ஜின்கள் மனிதனின் உடலில் புகுவார்களா?
பதில்
எதார்த்தத்திற்கு மாற்றமாக வினோதமான செயல்பாடுகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். இவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக தங்கள் மீது ஜின் வந்து விட்டதாகக் கூறி சுற்றி இருப்பவர்களைப் பயத்தில் ஆழ்த்துகிறார்கள். இதன் மூலம் தான் நாடியதை அடையலாம் என்பதற்காகவே இந்த பித்தலாட்ட வேளையை அரங்கேற்றுகிறார்கள்.
இதைப் பார்ப்பவர்களும் ஏமாந்து போய் உண்மையில் ஜின் உடலில் புகுந்துவிட்டதாக நம்பி விடுகிறார்கள். மனிதர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு ஜின் அதாவது ஷைத்தான் இருக்கிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட ஜின் இல்லாத மனிதர் உலகில் ஒருவருமில்லை. விஷயம் இவ்வாறிருக்க குறிப்பிட்ட சிலரிடம் ஜின் இருப்பதாகவும் மற்றவர்களிடம் ஜின் இல்லை என்றும் நம்புவது இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கையாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜின் இனத்தைச் சேர்ந்த கூட்டாளியொருவன் (ஷைத்தான்) தம்முடன் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை''என்று கூறினார்கள். அப்போது, "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?'' என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், "என்னுடனும் தான். ஆயினும் அல்லாஹ்,அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்து விட்டான். அவன் (எனக்குப்) பணிந்து விட்டான். ஆகவே, எனக்கு அவன் நல்லதையே கூறுவான்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : முஸ்லிம் (5421)
எல்லோரிடத்திலும் இருக்கின்ற ஜின் கெட்ட செயலை ஏவுவதைத் தவிர வேறு எந்த தீங்கையும் மனிதர்களுக்குச் செய்ய முடியாது. இதை இந்த ஹதீஸின் பிற்பகுதி விளக்குகிறது. என்னிடத்தில் உள்ள ஜின் எனக்கு நல்லதை மட்டுமே ஏவுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்கும் மட்டும் உரிய தனிச் சிறப்பாக இதைக் கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர்த்து மற்றவர்களிடத்தில் உள்ள ஜின் கெட்டதை ஏவுவான் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. தீய எண்ணங்களை ஏற்படுத்தி வழிகெடுக்க முயற்சி செய்வது மட்டுமே ஜின்களால் மனிதர்களுக்கு ஏற்படும் தீங்கு என்பதை பல குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.
குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டுள்ள இந்த விபரத்தைத் தாண்டி பைத்தியத்தையும் நோயையும் அபரிமிதமான ஆற்றலையும் ஏற்படுத்தி ஜின்கள் உளற வைக்குமென்று நம்புவதற்கு பொய்யைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை.
மேலும் விபரங்களுக்கு இந்த நூலை வாசிக்கவும்
http://onlinepj.com/books/jin_shaithan/
No comments:
Post a Comment