பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, March 20, 2018

கடன்_இருப்பவர்_ஹஜ்_செய்யலாமா

#ஹஜ்_உம்ரா

#கடன்_இருப்பவர்_ஹஜ்_செய்யலாமா?

கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ, அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா?

#பதில்

#கடன்_என்பது_இரண்டு_வகைப்படும்.

வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்குவது ஒரு வகை. வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக கடன் வாங்குவது ஒரு வகை.

உதாரணமாக சொந்த வீடு இருப்பவர் மேலும் ஒரு வீடு வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி மற்றொரு வீட்டை வாங்குகின்றார். அல்லது வியாபாரத்தைப் பெருக்குவதற்காக கடன் வாங்கி அதை முதலீடு செய்கின்றார். இவருக்குக் கடன் இருப்பதால் ஹஜ் செய்யத் தேவையில்லை என்று வாதிட முடியாது. ஏனென்றால் இவருடைய கடனை நிறைவேற்றுவதற்குத் தேவையான சொத்து உபரியாக உள்ளது. இவருக்குக் கடன் இருந்தாலும் ஹஜ் கடமை தான்.

அதேபோல் ஒருவர் இரண்டு இலட்ச ரூபாய் கடன் வாங்கி வியாபாரம் செய்கின்றார். ஆனால் அவரிடம் ஐந்து இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களோ, பொருட்களோ இருக்கின்றது என்றால் இவரும் கடனாளி ஆக மாட்டார். இவருக்கு ஹஜ்ஜுக்குச் செல்லும் சக்தி இருந்தால் ஹஜ் செய்தாக வேண்டும். அதாவது வாங்கிய கடனை நிறைவேற்றுவதற்கும், ஹஜ் செய்வதற்கும் போதிய வசதி இருந்தால் அவருக்கு ஹஜ் கடமையாகும்.

கடன் வாங்குவதில் மற்றொரு வகை வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்குவதாகும். உதாரணமாக சொந்த வீடு இல்லாமல் வீடு வாங்குவதற்காக கடன் வாங்குவதைக் கூறலாம். இது போன்ற கடனாளிக்கு முதலில் கடனை நிறைவேற்றுவது தான் கடமை.

கடன் இருந்தும் அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஹஜ் கடமையில்லை.

ஹஜ்ஜைப் பொறுத்த வரை மற்ற கடமைகளைப் போலல்லாமல் யாருக்குச் சக்தியிருக்கின்றதோ அவருக்குத் தான் கடமையாகும். இதை அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தில் தெரிவிக்கின்றான்.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும். யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

திருக்குர்ஆன்3:97

ஒருவர் வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்கியிருக்கும் நிலையில் ஹஜ் அவருக்குக் கடமையாகாது. வாங்கிய கடனைச் செலுத்துவது தான் அவருக்கு முதல் கடமை.

“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. கடனைத் தவிர!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 3498

இந்த ஹதீஸின் அடிப்படையில் கடன் என்பது இறைவனிடம் மன்னிக்க முடியாத பாவமாக உள்ளது. எனவே கடனை முதலில் செலுத்தி விட்டு அதன் பிறகு ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி இருந்தால் ஹஜ் செய்ய வேண்டும்.

கடனைச் செலுத்தினால் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்ற நிலை இருக்குமானால் அந்த நிலையில் அவருக்கு ஹஜ் கடமையாகவில்லை என்று தான் அர்த்தம். இந்நிலையில் ஒருவர் ஹஜ்ஜுக்குச் செல்லவில்லை என்றால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

ஆனால் கடன் இருக்கும் நிலையில் ஹஜ்ஜுக்குச் சென்று, கடனைச் செலுத்தாமலேயே மரணித்து விட்டால் அவர் இறைவனிடத்தில் குற்றவாளியாகின்றார். எனவே வாழ்க்கைத் தேவைக்காக வாங்கிய கடனை நிறைவேற்றி விட்டுத் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

ஆண்_துணையின்றி_பெண்கள்_ஹஜ்ஜுக்கு_செல்லலாமா

#ஹஜ்_உம்ரா

#ஆண்_துணையின்றி_பெண்கள்_ஹஜ்ஜுக்கு_செல்லலாமா?

#பதில்

அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன.

ஹஜ் செய்யும் அளவுக்கு சக்தி இருந்தால் ஆண்களுக்கு ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்கள் கணவன், திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவினர் துணை இருந்தால் தான் ஹஜ் கடமையாகும். இல்லாவிட்டால் கடமையாகாது என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர்.

மற்ற பயணங்களுக்குத் தான் பெண்களுக்குத் தக்க ஆண் துணை அவ்சியம். ஹஜ் பயணம் பாதுகாப்பாக இருந்தால் ஆண் துணை இல்லாவிட்டாலும் பெண்கள் ஹஜ் செய்யலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

முதல் சாரார் முன்வைக்கும் வாதங்கள்

ஒரு பெண் மஹ்ரமுடனே தவிர பயணம் செய்யக் கூடாது என்ற நபிமொழி பெண்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை, நிபந்தனையை விதித்து விடுகின்றது.

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ قَالَ قُلْتُ لِأَبِي أُسَامَةَ حَدَّثَكُمْ عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُسَافِرْ الْمَرْأَةُ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ

‘திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1086, 1087

ஹஜ் பயணம் என்பது மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயணம் என்பதால் இந்த ஹதீஸின் படி ஒரு பெண் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்பது இவர்களது வாதம்.

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَمْرٍو عَنْ أَبِي مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُسَافِرْ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ وَلَا يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ فِي جَيْشِ كَذَا وَكَذَا وَامْرَأَتِي تُرِيدُ الْحَجَّ فَقَالَ اخْرُجْ مَعَهَا

‘எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் தனித்திருக்க வேண்டாம். திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர எந்தவொரு பெண்ணும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார்; நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன்’ என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1862, 3006, 3061, 5233

ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவே உணர்த்தி விடுகிறார்கள்.

இவையே முதல் சாராரின் வாதங்களாகும்.

பெண்கள் துணையின்றி ஹஜ் செய்யலாம் என்று கூறும் இரண்டாவது சாராரின் ஆதாரங்களைப் பார்ப்போம்.

(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.

திருக்குர்ஆன் 3:97

இந்த வசனம் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவாகவே ஹஜ்ஜைக் கடமையாக்குகின்றது.

மஹ்ரமான துணை அல்லது கணவனுடன் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற கருத்தில் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களுக்கு இவர்களின் பதில் வருமாறு:

பெண்கள் மஹ்ரமானவருடன் பயணிக்க வேண்டும் என்ற ஹதீஸ்கள் பொதுவான பயணத்தையே குறிக்கின்றன. அந்த ஹதீஸ்களுக்கு 3:97 வசனம் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி விடுகின்றது. அதாவது ஹஜ் பயணத்தைத் தவிர மற்ற பயணங்களில் மஹ்ரமானவர் அல்லது கணவர் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது என்று தான் விளங்க வேண்டும் என்ற வாதத்தை இவர்கள் முன் வைக்கின்றனர்.

இதற்குச் சான்றாகப் பின்வரும் ஹதீஸையும் சமர்ப்பிக்கின்றனர்.

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْحَكَمِ أَخْبَرَنَا النَّضْرُ أَخْبَرَنَا إِسْرَائِيلُ أَخْبَرَنَا سَعْدٌ الطَّائِيُّ أَخْبَرَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ بَيْنَا أَنَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَاهُ رَجُلٌ فَشَكَا إِلَيْهِ الْفَاقَةَ ثُمَّ أَتَاهُ آخَرُ فَشَكَا إِلَيْهِ قَطْعَ السَّبِيلِ فَقَالَ يَا عَدِيُّ هَلْ رَأَيْتَ الْحِيرَةَ قُلْتُ لَمْ أَرَهَا وَقَدْ أُنْبِئْتُ عَنْهَا قَالَ فَإِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتَرَيَنَّ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنْ الْحِيرَةِ حَتَّى تَطُوفَ بِالْكَعْبَةِ لَا تَخَافُ أَحَدًا إِلَّا اللَّهَ قُلْتُ فِيمَا بَيْنِي وَبَيْنَ نَفْسِي فَأَيْنَ دُعَّارُ طَيِّئٍ الَّذِينَ قَدْ سَعَّرُوا الْبِلَادَ وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتُفْتَحَنَّ كُنُوزُ كِسْرَى قُلْتُ كِسْرَى بْنِ هُرْمُزَ قَالَ كِسْرَى بْنِ هُرْمُزَ وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتَرَيَنَّ الرَّجُلَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ يَطْلُبُ مَنْ يَقْبَلُهُ مِنْهُ فَلَا يَجِدُ أَحَدًا يَقْبَلُهُ مِنْهُ وَلَيَلْقَيَنَّ اللَّهَ أَحَدُكُمْ يَوْمَ يَلْقَاهُ وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تَرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ فَلَيَقُولَنَّ لَهُ أَلَمْ أَبْعَثْ إِلَيْكَ رَسُولًا فَيُبَلِّغَكَ فَيَقُولُ بَلَى فَيَقُولُ أَلَمْ أُعْطِكَ مَالًا وَأُفْضِلْ عَلَيْكَ فَيَقُولُ بَلَى فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلَا يَرَى إِلَّا جَهَنَّمَ وَيَنْظُرُ عَنْ يَسَارِهِ فَلَا يَرَى إِلَّا جَهَنَّمَ قَالَ عَدِيٌّ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقَّةِ تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ شِقَّةَ تَمْرَةٍ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ قَالَ عَدِيٌّ فَرَأَيْتُ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنْ الْحِيرَةِ حَتَّى تَطُوفَ بِالْكَعْبَةِ لَا تَخَافُ إِلَّا اللَّهَ وَكُنْتُ فِيمَنْ افْتَتَحَ كُنُوزَ كِسْرَى بْنِ هُرْمُزَ وَلَئِنْ طَالَتْ بِكُمْ حَيَاةٌ لَتَرَوُنَّ مَا قَالَ النَّبِيُّ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا سَعْدَانُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا أَبُو مُجَاهِدٍ حَدَّثَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ سَمِعْتُ عَدِيًّا كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்டார்கள். ‘நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது’ என்று பதிலளித்தேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்’ என்று சொன்னார்கள். ‘அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?’ என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பாய்’ என்று சொன்னார்கள். நான், ‘(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப்படுவார்)?’ என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி 3595

ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழிப்பறி கொள்ளையைப் பற்றிக் கேட்கின்றார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தம்முடைய ஆட்சிக் காலத்திலும், தமக்குப் பின்னால் ஆட்சி செய்யவிருக்கும் அபூபக்ர், உமர் ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் தலைநகராகத் திகழும் மதீனாவை நோக்கி ஒரு பெண் வருவாள் என்று குறிப்பிடவில்லை. இந்த இடத்தில் மதீனாவைக் குறிப்பிடுவதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் வந்தவர் வழிப்பறி பற்றிக் கேட்கிறார். ‘அதற்குத் தீர்வு இஸ்லாம் தான்; இஸ்லாம் உலகெங்கும் பரவும்; அப்போது வழிப்பறி போய் விடும்; எனவே அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை’ இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பதிலின் நோக்கம்.

அதற்கு அவர்கள் மதீனாவைக் கூட உதாரணமாகக் கூறத் தேவையில்லை. புகாரியின் 3612வது அறிவிப்பில் கூறுவது போல், ‘ஒருவர் ஸன்ஆவிலிருந்து ஹள்ர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார்’ என்று பதில் சொல்லியிருக்கலாம். இன்னும் குறிப்பாக, இந்த ஹதீஸில் சொன்னது போல் புகாரி 3595 ஹதீஸிலும் ஒருவர்’ என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம் அல்லவா?

மதீனாவைக் கூறாமல் கஅபாவுக்கு வருவாள் என்று கூறுவதிலிருந்தும்,

பொருள்களைச் சுமந்து வரும் வாணிபக் கூட்டத்தை உதாரணமாகக் காட்டாமல் ஒரு பெண்ணை உதாரணமாகக் காட்டி, அவள் கஅபாவை வலம் வருவாள் என்று கூறுவதிலிருந்தும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முன்னறிவிப்பை மட்டும் செய்யவில்லை; ஹஜ் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சட்டத்தையும் சமுதாயத்திற்கு முன் வைக்கின்றார்கள்.

அது தான், ‘ஒரு பெண் தனியாக ஹஜ்ஜுக்குச் செல்லலாம்’ என்பதாகும்.

கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்யும் அந்தப் பெண், அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதன் மூலம், அப்பெண் சாதாரணமாக சுற்றுலா வருகின்ற ஓர் உல்லாசப் பயணி அல்ல; மாறாக அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்ற இறையச்சமிக்க பெண்மணி என்று நாம் விளங்கிக் கொள்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே, ‘ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்’ என்று அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 3595)

எனவே ஒரு பெண் தன்னந்தனியாக ஹஜ்ஜுக்குச் செல்வது இகழுக்குரிய செயல் அல்ல; மாறாக புகழுக்குரிய செயல் தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

தடை செய்யப்பட்ட ஒரு காரியத்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறப்பித்து பாராட்டிச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு நல்ல காரியம் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.

இவ்வாறு இரண்டாவது சாரார், ‘ஒரு பெண் மஹ்ரமான உறவினர் அல்லது கணவன் இல்லாமல் தனியாக ஹஜ் செய்யலாம்’ என்ற தங்களது வாதத்தை நிலை நிறுத்துகின்றார்கள்.

புகாரியின் 3595வது ஹதீஸ் இல்லாவிட்டால் தான் இந்த வாதம் ஏற்புடையது; இந்த ஹதீஸில் வருங்காலத்தில் நடக்கக் கூடிய ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்கின்றார்கள்.

பெண்கள் ஹஜ் செய்வது சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றார்கள். இதில் முதல் சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் இரண்டாவது சாரார் எடுத்து வைக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இரண்டாவது சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒரு சட்டம் சம்பந்தமாக இரண்டு மாறுபட்ட ஹதீஸ்கள் இருக்கும் போது இரண்டையும் இணைத்து ஓர் இணக்கமான கருத்தைக் காண்பதும் அதன்படி அமல் செய்வதும் ஹதீஸ்கலை அறிஞர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஏகோபித்த முடிவாகும்.

உதாரணமாக, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது தொடர்பாக மாறுபட்ட இரண்டு செய்திகள் உள்ளன.

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 3771)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தியதை நான் பார்த்தேன் என்று அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி 5615, 5616)

இப்படி மாறுபட்ட இரண்டு செய்திகள் வரும் போது, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது கூடாது; அதே சமயம் உட்கார முடியாத கட்டத்தில் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் தவறில்லை என்று இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.

இதே போல் பெண்கள் தனியாக ஹஜ் செய்வது தொடர்பான இந்த இரு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

ஒரு பெண் தனியாக ஹஜ் செய்யச் செல்லலாமா? என்றால் புகாரி 3595 ஹதீஸின் அடிப்படையில் செல்லலாம்; மார்க்கத்தில் இதற்கு அனுமதி உள்ளது; தடையில்லை; அதே சமயம் புகாரி 3006 ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண் தன் கணவருடன் அல்லது மஹ்ரமான துணையுடன் ஹஜ் செய்யச் செல்வது சிறந்ததாகும்.

இப்படி ஒரு முடிவுக்கு வரும் போது இரண்டு விதமான ஹதீஸ்களில் எதையும் புறக்கணிக்கும் நிலை ஏற்படவில்லை; நாம் இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்தி விடுகின்றோம்.

ஒருவருக்கு ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம், உடல் வலிமை போன்றவை வந்து விடும் போது ஹஜ் கடமையாகின்றது என்று பார்த்தோம். பெண்களும் இதே நிபந்தனைகளை அடைந்து விட்டால் ஹஜ் செய்ய வேண்டும்.

எனினும் கணவனோ, அல்லது மஹ்ரமான துணையோ இல்லாமல் ஹஜ் செய்வது பாதுகாப்பானதில்லை என்று ஒரு பெண் கருதினால் அவர்களுக்குக் கடமையில்லை.

ஒரு பெண் தனியாகவே ஹஜ் செய்து வர முடியும்; தனக்குத் துணை எதுவும் தேவையில்லை என்று கருதினால் அதற்கு மார்க்கத்தில் தடையில்லை.

இந்த விஷயத்தில் தங்கள் பயணம் பாதுகாப்பானதா? என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் இறையச்சத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும்.

பெற்றோருக்காக_ஹஜ்_உம்ரா_செய்வது_கூடுமா

#ஹஜ்_உம்ரா

#பெற்றோருக்காக_ஹஜ்_உம்ரா_செய்வது_கூடுமா?

#பதில்

தாய் தந்தையினர் உயிருடன் இருந்தால் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா என்று கேட்டுள்ளீர்கள். உங்கள் பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி அதை நிறைவேற்றாமல் வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ அவர்களுடைய ஹஜ் கடமையை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும். பின்வரும் ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன.

1513 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ رواه البخاري

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஃபள்ல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்துகொண்டிருந்த போது “கஸ்அம்’ எனும் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?’ எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்!’ என்றார்கள். இது “விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நிகழ்ந்தது.

நூல் : புகாரி 1513

1939 و حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ أَبُو الْحَسَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَا أَنَا جَالِسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي تَصَدَّقْتُ عَلَى أُمِّي بِجَارِيَةٍ وَإِنَّهَا مَاتَتْ قَالَ فَقَالَ وَجَبَ أَجْرُكِ وَرَدَّهَا عَلَيْكِ الْمِيرَاثُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ عَلَيْهَا صَوْمُ شَهْرٍ أَفَأَصُومُ عَنْهَا قَالَ صُومِي عَنْهَا قَالَتْ إِنَّهَا لَمْ تَحُجَّ قَطُّ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ حُجِّي عَنْهَا رواه مسلم

புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப் பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப் பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப் பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது” என்று சொன்னார்கள். அப்பெண்மணி, “என் தாயார்மீது ஒரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக் கொள்” என்றார்கள். அப்பெண்மணி, “என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டதற்கு, “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

பெற்றோர்கள் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் ஹஜ் செய்வது அவர்களின் மீது கடமையாகிவிடும். இந்நிலையில் அவர்களால் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் போனால் அவர்களது சார்பில் அவர்களுடைய பொறுப்பாளர்கள் அதாவது உறவினர்கள் அதை நிûறேவேற்ற வேண்டும்.

1852 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் :

ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்” என்றார்கள்.

நூல் : புகாரி 1852

6699 حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ وَإِنَّهَا مَاتَتْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ قَالَ نَعَمْ قَالَ فَاقْضِ اللَّهَ فَهُوَ أَحَقُّ بِالْقَضَاءِ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

(உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்.

புகாரி (6699)

பெற்றோர்களுக்காக பிள்ளைகள் உம்ரா செய்வதற்கும் ஆதாரம் உள்ளது. எனவே பெற்றோர்களின் சார்பில் பிள்ளைகள் உம்ரா செய்யலாம்.

852 حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ النُّعْمَانِ بْنِ سَالِمٍ عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ عَنْ أَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ لَا يَسْتَطِيعُ الْحَجَّ وَلَا الْعُمْرَةَ وَلَا الظَّعْنَ قَالَ حُجَّ عَنْ أَبِيكَ وَاعْتَمِرْ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي

அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாது என்றேன். உனது தந்தைக்காக நீ ஹஜ் செய்துகொள். உம்ராவும் செய்துகொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி (852)

ஹஜ் உம்ரா செய்வதற்கு பெற்றோர்களால் முடியாமல் போனாலே அவர்கள் சார்பில் பொறுப்பாளர்கள் நிறைவேற்ற முடியும். பெற்றோர்களுக்கு சக்தி இருந்தால் இவ்வணக்கத்தை அவர்களே நிறைவேற்ற வேண்டும். உறவினர்கள் நிறைவேற்றக் கூடாது.

ஹஜ் என்பது ஒருவர் மீது கடைமையான நிலையில் அவர் ஹஜ்ஜை மேற்கொள்ளும் போது அனுமதிக்கப்பட்ட மூன்று வகையான ஹஜ்ஜில், தமத்தூ மற்றும் கிரான் ஆகிய இருவகையான ஹஜ்ஜுகளில் உம்ராவையும் இணைத்து செய்யும் போது செய்யக்கூடிய உம்ராவை பற்றித்தான் இந்த நபித்தோழர் கேள்வி கேட்கின்றார். அப்போது செய்யும் உம்ராவை பற்றித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.

எனவே, இந்த ஹதீஸை தவறுதலாக புரிந்து கொண்டு, ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவைமட்டும் தனித்து செய்வதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டக்கூடாது. மேலும், ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவைமட்டும் தனித்து செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் காணமுடியவில்லை. தனித்து உம்ரா செய்யவேண்டும் என்பது நம்மீத்து கட்டாய கடமையும் இல்லை

சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா?

ஹஜ் செய்வதை பற்றி, அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,

“அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை”

அல்குர்-ஆன் 3:97

வயது முதிர்ந்து. உடல் பலவீனமடைந்த நிலையில் இருக்கக்கூடிய ஒருவர் ஹஜ் செய்யவேண்டும் என்றால், அதற்குரிய சக்தி அவரிடத்தில் இல்லை. அப்போது இவருக்குத்தான் ஹஜ் செய்ய சக்தியில்லையே, இவர் மீது ஹஜ் கடமையாகுமா? என்றால், இவர் மீது ஹஜ் கடமையில்லை. அதே நேரத்தில் அவர் உடல் வலிமையும், பொருளாதாரத்தையும் பெற்று திடகாத்திரமாக இருந்த நிலையில் அவர் மீது ஹஜ் கடமையாகி, அவர் அப்போது ஹஜ் செய்யாமலிருந்து இருப்பாரேயானால், அவர் சக்தி பெற்றிருந்த நிலையில் ஹஜ் செய்யாமல் விட்டதை, அவர்களுடைய வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.

கடன் வாங்கிய ஒருவர் அந்த கடனை நிறைவேற்றுவது கட்டாயம் என்பது போல, அவர் திடகாத்திரமாக இருந்த போது கடமையாகிய ஹஜ்ஜைத்தான் அவர் நிறைவேற்றியாக வேண்டுமே ஒழிய, ஒருவர் வாங்காத கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சொல்லுவது எப்படி நீதியாகாதோ, அதைப்போல கடைமையாகத ஹஜ்ஜை அவர் செய்யவேண்டும் என்று சொல்லுவதும் நீதியாகாது.

மேற்கண்ட அடிப்படையில் இந்த சட்டத்தை விளங்கிக்கொண்டால் தான் சக்திபெற்றவர் மீது ஹஜ் கடமை என்ற வசனத்திற்கும், வயது முதிர்ந்த நிலையில் உள்ளவர்களுக்காக அவரது பொறுப்பாளர்கள் ஹஜ் செய்ய வேண்டும் என்ற நபிமொழிக்கும் எந்த முரணும் இல்லாமல் விளங்க முடியும்