பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, September 13, 2014

ஷைத்த்கானுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்து விட்டு அவனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதில் அர்த்தம் இருக்கிறதா


சைத்தான் அல்லாஹ்விடம்  மனிதர்களை வழி கெடுக்கும்வாய்ப்பு  கேட்டு உலகிற்கு வந்துள்ளான் என நாம் அறிந்திருக்கிறோம். அப்போ சைத்தான் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க அல்லாஹ் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நாம் அல்லாஹ்விடம் உதவி தேடினால் மட்டும் சைத்தானிடம் இருந்து அல்லாஹ் நம்மளைக் காப்பானா ?
பதில்
இறைவன் ஷைத்தானுக்கு எத்தகைய அதிகாரத்தை வழங்கியுள்ளான் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதரையும் அவருடைய விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக தவறான பாதைக்கு ஷைத்தான் இழுத்துச் செல்வதில்லை
தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்குக் கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.
மனிதன் தான் ஷைத்தானிற்குக் கட்டுப்பட்டு தவறிழைக்கிறானே தவிர ஷைத்தான் யாரையும் வலுக்கட்டாயமாக அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அது போன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானே தவிர நன்மையான காரியங்களைச் செய்யவிடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்கு வர மாட்டான். இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.
தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளைக் காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
"அவர்களை வழி கெடுப்பேன்அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;அவர்களுக்குக் கட்டளையிடுவேன்அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
அல்குர்ஆன் (4 : 119)
அவன் தீமையையும்வெட்கக் கேடானதையும்நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.
அல்குர்ஆன் (2 : 169)
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
அல்குர்ஆன் (114 : 5)
ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை தவறான வழியைக் காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.
"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு
அல்குர்ஆன் (14 : 22)
மனிதன் மிகவும் பலவீனமானவன். ஒரு நேரம் இல்லாவிட்டால் மற்றொரு சூழ்நிலையில் ஷைத்தானின் ஆசை வார்த்தைகளுக்கு இனங்கி விடுகிறான். இந்த பலவீனத்தால் நாம் தவறான வழியைத் தேர்வு செய்து விடக் கூடாது. சரியான வழியில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடப்படுகின்றது.
ஷைத்தானுக்கு நல்லதாகக் காட்டும் தீய காரியங்களை நமக்கு தீய காரியங்களாகவே இறைவன் காட்டி ஷைத்தனுக்கு கட்டுப்படாமல் காப்பாறுவான். எனவே நாம் இந்தப் பிரச்சனையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவது அர்த்தமுள்ளது தான். இறைவனிடம் நாம் பாதுகாப்புத் தேடும் போது நாம் அடிமை என்பதையும் அல்லாஹ் எஜமான் என்பதையும் வெளிப்படுத்துகின்றோம். தன் அடியார்கள் தன்னிடம் உதவி தேடுவதை இறைவன் மிகவும் நேசிக்கின்றான்.

No comments:

Post a Comment