சரம் செய்பவருக்கு நூறு கசையடிகளும் திருமணத்துக்குப் பின் விபச்சாரம் செய்பவருக்கு மரண தண்டனையும் இஸ்லாமிய ஆட்சியில் வழங்கப்படும்.

இஸ்லாமிய ஆட்சியில் நீங்கள் குறிப்பிடும் பெண் இரு வகையான தண்டனைக்கும் உரியவராகிறார்.

இஸ்லாமிய ஆட்சி இல்லாத நிலையில் அவளது கணவன் தன்னளவில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.  (அல்குர்ஆன் 24:3)

ஒரு முஸ்லிம் ஆண் நடத்தை கெட்ட விபச்சாரியைத் திருமணம் செய்யக்கூடாது என்றும் ஒரு முஸ்லிம் பெண் நடத்தை கெட்டவனைத் திருமணம் செய்யக் கூடாது என்றும் மேற்கண்ட வசனம் தடை விதிக்கின்றது

மேலும் நடத்தை கெட்ட பெண்கள் நன்னடத்தை கொண்ட ஆண்களுக்குத் தகுதியானவர்கள் இல்லை என்றும் குர்ஆன் கூறுகிறது.

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.  (அல்குர்ஆன் 24:26)

கற்பு நெறியைப் பேணாதவர்களுடன் முஸ்லிம்கள் வாழக் கூடாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஆணோ பெண்ணோ தவறான நடத்தையுடையவராக இருந்து திருந்தி விட்டால், திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுவிட்டால் அவர்களை வாழ்க்கைத் துணையாக வைத்துக் கொள்வது சம்பந்தப்பட்டவரின் விருப்பத்தைப் பொருத்ததாகும்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோதமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். தமது இறைவனிடமிருந்து மன்னிப்பும்சொர்க்கச் சோலைகளுமே அவர்களின் கூலி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (நன்கு) செயல்பட்டோரின் கூலி மிகவும் நல்லது. (அல்குர்ஆன் 3:135, 136)

அவ்வாறு இல்லாமல் கணவன் இருக்கும் போதும் ஒரு பெண் கள்ள உறவு வைத்திருந்தால் அவளுடன் கணவன் வாழக் கூடாது. அவளை விவாகரத்துச் செய்து விட வேண்டும். இந்தக் காரணத்துக்காக விவாகரத்துச் செய்யும் போது அவர்களுக்கு எந்த இழப்பீட்டையும் கணவன் வழங்கத் தேவையில்லை.

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால்நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.  (அல்குர்ஆன் 4:19)

வெளிப்படையாக வெட்கக்கேடானதைச் செய்யாத வரை தான் மனைவியுடன் வாழ முடியும் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும்மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 24:19)

இது போன்றவர்களுடன் வாழ்க்கை நடத்துவது முஸ்லிம் சமுதாயத்தில் மானக்கேடான செயல் பரவுவதற்கு அடையாளமாகும். இது பாவமாகும். இதன் பின்னரும் அதைச் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களுக்கு அல்லாஹ்விடம் தண்டனை உண்டு. மற்ற பெண்களும் இதுபோல் நடக்கும் துணிவையும் இது ஏற்படுத்தி விடும்.

நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.  (அல்குர்ஆன் 65:1)

விவாகரத்துக்குப் பின்னர் ஒழுக்கக்கேடாக நடந்தால் இத்தா காலத்தில் கணவன் வீட்டில் தங்கும் உரிமையை அவர்கள் இழக்கிறார்கள். மனைவி எனும் பந்தம் நீங்கிய பின்னர் இந்த நிலை என்றால் மனைவியாக இருக்கும் போது ஒழுக்கங்கெட்ட செயலில் ஈடுபடும் பெண்ணைச் சகித்துக் கொள்ள முடியாது.

இத்தா காலத்தில் செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட ஒழுக்கங்கெட்டவர்களுக்கு கொடுக்க அவசியம் இல்லை என்பதால் விவாகரத்து செய்யும் போது கொடுக்கும் இழப்பீட்டைக் கொடுக்கத் தேவை இல்லை என்பதை இதில் இருந்து அறியலாம்.

விபச்சாரிகளுடன் இல்லற வாழ்வைத் தொடர்வது சுயமரியாதைக்குப் பெரிதும் இழுக்காகும். மேலும் இது போன்றவர்களுடைய நடவடிக்கை குழந்தைகளின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும்.

ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா?

 

? ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா?

ஃபர்சான்

ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடி, கத்தி போன்றவற்றைப் பிடித்த நிலையில் உரையாற்ற வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். பல பள்ளிவாசல்களில் இவ்வாறு செய்தும் வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு உரையாற்றியதாக வரும் செய்தியைத் தவறான முறையில் புரிந்து கொண்டதால் இவ்வாறு செய்து வருகின்றனர்.

ஹகம் பின் ஹஸ்ன் அல் குலஃபீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஜும்ஆவில் பங்கு கொண்டோம். அப்போது அவர்கள் கைத்தடி அல்லது வில்லை ஊன்றியவர்களாக நின்றார்கள். அல்லாஹ்வை அவர்கள் புகழ்ந்து வளமானமணமானஎளிமையான வார்த்தைகளால் அவனைப் பாராட்டினார்கள். பிறகு “மக்களே! ஏவப்பட்ட அனைத்தையுமே நீங்கள் செய்ய முடியாது அல்லது செய்ய மாட்டீர்கள் எனினும் நீங்கள் நடுநிலையைக் கடைபிடித்து நன்மாராயம் பெறுங்கள்” என்று கூறினார்கள்.  (நூல்: அபூதாவுத் 924)

கைத்தடியை வைத்துக் கொள்வது அல்லது பிடித்துக் கொள்வது என்ற கருத்து இந்த ஹதீஸில் இல்லை. மாறாக, கைத்தடியை ஊன்றுகோலாகக் கொண்டு உரையாற்றினார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. ஊன்றுகோல் என்பது ஒருவரது பலவீனம் காரணமாகப் பயன்படுத்துவதாகும்.

வணக்க வழிபாடுகளில் தான் நபியவர்கள் செய்த அனைத்தும் மார்க்கச் சட்டமாக ஆகும். வணக்க வழிபாடுகள் அல்லாத மற்ற செயல்களில் அது குறித்து அவர்கள் கட்டளைப் பிறப்பித்தால் தான் அது மார்க்கச் சட்டத்தில் சேரும். இல்லாவிட்டால் உலகத் தேவை என்ற அடிப்படையில் செய்ததாகக் கருதப்படும்.

கைத்தடியை ஊன்றி உரையாற்ற வேண்டும் என்பது ஜும்ஆவின் ஒழுங்கு முறைகளில் ஒன்றாக இருந்தால் இவ்வாறு செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் அவ்வாறு எந்த உத்தரவும் இடவில்லை.

கைத்தடியை ஊன்றி உரையாற்றுவது மார்க்க ஒழுங்கு முறை என்பதற்காக நபியவர்கள் அதைச் செய்யவில்லை. நிற்கும் போது ஒரு பிடிமானம் வேண்டும் என்பதற்காகவே கைத்தடியைப் பயன்படுத்தியுள்ளார்கள். நபியவர்கள் ஜும்ஆ அல்லாத வேறு இடங்களிலும் கைத்தடியை ஊன்றி சொற்பொழிவாற்றியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சகீஃப் குலத்தாரிடம் உதவி கேட்டு வந்த நேரத்தில் அவர்கள் வில் அல்லது கைத்தடியை ஊன்றி நின்றதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் வஸ்ஸமாயி வத்தாரிக் எனத் தொடங்கும் அத்தியாயத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: காலித் (ரலி), நூல்: அஹ்மது (18190)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேவையின் நிமித்தமாகவே கைத்தடியைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை இந்தச் செய்தி தெளிவுபடுத்துகின்றது. முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஜும்ஆவில் கைத்தடியை வைத்துக் கொள்வது சுன்னத் என வாதிடும் உலமாக்கள், இந்த இரண்டாவது ஹதீஸை ஆதரமாகக் கொண்டு மீலாது மற்றும் அவர்கள் நடத்தும் மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் ஏன் கைத்தடி வைத்துக் கொள்வதில்லை? என்பதைச் சிந்தித்தால் மன முரண்டாகவே இதை சுன்னத் போல் காட்டுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றுகையில் தமக்குப் பிடிமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பேரீச்சை மரத் தண்டின் மீது சாய்ந்து கொண்டு உரையாற்றியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தில் பள்ளிவாசலில் நட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு பேரீச்சை மரத் தண்டின் மீது சாய்ந்து கொண்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்கள். ரோம் நாட்டைச் சார்ந்த ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே) நீங்கள் அமர்ந்து கொள்வதற்காக நான் உங்களுக்கு (சொற்பொழிவு மேடை) ஒன்றை செய்து தரட்டுமாநீங்கள் நிற்பதைப் போன்ற (தோற்றத்தை அது ஏற்படுத்தும்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவு மேடை ஒன்றை அவர் தயாரித்துக் கொடுத்தார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: தாரமீ (41)

நபி (ஸல்) அவர்கள் மிம்பர் இல்லாத போது தரையில் நின்று உரையாற்றியுள்ளார்கள். இந்தச் சமயத்தில் தான் அவர்களுக்குப் பிடிமானம் தேவைப்பட்டது. மிம்பர் வந்தவுடன் அவர்களுக்குப் பிடிமானம் தேவையற்றதாகி விட்டது. இதை மேலுள்ள செய்தி தெளிவுபடுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மரத்தின் மீது சாய்ந்து உரையாற்றியுள்ளதால் இன்று ஜும்ஆவில் இமாம் மரத்தின் மீது சாய்ந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வணக்கம் என்ற அடிப்படையில் செய்யவில்லை. தேவை என்ற அடிப்படையில் செய்துள்ளார்கள் என்று புரிந்து கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போதெல்லாம் கைத்தடியைப் பிடித்து வந்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இந்தச் செய்திகள் இப்னு சஃத் அவர்கள் தொகுத்த தபகாத் எனும் நூலிலும் பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பலவீனமான செய்திகளாக உள்ளன.

இந்தச் செய்திகளில் யஹ்யா பின் அபீ ஹய்யா, இப்னு லஹீஆ, ஹசன் பின் உமாரா, அப்துர் ரஹ்மான் பின் சஃத், லைஸ், மற்றும் இப்ராஹீம் பின் அபீ யஹ்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நம்பகமானவர்கள் அல்லர் என அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே மிம்பரில் இமாம் கைத்தடி, கத்தி போன்றவற்றை ஊன்றி நிற்க வேண்டும் என்பது மார்க்கம் கூறாத சட்டமாகும். நல்ல இளைஞராகவும் நடுத்தர வயதுடையவராகவும் இருப்பவருக்கு கைத்தடியைப் பிடித்துக் கொள்வது சிரமமாகவும் இயற்கைக்கு மாற்றமாகவும் இருக்கும். அப்படி இருந்தும் பிடிக்க முடியாமல் பிடித்து, தோளில் கைத்தடியை சாய்த்துக் கொண்டு படும் அவஸ்தைக்கும் இந்த ஹதீஸுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

கைத்தடியின் மீது தனது பாரத்தைச் சாய்த்து ஊன்றிக் கொள்ளாமல் கைத்தடியின் பாரத்தையும் சேர்த்து சுமக்கிறார்கள். கைத்தடி தான் இவர்களை ஊன்றுகோலாகப் பயன்படுத்துகிறது. அதுவும் சொந்தமாக உரை நிகழ்த்தாமல் எழுதி வைத்ததைப் படிக்கும் இமாம்கள் என்றால் அந்தப் புத்தகத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு ஒரு தோளில் கைத்தடியைச் சாய்த்துக் கொண்டு நிற்பார்கள்.

மேலும் சில ஊர்களில் முஅத்தின் அந்தக் கைத்தடியை எடுத்து சில வாசகங்களை ஓதி இமாமிடம் கொடுக்க அதை இமாம் பய பக்தியோடு வாங்கி படியில் ஏறும் போது சீன் காட்டுகின்றனர். இதற்கும் இந்த ஹதீசுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எத்தனை நாட்கள் மனைவியுடன் பேசாமல் இருக்கலாம் ?

 

? என் மனைவி என்னை இகழ்ந்து பேசிவிட்டார், இதுவரை மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் தற்போது நான் அவரிடம் பேசுவதில்லை. இது போல் இருக்கலாமா, எத்தனை நாட்கள் இருக்கலாம் ?

அப்துல் ரஹ்மான்

உங்கள் மனைவி உங்களை என்ன இகழ்ந்து பேசினார்? அவரை நீங்கள் இகழ்ந்து பேசியதால் அவர் உங்களை இகழ்ந்து பேசினாரா? நீங்கள் ஒன்றுமே செய்யாமல் சொல்லாமல் இருக்கும் போது இகழ்ந்து பேசினாரா? அவர் இகழ்ந்து பேசியது முடிந்தால் பெருந்தன்மையுடன் உங்களால் அலட்சியப்படுத்தத்தக்கதா? அல்லது எவ்வளவு முயன்றாலும் அலட்சியப்படுத்தவே முடியாது என்ற அளவுக்கு இருந்ததா? இப்படிப் பல விஷயங்கள் இதில் உள்ளன.

பொதுவாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களிடம் உள்ள குறையை உணராமல் அடுத்தவரின் குறையை மட்டும் பேசுவார்கள். உங்கள் குற்றச்சாட்டு அது போன்றதா என்று நீங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மன்னிப்பு கேட்டால் தான் மன்னிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. விரும்பினால் மன்னிப்பு கேட்காவிட்டாலும் மன்னிக்க முடியும்.

பல நாட்கள் அவரும் உங்களுடன் பேசவில்லை; நீங்களும் அவருடன் பேசவில்லை என்பது உங்கள் கேள்வியில் இருந்து தெரிகிறது.

இல்வாழ்க்கை அற்றுப் போன வயது என்றால் அது பிரச்சனை இல்லை.

ஒருவருக்கொருவர் தேவைப்படும் வயதில் இருவருமே  ஒருவருக்கொருவர் தேவையில்லை என்பது போல் நடந்து கொண்டால் அதில் வேறு பிரச்சனை இருக்கலாம்.

அதன் பிறகும் அப்படி இருந்தால் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு கவுன்சிலிங் எடுக்க வேண்டும்.

பேசுவதைப் பொறுத்த வரை மார்க்கம் சம்பந்தமான விஷயமாக இல்லாமல் உலக விஷயத்துக்காக என்றால் அதிக பட்சம் மூன்று நாட்கள் தான் பேசாமல் இருக்க வேண்டும்

எந்த முஸ்லிமும் தன் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் பகையாக இருக்க கூடாது என்பது நபி மொழி

பார்க்க: புகாரி 6076

அவனைப் பார்த்து இவன் புறக்கணிப்பதும் இவனைப் பார்த்து அவன் புறக்கணிப்பதும் கூடாது. அவர்களில் சிறந்தவர் ஸலாம் கூறி பேச்சை ஆரம்பிப்பவர் தான் என்றும் நபியவர்கள் கூறியுள்ளனர்.

பார்க்க: புகாரி 6077

இது பேசுவதற்கான எல்லையாகும்.

கணவன் மனைவிக்கு இடையே அதையும் கடந்த உறவு உள்ளது. உடல் ரீதியான தேவைகள் இருவருக்கும் உள்ளது. அதற்கு அதிகப்பட்சமாக நான்கு மாதம் எல்லை தான் உள்ளது. அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்தால் கூட அதை முறித்து விட்டு இருவரும் இணைந்து கொள்ள வேண்டும்.

தமது மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது. அவர்கள் (சத்தியத்தை) திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன். விவாகரத்துச் செய்வதில் அவர்கள் உறுதியாக இருந்தால் அல்லாஹ் செவியுறுபவன்அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:226, 227

மனைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி “அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன்” என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது.

இவ்வாறு சத்தியம் செய்தவர் இதற்காக மனைவியைப் பிரியத் தேவையில்லை. நான்கு மாத அவகாசத்துக்குள் சத்தியத்தை முறித்து விட்டு மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். காலமெல்லாம் மனைவியுடன் சேர மாட்டேன் என்று ஒருவர் குறிப்பிட்டாலும் அவருக்குரிய கெடு நான்கு மாதங்கள் தாம்.

நான்கு மாதம் கழித்துத்தான் சேர வேண்டும் என்று இவ்வசனத்திற்கு (2:226) அர்த்தம் இல்லை. நான்கு மாதத்திற்குள் சேர வேண்டும் என்றே பொருள்.

இன்றைக்குச் சத்தியம் செய்து விட்டு நாளைக்குக் கூட அதை முறிக்கலாம். நான்கு மாதம் கடந்த பின்னும் சேராவிட்டால் விவாகரத்துச் செய்து விட வேண்டும் என்று அடுத்த வசனம் கூறுகிறது.

சிலர், மனைவியுடன் வெறுப்பு கொண்டு அவளுடன் வாழ்க்கை நடத்தாமலும், அவளை விவாகரத்துச் செய்யாமலும் கொடுமைப்படுத்துவர். வருடக் கணக்கில் பெண்களை இவ்வாறு நடத்தும் கொடியவர்களை ஜமாஅத்துகள் கண்டு கொள்வதில்லை.

நான்கு மாதத்துக்குள் வாழ்வு கொடுக்காவிட்டால், அதையே விவாகரத்தாக அறிவிக்கும் கடமை ஜமாஅத்துகளுக்கு உண்டு. அந்த அதிகாரம் இவ்வசனத்தின் மூலம் சமுதாயத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா?

 

? உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா?

முஹம்மது, அஜ்மீர்

இஸ்லாத்தின் உயிர் மூச்சான கொள்கை ஏகத்துவக் கொள்கையாகும். இந்த ஏகத்துவக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

இறந்தவர்களுக்காக நினைவுச் சின்னம் எழுப்புவது ஏகத்துவக் கொள்கைகயைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாகத் தோற்றுவிக்கப்பட்ட, பிற மதக் கலாச்சாரமாகும். நாளடைவில் அவற்றுக்கு புனிதத்தன்மை இருப்பதாகக் கருதி அவற்றை வணங்கும் நிலைக்கு மக்கள் சென்றுவிடுவர்.

இதனால் தான் நபிகள் நாயகம் தமக்கோ  தமக்கு முன் வாழ்ந்து மறைந்த நல்லோர்களுக்கோ இது போன்று நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி அளிக்கவில்லை. மாறாக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். தடை செய்துள்ளார்கள்.

யூதர்கள் தங்களில் ஒரு நல்லடியார் இறந்து விட்டால் அவர்களின் சமாதியில் கட்டடம் எழுப்பி அவர்களின் நினைவாக அவரது உருவத்தையும் பதித்து விடுவார்கள். இந்த செயலைச் செய்ததால் யூதர்களை நபியவர்கள் சபித்துள்ளார்கள்.

அபிசீனிய நாட்டில் தாம் கண்ட “மரியா‘ என்றழைக்கப்ட்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா அவர்கள் கூறினார்கள்.  அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் எத்தகைய மக்கள் எனில்அவர்களிடையே நல்ல அடியார் (அல்லது நல்ல மனிதர்) ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டிவிடுவார்கள்அதில் அந்த உருவங்களை வரைந்தும் விடுவார்கள். இத்தகையோர் தாம் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 434

ஒருவர் நல்லடியாராகவே இருந்தாலும் அவர் இறந்த பிறகு அவருக்காகக் கட்டடம் எழுப்புவது நினைவுச் சின்னம் அமைப்பது கூடாது என்று நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இணை வைப்பாளர்கள் நினைவுச் சின்னமாக ஒரு மரத்தை ஏற்படுத்தி அதற்கு புனிதத் தன்மை இருப்பதாக நம்பலானார்கள். முஸ்லிம்களும் அது போன்று தங்களுக்கும் ஒரு மரத்தை ஏற்படுத்தக் கோரிய போது நபியவர்கள் அதைக் கண்டித்துள்ளார்கள்.

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவ்வழியில் இணை வைப்பாளர்களுக்கு ஒரு மரம் இருந்தது. (புனிதம் கருதி) அங்கே அவர்கள் தங்குவார்கள். அதில் தங்களது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். அதற்கு “தாத்து அன்வாத்‘ என்று சொல்லப்படும். நாங்கள் பசுமையான பிரம்மாண்டமான ஒரு மரத்தைக் கடந்து சென்ற போது, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் ஒரு தாத்து அன்வாத்தை ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுள்களை எற்படுத்தித் தருவீராக!” (7:138) என்று மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினர்கள் கேட்டதைப் போன்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக இவையெல்லாம் (நரகத்திற்கு அழைத்துச் செல்லும்) வழிகள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் வழியை ஒவ்வொன்றாக நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ வாகித் (ரலி)

நூல்: அஹ்மத் (20892)

நினைவுத் தூண்கள் அமைக்கும் பிறமதக் கலாச்சாரத்தைப் பார்த்து நாமும் அது போன்று அமைக்கலாமே என்று கேட்பது மூஸா நபியின் சமுதாயம் மூஸா நபியிடம் கோரிக்கை வைத்ததைப் போன்றதாகும்.

இன்றைக்கு நடக்கும் இணை வைப்புக் காரியங்களில் அதிகமானவை இறந்தவர்கள் பெயரில் ஏற்படுத்திய நினைவுச் சின்னங்கள் பெயரால் தான் நடைபெறுகின்றன. நபியவர்கள் தடை செய்துள்ளதால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி கிடையாது.