நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா?
மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா?
சில பெரியார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாக சில நூல்களில் எழுதப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்றளவும் உயிருடன் உள்ளனர் என்று சிலர் வாதிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? என்பது பற்றிய அறிவும் நமக்கு இருப்பது அவசியமாகும்.
"யார் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 610, 6197
இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர்.
இந்த நபிமொழியை இவர்கள் தவறாக விளங்கியுள்ளனர். இந்த நபிமொழியை எவ்வாறு விளங்குவது என்பதற்கு மற்றொரு நபிமொழி துணை செய்கிறது.
"என்னை யாராவது கனவில் கண்டால் விழித்தவுடன் என்னைக் காண்பார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்'' என்பது தான் அந்த நபிமொழி.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6993
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யார் கனவில் காண இயலும் என்பதை இந்த நபிமொழி விளக்குகிறது.
"என்னைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேரிலும் காண்பார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிரோடு வாழும்போது மாத்திரம் தான் இது சாத்தியமாகும்.
அவர்கள் உயிரோடு இந்த உலகில் வாழும்போது ஒருவர் கனவில் அவர்களைக் கண்டால் விழித்தவுடன் அவர்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார் என்று இந்த நபிமொழி கூறுகிறது.
இன்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறினால் விழித்தவுடன் அவர் நேரிலும் அவர்களைக் காண வேண்டும். நகமும் சதையுமாக அவர்களை நேரில் காணவில்லையானால் அவர் கனவிலும் அவர்களைக் காணவில்லை என்பது உறுதி.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிறகு எந்த மனிதரும், எந்த மகானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்க்கவே இயலாது என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் இந்த நபிமொழி தெரிவிக்கிறது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே நேரடியாகக் கண்டவர் தான் கனவில் காண முடியும். அல்லது கனவில் கண்டவர் பின்னர் நேரில் காண முடியும் என்பதைத் தான் இரண்டு நபிமொழிகளும் கூறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்தப் பெரியார் கனவில் கண்டார், அந்த மகான் கண்டார்'' என்று கூறப்படுமானால் அது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைச் சான்றாகக் கொண்டு நான் தான் முஹம்மது நபி என்று கனவில் ஒருவர் நம்மிடம் சொல்வது போல் கண்டால் கனவில் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்று சிலர் கருதுகின்றனர்.
என் பெயரைச் சொல்லி ஷைத்தான் கனவில் வரமாட்டான் என்று சொல்லப்பட்டால் தான் அதிலிருந்து இந்தக் கருத்தை எடுக்க முடியும். ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான் என்ற சொல்லில் இருந்து இவர்கள் கூறும் கருத்தை எடுக்க முடியாது.
ஷைத்தான் அவனுக்கே உரிய வடிவில் வந்து நான் தான் முஹம்மத் நபி என்று சொல்லலாம். அவர்களின் பெயரைப் பயன்படுத்தி பொய் சொல்லி இருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment