பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, August 8, 2020

எப்போது வலீமா விருந்து வைக்கலாம்?


எப்போது வலீமா விருந்து வைக்கலாம்?

திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? ஓரிரு நாட்கள் கழித்து வைக்கலாமா? உடலுறவு கொண்ட பின்பு தான் வலீமா விருந்து அளிக்க வேண்டுமா?

பதில் :

திருமணத்துக்குப் பின்னர் அளிக்க வேண்டிய விருந்துதான் வலீமாவாகும். திருமணம் நடந்த அன்றே கொடுக்கலாம். ஓரிரு நாட்கள் கழித்தும் கொடுக்கலாம். உடலுறவு நடப்பதற்கு முன்னரும் கொடுக்கலாம். இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ قَالَ أَخْبَرَنِي حُمَيْدٌ أَنَّهُ سَمِعَ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ أَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلَاثَ لَيَالٍ يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ وَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلَا لَحْمٍ وَمَا كَانَ فِيهَا إِلَّا أَنْ أَمَرَ بِلَالًا بِالْأَنْطَاعِ فَبُسِطَتْ فَأَلْقَى عَلَيْهَا التَّمْرَ وَالْأَقِطَ وَالسَّمْنَ فَقَالَ الْمُسْلِمُونَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُهُ قَالُوا إِنْ حَجَبَهَا فَهِيَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَإِنْ لَمْ يَحْجُبْهَا فَهِيَ مِمَّا مَلَكَتْ يَمِينُهُ فَلَمَّا ارْتَحَلَ وَطَّأَ لَهَا خَلْفَهُ وَمَدَّ الْحِجَابَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபருக்கும், மதீனாவுக்கும் இடையில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வலீமா – மணவிருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (மக்களுக்கு விருந்தளித்தார்கள்.)

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: புகாரி 4213

இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பிறகு விருந்தளித்துள்ளதால், திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் விருந்தளிப்பது தான் நபிவழி என்று சிலர் வாதிடுகின்றனர். இது தவறான புரிதலாகும்.

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ فَقَالَ سَعْدُ بْنُ الرَّبِيعِ إِنِّي أَكْثَرُ الْأَنْصَارِ مَالًا فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي وَانْظُرْ أَيَّ زَوْجَتَيَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا فَإِذَا حَلَّتْ تَزَوَّجْتَهَا قَالَ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ لَا حَاجَةَ لِي فِي ذَلِكَ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ قَالَ سُوقُ قَيْنُقَاعٍ قَالَ فَغَدَا إِلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ فَأَتَى بِأَقِطٍ وَسَمْنٍ قَالَ ثُمَّ تَابَعَ الْغُدُوَّ فَمَا لَبِثَ أَنْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ عَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجْتَ قَالَ نَعَمْ قَالَ وَمَنْ قَالَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ قَالَ كَمْ سُقْتَ قَالَ زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, அவர்களையும், ஸஅது பின் ரபீவு (ரலி) அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி) வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் (ரலி)யிடம், எனது செல்வத்தைச் சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். என் மனைவியரில் ஒருத்தியை (விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன் என்று கூறினார். அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி), உமது குடும்பத்திலும், செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள் என்று கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும், நெய்யையும் இலாபமாகப் பெற்று தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்ன விசேஷம்? என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்? என்று கேட்டார்கள். ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம் என்று பதில் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2048, 2049

ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொண்டேன் என்று கூறிய நபித்தோழரிடம், நீ இல்லறத்தில் ஈடுபட்டு விட்டாயா? என்று கேட்டு விட்டு விருந்தளிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் மணவிருந்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இல்லை என்பதை இதிலிருந்து அறிய முடியும்.

திருமணமான பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருவதால் தாம்பத்தியத்தில் நிச்சயம் ஈடுபட்டிருப்பார். அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டாயா என்று கெட்கவில்லை என்று சிலர் கூறும் பதில் ஏற்கத்தக்கதல்ல.

மாதவிடாய் நேரத்தில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்பதை நாம் அறிவோம். ஒருவர் திருமணம் செய்த நேரத்தில் அவரது மனைவிக்கு மாதவிடாயாக இருந்தால் அப்போது இல்லறத்தில் அவர் ஈடுபட்டிருக்க மாட்டார். அல்லது இருவரிடமோ இருவரில் ஒருவரிடமோ இல்லறம் பற்றிய பய உணர்வு காரணமாகவும் சிலர் உடனடியாக இல்லறத்தில் ஈடுபட முடியாத நிலை இருக்கும். இப்படி இருந்தும் திருமணம் முடித்த செய்தியைக் கேள்விப்பட்ட உடன் தம்பத்தியம் நடந்ததா என விசாரிக்காமல் வலீமா விருந்தளிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிடுகிறார்கள்.

எனவே ஒருவர் மணம் முடித்துக் கொண்ட அன்றோ, அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ எப்போது வேண்டுமானாலும் விருந்தளிக்கலாம்.

ஆனால் அதே சமயம், திருமணம் நடப்பதற்கு முன்னரே சிலர் விருந்து வைக்கின்றனர். விருந்து முடிந்த பின்னர் திருமண ஒப்பந்தம் செய்கின்றனர். இவ்வாறு திருமணமே நடக்காத நிலையில் வைக்கப்படும் விருந்து, மணவிருந்தாக ஆகாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15.08.2009. 10:12 AM


No comments:

Post a Comment