பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, March 16, 2011

குளிப்பது எப்போது கடமையாகும்

குளிப்பது எப்போது கடமையாகும்



விந்து வெளிப்பட்டால் தான் குளிக்க வேண்டுமா? அல்லது இச்சை நீர் வெளிப்பட்டாலே குளிப்பது கடமையா


ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ - இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர விந்து அல்ல. மதீ எனப்படும் இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகாது. மாறாக உளூ முறிந்துவிடும். இது வெளிப்பட்டால் உறுப்பை கழுவிவிட்டு உளூச் செய்து கொள்ள வேண்டும்.

அதிக அளவில் "மதீ' வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாத் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். "அதற்காக உளூச் செய்ய வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: புகாரீ (132), முஸ்லிம் (458)

"ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி 269 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

எனவே விந்து வெளிப்பட்டால் அல்லது உடலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டாலும் வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமையாகும். இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகாது

கோவில் சொத்தை விலைக்கு வாங்கலாமா?


கோயில் நிலம் விலைக்கு வந்தால் அதை நாம் வாங்குவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கும் வியாபாரமாகவே இது உள்ளது. இந்த நிலத்தை விலைக்கு வாங்குவதால் மார்க்க சட்ட திட்டங்களை புறக்கணிக்கும் நிலை இல்லை. எனவே இதை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால் அந்த வியாபாரம் அதன் உரிமையாளர்களால் முறைப்படி செய்யப்பட வேண்டும். நிர்வாகியாக இருப்பவர் கள்ளத்தனமாக விற்பனைச் செய்து அதைச் சுருட்ட நினைத்தால் அந்த வியாபாரம் மார்க்கத்தில் கூடாது. அது போல் ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்தை பத்தாயிரத்துக்கு வாங்குவதற்காக அதன் நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்து வாங்கினால் அது குற்றமாகும். இஸ்லாத்தில் வியாபாரத்துக்கு கூறப்பட்ட அனைத்து விதிகளும் பொருந்தினால் மட்டும் வாங்கலாம்

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா


ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா?


ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.

ஆனால் குர்ஆன் வசனங்கள் இக்கருத்தைக் கூறுவதாக சிலர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொண்டு இந்தத் தவறை செய்து வருகின்றனர்.

الزَّانِي لَا يَنكِحُ إلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ(3)24

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் (24 : 3)

ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுடைய மனைவியும் விபச்சாரம் செய்வாள் என்று கூறுவோர் இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஆனால் சற்று சிந்தித்தால் இந்த வசனம் இவர்கள் கூறுகின்ற கருத்தைத் தரவில்லை என்பதை அறியலாம்.

ஒரு விபச்சாரனுக்கு ஒழுக்கமுள்ள பெண் மனைவியாகக் கூடாது. அதே போன்று ஒரு விபச்சாரிக்கு ஒழுக்கமுள்ள ஆண் கணவனாகக் கூடாது. மாறாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கமுள்ளவரையே தன்னுடைய வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ய வேண்டும்.

விபச்சாரனுக்கு அவனைப் போன்று விபச்சாரம் செய்யும் பெண்ணே மனைவியாகத் தகுதியானவள். ஒரு விபச்சாரிக்கு அவளைப் போன்று விபச்சாரம் செய்யும் ஆணே கணவனாகத் தகுதியானவன் என்ற கருத்தையே இவ்வசனம் கூறுகின்றது.

அதாவது திருமணம் செய்ய நினைப்பவர் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலே இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.

இவ்வசனத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் இக்கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

பின்வரும் வசனமும் இதே கருத்தை எடுத்துரைக்கின்றது.

الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ أُوْلَئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ(26)24

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (தகுதியானோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). அவர்கள் (நயவஞ்சகர்கள்) கூறுவதை விட்டும் இவர்கள் (நல்லோர்) நீங்கியவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

அல்குர்ஆன் (24 : 26)

மேலும் இந்த வசனம் இறங்கியதற்கான காரணம் ஹதீஸில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபித்தோழர் ஒருவர் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்ணை மணமுடிக்க நாடிய போது அதைத் தடை செய்து இவ்வசனம் இறங்கியது.

1755حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ مَرْثَدَ بْنَ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيَّ كَانَ يَحْمِلُ الْأَسَارَى بِمَكَّةَ وَكَانَ بِمَكَّةَ بَغِيٌّ يُقَالُ لَهَا عَنَاقُ وَكَانَتْ صَدِيقَتَهُ قَالَ جِئْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْكِحُ عَنَاقَ قَالَ فَسَكَتَ عَنِّي فَنَزَلَتْ وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ فَدَعَانِي فَقَرَأَهَا عَلَيَّ وَقَالَ لَا تَنْكِحْهَا رواه أبو داود

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

மர்ஸத் பின் அபீ மர்ஸத் அல்ஃகனவீ என்பவர் மக்காவிலிருந்து (மதீனாவிற்கு) கைதிகளை அழைத்து வந்தார். மக்காவில் அனாக் என்று கூறப்படும் ஒரு விபச்சாரி இவருக்குத் தோழியாக இருந்தாள். அவர் கூறுகிறார் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே அனாக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள் எனும் (24:3 வது) வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து இதை என்னிடம் ஓதிக்காட்டி அவளை மண முடிக்காதே என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் (1755)

ஆணோ பெண்ணோ வாழ்க்கைத் துணை தேடும் போது விபச்சாரம் செய்யாத நல்லொழுக்கமானவரையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தான் இது கூறுகிறது.

அதே நேரத்தில் விபச்சாரம் செய்த ஆணோ பெண்ணோ தனது தவறை உணர்ந்து திருந்தி ஒழுக்கமாக வாழ்ந்தால் அப்போது விபச்சாரம் செய்தவர் என்ற பட்டியலில் சேர மாட்டார். பாவத்தில் இருந்து திருந்தியவர் பாவம் செய்யாதவரைப் போல் கருதப்படுவார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விபச்சாரம் செய்யும் ஒருவனுக்கு விபச்சாரியே மனைவியாகக் கிடைப்பாள் என்ற கருத்து நடைமுறைக்குப் பொருந்தாத பொய்யான கருத்தாகும். ஏனென்றால் கணவன் ஒழுக்கம் கெட்டவனாக இருந்தும் கற்பைப் பேணி ஒழுக்கத்துடன் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர். இதே போன்று மனைவி ஒழுக்கம் கெட்டவளாக இருந்தும் ஒழுக்கத்துடன் வாழும் நல்ல கணவன்மார்களும் இருக்கின்றனர்.

இப்போது கணவன் ஒழுக்கம் கெட்டவன் என்பதால் அவனுடைய மனைவியும் ஒழுக்கம் கெட்டவள் என்றும் மனைவி ஒழுக்கம் கெட்டவள் என்பதால் அவளுடைய கணவனும் ஒழுக்கம் கெட்டவன் என்றும் முடிவு செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதும் நல்லொழுக்கமுள்ளவர்களின் மீது வீண் பழி சுமத்துவதாகும்.

எனவே யாருக்கு யார் மனைவியாக அமைவார் என்பதைப் பற்றி இவ்வசனம் பேசவில்லை. மாறாக ஒருவர் தனக்கு வாழ்க்கைத் துணையாக எத்தகையவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டத்தைப் பற்றியே பேசுகின்றது.

ஜகாத் கொடுத்த பணத்தில் இருந்து நகை வாங்கினால் அதற்கும் ஜகாத் உண்டா

ஜகாத் கொடுத்த பணத்தில் இருந்து நகை வாங்கினால் அதற்கும் ஜகாத் உண்டா


நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?


நமது செல்வங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுது கொள்ளுங்கள். உங்கள் மாதம் (ரமலானில்) நோன்பு வையுங்கள். உங்கள் செல்வங்களுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்குக் கட்டுப்படுங்கள். உங்கள் இறைவனுடைய சொர்க்கத்தில் நுழைவீர்கள்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : திர்மிதீ (559)

நகைக்கு ஸகாத் கொடுத்து விட்டால் அந்த செல்வத்துக்குரிய கடமை நிறைவேறி விடுகின்றது. இதன் பிறகு அந்த நகையை விற்று வேறு பொருள் வாங்கினால் பொருள் மாறுபட்டாலும் செல்வம் என்ற அடிப்படையில் இதற்குரிய கடமை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. இப்போது அதே செல்வம் தான் வேறு வடிவமாக மாற்றப்பட்டுள்ளது.

எனவே வாங்கப்பட்ட புதிய பொருளுக்கு ஸகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

உங்களிடம் உள்ள பணத்துக்கு ஜகாத் கொடுத்து விட்டு அந்தப்பணத்தில் இருந்து வீடோ வேறு சொத்தோ வாங்கினால் அப்போதும் இது தான் நிலை.

அபுல் காசிம் என்று பெயர் வைக்கலாமா ??

அபுல் காசிம் என்று பெயர் வைக்கலாமா ??


அபுல் காசிம் என்றால் காசிமின் தந்தை என்பது பொருள். நபிகள் நாய்கம் ஸல் அவர்களுக்கு காசிம் என்று மகன் பிறந்ததால் அவர்கள் அபுல் காசிம் காசிமின் தந்தை என்று அழைக்கப்பட்டார்கள்.

காசிம் என்று மகனைப் பெற்றவர்கள் இப்பெயரை புணைப் பெயராகச் சூட்டிக் கொள்ளலாம்.

ஆனால் குழந்தையாகப் பிறக்கும் போது யாருக்கும் பிள்ளை இருக்க மாட்டார்கள். எனவே காசிமின் தந்தை என்பது போல் பெயர் வைப்பது பொருளற்றதாகும். ஆனால் தடுக்கப்பட்டதாக ஆகாது. அபூ பக்ர், அபூ தாலிப் அபூ தல்ஹா, அபூ மூஸா என்றெல்லாம் பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது. பக்ரின் தந்தை, தாலிபின் தந்தை, தல்ஹாவின் தந்தை, மூஸாவின் தந்தை என்றெல்லாம் பெயர் வைப்பது அர்த்தமற்றதாகும். எந்தக் குழாந்தையும் யாருக்கும் தந்தையாக இருக்க முடியாது. இது போன்ற பெயர்கள் ஒருவர் தந்தையாக ஆன பிறகு சூட்டிக் கொள்ள வேண்டிய செல்லப் பெயர்களாகும்.

ஆனாலும் பொருளைக் கவனத்தில் கொள்ளாமல் அபூபக்ர் போல் அபுல் காசிம் எனும் நபிகள் நாயகம் போல் நல்லடியாராக ஆகட்டும் என்ற கருத்தில் இப்பெயர்களை எடுத்துக் கொண்டால் அப்போது பொருளற்றதாக ஆகாது.

ஆனால் அபுல் காசிம் என்ற பெயரை யாரும் சூட்ட வேண்டாம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்ததாக சில ஹதீஸ்கள் உள்ளன. அது பொதுவான தடை அல்ல. மாறாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உயிருடன் வாழும் போது அவ்வாறு சூட்டக்கூடாது என்பதற்காகவே அந்தத் தடை விதிக்கப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அபுல் காசிம் என்ற பெயரை மற்றவர்களும் வைத்திருந்தனர். சிலர் நபியவர்களுக்கு அருகில் நின்று கொண்டு நபியவர்களை அழைப்பது போன்று மற்றவர்களை அழைத்தனர். இதன் காரணமாக தனது குறிப்புப் பெயரான அபுல் காசிம் என்பதை மற்றவர்கள் சூட்டக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை விதித்தார்கள்.

ஓருவர் அபுல்காசிமே என்று பகீஃ என்ற இடத்தில் இருந்த ஓரு மனிதரை அழைத்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே நான் உங்களை நாடவில்லை. இந்த நபரைத் தான் அழைத்தேன் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனது பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். எனது குறிப்புப் பெயரை சூட்டாதீர்கள் என்று கூறினார்கள்.

நூல் : புஹாரி 2120, 2121, 3537
அறிவிப்பாளர் : அனஸ்

இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்முடன் இல்லாத காரணத்தால் இந்தத் தடை இந்த காலத்திற்குப் பொருந்தாது. எனவே தற்காலத்தில் ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை வைத்துக் கொண்டால் அது தவறல்ல

சில தொழுகைகளில் சப்தமில்லாமல் ஓதுவது??

சில தொழுகைகளில் சப்தமில்லாமல் ஓதுவது??



சில ரக் அத்களில் சப்தமாகவும் சில ரக் அத்களில் சப்தமில்லாமலும் ஓதி இமாம் தொழுவிப்பது ஏன்


ஃபஜர் தொழுகையிலும் மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமிட்டு ஓதுவார். லுஹர் அஸர் தொழுகைகளிலும் மஃக்ரிப் தொழுகையின் மூன்றாவது ரக்அத்திலும் இஷாத் தொழுகையின் பிந்திய இரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமின்றி ஓதி தொழ வைப்பார்.

இவ்வாறு சில தொழுகையில் சப்தமிட்டும் சில தொழுகையில் சப்தமின்றியும் ஓதுவதற்கு குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ காரணம் சொல்லப்படவில்லை. பொதுவாக வணக்கம் தொடர்பான காரியங்களில் காரணங்கள் கூற முடியாது. மார்க்கம் நமக்கு கற்றுக் கொடுத்தவாறு அவற்றை அப்படியே செய்வதே நமது கடமை.

சிலர் தங்களுடைய சுய சிந்தனையைப் பயன்படுத்தி இவற்றுக்கு பலவிதமான காரணங்களைக் கூற முயலுகின்றனர். இவர்கள் அளிக்கும் விளக்கம் எதுவும் ஏற்புடையதல்ல.



இந்த வீடியோவையும் பார்க்கவும்
(http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/sabthamakavum_sabthamillamalum_othuthal/)

இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்க்கமா

இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்க்கமா



இஸ்லாத்தைப் போன்று மற்ற மதங்களும் முழுமை பெற்றவை தானே?


காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அது போல் ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மதம் முழுமையானது என்று தான் கூறுவார்கள். நம்புவார்கள்.

ஆனால் முழுமையான மார்க்கம் என்று நாம் நம்பினால் மட்டும் அது முழுமையான மார்க்கமாக ஆகாது. மாறாக அது முழுமையானது என்பதற்கான ஆதாரங்களையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்.

ஒரு மார்க்கம் ஒரு காலத்தில் பொருந்தி பின்னர் பொருந்தாமல் போனால் அது முழுமை பெற்ற மார்க்கம் எனக் கூற முடியாது. இஸ்லாத்தைப் பொருத்த வரை அதன் கொள்கையோ கோட்பாடோ சட்டதிட்டங்களோ இன்றைக்கோ அல்லது இதற்கு முன்னரோ இதற்குப் பின்னரோ பொருந்தாமல் உள்ளது என்று ஆதாரத்துடன் கூற முடியாது. ஆனால் மற்ற மதங்களின் சட்ட திட்டங்களில் ஏராளமானவை அந்த மதத்தின் உறுப்பினர்களால் மாற்றப்படுகின்றனர். காலத்திற்கு ஒவ்வாதவை எனக் கூறி தூக்கி வீசப்படுகின்றன. எனவே மற்ற மதங்களை முழுமையானவை எனக் கூற முடியாது.

ஒரு மதம் முழுமையான மதம் என்றால் அந்த மதத்தைப் பின்பற்றுவோர் சந்திக்கும் எல்லா பிரச்சனைகள் பற்றியும் அந்த மதத்தில் தீர்வு இருக்க வேண்டும். எதைப் பற்றியும் அந்த மதம் ஒரு கருத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் வெறும் கடவுள் வழிபாட்டை மட்டும் பேசி விட்டு வியாபாரம் கொடுக்கல் வாங்கல் அரசியல் நவீன கண்டுபிடிப்புகள் போன்றவை குறித்து ஒரு மதம் மவுனம் சாதித்தால் அதை முழுமையான மார்க்கம் எனக் கூற முடியாது.

இஸ்லாத்தில் நோ கமாண்ட்ஸ் என்று சொல்லும் நிலை ஏற்படவே செய்யாது, எதைப் பற்றி கேட்டாலும் அது கூடும் என்றோ கூடாது என்றோ இஸ்லாத்துக்கு கருத்து இருக்கும். மற்ற மதங்களில் இதை காண முடியாது.

மேலும் முழுமை பெற்ற மார்க்கம் என்றால் மனித குலத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் அதில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே ஆன்மிக நம்பிக்கைகள் மட்டும் உள்ள மதம் முழுமை பெற்ற மதமாக ஆக முடியாது. மாறாக மனித குலத்துக்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களும் அதில் கூறப்பட்டிருக்க வேண்டும்.

சொர்க்கம் நரகம் போன்ற நம்பிக்கை தொடர்பான விஷயங்களை இஸ்லாம் பேசுவதுடன் இந்த உலகத்தில் ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் சட்டத்திட்டங்களையும் கற்றுத் தருகின்றது.

உதாரணமாக ஒரு மனிதன் எப்படி வியாபாரம் செய்ய வேண்டும்? எவ்வாறு குடும்பம் நடத்த வேண்டும்? குடும்பத்தில் கணவன் ஆற்ற வேண்டிய கடமை. மனைவி ஆற்ற வேண்டிய கடமை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆற்ற வேண்டிய கடமை. பிள்ளைகள் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை. கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது? அண்டைவீட்டாருடன் நடந்து கொள்ள வேண்டிய முறை? சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய கடமை? இப்படி ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் வாழ்வில் சந்தக்கின்ற ஒவ்வொரு பிரச்சனைகளையும் எவ்வாறு அறிவார்ந்த முறையில் எதிர்கொள்வது? என்பதை இஸ்லாம் மனித குலத்துக்கு வழிகாட்டுகிறது.

இஸ்லாம் உலகுக்குக் கற்றுக் கொடுக்கும் இது போன்ற அற்புதமான வழிகாட்டல்கள் வாழ்க்கை நெறி முறைகள் மற்ற மதங்களில் இல்லை. இந்த வகையில் சிந்தித்துப் பார்த்தாலும் இஸ்லாம் மட்டுமே முழுமை பெற்ற மார்க்கம் என்று கூற முடியும்.

முழுமையான மார்க்கம் என்றால் அதில் யாரும் எதனையும் சேர்க்கவோ நீக்கவோ முடியாத நிலையில் இருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ஒரு மதத்தில் சேர்க்க முடியும் என்றால் அது எப்படி முழுமையாக இருக்க முடியும்? முழுமையாக இல்லாத காரணத்தால் தானே அதில் மற்றவர்கள் தமது கருத்தைச் சேர்க்க முடிகிறது!

எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

(அல்குர்ஆன் 5:3)