கனவுகளில் இறந்தவர் வருவது ஆதாரமாகுமா?
மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?
கனவுகளில் இறந்தவர் வருவது ஆதாரமாகுமா?
மரணித்தவர் என் கனவில் வந்தார்; அதனால் அவர் உயிரோடு உள்ளார் என்பதையும் சமாதி வழிபாடு செய்பவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள்.
ஒருவர் நமது கனவில் வருகிறார் என்றால் அவரே நமது கனவில் வந்தார் என்று புரிந்து கொள்ளக் கூடாது. அவர் நம்முடன் எதையாவது பேசினால் அவரே நம்மோடு பேசுகிறார் என்றும் நாம் புரிந்து கொள்ளக் கூடாது. அது போன்ற காட்சிகளை இறைவன் நமக்கு எடுத்துக் காட்டுகிறான் என்றே புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளும் உண்மையுமாகும்.
உதாரணமாக இன்று உயிருடன் உலகத்தில் வாழும் ஒருவரை நாம் கனவில் காண்பதாக வைத்துக் கொள்வோம். கனவில் அவரைப் பார்த்த பின்னர் அவரை நாம் நேரிலும் சந்திக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அந்த மனிதர் "நான் நேற்றிரவு உன் கனவில் வந்தேனே?'' என்று கூறுவாரா என்றால் நிச்சயமாகக் கூற மாட்டார்.
நமது கனவில் அவர் வந்தது நமக்குத் தான் தெரியுமே தவிர அவருக்குத் தெரியாது. "உங்களை நான் கனவில் கண்டேன்'' என்று அவரிடம் நாம் கூறினால் தான் அதை அவரால் அறிந்து கொள்ள முடியும்.
எத்தனையோ விஷயங்களை ஒருவர் நம்மிடம் பேசுவதாக நாம் கனவு கண்டிருப்போம். நாம் அவரிடம் போய் "நேற்று என் கனவில் நீங்கள் கூறிய அறிவுரையை மீண்டும் கூறுங்கள்'' என்று கேட்டால் அவரால் அதைக் கூற முடியாது. "நான் கனவில் என்ன அறிவுரை கூறினேன் என்பது எனக்கு எப்படித் தெரியும்?'' என்பது தான் அவரது பதிலாக இருக்கும்.
எனவே ஒருவரை நாம் கனவில் கண்டால் அவரே வந்து விட்டார் என்று கருதக் கூடாது. அவர் நம்மோடு பேசியது அனைத்தும் அவரது வார்த்தைகள் என்றும் நாம் நினைக்கக் கூடாது. அவருக்கு நமது கனவில் எந்தச் சம்மந்தமும் இல்லை.
அவரை எடுத்துக் காட்டி அவர் கூறுவது போல் சில செய்திகளை இறைவன் நமக்குக் கூறலாம். அல்லது ஷைத்தான் அவரது வடிவத்தில் வந்து நமக்கு கெட்ட கனவை ஏற்படுத்தியிருப்பான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் உயிருடன் உள்ள ஒருவரை ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் கூட கனவில் காண முடியும். அவர் ஆயிரம் இடத்துக்குச் சென்று காட்சியளித்தார் என்று அதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
ஒருவரை வீடியோவில் பதிந்து மற்றவருக்குக் காட்டுவது போல் தான் கனவில் காண்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment