பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா?

 

? ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது; எனவே 3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா?
ஏ. மெஹர் நிஸா, அம்மாப்பட்டிணம்

இறந்தவரின் வீட்டில் போய் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாக எந்த ஹதீசும் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவுக்குச் சென்றிருந்தோம். அப்போது  அவர்கள் கப்ருக்கருகில் இருந்து கொண்டு, “இறந்தவரின் கால்மாட்டிலும்தலைமாட்டிலும் விசாலமாக்கிக் கொள்” என்று தோண்டக் கூடியவரிடம் அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திரும்பும் பொழுது ஒரு பெண்ணின் அழைப்பாளர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். உணவு கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தமது கைகளை அதில் வைத்தார்கள். மக்களும் வைத்தார்கள்சாப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கவள உணவைத் தமது வாயில் மெல்லுவதை எங்களுடைய பெற்றோர் பார்த்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “உரியவரின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை நான் சாப்பிடுகிறேன்” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எனக்காக ஓர் ஆடு வாங்கி வரும்படி பகீஃ (சந்தை)க்கு ஆளனுப்பினேன். எனக்கு ஆடு கிடைக்கவில்லை. எனது அண்டை வீட்டுக்காரர் ஓர் ஆடு வாங்கியிருந்தார். அதன் கிரையத்தைப் பெற்று ஆட்டைத் தாருங்கள் என்று அவரிடம் ஆளனுப்பினேன். அவர் (வீட்டில்) இல்லை. அதனால் அவரது மனைவியிடம் கேட்டு ஆளனுப்பினேன். அவர் அந்த ஆட்டை அனுப்பி வைத்தார்” என்று அந்தப் பெண் பதில் சொல்லி அனுப்பினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அதை கைதிகளுக்குச் சாப்பிடக் கொடு” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்சாரியைச் சேர்ந்த ஒரு மனிதர்

நூல்: அபூதாவூத் 2899, அஹ்மத் 21471, பைஹகீ, தாரகுத்னீ

இந்த ஹதீஸில் ஒரு பெண் உணவு கொடுத்து அனுப்பினாள் என்று கூறப்படுகின்றது. அந்தப் பெண் இறந்தவரின் மனைவி தான் என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் இறந்த வீட்டில் சாப்பிட்டதாகக் கூறுகின்றனர்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்பிய பெண், இறந்தவரின் மனைவி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இறந்தவரின் வீட்டிற்குச் சென்று நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்றும் இந்த ஹதீஸில் கூறப்படவில்லை.

எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, இறந்தவரின் வீட்டில் போய் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்று கூறுவது அபாண்டமாகும். ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக் கொண்டாலும் 3ம் பாத்திஹா, 7ம் பாத்திஹா, 40ம் பாத்திஹா என்று ஓதுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? இது போன்று சம்பந்தமில்லாத ஆதாரங்களைக் கூறுவதிலிருந்தே இவை பித்அத் என்பதை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment