பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, April 26, 2018

இணைகற்பிப்பவர்களுக்காக_துஆ_செய்யலாமா

#நம்பிக்கை

#இணைகற்பிப்பவர்களுக்காக_துஆ_செய்யலாமா?

என் உறவுப் பெண்கள் சிலர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியங்களைச் செய்கிறார்கள் நானும் என் மனைவியும் தவ்ஹீத் கொள்கையை இயன்றவரைப் பின்பற்றி வாழ்வதை என் உறவுப் பெண்கள் நன்றாக அறிவார்கள் . அவர்களுக்காக நான் துவா செய்யலாமா? எந்த மாதுரி துவா செய்ய மார்க்கத்தில் அனுமதி உள்ளது?

#பதில்

இணைவைப்பவர்களாகவே மரணித்தவர்களின் மறுமை வெற்றிக்காக பிரார்த்தனை செய்வதை மார்க்கம் தடை செய்துள்ளது. அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்றோ, அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்றோ பிரார்த்திப்பது கூடாது.

அவர்கள் உயிருடன் இருந்தால் அவர்கள் திருந்தக் கூடிய வாய்ப்பு உள்ளதால் அவர்கள் நேர்வழி பெற்று சொர்க்கம் செல்வதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யலாம். இதற்கு நபிமொழிகளில் சான்றுகள் உள்ளன.

2937 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَدِمَ طُفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ وَأَصْحَابُهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ دَوْسًا عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللَّهَ عَلَيْهَا فَقِيلَ هَلَكَتْ دَوْسٌ قَالَ اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ رواه البخاري

துûஃபல் பின் அம்ரு அத்தவ்ஸீ (ரலி) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (எங்கள்) “தவ்ஸ்’ குலத்தார் இஸ்லாத்தை ஏற்க மறுத்து விட்டார்கள். அவர்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, “தவ்ஸ் குலத்தார் அழியட்டும்” என்று கூறப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2937

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது தாய் இணை வைப்பவராக இருக்கும் போது அவரை இஸ்லாத்திற்கு வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் அவர்களை இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் வெறுக்கக் கூடிய வார்த்தையைக் கூறி விட்டார். எனவே நான் அழுது கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயாரை இஸ்லாத்திற்கு வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் வர மறுத்தார். இன்று நான் அவரை அழைத்த போது நான் வெறுக்கக் கூடிய ஒன்றை உங்களைப் பற்றி அவர் கூறிவிட்டார். எனவே அபூஹுரைராவின் தாயாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுமாறு பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஹுரைராவின் தாயாருக்கு நேர்வழி காட்டு!” என்று பிரார்த்தித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையால் மகிழ்ச்சியடைந்தவனாக (வீட்டிற்கு) நான் வந்தேன். அப்போது வாசல் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். என் கால் சப்தத்தை என் தாய் கேட்டு விட்டார். “அபூஹுரைராவே! நீ அங்கேயே நில்!” என்று சொன்னார். தண்ணீர் சப்தத்தை நான் கேட்டேன். என் தாய் குளித்துவிட்டு ஆடையை அணிந்து விட்டு விரைவாக முக்காடு போட்டுக் கொண்டார். நான் கதவைத் திறந்தேன். அப்போது அவர், “அபூஹுரைராவே! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகவும் அவனது அடியாராகவும் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்கிறேன்” என்று கூறினார். சந்தோஷத்தினால் அழுதவனாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வந்தேன். “அல்லாஹ்வின் தூதரே! சந்தோஷப்படுங்கள்! திட்டமாக அல்லாஹ் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அபூஹுரைராவின் தாயாருக்கு நேர்வழி காட்டி விட்டான்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்து விட்டு, “நல்லது” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இறை நம்பிக்கையாளர்களாக விளங்கும் அல்லாஹ்வின் அடியார்களுக்கு நானும் எனது தாயும் விருப்பமானவர்களாக இருப்பதற்கும், எனக்கும் என் தாய்க்கும் அவர்கள் விருப்பமானவர்களாக இருப்பதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! உனது இந்த அடிமையையும் அதாவது அபூஹுரைராவையும் அவரது தாயாரையும் இறை நம்பிக்கையுள்ள உனது அடியார்களுக்கு விருப்பமானவர்களாக ஆக்குவாயாக! இறை நம்பிக்கையாளர்களை இவர்களுக்கு விருப்பமானவர்களாக ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட, என்னைப் பார்த்த எந்த இறை நம்பிக்கையாளரும் என்னை விரும்பாமல் இருந்ததில்லை.

நூல் : முஸ்லிம் 4546

No comments:

Post a Comment