பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

இகாமத் சொல்லும் போது ஏற்கனவே சுன்னத் தொழுது கொண்டிருக்கும் ஒருவர் அந்தத் தொழுகையை முறித்து விட்டு, கடமையான தொழுகையில் போய் இணைந்து கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது சரியா?

 

? தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகை இல்லை என்று ஹதீஸ் உள்ளது. இந்த ஹதீஸின் அடிப்படையில் இகாமத் சொல்லும் போது ஏற்கனவே சுன்னத் தொழுது கொண்டிருக்கும் ஒருவர் அந்தத் தொழுகையை முறித்து விட்டு, கடமையான தொழுகையில் போய் இணைந்து கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது சரியா?

முஹம்மது ஞானியார், திருநெல்வேலி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்தத்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 1281)

இந்த ஹதீஸின் அடிப்படையில், இகாமத் சொல்லப்படும் போது, ஏற்கனவே சுன்னத் தொழுது கொண்டிருப்பவர் தனது தொழுகையை முறித்துக் கொண்டு கடமையான தொழுகையில் போய் இணைய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஏனென்றால் தொழுகை என்றால் அதன் துவக்கம் தக்பீர்; அதன் முடிவு ஸலாம் கொடுத்தல் என்று நபி (ஸல்) அவர்கள் வரையறுத்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குவார்கள்; “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்…‘ என்று (குர்ஆன்) ஓத ஆரம்பிப்பார்கள். ருகூஉச் செய்யும்போது தலையை  உயர்த்தவுமாட்டார்கள்ஒரேடியாகத் தாழ்த்தவுமாட்டார்கள். மாறாகநடுநிலையாக வைத்திருப்பார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால் நிமிர்ந்து நிற்காமல் சஜ்தாவுக்குச் செல்லமாட்டார்கள். சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால் நேராக நிமிர்ந்து உட்காராமல் (இரண்டாவது) சஜ்தாச் செய்யமாட்டார்கள். ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் “அத்தஹிய்யாத்‘ ஓதுவார்கள். (அந்த அமர்வில்) இடது காலை விரித்து வைத்துவலது காலை நட்டு வைப்பார்கள். மேலும்ஷைத்தான் உட்காருவதைப் போன்று உட்கார வேண்டாம் என்றும்மிருகங்கள் உட்காருவதைப் போன்று முழங் கைகளைத் தரையில் பரப்பி வைத்து உட்கார வேண்டாம் என்றும் தடை விதித்துவந்தார்கள். அவர்கள் சலாம் கூறியே தொழுகையை முடிப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 857)

தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 56, 523 திர்மிதி 3, 221, இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்நடைமுறைக்கு மாற்றமாக தொழுகையை இடையிலேயே முறிக்க வேண்டும் என்றால் அதற்குத் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும். இகாமத் சொல்லப்பட்டால் வேறு தொழுகை இல்லை என்ற ஹதீஸ் அடிப்படையில், சுன்னத் தொழுது கொண்டிருப்பவர் அதைப் பாதியிலேயே விட்டு விட வேண்டும் என்று கூறினால் அது இந்த ஹதீசுக்கு முரணாக அமைந்து விடும். எனவே இதற்கு முரணில்லாத வகையில் தான் இகாமத் சம்பந்தப்பட்ட ஹதீஸை விளங்க வேண்டும்.

இகாமத் சொல்லப்பட்டு விட்டால் வேறு தொழுகை இல்லை என்றால், அதற்குப் பிறகு வேறு தொழுகையைத் துவங்கக் கூடாது என்று பொருள் கொண்டால் இரண்டு ஹதீஸ்களுக்கும் எவ்வித முரண்பாடும் ஏற்படாது.

அதாவது, இகாமத் சொல்லப்பட்ட பிறகு கடமையான தொழுகையைத் தொழாமல் சுன்னத் தொழ ஆரம்பிப்பதை இந்த ஹதீஸ் தடை செய்கின்றது. அதே சமயம் ஏற்கனவே தொழுது கொண்டிருப்பவர் தமது தொழுகையை நிறைவு செய்து ஸலாம் கூறி முடித்த பின்னர் கடமையான தொழுகையில் போய் இணைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்த முடியும்.

No comments:

Post a Comment