பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா?

 

? பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? ஜியாரத் செய்யும் பெண்களை சபிதுள்ளது பற்றி வந்துள்ள ஹதீஸ் விளக்கம் என்ன?

அய்யம்பேட்டை அலீம்

மண்ணறைகளுக்குச் சென்று வரும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) மற்றும் ஹஸ்ஸான் பின் சாபித் ஆகிய மூவர் வழியாக இந்தக் கருத்தில் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்படும் அறிவிப்பு பலவீனமானதாக உள்ளது. ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்களின் வழியாக வரும் அறிவிப்பு மாத்திரம் சரியானதாக உள்ளது.

மண்ணறைகளைச் சந்தித்து வரும் பெண்களையும் அவற்றின் மீது விளக்கு ஏற்றுபவர்களையும் பள்ளி எழுப்புபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதீ (294)

இது பலவீனமான அறிவிப்பாகும். இதில் அபூசாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு ஹஜர், இமாம் அபூஹாதிம், இமாம் நஸாயீ, இமாம் யஹ்யா பின் மயீன் மற்றும் பலர் கூறியுள்ளனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பும் பலவீனமாக உள்ளது.

மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ (976)

இந்த அறிவிப்பில் உமர் பின் அபீ சலமா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, அலீ பின் மதீனீ, யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், ஷுஃபா, முஹம்மது பின் சஅத், இப்னு ஹுஸைமா, இமாம் நஸாயீ ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.

ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்கள் வழியாக வரும் பின்வரும் அறிவிப்பு மட்டுமே சரியாக உள்ளது.

மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி)

நூல்: இப்னு மாஜா (1563)

இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என்று நாம் முன்னர் கூறி வந்தோம். இது தொடர்பாக வரும் மற்ற பல ஹதீஸ்களைப் பார்க்கும் போது பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தார்கள். பிறகு இதற்கு அனுமதியளித்தார்கள் என்பதை அறிய முடிகின்றது. இதைப் பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

ஆண்களும் பெண்களும் கப்று ஸியாரத் செய்யக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் முன்னர் தடைசெய்திருந்தார்கள். குறிப்பாக இந்த விசயத்தில் பெண்களுக்குக் கடுமையான தடையை விதித்திருந்தார்கள். பின்னர் இருவருக்கும் அனுமதியளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் (3995)

அப்துல்லாஹ் பின் அபீ மலீகா கூறுகிறார்:

ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் மண்ணறைகளை சந்தித்துவிட்டு வந்துகொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், “இறை நம்பிக்கையாளர்களின் தாயாரே! நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன்” என்று பதிலளித்தார்கள். “மண்ணறைகளுக்கு சென்றுவரக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லையா?” என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! முதலில் தடைசெய்திருந்தார்கள். பிறகு அவற்றைச் சந்தித்து வருமாறு ஏவினார்கள்” எனக் கூறினார்கள்.

நூல்: ஹாகிம் (1327)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

ஜிப்ரீல் “உம் இறைவன் உம்மை “பகீஉவாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்‘ என்று (என்னிடம்) கூறினார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

நூல்: முஸ்லிம் (1774)

மண்ணறைகளுக்குச் செல்லக்கூடியவர்கள் அங்கே சொல்ல வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என்றால் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இந்தப் பிரார்த்தனையை நபியவர்கள் கற்றுக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் பொது மையவாடிக்குச் சென்று, மண்ணறைகளைப் பார்த்து, மறுமை சிந்தனையை வரவழைத்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த அனுமதி பொது மையவாடிகளுக்குத் தானே தவிர, இறைவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் உரிய இடங்களான தர்ஹாக்களுக்குச் சென்றுவர ஆண்களுக்கோ, பெண்களுக்கோ அனுமதியில்லை.

கண்தானத்தில் கண்ணைப் பெற்றவர் கெட்டவராக இருந்தால் அந்தக் கண் நரகத்திற்குப் போகுமா?

 

கண்தானம் செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் கண்தானம் செய்தவர் நல்லவராகவும் கண்தானம் பெற்றவர் கெட்டவராகவும் இருக்கலாம். அப்படிக் கண்தானத்தில் கண்ணைப் பெற்றவர் கெட்டவராக இருந்தால் அந்தக் கண் நரகத்திற்குப் போகுமா?

முஹம்மது நைனா, துபை

இவ்வுலகில் உறுப்புகளை தானம் செய்வதற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

இவ்வுலகில் நல்லவராக வாழ்ந்த ஒருவர் விபத்தில் கைகளை இழந்து விட்டால் அல்லது கண்களை இழந்து விட்டால் அவர் மறுமையிலும் கைகளை இழந்தவராக அல்லது கண்களை இழந்தவராக எழுப்பப்படுவார் என்பது கிடையாது.

மறுமையில் கெட்டவர்கள் குருடாக எழுப்பப்படுவார்கள் என திருக்குர்ஆன் கூறுகிறது.

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். “என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனேஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?” என்று அவன் கேட்பான். “அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்” என்று (இறைவன்) கூறுவான்.

அல்குர்ஆன் 20:124, 125, 126

கண் பார்வையுடன் இவ்வுலகில் வாழ்ந்தவன் இறைவனின் போதனையை மறுத்தால் குருடனாக எழுப்பப்படுவான் என இவ்வசனம் கூறுகிறது. குருடனாக எழுப்பப்படுவதற்குக் காரணம் அவன் நல்லவனாக வாழவில்லை என்பது தானே தவிர இவ்வுலகில் கண்ணை இழந்திருந்தான் என்பது அல்ல.

கண் இருந்தவனைக் குருடனாக எழுப்பிட அவனது நடத்தை தான் காரணம். அது போல் கண்ணற்றவன் இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அவன் குருடனாக எழுப்பப்பட மாட்டான். அவனும் மற்ற நல்ல முஸ்லிம்களைப் போன்று இறைவனைக் காண்பான்.

மறுமையில் எழுப்பப்படும் தோற்றத்திற்கும் இவ்வுலகத் தோற்றத்திற்கும் எவ்விதத் தொடர்பு மில்லை என்பதைப் பல ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கருத்திருக்கும்

அல் குர்ஆன் 3:106

அமெரிக்கர்களின் முகம் வெண்மையாகவும் ஆப்பிரிக்கர்களின் முகம் கருப்பாகவும் இருக்கும் என்று இதற்கு அர்த்தமில்லை.

மாறாக நல்லடியாராக வாழ்ந்த ஆப்பிரிக்கர் வெண்மையான முகத்துடன் வருவார். கெட்டவராக வாழ்ந்த வெள்ளையர் கருப்பானவராக வருவார்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.

அல்குர்ஆன் 2:275

இவ்வுலகில் ஒருவன் உண்மையான பைத்தியமாக வாழ்ந்தாலும் அவனும் மறுமையில் பைத்தியமாகத் தான் எழுப்பப்படுவான் என்பது கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி (1475)

ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருந்து அவ்விருவருக்கும் மத்தியில் நீதமாக நடக்கவில்லையென்றால் மறுமையில் அவனுடைய ஒரு (தோள்) புஜம் சாய்ந்தவனாக வருவான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி (1060)

இவ்வுலகில் தோள் புஜம் சரிந்த ஒருவர் தன்னுடைய மனைவிமார்களிடம் நீதமாக நடந்து கொண்டால் அவர் மறுமையில் சரியான தோற்றத்தில் தான் வருவார்.

ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், “மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் (631)

இவ்வுலகில் பாங்கு சொல்பவருக்குக் கழுத்து குட்டையாக இருந்தாலும் அவர் மறுமையில் அழகிய தோற்றத்தில் கழுத்து நீண்டவராக வருவார்.

நுஐம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டைவரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக் கொண்டே கணைக்கால் வரை சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் என் சமுதாயத்தார் அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவேஉங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். 

நூல்: முஸ்லிம் 415

இவ்வுலகில் உளூச் செய்யும் போது எவ்வித ஒளியும் உடலுறுப்புகளில் ஏற்படுவதில்லை. ஆனால் மறுமையில் ஒளி ஏற்படுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகுஅவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்எச்சில் துப்பவும் மாட்டார்கள்மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்கவாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (3327)

மறுமையில் பவுர்ணமி சந்திரனைப் போன்று, பிரகாசமான நட்சத்திரம் போன்று அறுபது முழ உயரத்தில் சொர்க்கவாசிகள் இருப்பார்கள்.

இவ்வுலகில் தற்காலத்தில் எட்டு, பத்து அடி உயரமுள்ளவனாக மனிதன் இருப்பதே மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஆனால் மறுமையில் 60 முழ உயரமுள்ளவனாக இருப்பான்.

இவ்வுலகத் தோற்றத்திற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

கண்தானம் செய்த ஒருவர் நல்லவராக வாழ்ந்தால் அவர் மறுமையில் கண்களுடன் தான் எழுப்பப்படுவார்.

நம்முடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பிறகு உயிர்கொடுத்து எழுப்பும் இறைவனுக்கு இது இயலாத ஒன்றல்ல.

கண்தானம் செய்த ஒருவர் கெட்டவனாக வாழ்ந்தால் அவர் மறுமையில் குருடனாகத் தான் எழுப்பப்படுவார். அல்லது அவனுடைய கண்களோடு தான் நரகத்திற்குச் செல்வான்.

வட்டிக்கும் வாடகைக்கும் வேறுபாடு என்ன?

 

? வட்டிக்கும் வாடகைக்கும் வேறுபாடு என்ன?

உவைசுல் கரனி

வாடகைக்கு விடப்பட்ட வீட்டிற்குத் தேய்மானம் ஏற்படுவது போல் பணத்திற்கும் மதிப்பு குறைவு ஏற்படுவதால் வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாக உள்ளது எனக் கருதுவது தவறாகும். வாடகைக்கும் வட்டிக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன.

ஒரு வீட்டை நீங்கள் வாடகைக்கு விட்டால் அப்போதும் அந்த வீட்டின் உரிமையாளராக நீங்கள் தான் இருப்பீர்கள். வாடகைக்கு வந்தவருக்கு அந்த வீட்டில் தங்குவதைத் தவிர வேறு எந்த அதிகாரமும் இல்லை.

வீட்டை இடித்து கட்டுவதற்கோ வீட்டின் அமைப்பை மாற்றுவதற்கோ அல்லது வீட்டின் உரிமையாளரைக் கேட்காமல் வேறு ஒருவரை அழைத்து வந்து உள்வாடகை விடுவதற்கோ அனுமதியில்லை. இவர் வாடகைக்கு இருக்கும் நேரத்தில் எதார்த்தமாக வீடு இடிந்து விழுந்துவிட்டால் அல்லது அந்த வீட்டிற்கு ஏதாவது ஒரு பாதிப்பு வந்தால் அதற்கு இவர் பொறுப்பேற்க மாட்டார். வீட்டின் உரிமையாளரே இதை ஏற்க வேண்டிவரும்.

ஆனால் கடன் கொடுப்பது இது போன்றதல்ல.

ஒருவருக்கு நீங்கள் பணத்தைக் கடனாகக் கொடுத்தால் அந்தப் பணம் முழுவதுமாக அவருடைய கட்டுப்பாட்டிற்கு வந்து விடுகின்றது. பணம் தொலைந்தாலோ திருட்டுப் போனாலோ அதற்குக் கடன் வாங்கியவர் தான் பொறுப்பாளி. கடன் கொடுத்தவர் இதைப் பற்றி கவலைப்பட மாட்டார். வாங்கிய பணத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் அதைத் திருப்பிச் செலுத்துவது கடன் வாங்கியவரின் கடமை.

மேலும் வாடகைக்கு விடும் போது வாடகைக்குப் பெற்றவர் குடியிருக்கும் பலனை உறுதியாக அனுபவித்து விடுகின்றார். பலனைப் பெற்றெதற்குக் கூலியாக வாடகையைச் செலுத்துகிறார். அதாவது நிச்சயித்த பயனை வாடகைக்கு இருப்பவர் அடைந்து கொள்கிறார். அவராக வீட்டைப் பூட்டி விட்டுப் பயன்படுத்தாமல் தனக்குத் தானே இழப்பு ஏற்படுத்தினால் தவிர வாடகைக்கு இருப்பவருக்கு எந்த நட்டமும் இல்லை. கொடுக்கும் வாடகைக்கு உரிய பலன் அவருக்கு கிடைத்து விடுகிறது.

ஆனால் வட்டிக்குக் கடன் பெறுபவர் அந்தப் பணத்தை வைத்து உறுதியாகப் பலனடைவார் என்று கூற முடியாது. பலனடையலாம்; பலனடையாமல் நஷ்டப்படலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பதே பெரிய சுமையாகும். இதில் வாங்கியதை விடக் கூடுதலாக கொடு என்று கேட்பது அவனுக்குச் சுமைக்கு மேல் சுமையைக் கொடுக்கும். இதனால் மனிதாபிமானம் இங்கே அடிபட்டுப் போகின்றது.

மேலும் வீட்டைப் பொறுத்தவரை அதைப் பயன்படுத்த, பயன்படுத்த அதில் தேய்மானம் கண்டிப்பாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் பணத்தைப் பொறுத்தவரை அதைப் பயன்படுத்துவதால் கண்டிப்பாக மதிப்பு குறையாது. பணவீக்கத்தின் காரணமாக பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்பு உண்டு என்றாலும் அதற்கு கடன் வாங்கியவர் காரணமாக மாட்டார். கடன் கொடுக்காமல் நமது பெட்டியில் அந்தப் பணத்தைப் பூட்டி வைத்தாலும் பண வீக்கத்தால் ஏற்படும் மதிப்பு குறைவு ஏற்படத் தான் செய்யும்.

பொருளாதார மாற்றத்தால் பணத்தின் மதிப்பு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது போல் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று நடைமுறையில் அத்தியாவசியமான பல பொருட்களை வாடகையின் அடிப்படையில் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

ஓரிடத்திற்கு இலகுவாகச் சென்று வர கார், பஸ் போன்ற வாகனங்களை வாடகைக்கு எடுக்கின்றோம். இரயில்களிலும் பேருந்துகளிலும் விமானங்களிலும் டிக்கெட் எடுத்து பயனம் செய்கின்றோம். வெறுமனே பெட்ரோலுக்கு மட்டும் நாம் பணம் கட்டுவதில்லை. பெட்ரோலுடன் அந்த வாகனத்தைப் பயன்படுத்தியற்கும் சேர்த்தே பணம் செலுத்துகிறோம். பொது நிகழ்ச்சிகளை நடத்தும் போது மைக் செட், சொற்பொழிவு மேடை, ஜென்ரேட்டர், மின் விளக்குகள் போன்ற பொருட்களை வாடகைக்கு எடுத்துத் தான் பயன்படுத்துகிறோம்.

பொருளின் தேய்மானம் காரணமாகவும் மற்றவரின் பொருளில் நிச்சயமான பயனை நாம் அடைந்து விடுகிறோம் என்ற அடிப்படையிலும் தான் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் வாடகையை அனுமதித்துள்ளான்; வட்டியைத் தடை செய்துள்ளான் என்பதை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்களா?

 பெண்கள் என்றால் மட்டமானவர்களா? பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்களா? கணவன் சொல்வதைத் தான் மனைவி கேட்க வேண்டுமா? கணவனுக்குப் பிடிக்காதவர்கள் வீட்டுக்கு வரக் கூடாதா? குடும்பத்தில் ஆண்கள் தான் முடிவு எடுக்க வேண்டுமா? ஆண்களைக் கேட்டுத் தான் பெண்கள் செயல்பட வேண்டுமா? இதைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது? இறைவன் படைக்கும் போதே ஆண்களை, பெண்களை விட உயர்வாகவும் மேன்மையாகவும் படைத்திருக்கிறான் என்று என் தந்தை கூறுகிறார்.  இது உண்மையா?

பதில்: பெண்களை விட ஆண்களுக்கு ஒரு உயர்வு உண்டு என இறைவன் கூறுகிறான்.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 2:228

எல்லா வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்கள்; பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பது இதன் கருத்தல்ல. காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் சிறப்புக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் இஸ்லாத்தின் கருத்தாகும்.

சில வகையில் பெண்களை விட ஆண்கள் சிறப்பிற்குரியவர் களாகவும், மற்ற சில வகையில் ஆண்களை விட பெண்கள் சிறப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

எந்த ஒரு நிர்வாகமாக இருந்தாலும் அதற்கு ஒரு தலைவன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது நிர்வாகமாக இருக்கும். சிறிய நிறுவனம் என்றாலும் பெரிய நிறுவனம் என்றாலும் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு ஒருவரிடம் இருந்தாக வேண்டும். யார் வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம் என்று இருந்தால் அவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள் என்று ஆகுமே தவிர நிர்வாகமாக ஆகாது.

எவ்வளவு தான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களிடையே எல்லா விஷயத்திலும் ஒத்த கருத்து வராது. எந்த முடிவு எடுப்பது என்பதில் கருத்து வேறுபாடு வரும் போது யாராவது ஒருவருக்கு மற்றவர் கட்டுப்பட்டால் மட்டுமே குடும்ப நிர்வாகம் குலைந்து போகாமல் இருக்கும்.

முரண்பாடு வருகிறது என்பதற்காகக் குடும்பம் சிதைந்து விடக் கூடாது. எனவே கணவனுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதற்கான காரணங்களும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஆண்கள் தான் குடும்பத்துக்காகப் பொருள் திரட்டக் கடமைப்பட்டுள்ளனர். உழைத்து, சம்பாதித்து, மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவிடுகிறார்கள் என்பது முதல் காரணமாகும். பொருளாதாரத்தைத் திரட்டுபவன் என்ற அடிப்படையில் தான் அவனுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடமையைச் செய்யாத ஒரு கணவன் தனக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாத்தின் பெயரால் உரிமை கொண்டாட முடியாது.

அடுத்ததாக, உடலமைப்பில் ஆண்கள் தான் பெண்களை விட வலிமையுள்ளவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் முடிவு எடுக்கும் போது மற்றவர் அதற்குக் கட்டுப்பட மறுத்தால் அப்போதும் குடும்ப அமைப்பு சீர்குலைந்து விடும். யாருக்கு வலிமை அதிகம் உள்ளதோ அவரிடம் அந்த அதிகாரம் இருந்தால் மற்றவர் கட்டுப்பட எளிதாக இருக்கும் என்பது மற்றொரு காரணமாக இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இவ்விரு காரணங்களையும் குறை சொல்ல முடியாது. இருவருக்கும் ஆசைகள் இருந்தாலும் ஆண் முடிவு செய்தால் தான் இல்லறமே நடக்கும். ஆணுக்கு ஆசை இல்லாமல் பெண்ணுக்கு மட்டும் ஆசை இருந்தால் பெண்ணால் ஒன்றும் செய்ய முடியாது. இவ்விரு காரணங்களால் தான் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்யும் உரிமையைப் பெறுகிறார்கள் என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும்ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள்பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும்அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும்பெரியவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:34

இப்படி குடும்பத் தலைவனாக கணவன் நியமிக்கப்பட்டதால் பெண்ணுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றோ அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றோ பெண்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அடக்கியாளலாம் என்றோ இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. இதையும் இஸ்லாம் தெளிவுபடுத்தத் தவறவில்லை.

உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 7095

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களேபயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானதுநல்ல மனைவியே.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2911

நல்ல மனைவியை ஒருவன் அடைந்திருப்பது அல்லாஹ் செய்த அருள் என்று நினைக்கும் ஒருவன் பெண்ணை அடிமையாக நடத்த மாட்டான். மனைவிக்கு நல்லவனாக இருப்பவன் தான் மனிதரில் நல்லவன் என்ற அறிவுரையை நம்புபவன் மனைவியின் மார்க்கத்துக்கு உட்பட்ட ஆசைகளுக்குத் தடை போட மாட்டான். மனைவியின் உறவினரோடு இவனுக்கு ஏதும் மனவருத்தம் இருப்பதால் மனைவியையும் அவளது இரத்த பந்தங்களையும் பிரிக்க மாட்டான். ஒரு கணவன் இப்படியெல்லாமா நடப்பது என்று ஒரு பெண் கேள்வி கேட்டால் அந்தப் பெண்ணுக்கு அவன் நல்லவனாக நடக்கவில்லை என்று ஆகிவிடும்.

அடித்துச் சித்திரவதை செய்ய மாட்டான். அப்படிச் செய்தால் அவன் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவனாக ஆவான். கணவனுக்கு கட்டுப்படுவதற்கும் எல்லை உண்டு.

இவ்வுலகிலும், மறு உலகிலும் நன்மை பயக்கும் காரியங்களில் ஒரு பெண் தனது கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும். கணவன் தீமையான செயலைச் செய்யும் படி கட்டளையிட்டால் அதில் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. அவ்வாறான காரியங்களில் கணவனுக்குக் கட்டுப்படுதல் அறவே கூடாது.

அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, “என் மகளின்  கணவர்எனது மகளின் தலையில் ஒட்டுமுடி வைக்கச் சொல்கிறார்”  என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5205

எந்த மனிதனுக்குக் கட்டுப்படுவதாக இருந்தாலும் தீமைகளில் கட்டுப்படக்கூடாது என்பது பொதுவான விதியாகும். இது கணவன் மனைவி விஷயத்துக்கும் பொருந்தும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை அனுப்பி அவர்களுக்கு ஒருவரைத் தளபதியாக்கினார்கள். அவர் (ஒரு கட்டத்தில் படைவீரர்கள் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, “இதில் நுழையுங்கள் என்று சொன்னார். அவர்கள் அதில் நுழைய முனைந்தார்கள். (படையிலிருந்த) மற்றவர்கள், “நாம் நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே (இஸ்லாத்திற்கு) வந்தோம்” என்று கூறினர். ஆகவேஇதை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். “அவர்கள் அதில் புகுந்திருந்தால் மறுமைநாள் வரை அதிலேயே இருந்திருப்பார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.  “அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்ப்படிதல் கிடையாதுகீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்” என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி 7257

கணவன் வெறுப்பவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாதா? என்று கேட்டுள்ளீர்கள். உங்களுக்கு மஹ்ரமான உறவு இல்லாத அந்நியர்கள் சம்பந்தமாக கணவர் அவ்வாறு கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படத் தான் வேண்டும். உங்களுக்கு மஹ்ரமான உறவினர்கள் விஷயமாக அவர் இது போல் கட்டளையிடக் கூடாது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். என்னுடன் ஒரு ஆண் இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். “ஆயிஷாவே இவர் யார்?” என்று கேட்டார்கள். “இவர் எனது பால்குடிச் சகோதரர்” என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆயிஷாவே உங்கள் சகோதரர்கள் யார் என்பதில் கவனமுடன் இருங்கள். பசியால் பால் குடித்தாலே பால்குடிச் சகோதரர் என்ற உறவு ஏற்படும்” எனக் கூறினார்கள்

நூல்: புகாரி 2647

பால்குடிச் சகோதரர் என்பது நெருக்கமான உறவாகும். அது போன்ற உறவுடையவர்கள் தமது மனைவியின் வீட்டுக்கு வருவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறுப்பு இல்லை. ஆனால் உண்மையில் பால்குடிச் சகோதாரர் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள்.

ஒருவரது மனைவியின் உறவினர்கள், மனைவியைப் பார்க்க வருவதற்கும் உறவைப் பேணுவதற்கும் கணவன் குறுக்கே நிற்கக் கூடாது. அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் கணவனுக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருப்பது மனைவியின் பொறுப்பாகும். பிரச்சனை இல்லாத இல்லறத்துக்கு இது அவசியமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மக்களே) பெண்கள் விஷயத்தில் நல்லவிதமாக நடந்து கொள்வது பற்றி (என்னுடைய) அறிவுறைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள். நிச்சயமாக (பெண்களாகிய) அவர்கள் உங்களுடைய பொறுப்பில் இருக்கின்றார்கள். இதைத் தவிர அவர்களிடமிருந்து நீங்கள் எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தெளிவான மானக்கேடான காரியங்களைச் செய்தாலே தவிர. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களைப் படுக்கையறைகளில் காயம் ஏற்படாதவாறு அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழிகளைத் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாவன:  மற்றவர்களுக்கு உங்கள் படுக்கைகளைக் கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவன: அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும்.

நூல்: திர்மிதி 1083

முடிவு எடுக்கும் அதிகாரம் கணவனுக்கு உண்டு என்றாலும் குடும்ப நலனுக்காகக் கணவன் தன் மனைவியிடத்தில் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். சரியான ஆலோசனைகளைச் சொல்லும் போது கணவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நபியவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தமது மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஆலோசனை கேட்டு அவர்களது முடிவின் அடிப்படையில் செயல்பட்டுள்ளார்கள்.

(பார்க்க: புகாரி 2734)