بسم الله الرحمن الرحيم
சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என நம்புவது இணைவைத்தலே!
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை ஏகத்துவமாகும். அல்லாஹ்விற்கு எந்த வகையிலும் அணுவளவு கூட இணை கற்பிக்காதவரே வெற்றி பெற முடியும்.
ஆனால், இஸ்லாத்தின் அடிப்படை கலிமாவிற்கு எதிரான இணைவைப்பு நம்பிக்கையை இஸ்லாத்தின் பெயராலே இன்று இஸ்லாமிய சமுதாயம் கொண்டிருக்கிறது.
அதிலும் தர்கா வழிபாடும் தாயத்தும் இணைவைப்பு என்று ஏற்றுக் கொண்டவர்கள் கூட சூனியம் விஷயத்தில் சூனியம் ஆகியிருப்பதே வேதனைக்குரிய விஷயம்.
தர்கா வழிபாடு எப்படி இணைவைப்போ அதே அடிப்படைதான் சற்றும் குறையாமல் சூனிய நம்பிக்கையிலும் இருக்கிறது.
அவர்கள் எப்படி மரணித்த உடலுக்கு இல்லாத ஆற்றலாக, அடங்கியிருப்பவர் செவியேற்பார் என்றும், எந்த மொழியினால் அழைத்தாலும் எங்கிருந்து அழைத்தாலும் செவியேற்பார் என்றும் நம்பி இறைவனின் ஆற்றலை அதற்கு வழங்குகிறார்களோ அதுபோலத்தான் சூனிய நம்பிக்கையும் உள்ளது.
சூனியக்காரன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு மனிதன், தான் இருக்கின்ற இடத்தில் இருந்தபடியே இன்னொரு மனிதனின் மீது சில மந்திரச் சொற்களால் எவ்வித தொடர்புமின்றி பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புவதே சூனியமாகும்.
இத்தகைய ஆற்றல் எந்தப் படைப்பினத்திற்கும் கிடையாது என்று நம்புவதே ஏகத்துவ நம்பிக்கையாகும்.
ஏனெனில், அல்லாஹ் மட்டும்தான் மனிதர்களுக்கு எவ்வித புறச் சாதனமுமின்றி நன்மையை நாடவும் தீமையை நாடவும் ஆற்றல் படைத்தவன். அவன் ஒரு காரியத்தைச் செய்ய தனது அர்ஷிலிருந்து இறங்கி வரவேண்டும் என்றோ புறச் சாதனங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றோ அவசியம் இல்லை. ஒரு கட்டளை போதும் அவன் நாடிய காரியம் நிறைவேறிவிடும்.
🍁ஆகு என்றால் ஆகிவிடும்🍁
(அல்லாஹ்வே) வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ‘ஆகி’விடும்.
அல்குர்ஆன் 2:117
இவ்வசனத்தில் அல்லாஹ் ஒன்றை செய்ய நாடினால் அதற்கு கட்டளையிடுவான் உடனே அது நடக்கும். அதற்கு எவ்வித புற சாதனமும் அவசியம் இல்லை என்பதை விவரிக்கிறான்.
அடுத்த வசனத்தில் இன்னும் இதை விவரமாக அல்லாஹ் சொல்கிறான்.
🍁 நேரடி தொடர்பின்றி ஆகு என்றால் ஆகுவது அல்லாஹ்வின் ஆற்றலே🍁
“என் இறைவனே! எந்த மனிதனும் என்னைத் தீண்டாத நிலையில் எனக்கு எப்படி மகன் உண்டாக முடியும்?” என்று (மர்யம்) கேட்டார். “அவ்வாறுதான்! அல்லாஹ் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு “ஆகு” என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும்” என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் 3:47
ஒரு மனிதரிடத்தில் ஒரு காரியத்தை நாம் நிகழ்த்த வேண்டும் என்று சொன்னால் அம் மனிதரோடு ஒரு தொடர்பு நமக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் எக்காரியாத்தையும் செய்துவிட முடியாது என்பதை உணர்த்தும் வகையிலேயே மரியம் (அலை) எந்த மனிதரும் தன்னை தீண்டாத நிலையில் எப்படி தனக்கு குழந்தை பிறக்கும் என்று கேட்கிறார்கள்.
அதற்கு இறைவன்; மனிதனுக்கு தான் அது அவசியமே தவிர அல்லாஹ்வாகிய எனக்கு அல்ல என்பதை விவரிக்கும் வகையில் தன் பதிலை கூறுகிறான்.
இதிலிருந்து மிகத் தெளிவாக நாம் புரிந்து கொள்ளலாம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு ஒரு விளைவை ஏற்படுத்துவதாக இருந்தால் அம்மனிதரோடு ஒரு தொடர்பு இருக்க வேண்டும். புறசாதனம் அவசியமாகும். அல்லாஹ் ஒருவனுக்கே எவ்வித தொடர்பும், சாதனமுமின்றி சாதிக்க முடியும்.
இன்னும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் ஏராளமான இறை வசனங்கள் உண்டு.
3:59, 6:73, 16:40, 19:35, 36:81, 82, 40:68
குர்ஆனின் இவ்வசனங்களும் இன்னும் பல வசனங்களும் அல்லாஹ்வின் ஆற்றல் குறித்துப் பேசுகிறது. அல்லாஹ்வுடைய ஆற்றலின் தன்மையை விளக்குகிறது. வானங்கள் பூமியைப் படைப்பது உட்பட அவன் தீர்மானிக்கும் அனைத்துமே ஒரு கட்டளையின் மூலமாகவே நடந்தேறிவிடும்.
புறச் சாதனங்களோ, நேரடித் தொடர்போ ஏதுமின்றி நன்மை, தீமை செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வுக்கே உரியது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இத்தகைய ஆற்றலை சூனியக்காரனுக்கு வழங்குவது இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதில்லையா?
இறைவன் மனிதனுக்கு என்ன ஆற்றல் வழங்கியுள்ளானோ அந்த ஆற்றல் அவனுக்கு இருக்கிறது என்று நம்புவது இயற்கை. அவ்வாறின்றி, இறைவனது ஆற்றலை மனிதனோடு தொடர்புபடுத்துவது எப்படி ஏகத்துவமாயிருக்கும்?
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடித்து வீழ்த்தினான். ஆயுதத்தால் தாக்கினான். அல்லது விஷம், விஷ வாயு போன்ற சாதனங்களால் பாதிப்பை ஏற்படுத்தினான் என்று நம்பினால் அது யதார்த்தம்.
ஆனால், ஒரு மனிதன் ஒரு ஊரில் இருக்கிறான். சூனியக்காரன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவன் வேறொரு ஊரில் இருக்கிறான். இவனிடம் அம்மனிதனின் தலை முடி அல்லது அவன் தொடர்பான ஏதேனும் பொருளை வழங்கினால் அவன் அதன் மூலம் மந்திரங்கள் சொல்லி பாதிப்பை, தான் இருக்கின்ற இடத்திலிருந்தே அந்த மனிதனுக்கு ஏற்படுத்துவான் என்று நம்பினால் இது மனித ஆற்றலா?
வெளியூர் என்று அவ்வளவு வேண்டாம். கைக்கு எட்டும் தூரத்தில் சூனியகாரணாக இருக்கும் மனிதனுக்கு முன்னால் ஒருவன் நிற்கிறான். இவன் அவனை நேரடியாகவோ ஆயுதங்களாலோ விஷத்தினாலோ அன்றி, கைகளைக் கட்டி நின்று கொண்டு பார்த்து அல்லது மந்திரத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா?
இத்தகைய ஆற்றல் மனிதனுக்கு இறைவன் வழங்கவில்லை. அது இறைவனின் ஆற்றலாகும். மனிதனுக்கு இறைவன் வழங்காத ஆற்றலை அவனுக்கு இருக்கிறது என்று நாம் நம்பினால் அது தெளிவான இணைகற்பித்தலேயாகும்.
அவனே உங்கள் இறைவனான அல்லாஹ். அவனுக்கே அதிகாரம் உரியது. அவனையன்றி யாரை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் சிறிதளவு கூட அதிகாரம் பெற மாட்டார்கள். ( 35:13)
இவ்வசனத்தில், அவர்கள் அல்லாஹ்வையன்றி யாரை வணங்குகிறார்களோ அவர்களுக்கு அணுவளவு கூட இறையாற்றல் கிடையாது என்று இறைவன் கூறுகிறான்.
ஒரு படைப்பினத்தைக் கடவுள் என்று சொன்னால் தான் இணைவைப்பு என்றில்லை. அல்லாஹ்வை நம்புவது போல அணுவளவு நம்பிக்கையை அதன் மீது வைத்தாலும் அதுவும் இணைவைப்பே!
இதை நமது பயத்தை வைத்தும் எளிமையாகப் புரிந்துக் கொள்ளலாம்.
நாம் ஒன்றைப் பார்த்துப் பயம் கொள்கின்றோம் என்றால் நாம் எதற்காகப் பயப்படுகிறோமோ அந்த ஆற்றல் அதில் இருக்க வேண்டும்.
உதாரணமாக, சிங்கம் ஒன்று துரத்துகிறது. அப்போது பயப்படுகிறோம் எனில் அது யதார்த்தம். ஏனெனில் நம்மைத் தாக்க சிங்கத்திற்கு ஆற்றல் இருக்கிறது.
ஒருவன் ஒரு அரிவாளை எடுத்துக் கொண்டு துரத்துகிறான் அல்லது நம்மை விட பலமுடையவன் அடிக்கத் துரத்துகிறான். அப்போது பயப்படுகிறோம் எனில் அதுவும் யதார்த்தம்.
ஏனெனில் அவ்வாறு செய்ய அவனுக்கு ஆற்றல் இருக்கிறது.
இவ்வாறான இயற்கையான, யதார்த்தமான பயத்திற்கு மாற்றமாக கற்பனை பயம் கொள்கிறோம் எனில் அது இணைவைத்தலில் நம்மை இணைத்துவிடும்.
உதாரணமாக, பேய் பயம். பேய் என்பது ஒன்று இல்லை. பேய் இருக்கிறது என்று நம்புகிறோம் எனில் மரணத்திற்குப் பிறகும் நம்மைத் தாக்கும் வகையில் சில ஆன்மாக்கள் வாழ்ந்து கொண்டு வலம் வருகிறது என்று நம்புகிறோம். இது இணைவைத்தலான பயமாகும்.
ஒரு சிலையிடத்தில் செல்கிறீர்கள். அந்த சிலையிடத்தில் கத்திப் பேசாதீர்கள். கண்ணைக் குத்தி விடும் என்கிறார்கள். அப்போது அதற்குப் பயப்படுகிறீர்கள் எனில் இது இணைவைத்தலைப் பெற்றுத் தரும் பயமாகும்.
“ஹூதே! நீர் எந்த ஒரு தெளிவான சான்றையும் எங்களிடம் கொண்டு வரவில்லை. உமது சொல்லுக்காக எங்கள் கடவுள்களை நாங்கள் விடப் போவதில்லை. நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என அவர்கள் கூறினர்.
“எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குத் தீங்கை ஏற்படுத்தி விட்டார்கள் என்றே சொல்கிறோம்” (என்றும் கூறினர்.) “நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன். அவனை விட்டுவிட்டு, நீங்கள் (அவனுக்கு) எதனை இணையாக்குகின்றீர்களோ அதனைவிட்டும் நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாக இருங்கள்! நீங்கள் அனைவரும் எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (அதன்) பின்னர் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று அவர் கூறினார்.( 11: 53 – 55)
இந்த வசனத்தில் இந்த வகை பயம் குறித்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். சிலைகள் கேடு செய்யும் என்று ஹுது (அலை) அவர்களை அம்மக்கள் மிரட்டுகிறார்கள். அதற்கு எந்த அச்சமும் இல்லாமல் நீங்கள் எனக்கு என்ன சூழ்ச்சி வேண்டுமானாலும் செய்யுங்கள், கால அவகாசம் கூட வழங்காதீர்கள் என்று ஹுது(அலை) அவர்கள் கூறினார்களே இதுதான் ஏகத்துவம்.
சிலைக்கு இல்லாத ஆற்றல் குறித்து அவர்கள் மிரட்டியவுடன் அஞ்சாமல் அந்தச் சிலைகள் வெறும் மரம், கல் என்று பயமற்று இருக்கிறார்கள்.
பயப்படுவதற்கு எந்த நியாயமும் இல்லாமல், நாம் எதற்கு பயப்படுகிறோமோ அதற்கு அந்த ஆற்றல் இல்லாதபோதும் நாம் அஞ்சினோம் என்றால் அது இணைவைத்தலே!
பயம் ஏற்பட்டால் மட்டுமல்ல! படைப்பினத்திற்கு இறைவன் வழங்கிய யதார்த்த ஆற்றலைத் தாண்டி வேறொரு ஆற்றல் இருக்கிறது என்று நம்பினாலும் அதுவும் இணைவைத்தலே!
உதாரணமாக, ஒரு கயிறு இருக்கிறது. அந்த கயிறின் தன்மை என்பது ஒன்றைக் கட்டுவதற்கு பயன்படுவதாகும்.
அத்தகைய கயிறு எனக்கு நோய் நிவாரணம் தரும் என்று நம்பி அதை கட்டிக் கொண்டால் அது கயிறுக்கான தன்மை இல்லை. அதன் யதார்த்த தன்மையை தாண்டிய ஒரு சக்தியை அதற்கு நாம் கற்பனை செய்கிறோம். இது இணைவைத்தலில் கொண்டு போய் சேர்க்கும்.
அதே போலத்தான் சூனியக்காரன் என்பவன் நம்மைப் போன்ற மனிதனாகத்தான் இருக்கிறான் எனும் போது மனிதனுக்கிருக்கும் ஆற்றலுக்காக பயந்தால் குற்றமில்லை. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் இருக்கிறது, மறைவான ஞானம் அவனுக்குண்டு, அவன் விரும்பிய பாதிப்புகளை ஏற்படுத்த சக்தி பெற்றவன் என்று கற்பனை செய்து பயந்தால், நம்பினால் அது இணைகற்பித்தலாகும்.
இவ்வாறு மார்க்கத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் அமைந்த சூனியம் குறித்து, அதற்கு எந்த ஆற்றலுமில்லை என்று நாம் கூறுகிற போது, சூனியத்தைச் சரிகாண நினைப்பவர்கள் மார்க்கம் கூறும் அற்புதங்கள் பற்றிய செய்திகளை ஆதாரங்களாக முன்வைக்கின்றனர்.
இஸ்லாத்தின் பெயரால் இணைவைப்பை நியாயப்படுத்த நினைக்கும் ஒவ்வொரு கூட்டத்தாரும் இந்த வழிமுறையையே கையாள்வர்.
அவ்லியாக்களுக்கு ஆற்றல் உள்ளது. அவர்கள் அற்புதம் செய்வார்கள் என்று கூறுபவர்களிடம் என்ன ஆதாரம் என்று கேட்டால் மூஸா நபி செய்தார், ஈஸா நபி செய்தார் என்று கூறுவார்கள்.
நபிமார்கள் வாழ்வில் அற்புதம் நடந்ததற்கு ஆதாரம் உள்ளது. இவர்கள் கூறும் அவ்லியாவும் அற்புதம் செய்தார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் அதற்கு எந்தப் பதிலும் இருக்காது.
இதுபோன்று கேள்விகள் கேட்டு ஏகத்துவம் பேசியவர்கள் தான் இன்று சூனியம் விஷயத்தில் அந்தக் கேள்வியைக் கேட்க மறுக்கின்றனர்.
No comments:
Post a Comment