பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, March 16, 2011

இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன


இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன ??


சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக் காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 16:125)

மேற்கண்ட வசனம் சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு விவாதக் களம் காண்பதும் ஒரு வழிமுறை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

இங்கு அழகிய முறையில் விவாதம் செய்வீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டுகின்றான்.

அல்லாஹ் கூறும் அழகிய விவாதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும் போது அசத்தியவாதிகளிடமிருந்து இரண்டு விதமான வெற்றி கிடைக்கும். "ஒன்று அவர்கள் வந்து தோற்று ஓடி அசடு வழிவது! இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது! இந்த இரு கட்டங்களிலுமே சத்தியமே வெற்றி பெறுகின்றது.

பல நபிமார்கள் விவாத முறையில் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்து அசத்தியவாதிகளை வாயடைக்கச் செய்துள்ளனர். இதற்குச் சிறந்த உதாரணமாக நம்முடைய தந்தை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நாம் கூறலாம். சிலைகளை வழிபடக்கூடிய மக்களிடம் அவர்களுடைய பிரச்சாரம் முழுவதுமே விவாதப் போங்கில் தான் அமைந்திருந்தது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்

திருக்குர்ஆன்2:258)

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார். "என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?'' என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக

திருக்குர்ஆன்(19:41,42)

"இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?'' என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், "இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து "நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்'' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, "இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!'' என்றனர். "அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராதவற்றையும் வணங்குகின்றீர்களா?'' என்று கேட்டார். "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங் குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?'' என்று கூறினார்.

திருக்குர்ஆன் (21:62-67)

மேற்கண்ட வசனங்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் நாட்டை ஆளும் அரசனிடமும், தன் தந்தையிடமும், சமுதாய மக்களிடமும் விவாதத்தின் மூலமும், விவாதப் போங்கிலும் சத்தியத்தை எடுத்துரைத்ததைப் பறைசாற்றுகின்றன.

நபி நூஹ் (அலை) அவர்கள் தம்முடைய சமுதாய மக்களிடம் அதிகமான அளவில் விவாதம் செய்துள்ளார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் ஆணித்தரமான வாதங்களுக்கு அவர்களால் பதிலளிக்க இயலாத போது,

"நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!'' என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன்(11:32)

திருக்குர்ஆனில் பல வசனங்கள் இறைமறுப்பாளர்களுடன் விவாதம் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இறைமறுப்பாளர்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் அல்லாஹ் அறிவிப்பூர்வமாகவும் மறுப்புத் தெரிவிக்க முடியாத வகையில் ஆணித்தரமாகவும் பதிலளிக்கின்றான்.

இந்த மார்க்கத்தில் விவாதத்திற்கு வேலையில்லை என்றால் எதிரிகள் எழுப்பிய விமர்சனங்களுக்கு இவ்வாறு இறைவன் மறுப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இறைவன் அவர்கள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான விளக்கத்தை அளிக்கின்றான். எனவே இஸ்லாம் குருட்டு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

இறை மறுப்பாளர்களுடன் விவாதம் செய்வது உறுதியான நம்பிக்கைக்கு எதிரான காரியமல்ல. மாறாக உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இஸ்லாத்தை உறுதியாக நம்பக்கூடியவர்களே அதற்காக விவாதம் செய்ய முன்வருவார்கள்.

இந்த விவாதங்களால் நம்முடன் விவாதம் செய்யக்கூடிய இறை மறுப்பாளர்கள் நேர்வழி பெறாவிட்டாலும் விவாதத்தைப் பார்க்கின்ற பலர் நேர்வழி அடையும் நிலை ஏற்படுகின்றது. இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு இந்த விவாதங்களின் மூலம் கொள்கை உறுதியும் கொள்கைத் தெளிவும் முன்பை விட அதிகமாகின்றது.

எனவே தான் நாம் இறை மறுப்பாளர்களுடன் விவாதம் நடத்தினோம். இறைவன் அருளால் அந்த விவாதத்தில் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதும் குர்ஆன் இறைவேதம் என்பதும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகும் விதத்தில் அல்லாஹ் நமக்கு வெற்றியளித்தான். புகழனைத்தும் அல்லாஹ்விற்கே.



No comments:

Post a Comment