அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்
“அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இல்லாத ஹதீஸாக இருந்தாலும் அதற்குச் சரியான எந்த ஒரு விளக்கமும் கொடுக்க இயலாத வகையில் அது குர்ஆனுடன் மோதுமானால் அந்த ஹதீஸை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்ற அடிப்படையை நாம் கூறி வருகிறோம். இதன் அடிப்படையில் புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள மிகச் சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதால் அதை ஏற்கக் கூடாது என்று எழுதி வருகிறோம்.
இதை அங்கீகரிக்காதவர்கள் நாம் கூறிய இந்த அடிப்படை, யாரும் கூறாத ஒன்று; ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதியே இல்லை; மனோ இச்சைப்படி ஹதீஸை மறுப்பதற்காக இந்த வழிகளைத் திறந்து விடுகிறார்கள் என்று கூறி தங்களது அறியாமையை வெளிப்படுத்தினார்கள்.
விரலை ஒடித்தாலும் ஹதீஸைச் செயல்படுத்துவோம்; அவ்ஸில் தூக்கிப் போட்டாலும் ஹதீஸைச் செயல் படுத்துவோம்; தாய், தந்தையர் பேசாவிட்டாலும் பரவாயில்லை ஹதீஸ் தான் எங்களுக்கு முக்கியம் என்று கூறி நிரூபித்துக் காட்டிய இந்த ஜமாஅத்தைப் பார்த்து ஹதீஸை மறுக்கிறார்கள் என்ற அவதூறு இவர்களால் கிளப்பி விடப்பட்டுள்ளது. எனவே இவர்கள் சொல்வதை போன்று ஹதீஸ் கலையில் இவ்விதி இல்லையா என்பதை ஆராய்வோம்.
ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?
குர்ஆனைப் படிக்காத ஒருவர், “குர்ஆனில் அல்ஹம்து சூரா இல்லை’ என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் “அல்ஹம்து சூரா குர்ஆனில் உள்ளது தான்’ என்று சொல்பவர்களைப் பார்த்து, “யாரும் சொல்லாத கருத்தை இவர்கள் கூறுகிறார்கள்’ என்று பேசினால் எவ்வளவு அறியாமையோ அது போல குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்து ஹதீஸ் கலையில் யாரும் கூறாத கருத்து என்று இவர்கள் கூறுவதும் அறியாமை தான்.
இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததால் ஹதீஸ் கலையில் இல்லை என்று ஆகிவிடுமா? ஒன்று, இரண்டு என்றில்லாமல் அதிகமான ஹதீஸ் கலை நூற்களில் இவ்விதி இடம் பெற்றிருக்கிறது. ஹதீஸ் கலைக்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் நூற்களில் இவ்விதி இடம்பெற்றும் கூட இவர்கள் ஏன் இப்படி செத்துப் போன வாதங்களை வைக்கிறார்கள் என்று புரியவில்லை. தெரிந்து கொண்டே மறைக்கிறார்களா? அல்லது அறியாமை இருளில் சிக்கித் தவிக்கிறார்களா?
🍁இமாம் ஷாஃபியின் கூற்று🍁
“ஒரு ஹதீஸ் நம்பத்தன்மையைப் பெறுவதற்கான நிபந்தனைகள் முழுமையாக இருந்தால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா?” இமாம் ஷாஃபி அவர்கள், “கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும்” என்று கூறியுள்ளார்கள்.
நூல்: அல்மஹ்சூல், பாகம்: 4, பக்கம்: 438
🍁இமாம் குர்துபீயின் கூற்று🍁
ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.
நூல்: தஃப்சீருல் குர்துபீ, பாகம்: 12, பக்கம்: 213
🍁இமாம் ஜுர்ஜானியின் கூற்று🍁
ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.
நூல்: அத்தஃரீஃபாத், பாகம்: 1, பக்கம்: 113
🍁இமாம் சுயூத்தியின் கூற்று🍁
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும், இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்துவராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.
நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276
🍁இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று🍁
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு ஹதீஸ் முரண்படுவதாகும்.
நூல்: அல்மனாருல் முனீஃப், பக்கம்: 80
இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி: குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு ஹதீஸ் முரண்படுவது, அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.
நூல்: நக்துல் மன்கூல், பாகம்: 2, பக்கம்: 218
🍁இமாம் அபூபக்கர் சர்ஹஸீயின் கூற்று🍁
ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது.
நூல்: உசூலுஸ்ஸர்ஹசீ, பாகம்: 1, பக்கம்: 364
இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை (நபி (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும்.
நூல்: கஷ்ஃபுல் அஸ்ரார், பாகம்: 4, பக்கம்: 492
(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத செய்தி என்று முடிவு செய்யும்) முதல் வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும்.
நூல்: ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ், பாகம்: 2, பக்கம்: 368
🍁இமாம் இப்னு ஜவ்ஸியின் கூற்று🍁
“சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவு செய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸைக் கண்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று புரிந்து கொள்” என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார்.
நூல்: தர்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 277
எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிலிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக் கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி.
நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 275
🍁அர்ரபீஉ பின் ஹய்ஸமின் கூற்று🍁
சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பகலின் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்து கொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்து கொள்ளலாம்.
நூல்: மஃரிஃபத்துல் உலூமில் ஹதீஸ், பாகம்: 1, பக்கம்: 62
🍁விதியை செயல்படுத்திய மேதைகள்🍁
குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்கலாகாது என்ற இந்த விதி அறிஞர்களின் ஏடுகளில் எழுத்தளவில் மட்டும் உள்ளதல்ல. அறிவிப்பாளர் தொடரை அலசிப் பார்த்து ஹதீஸின் தரத்தை முடிவு செய்யும் இந்த அறிவு ஜீவிகள் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாமல் இருந்து ஆனால் செய்தியில் குர்ஆனிற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்ட ஹதீஸாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
புகாரி, முஸ்லிம் போன்ற சிறந்த நூற்களில் அந்த ஹதீஸ் இடம் பெற்றிருந்தாலும் செய்தியில் தவறு வருகின்ற போது அறிவிப்பாளர் தொடரை இந்த நியாயவான்கள் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு நடந்து கொண்ட இந்த இமாம்கள் வழிகேடர்களா? ஹதீஸைப் பாதுகாக்கப் புறப்பட்டவர்களா? அல்லது அழிப்பதற்காகக் கிளம்பியவர்களா?
🍁இமாம் இஸ்மாயீலீ🍁
சஹீஹுல் புகாரிக்கு முஸ்தக்ரஜ் என்று சொல்லப்படும் ஹதீஸ் தொகுப்பு நூலைத் தொகுத்தவர் இஸ்மாயீலீ என்று சொல்லப்படும் அறிஞர். கல்வி மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விரிவுரை தரும் போது இந்த அறிஞரின் கூற்றைப் பல இடங்களில் பதிவு செய்கிறார். புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்குப் பதிலாக இந்த அறிஞரின் கூற்றை இப்னு ஹஜர் எடுத்துக் காட்டாமல் இருந்ததில்லை. இப்படிப்பட்ட அறிஞர் நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கும் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத புகாரியில் இடம் பெற்ற ஒரு ஹதீஸை எப்படிக் குறை காணுகிறார் என்று பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் “நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?” என்று கேட்பார்கள்.
அதற்கு அவர்களின் தந்தை “இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் “இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெது (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது?” என்று கேட்பார்கள்.
அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் “நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன்” என்று பதிலளிப்பான்.
பிறகு “இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள்” என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (3350)
இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கையில் பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்களின் கூற்றைப் பதிவு செய்கிறார்.
இஸ்மாயீலீ அவர்கள் இந்த ஹதீஸின் கருத்தில் சிக்கல் இருப்பதாகக் கருதி இதனுடைய நம்பகத் தன்மையில் குறை கூறியுள்ளார். அவர் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு (பின்வருமாறு) கூறுகிறார்:
அல்லாஹ் வாக்கு மீற மாட்டான் என்று இப்ராஹிம் (அலை) அவர்கள் திட்டமாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும் போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படி எடுத்திருப்பார்கள்? “இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர்” என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாமல் மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
நூல்: ஃபத்ஹுல்பாரீ, பாகம்: 8, பக்கம்: 500
மேற்கண்ட ஹதீஸை அறிஞர்கள் விமர்சிக்கும் போது அதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அவர்கள் பேச்சையே எடுக்கவில்லை. மாறாக அல்லாஹ் வாக்கு மீறுவான் என்று இப்ராஹிம் நபி எண்ணுவது இறைத் தூதரின் தன்மைக்கு மாற்றமானது என்பதனால் இது ஆட்சேபனைக்குரியது என்கின்றனர். மேலும் தனது தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவானவுடன் இப்ராஹிம் தன் தந்தையிடமிருந்து விலகிக் கொண்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸ் அவர்கள் விலகவில்லை; மறுமையிலும் தன் தந்தைக்காக வாதாடுவார்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.
எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்ற அடிப்படையில் நின்று இந்த அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். சொல்லுகின்ற கருத்து நியாயமானதா என்று சிந்திக்காமல் எந்த இமாமாவது இப்படிக் கூறியுள்ளாரா? என்று கேட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் மத்ஹபை நோக்கி வந்த வழியே செல்லக் கூடியவர்களே! இப்போது உங்கள் உள்ளம் குளிர்ந்து விட்டதா?
🍁இமாம் மாலிக் மற்றும் குர்துபீயின் வழிமுறை🍁
கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (1854)
இந்த ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் நிராகரித்ததை குர்துபீ அவர்கள் அங்கீகரித்து பின்வருமாறு கூறுகிறார்கள்.
குர்துபீ கூறுகிறார்: மாலிக் அவர்கள் கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
நூல்: பத்ஹுல்பாரீ, பாகம்: 4, பக்கம்: 70
ஹஜ் செய்வதற்கு சக்தி பெற்றவர்களுக்குத் தான் ஹஜ் கடமை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸில் சம்பந்தப்பட்டப் பெண்மணி வாகனத்தில் கூட உட்கார இயலாத வயதான தன் தந்தைக்கு ஹஜ் கடமையானதாகக் கூறியுள்ளார். இதனால் இமாம் மாலிக் அவர்கள் இந்த ஹதீஸை பின் தள்ளிவிட்டு குர்ஆனுக்கு முன்னுரிமை தருகிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானது என்பதில் நமக்கு மறுப்பில்றைலை, குர்ஆனுக்கு முரண்படாத வகையில் இதற்கு நாம் விளக்கம் தர முடியும். இளமையில் ஒருவருக்கு ஹஜ் கடறைமையாகி அதை நிறைவேற்றாமலே தள்ளாத வயதை அறைடைந்தால் அவர் மீது இருந்த ஹஜ் செய்யும் கடமை நீங்காது என்பதை மாலிக் இமாம் கவனிக்கத் தவறி விட்டார்கள்.
குர்ஆனுக்கு நேரடியாக ஒரு ஹதீஸ் முரண்பட்டால் குர்ஆனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நம்முடைய அடிப்படைக் கொள்கை தான் மாலிக் இமாம் அவர்களின் கொள்கையாகவும் இருந்தது என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்
அப்படி முன்னுரிமை வழங்குவது முழுக்க முழுக்க சரி தான் என்று இமாம் குர்துபீ அவர்கள் ஒப்புதல் தருகிறார்கள். இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரின் மீது கூட குறை கூற முடியாது. அனைவரும் பலரால் சிலாகித்துச் சொல்லப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறி பின்தள்ளுவதால் ஹதீஸின் மீது அவருக்கு அக்கறை இல்லை என்று பொருளா?
🍁இமாம் இப்னு தைமியாவின் வழிமுறை🍁
இப்னு தைமியா அவர்கள் அனைவராலும் போற்றப்படும் மிகச் சிறந்த அறிஞர். இந்த அறிஞர் நம்மையெல்லாம் மிஞ்சுகின்ற வகையில் குர்ஆனிற்கு முரண்பட்டால் ஹதீஸை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் நின்று ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களை பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசி படைப்பாக ஆதமைப் படைத்தான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4997)
படைப்பின் துவக்கம் சனிக்கிழமையில் இருந்து அதன் இறுதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாகி விடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் குறை உள்ளதென நிரூபித்துள்ளார்கள்.
நூல்: மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா, பாகம்: 4, பக்கம்: 34
வானம் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாக திருமறைக் குர்ஆன் சொல்லும் போது இந்த ஹதீஸ் ஏழு நாட்களில் படைத்ததாகக் கூறுகிறது. எனவே இது ஒரு குறை. இது அல்லாமல் அறிவிப்பாளர் தொடரிலும் குறை உள்ளது என்பதே இப்னு தைமியா அவர்களுடைய கூற்றின் சாராம்சம். இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸ் குறை காணப்பட்டுள்ளது என்ற வார்த்தை இதுவும் குறை கூறுவதற்குரிய ஒரு வழி முறை தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
நபித்தோழர்களைத் திட்டுகின்ற ராஃபிளா கூட்டத்தைச் சார்ந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னிப்பை ஏற்க மாட்டான் என்பதற்குப் பின்வரும் ஹதீஸை ஒரு கூட்டம் சான்றாகக் காட்டுகிறது.
எனது தோழர்களைத் திட்டுவது மன்னிக்கப்படாத பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதே அந்த ஹதீஸ். இந்த ஹதீஸை இப்னு தைமியா அவர்கள் இரு கோணங்களில் விமர்சனம் செய்கிறார். அதில் ஒன்று இது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற விதியின் அடிப்படையில் உள்ளது.
இந்த ஹதீஸ் இரு விதங்களில் பொய்யானதாகும். ஒன்று ஹதீஸ் கலை அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி இது பொய்யான செய்தியாகும். இது குர்ஆனிற்கும், சுன்னாவிற்கும், ஏகோபித்த கருத்திற்கும் முரண்படுகிறது. ஏனென்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இரு வசனங்களில் இவ்வாறு கூறுகிறான். “தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான்” (4:48 & 4:116)
மேலும், “தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (39:53) என்றும் கூறுகிறான்.
நூல்: மஜ்மூஉ ஃபதாவா இப்னி தைமியா, பாகம்: 2, பக்கம்: 185
இப்னு தைமியா அவர்கள் அறிவிப்பாளர் தொடரில் குறையுள்ள செய்தியைத் தான் இவ்வாறு அணுகியுள்ளார் என்று கூறி இவ்விதியைப் புறக்கணிக்கக் கூடாது. அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத செய்திகளுக்கும் இவ்விதியை இமாம்கள் பொருத்தியுள்ளார்கள் என்பதை முன்பே பார்த்தோம். உதாரணத்திற்காக இரண்டை மட்டும் கூறியுள்ளோம். இது போன்று ஹதீஸின் கருத்தை வைத்துப் பல செய்திகளை இப்னு தைமியா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.
🍁இமாம் இப்னுல் கய்யுமின் வழிமுறை🍁
ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேலுள்ள ஹதீஸை இப்னு தைமியா அவர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறியதைப் போல இப்னுல் கய்யும் அவர்களும் கூறியுள்ளார்கள். இப்னு தைமியாவை விட ஒரு படி மேலே சென்று “இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கு ஒப்பு” என்று கூறியுள்ளார்.
அல்லாஹ் பூமியை சனிக்கிழமை படைத்தான் என்று அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் தவறு நிகழ்ந்து விட்ட செய்தி இதைப் (இட்டுக்கட்டப்பட்ட செய்தியைப்) போன்றதாகும். இது சஹீஹு முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. ஏனென்றால் வானம் பூமி அவ்விரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றை ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இந்த ஹதீஸ் மொத்தம் ஏழுநாட்களில் படைத்ததாகக் கூறுகிறது.
🍁இமாம் புல்கீனீயின் வழிமுறை🍁
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அவன் தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைப்பான். அவர்கள் நரகத்தில் போடப்படும் போது இன்னும் இருக்கிறதா? என்று மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தனது பாதத்தை வைக்க அது நிரம்பிவிடும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும் போதும் போதும் என்று அது கூறும்.
அறிவிப்பவர்: அபஹுரைரா (ரலி), நூல்: புகாரி (7449)
இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர் அனைவரும் பலரால் புகழ்ந்து சொல்லப்பட்டவர்கள். இவர்களை யாரும் எவ்விதத்திலும் குறை காண முடியாது. மறுமை நாளில் சிலரைப் படைத்து அவர்களை நரகத்திற்குள் அல்லாஹ் கொண்டு செல்வான் என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து சிலர் விளங்குகிறார்கள். குற்றம் புரியாதவர்களை அல்லாஹ் நரகத்திற்குள் செலுத்துவது, “உமது இறைவன் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான்’ (18:49) என்ற குர்ஆன் வசனத்திற்கும் ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு அல்லாஹ் நரகத்தை நிரப்புவான் (38:85) என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கும் மாற்றமாக இந்த ஹதீஸ் இருப்பதினால் சில அறிஞர்கள் இதை மறுத்துள்ளார்கள். இக்கருத்தை இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் பதிவுசெய்துள்ளார்.
இமாம்களில் ஒரு கூட்டத்தினர் இதை மாற்றப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார்கள். “நரகம் இப்லீஸ் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களால் நிரம்பும்’ என்று அல்லாஹ் கூறியிருப்பதை ஆதாரமாக வைத்து இந்தச் செய்தி தவறு என்று இப்னுல்கய்யும் உறுதியாகக் கூறியுள்ளார். இவ்வாறே நமது ஆசிரியர் புல்கீனீ அவர்களும் “உமது இறைவன் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான்’ என்ற அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக வைத்து இந்த அறிவிப்பை மறுத்துள்ளார்.
நூல்: ஃபத்ஹுல்பாரீ, பாகம்: 13, பக்கம்: 437
இந்த அறிஞர்களின் கூற்றை இமாம் அல்பானீ மற்றும் இப்னுல்கய்யும் அவர்களும் அங்கீகரித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அஸ்ஸஹீஹா, பாகம்: 6, பக்கம்: 39
🍁அறிவீனர்களின் வழிமுறையல்ல; அறிஞர்களின் வழிமுறை🍁
இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விளக்கவுரை எழுதியதைப் போல் ஜைனுத்தீன் என்ற இப்னு ரஜப் என்ற அறிஞரும் புகாரிக்கு விளக்கவுரை கொடுத்துள்ளார். அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத திர்மிதி அவர்களால் சஹீஹானது என்று சொல்லப்பட்ட பின்வரும் ஹதீஸை அறிஞர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினால் மறுத்துள்ளார்கள் என்ற தகவலை இப்னு ரஜப் தனது நூலில் பதிவு செய்கிறார்.
நாய் மற்றும் மற்றவைகள் கடந்து செல்வதினால் தொழுகை முறிந்து விடும் என்ற கருத்தில் வரும் ஹதீஸை அறிஞர்கள் மறுக்கிறார்கள். “ஒருவன் மற்றவனின் சுமையை சுமக்க மாட்டான்’ (6:164) என்ற இறைவனது கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
நூல்: ஃபத்ஹுல் பாரீ லிஇப்னி ரஜப், பாகம்: 3, பக்கம்: 342
இக்கட்டுரை ஒரு சுருக்கம் மட்டும் தான். இங்கு குறிப்பிடப்படாத இன்னும் பல தகவல்கள் உள்ளன. வேறு பல கோணங்களிலும் இந்த விமர்சனத்திற்குப் பதில் உள்ளது. தேவை ஏற்பட்டால் அதையும் சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தத் தயாராக உள்ளோம். எல்லாம் வல்ல இறைவன் இந்த உண்மையை உரியவர்களுக்கு உணர வைப்பானாக!
No comments:
Post a Comment