பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, September 19, 2025

ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள்


#ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுவது சொர்க்கத்தில் கொண்டு சேர்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள் என்றனர்.

நூல் : முஸ்லிம் 81

இஸ்லாத்தில் மிகச் சிறந்த நல்லறம் எது? என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணவளிப்பதும், உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 12, 28, 6236

சுய நலம், கோபதாபம் போன்ற தீய குணங்களின் காரணமாக மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள் நிகழ்வது சகஜம். இத்தகைய சண்டைகள் காலா காலத்துக்கும் நீடிக்கக் கூடாது. கோப உணர்வு அடங்கிய உடன் சமாதானமாகி விட வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

இதனால் தான் எந்த முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் பகைமையாக இருக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டினார்கள். பகைமையாக இருக்கக் கூடாது என்றால் முன்பு போலவே இருவரும் உடனடியாக நட்புறவாக ஆக வேண்டும் என்பது இதன் பொருளல்ல. பெரும்பாலான உள்ளங்களுக்கு உடனடியாக இது சாத்தியப்படாது. பகைமையைப் படிப்படியாகத் தான் குறைக்க முடியும். அதற்கு முதல் படியாக அமைவது ஸலாம் தான்.

பகைமை கொண்டவராக இருந்தாலும் மூன்று நாட்கள் கடந்து விட்டால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முகம் பார்த்து ஸலாம் கூறினால் சமாதானத்தின் முதல் படியில் நாம் ஏறி விடுகிறோம். இது தொடரும் போது நாளடைவில் முழுமையான நல்லிணக்கம் ஏற்பட்டு விடும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தினச் சுருக்கமாகப் பின் வருமாறு கூறுகிறார்கள்.

ஒரு மனிதன் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இவர் இந்தப் பக்கமும் அவர் அந்தப் பக்கமும் திரும்பிக் கொள்ளக் கூடாது. யார் ஸலாமைக் கொண்டு ஆரம்பிக்கிறாரோ அவரே அவர்களில் சிறந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6077, 6237

No comments:

Post a Comment