பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, April 26, 2018

நபிகள்_நாயகம்_அல்லாஹ்வைப்_பார்த்தார்களா

#நம்பிக்கை

#நபிகள்_நாயகம்_அல்லாஹ்வைப்_பார்த்தார்களா?

#இல்லை

அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது. எந்த மனிதனோ, அல்லாஹ்வின் தூதர்களோ அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 6:103

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய அசல் உருவிலும், அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி கண்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 3234

மஸ்ரூக் பின் அஜ்தஉ அறிக்கின்றார் :

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைக் கண்டார்கள் என்று உங்களிடம் யார் அறிவிக்கின்றாரோ அவர் பொய் சொல்லி விட்டார். இறைவனோ “கண்கள் அவனைப் பார்க்காது’ என்று கூறுகின்றான் (அல்குர்ஆன் 6:103). மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று யார் உங்களிடம் அறிவிக்கின்றாரோ அவரும் பொய் சொல்லி விட்டார். இறைவனோ, “அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிய மாட்டார்’ என்று கூறுகின்றான் (அல்குர்ஆன் 27:65) என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்: புகாரி 7380

புகாரியில் 4855வது ஹதீஸில் ஆயிஷா (ரலி) அவர்கள்,

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன் என்ற திருக்குர்ஆனின் 42:51 வசனத்தையும் தமது கூற்றுக்குச் சான்றாகக் காட்டுகின்றார்கள்.

“நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” எனக் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 261

திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் ஆலிம்கள் பலர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜின் போது பார்த்ததாக கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட வசனத்தை முன் வைக்கின்றனர்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.

திருக்குர்ஆன் 53:13

இந்த வசனத்தில் அவரைக் கண்டார் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதைப் பற்றித் தான் குறிக்கின்றது என்பது இவர்களது வாதம். இந்த வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் கண்டது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான் என்று விளக்கமளித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய போது, 53:13 வசனத்தை ஆதாரமாகக் காட்டி, அவரை மற்றொரு முறையும் கண்டார் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே என்று இந்த ஹதீஸை அறிவிக்கும் மஸ்ரூக் கேட்கும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் “அது ஜிப்ரீலைக் குறிக்கின்றது” என்று பதிலளித்தார்கள்.

நூல் புகாரி 3235

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது இறைவனைக் கண்டார்கள் என்பது பொய் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment