பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளலாமா?

 குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளலாமா?

பதில் :

மாறுவேடம் என்பது பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகும். சிறுவனைப் பெரியவரைப் போன்று வேடமிடச் செய்வதும், ஆணைப் பெண்ணைப் போன்று வேடமிடச் செய்வதும், பெண்ணை ஆணைப் போன்று வேடமிடச் செய்வதும், விலங்கினங்களைப் போன்று வேடமிட்டுக் கொள்வதுமாக, இவ்வாறு பல்வேறு வேடங்களைப் போட்டுக்கொள்கின்றனர்.

பொய் என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகும். எனவே மாறுவேடம் என்பது உண்மைத் தோற்றத்தை மறைத்து பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாக இருப்பதால் அதற்காகப் போட்டி நடத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக இப்போட்டிகள் நடத்தப்பட்டாலும் இதைத் தவிரந்து கொள்வதே சிறந்ததாகும்.

பிறமதத்தினர் கடவுளாக வணங்கும் கற்பனைத் தெய்வங்களின் வேடத்தையும் போட்டு நடித்து அதை உண்மை போன்று மக்கள் மனதில் பதியவைக்கின்றனர். அது போன்று மறைந்து போன தலைவர்களின் வேடங்களை அணிந்து அவர்களைப் பற்றி உண்மைக்குப் புறம்பான பல பொய்யான தகவல்களை மக்கள் மனதில் பதியவைப்பதற்கும் இந்த மாறுவேடப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அது போன்று கிறித்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போன்ற வேடத்தை முஸ்லிம்களில் சிலர் தமது குழந்தைகளுக்கு அணிவித்து மகிழ்கின்றனர்.

இவ்வாறு இணைவைப்புக் காரியங்களையும், பாவமான காரியங்களையும் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

{وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ} [المائدة: 2]

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்! பாவத்திலும் பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்

(அல்குர்ஆன் 5:2)

மாறுவேடம் என்பது பொய்யாக இருந்தாலும் ஓர் உண்மையை மக்களுக்குப் புரியவைப்பதற்காகவும், நல்லிணக்கக் கருத்தை ஏற்படுத்துவதற்காகவும் மார்க்கம் தடுத்துள்ள அம்சங்கள் இல்லாமல் அதைச் செய்துகொள்வது தடையல்ல.

வரதட்சணைக் கொடுமையைப் புரியவைப்பதற்காக, அல்லது இணைவைப்பின் அபாயத்தைப் புரியவைப்பதற்காக அல்லது வேறு ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு சிறுவனுக்கு வயோதிகரைப் போன்று வேடமிட்டும், ஒரு சிறுமிக்கு ஒரு வயோதிகப் பெண்ணைப் போன்று வேடமிட்டும் நாடகத்தைப் போன்று நடத்திக்காட்டினால் அது குற்றமல்ல.

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَهُ أَنَّ أُمَّهُ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عُقْبَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ فَيَنْمِي خَيْرًا أَوْ يَقُولُ خَيْرًا (رواه البخاري)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.

அறிவிப்பவர் : உம்மு குல்சும் பின்த் உக்பா (ரலி)

நூல் : புகாரி (2692)

ஆனால் இது போன்ற நிகழ்வுகளில் மார்க்கம் தடுத்துள்ள காரியங்களைச் செய்வது கூடாது.

பெண்களைப் போன்று ஆண்கள் ஒப்பனை செய்து கொள்வதையும், ஆண்களைப் போன்று பெண்கள் ஒப்பனை செய்து கொள்வதையும் நபி (ஸல்) சபித்துள்ளார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّهِينَ مِنْ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنْ النِّسَاءِ بِالرِّجَالِ (رواه البخاري)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (5885)

4100 – حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- الرَّجُلَ يَلْبَسُ لِبْسَةَ الْمَرْأَةِ وَالْمَرْأَةَ تَلْبَسُ لِبْسَةَ الرَّجُلِ.(رواه أبو داود)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்ணின் ஆடையை அணியும் ஆணையும், ஆணின் ஆடையை அணியும் பெண்ணையும் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவூத் (4100)

எனவே நல்ல கருத்தைச் சொல்வதற்கான நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆண் பெண்ணைப் போன்று வேடமிட்டுக் கொள்வதையும், பெண் ஆணைப் போன்று வேடமிட்டுக் கொள்வதையும், பிறமதத்தினர் தெய்வமாக வணங்குபவற்றை வேடமிட்டுக் கொள்வதையும், பாவமான காரியங்களை நியாயப்படுத்துவதற்காக வேடமிட்டுக் கொள்வதையும், மனிதத் தோற்றத்தை இழிவுபடுத்தும் தோற்றத்தை வேடமிட்டுக் கொள்வதையும் தவிரந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment