பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, January 14, 2018

தாயின்_கடனை_அடைக்க_ஜகாத்_பணத்தைச்_செலவிடலாமா?

தாயின்_கடனை_அடைக்க_ஜகாத்_பணத்தைச்_செலவிடலாமா?

#பதில்

பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை இஸ்லாம் பிள்ளைகளின் மீது சுமத்தியுள்ளது. பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமையாகும். எனவே உங்களுடைய தாயின் மீதுள்ள கடன் உங்கள் மீதுள்ள கடனாகும். அதை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும்.

ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்” என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 1852

ஒரு மனிதர் நபிகள் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு குழந்தையும், செல்வமும் உள்ளன. எனது தந்தைக்கு என் செல்வம் தேவைப்படுகின்றது என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீயும், உனது செல்வமும் உன்னுடைய தந்தைக்கு உரியனவாகும். நீங்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் உங்கள் குழந்தைகளே மிகத் தூய்மையான செல்வமாவர். எனவே உங்கள் குழந்தைகள் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள் என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

நூல் : அபூதாவூத் 3063

பெற்றோரின் கடனை அடைப்பது பிள்ளைகள் மீதுள்ள கடமையாகும். அதாவது பெற்றோர் பட்ட கடன் பிள்ளைகள் பட்ட கடனாகவே மார்க்கம் கருதுகிறது. உங்களுக்குக் கடன் இருந்தால் எப்படி அந்தக் கடனை அடைத்து விட்டு அதன் பிறகு எஞ்சியதில் இருந்து ஜகாத் கொடுப்பீர்களோ அது போல் உங்கள் சொத்தில் இருந்து பெற்றோரின் கடனை அடைத்து விட்டு எஞ்சியதற்கு ஜகாத் கொடுங்கள்.

பெற்றோரின் கடனுக்காக ஜகாத்தில் இருந்து செலவிட்டால் உங்களுக்கு நீங்களே ஜகாத் கொடுத்துக் கொண்டதாகவே ஆகும்

எனவே ஜகாத்துடைய பணத்திலிருந்து தாயின் கடனை அடைக்காமல் உங்களுடைய கடமை என்ற அடிப்படையில் உங்களுடைய பணத்திலிருந்தே அதை அடைக்க வேண்டும்.

ஜகாத்_கொடுத்த_பணத்தில்_வாங்கும்_நகைக்கு_ஜகாத்_உண்டா?

ஜகாத்_கொடுத்த_பணத்தில்_வாங்கும்_நகைக்கு_ஜகாத்_உண்டா?

நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?

#பதில் : #இல்லை.

நமது செல்வங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுது கொள்ளுங்கள். உங்கள் மாதம் (ரமலானில்) நோன்பு வையுங்கள். உங்கள் செல்வங்களுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்குக் கட்டுப்படுங்கள். உங்கள் இறைவனுடைய சொர்க்கத்தில் நுழைவீர்கள்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : திர்மிதீ (559)

நகைக்கு ஸகாத் கொடுத்து விட்டால் அந்த செல்வத்துக்குரிய கடமை நிறைவேறி விடுகின்றது. இதன் பிறகு அந்த நகையை விற்று வேறு பொருள் வாங்கினால் பொருள் மாறுபட்டாலும் செல்வம் என்ற அடிப்படையில் இதற்குரிய கடமை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. இப்போது அதே செல்வம் தான் வேறு வடிவமாக மாற்றப்பட்டுள்ளது.

எனவே வாங்கப்பட்ட புதிய பொருளுக்கு ஸகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உங்களிடம் உள்ள பணத்துக்கு ஜகாத் கொடுத்து விட்டு அந்தப்பணத்தில் இருந்து வீடோ வேறு சொத்தோ வாங்கினால் அப்போதும் இது தான் நிலை.

ஜகாத்_வருமானத்துக்கா?#எஞ்சியதுக்கா

ஜகாத்_வருமானத்துக்கா?#எஞ்சியதுக்கா?

#வருமானத்தில் 2.5 #ஜகாத்_கொடுக்க_வேண்டுமா? #அல்லது_செலவு_போக_மீதமுள்ளதில் 2.5 #கொடுக்க_வேண்டுமா

#பதில்: #அனைத்து_வருமானத்திற்கும்_தான்.

திருக்குர்ஆன் 9:103, 51:19, 70:24 ஆகிய வசனங்களில் சொத்துக்களுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்படவில்லை. செலவு போக மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்ற கருத்தைச் சில அறிஞர்கள் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல.

தேவைக்கு மேல் மீதமானவை என்பது குழப்பமான கருத்துடையதாகும். தேவைக்கு மேல் என்றால் ஒரு நாள் தேவையா? ஒரு மாதத் தேவையா? ஒரு வருடத் தேவையா? என்பது பற்றி அவரவர் விளக்கம் கூறிக் கொண்டு ஜகாத் கொடுக்காமல் இருக்கும் தந்திரத்தை இதன் மூலம் கையாள்வார்கள்.

ஒருவன் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு இது என் தேவைக்கு உரியது என்று கூறலாம். இன்னும் தனக்குத் தேவையான தோட்டம், துரவு, கார், பங்களா ஆகிய அனைத்துமே தேவைக்கு உரியது என்று வாதிட இந்தக் கருத்து வழி வகுக்கும்.

கிலோ கணக்கில் தங்க ஆபரணத்தை அணிந்து கொண்டு கணவனை மகிழ்விக்கும் தேவைக்காக இதை வைத்துள்ளேன் என்று பெண்கள் கூறலாம். மொத்தத்தில் ஜகாத் என்பதே நடைமுறையில் இல்லாமல் போய் விடும்.

ஒருவருக்குச் சொந்தமான குதிரை, சொந்தமான அடிமை ஆகியவற்றுக்காக ஜகாத் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
புகாரி 1463, 1464,

மார்ககத்தில் இது போல் விதிவிலக்கு இருந்தால் இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருப்பார்கள். ஒருவருக்கு வரும் வருவாய், அவரது சொத்துக்கள், இருப்புக்கள் ஆகிய அனைத்துக்கும் ஜகாத் உண்டு.

இதில் ஏழைகள் அடங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு எல்லைக் கோட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. சுமார் 11 பவுன் தங்கம் அல்லது அதன் மதிப்புடைய ரொக்கம் ஒருவரிடம் எப்போதும் மிச்சமிருந்தால் அவர் செல்வந்தர் ஆவார். ஒருவரிடம் 40 ஆடுகள் அல்லது ஐந்து ஒட்டகங்கள் இருந்தால் அவர் செல்வந்தராவார் என்று இஸ்லாம் வரையரை செய்துள்ளது. இந்த வரையறை மூலம் ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்படாது.

ஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அவரிடம் வேறு எந்த இருப்பும் இல்லை. அவர் ஜகாத் கொடுக்க மாட்டார். சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து 11 பவுன் நகை அளவுக்கு அவரிடம் இருப்பு வந்து விட்டது என்றால் அந்த 11 பவுனுக்கும் அதன் பின் அவருக்கு வரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எப்போது 11 பவுனுக்கும் கீழ் குறைந்து விடுகிறதோ அப்போது ஜகாத் கடமை இல்லை.

ஒருவர் மாதம் மூவாயிரம் சம்பளம் வங்குகிறார். ஆனால் அவரிடம் ஏற்கனவே 20 பவுன் நகை உள்ளது என்றால் இவர் அந்த 20 பவுனுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அந்த மூன்றாயிரம் ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எபோதெல்லாம் அவருக்கு செல்வம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஜகாத் கடமையாகி விடும்.

பயிர்_விளைச்சலில்_நீர்_பாய்ச்சி_விளைபவற்றில

பயிர்_விளைச்சலில்_நீர்_பாய்ச்சி_விளைபவற்றில்_5_விழுக்காடும், #தானாக_விளைபவற்றில்_10_விழுக்காடும்_ஜகாத்_கொடுக்க_வேண்டும். #இது_நாம்_செய்த_செலவு_போக_கிடைக்கும்_இலாபத்திலா? #அல்லது_மொத்த_விளைச்சலிலா?

#பதில்: #மொத்த_விளைச்சலில்_தான்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِيمَا سَقَتْ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ قَالَ أَبُو عَبْد اللَّهِ هَذَا تَفْسِيرُ الْأَوَّلِ لِأَنَّهُ لَمْ يُوَقِّتْ فِي الْأَوَّلِ يَعْنِي حَدِيثَ ابْنِ عُمَرَ وَفِيمَا سَقَتْ السَّمَاءُ الْعُشْرُ وَبَيَّنَ فِي هَذَا وَوَقَّتَ وَالزِّيَادَةُ مَقْبُولَةٌ وَالْمُفَسَّرُ يَقْضِي عَلَى الْمُبْهَمِ إِذَا رَوَاهُ أَهْلُ الثَّبَتِ كَمَا رَوَى الْفَضْلُ بْنُ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يُصَلِّ فِي الْكَعْبَةِ وَقَالَ بِلَالٌ قَدْ صَلَّى فَأُخِذَ بِقَوْلِ بِلَالٍ وَتُرِكَ قَوْلُ الْفَضْلِ

‘மழை நீராலோ, ஊற்று நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஜகாத் உண்டு. ஏற்றம், கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஜகாத் கொடுக்க வேண்டும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி:அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1483

இந்த ஹதீஸில் விளைச்சலில்’ பத்தில் ஒரு பங்கு அல்லது இருபதில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்று பொதுவாகத் தான் கூறப்படுகின்றது. விளைச்சலில் செலவைக் கழித்துக் கொண்டு போக மீதமுள்ள லாபத்தில் தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கியிருப்பார்கள். அவ்வாறு குறிப்பிட்டுக் கூறாததிலிருந்து மொத்த விளைச்சலில் தான் ஜகாத்தைக் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை அறிய முடியும்.

இதற்குப் பின்வரும் வசனமும் சான்றாக அமைந்துள்ளது.

وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ ‌ؕ كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ‌ ‌ۖ وَلَا تُسْرِفُوْا‌ ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏

படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 6:141)

விளை பொருட்களை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய ஜகாத்தை வழங்கி விடுங்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது. அறுவடை செய்யும் போது, எவ்வளவு தானியங்கள் இருக்கின்றனவோ அதில், அதாவது மொத்த விளைச்சலில் தான் ஜகாத்தைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பதை இந்த வசனத்திலிருந்து விளங்கலாம்.

உதாரணமாக இருபது மூடை நெல் அறுவடை செய்துள்ளோம் என்றால் நஞ்சையாக இருந்தால் அதில் இரண்டு மூட்டை அளவும், புஞ்சையாக இருந்தால் ஒரு மூட்டை அளவும் ஜகாத்தாக வழங்க வேண்டும்.

பெண்ணின்_நகைகளுக்கு_அப்பெண்_ஜகாத்_கொடுக்க_வேண்டுமா?

பெண்ணின்_நகைகளுக்கு_அப்பெண்_ஜகாத்_கொடுக்க_வேண்டுமா?

#கணவன்_கொடுக்க_வேண்டுமா?

திருமணத்தின் போது ஒரு பெண்ணின் பெற்றோர் அன்பளிப்பாக நகை செய்து போட்டார்கள். அதற்கு ஜகாத் கடமையாகி விட்டது. அதற்குரிய ஜகாத்தை அப்பெண் செலுத்த வேண்டுமா? அல்லது அப்பெண்ணின் கணவர் தனது சம்பாத்தியத்திலிருந்து அந்த ஜகாத்தைக் கொடுக்க வேண்டுமா? மேலும் ஒருவருக்கு ஜகாத் கடமையாகி விட்டது. அவரிடம் ஜகாத்திற்குரிய தொகை இல்லை. எனவே அவர் கடனாகவோ, வட்டிக்கு வாங்கியோ ஜகாத்தைக் கட்டலாமா?

#பதில்:

பெண்ணுக்குத்தான் கடமை. எனினும் கணவன் நிறைவேற்றலாம்.
பெற்றோர் உங்களுக்கு வழங்கிய அன்பளிப்புக்கு அப்பெண் தான் ஜகாத் வழங்க வேண்டுமே தவிர கணவர் அதற்காக ஜகாத் வழங்கத் தேவையில்லை.

பெண்ணின் சொத்துக்கள் அனைத்தும் கணவனுக்குத் தான் சொந்தம் என்ற எழுதப்படாத சட்டம் நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது தான் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம்.

கணவனுக்கென்று சொத்துக்கள் இருப்பது போலவே மனைவிக்கும் தனியாக சொத்துக்கள் இருக்கலாம். அவள் விரும்பினால் கணவனுக்குத் தனது சொத்திலிருந்து தர்மம் கூட செய்யலாம் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு.

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ حَدَّثَنِي شَقِيقٌ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ ح فَحَدَّثَنِي إِبْرَاهِيمُ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ بِمِثْلِهِ سَوَاءً قَالَتْ كُنْتُ فِي الْمَسْجِدِ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ وَكَانَتْ زَيْنَبُ تُنْفِقُ عَلَى عَبْدِ اللَّهِ وَأَيْتَامٍ فِي حَجْرِهَا قَالَ فَقَالَتْ لِعَبْدِ اللَّهِ سَلْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَيْكَ وَعَلَى أَيْتَامٍ فِي حَجْرِي مِنْ الصَّدَقَةِ فَقَالَ سَلِي أَنْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدْتُ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ عَلَى الْبَابِ حَاجَتُهَا مِثْلُ حَاجَتِي فَمَرَّ عَلَيْنَا بِلَالٌ فَقُلْنَا سَلْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَى زَوْجِي وَأَيْتَامٍ لِي فِي حَجْرِي وَقُلْنَا لَا تُخْبِرْ بِنَا فَدَخَلَ فَسَأَلَهُ فَقَالَ مَنْ هُمَا قَالَ زَيْنَبُ قَالَ أَيُّ الزَّيَانِبِ قَالَ امْرَأَةُ عَبْدِ اللَّهِ قَالَ نَعَمْ لَهَا أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ

நான் பள்ளிவாசல் இருந்த போது நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்கள், ‘பெண்களே! உங்களின் ஆபரணங்களிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும், என் அரவணைப்பில் உள்ள அனாதை களுக்கும் செலவளிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், ‘நான் உங்களுக்காகவும், எனது அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவு செய்வது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள்’ என்று கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்’ என்று கூறி விட்டார்.

எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயில் ஓர் அன்சாரிப் பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது பிலால் (ரலி) வந்தார். அவரிடம், ‘நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பது தர்மமாகுமா? என்று நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்’ எனக் கூறினேன். உடனே அவர் நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டார்கள். அவர், ஜைனப் என்று கூறினார். நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்கள், எந்த ஜைனப்? என்று கேட்டதும் பிலால் (ரலி), ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ என்று கூறினார். உடனே நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்கள், ‘ஆம்! ஜைனபுக்கு இரு நன்மைகள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது. மற்றொன்று தர்மத்திற்குரியது’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜைனப் (ரலி)
நூல்: புகாரி 1466

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி, தனது சொத்திலிருந்து கணவனுக்குச் செலவு செய்வது தர்மமாகுமா? என்று நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்களிடம் வந்து கேட்கின்றார்கள். மனைவியின் சொத்துக்களில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

எனவே மனைவியின் சொத்துக்கு அவள் தான் ஜகாத் வழங்க வேண்டுமே தவிர கணவன் ஜகாத் வழங்கத் தேவையில்லை.

ஜகாத் கடமையாகி விட்ட நிலையில் அதற்குரிய தொகை இல்லாவிட்டால் கடன் வாங்கியோ, வட்டிக்கு வாங்கியோ ஜகாத் வழங்கலாமா? என்று கேட்டுள்ளீர்கள். இஸ்லாத்தின் எந்த வணக்கமாக இருந்தாலும் கடன் வாங்கியோ, அல்லது வட்டிக்கு வைத்தோ அதை நிறைவேற்றக் கூடாது.

உதாரணமாக நம்மிடமுள்ள நகைகளுக்கு ஜகாத் கடமையாகின்றது என்றால் அதில் ஜகாத்திற்குத் தேவையான அளவு நகையை விற்று அதன் மூலம் ஜகாத்தை வழங்கலாம். அவ்வாறு செய்யும் போது கடன் வாங்கியோ, வட்டிக்கு வாங்கியோ ஜகாத்தை செலுத்த வேண்டிய அவசியமே ஏற்படாது.

செலவை_கழித்த_பிறகுதான்_ஜகாத்தா?

செலவை_கழித்த_பிறகுதான்_ஜகாத்தா?

#விவசாயத்தில்_கிடைத்த_வருமானத்தில்_செலவிட்ட_தொகையைக்_கழித்துவிட்டு_ஸகாத்_கொடுக்க_வேண்டுமா? #அல்லது_கழிக்காமல்_மொத்த_வருமானத்திலிருந்து_ஸகாத்தை_கணக்கிட்டு_கொடுக்க_வேண்டுமா?

#பதில்:  #இல்லை.

இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இதற்காக செலவு செய்ய வேண்டி இருந்தது. இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

و حَدَّثَنَا ابْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ دَفَعَ إِلَى يَهُودِ خَيْبَرَ نَخْلَ خَيْبَرَ وَأَرْضَهَا عَلَى أَنْ يَعْتَمِلُوهَا مِنْ أَمْوَالِهِمْ وَلِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَطْرُ ثَمَرِهَا رواه مسلم

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.  (கைபர் வெற்றிக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் வாழ் யூதர்களிடம் “அவர்கள் தம் நிலங்களில் தமது சொந்தச் செலவில் பயிரிட்டு உழைக்க வேண்டும்; விளையும் கனிகளில் பாதியை அல்லாஹ்வின் தூதரிடம் (பொது நிதியத்துக்காக) வழங்க வேண்டும்” எனும் நிபந்தனையின் பேரில் கைபரின் பேரீச்ச மரங்களையும் நிலங்களையும் ஒப்படைத்தார்கள்.
முஸ்லிம் (3157)

நபியவர்கள் காலத்தில் பயிர்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. நபியவர்கள் இந்தச் செலவை மொத்த விளைச்சலில் கழிக்கச் சொன்னதாகவோ இவ்வாறு செய்ய பிறருக்கு அனுமதியளித்தாகவோ எந்தச் செய்தியும் இல்லை. ஸகாத்தை மொத்த விளைச்சிலிருந்து கணக்கிட்டு கொடுக்க வேண்டும் என்று பொதுவாகவே நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِيمَا سَقَتْ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மழை நீராலோ, ஊற்று நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. ஏற்றம், கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.
புகாரி (1483)

நபியவர்கள் காலத்தில் செலவினங்கள் குறைவாக இருந்தது. இன்றைய காலத்தில் செலவினங்கள் அதிகரித்துள்ளது. எனவே தற்போது செலவினங்களைக் கழித்து எஞ்சியதில் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுவதாக்க் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இது தவறான வாதமாகும். ஏனென்றால் இன்றைக்குச் செலவினங்கள் அதிகரிப்பதுடன் பயிர்களின் விளைச்சலும் அதிகரிக்கின்றது. மேலும் பயிர்கள் குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படுகின்றது. விளைச்சலை அதிகரிப்பதற்கு இன்றைக்கு கையாளப்படும் நவீன யுக்திகள் நபியவர்கள் காலத்தில் இல்லை.

எனவே இன்றைக்கு ஆகும் செலவை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்து கவனித்தால் செலவை மொத்த விளைச்சலில் கழிக்கக் கூடாது என்ற கருத்தே சரியானது என்பதை அறியலாம்.

மேலும் விளைச்சல் குறிப்பிட்ட அளவு இருந்தாலே அவற்றில் ஸகாத் கடமையாகும் என மார்க்கம் கூறுகின்றது. மார்க்கம் நிர்ணயித்துள்ள இந்த அளவை விட குறைவாக விளைச்சல் இருந்தால் அதில் ஸகாத் இல்லை.

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَزِيدَ أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ أَنَّ عَمْرَو بْنَ يَحْيَى بْنِ عُمَارَةَ أَخْبَرَهُ عَنْ أَبِيهِ يَحْيَى بْنِ عُمَارَةَ بْنِ أَبِي الْحَسَنِ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوْسُقٍ صَدَقَةٌ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் :
“ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக் = 60 ஸாஉ) தானியத்தில் ஸகாத் இல்லை.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)
நூல் : புகாரி (1405)

ஒருவர் தனது செல்வத்தை விவசாயத்தில் செலவு செய்யாமல் அப்படியே வைத்திருந்தால் அப்போதும் அவர் அந்த செல்வத்துக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் (செல்வம் நிஸாபுடைய அளவை எட்டியிருந்தால்).

தனது செல்வத்தைப் பயிர்களுக்காகச் செலவிட்டால் அவருடைய பணம் விவசாயப் பொருளாக மாறுகின்றது. இப்போது இவர் விளைச்சலுக்குரிய சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

எனவே விளைச்சலில் பயிர்களுக்காக செலவிட்ட தொகையைக் கழிக்காமல் அவை மொத்தத்திலிருந்து ஸகாத்தைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பதே சரியானது.