பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, January 25, 2018

ஜம்ஜம்_நீர்_அருந்தும்_முன்போ_அல்லது_அருந்தி_முடித்த_பிறகோ_துஆ

#ஹஜ்_உம்ரா

#ஜம்ஜம்_நீர்_அருந்தும்_முன்போ_அல்லது_அருந்தி_முடித்த_பிறகோ_துஆ_செய்வது_சுன்னத்தா?
#பிரத்யேக_துஆ_எதுவும்_உள்ளதா?

#பதில்

இதற்கென எந்த பிரத்யேக துஆவும் இல்லை. மேலும் அந்த சமயத்தில் துஆச் செய்ததாகவும் நபிவழியில் ஆதாரம் இல்லை.

ஸஃபா_மர்வாவுக்கிடையில்_எப்படி_ஓட_வேண்டும்?

#ஹஜ்_உம்ரா

#ஸஃபா_மர்வாவுக்கிடையில்_எப்படி_ஓட_வேண்டும்?

ஸஃபா மர்வாவுக்கிடையில் உள்ள முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரை ஆண்கள் மட்டும் சிறிது வேகமாக ஓடும்போது தோள்களை லேசாக குலுக்கவேண்டும் என்பது சரியா? சரியென்றால் எவ்வாறு குலுக்கவேண்டும்?

#பதில்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

தோள்களைக் குலுக்க வேண்டும் என்றால் சற்று விரைந்து நடக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள். மற்றபடி பெண்களுக்கென்று இதில் தனிச் சட்டம் இல்லை.

பச்சை_விளக்கு_பொருத்தப்பட்ட_இடத்தில்_ஓத_வேண்டிய_துஆ_என்ன

#ஹஜ்_உம்ரா

#பச்சை_விளக்கு_பொருத்தப்பட்ட_இடத்தில்_ஓத_வேண்டிய_துஆ_என்ன?

பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்தில் ஆண்களும், பெண்களும் ‘ரப்பிக்ஃபிர் வர்ஹம், வதாவஜு அம்மா தஃலமு, இன்னக அன்தல் அஅஜ்ஜுல் அக்ரம்’ என்ற துஆ ஓதவேண்டும் என்பது ஆதாரமானதா?

#பதில்

#இல்லை.

உம்ரா_என்றால்_என்ன

#ஹஜ்_உம்ரா

#உம்ரா_என்றால்_என்ன?

இஹ்ராம் கட்டி
கஃபாவில் தவாஃப் செய்து
இரண்டு ரக்அத்கள் தொழுது
ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது ஆகியவையே உம்ராவாகும்.
அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.

உம்ரா முடித்து, தலையை மழித்து, அல்லது முடியைக் குறைத்து முடித்தவுடன் குர்பானி ஏதும் கொடுக்கத் தேவையில்லை.

ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.

தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டி மக்காவில் தங்கியிருப்பவர்களும், மக்காவாசிகளும் ஹஜ்ஜுக்காக மக்காவிலேயே இஹ்ராம் கட்டலாம்.

ஆனால், இவர்கள் உம்ராவுக்காக மக்கா எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு மக்காவுக்குள் நுழைய வேண்டும்.

Monday, January 22, 2018

ஸஜ்தா திலாவத்திற்கான விளக்கம் சொல்லவும்

ஸஜ்தா திலாவத்திற்கான விளக்கம் சொல்லவும்?

🌹பதில்:🌹

தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.

ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை. விரும்பினால் ஸஜ்தா செய்யலாம், ஸஜ்தா செய்யாமலும் நபியவர்கள் இருந்துள்ளதை ஹதீஸ்கள் மூலம் அறியாலாம்.

ஆதாரப்பூர்வமான செய்திகளின் அடிப்படையில் இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் பின்வருவன அமைந்துள்ளன! 

🎋 "உமது ஆட்டை தனது ஆட்டுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அநீதிஇழைத்து விட்டார். உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீதுஅநீதி இழைக்கின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர. அவர்கள்மிகவும் குறைவு தான்''  என்று தாவூத் கூறினார். அவரைச் சோதித்தோம் என்பதை தாவூத்விளங்கிக் கொண்டார்.  தமது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். பணிந்து விழுந்தார். திருந்தினார்.

(38:24-ஸாத்)

🎋 அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து வணங்குங்கள்!

(53:62-நஜ்மு)

🎋 அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக்காட்டப்படும் போது ஸஜ்தா செய்வதில்லை.

(84:21 - இன்ஷிகாக்)

🎋 எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!

(96:19 - அலக்)

ஹதீஸின் அடிப்படையில் செயல்படுவதாக இருந்தால் மேற்கண்ட நான்கு அத்தியாயங்களின் போது மட்டும் ஸஜ்தா செய்வது தான் பேணுதலான செயலும் நபிவழியைப் பின்பற்றுவதும் ஆகும்.

🌻ஸஜ்தா திலவாத் துஆ!🌻

தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். அப்போது ஓதுவதற்கென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

📝ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி.

பொருள் : என் முகத்தைப் படைத்து அதில் செவிப்புலனையும் பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.

நூல்கள் : திர்மிதீ (529), நஸயீ (1117), அபூதாவூத் (1205), அஹ்மத் (22895)

🎋இந்த சஜ்தாவிற்குப் பின்னால் சலாம் கொடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே சஜ்தா மட்டும் செய்து கொள்ள வேண்டும்.

🎋இந்த ஸஜ்தா விற்கு ஓளு மற்றும் தக்பீர் இரண்டுமே தேவை இல்லை.

🍁ஆதாரங்கள்:🍁

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்தார்கள்.  ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தா செய்தனர்.  அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, "இவ்வாறு செய்வது எனக்குப் போதும்' என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப் பட்டதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி 1067, 1070

இதே கருத்து புகாரியில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.

ஸாத் அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை.  (ஆனால்) நபி (ஸல்)அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 1069, 3422

அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷா தொழுத போது, "இதஸ்ஸமாவுன் ஷக்கத்'என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தா செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, "நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தா செய்திருக்கின்றேன்.  (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தா செய்து கொண்டு தான் இருப்பேன்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ராஃபிவு,
நூல் : புகாரி 766, 768, 1078

இதஸ்ஸமாவுன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஜ்தா செய்தோம்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 1010, 1011

நான் நபி (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன்.  அப்போதுஅவர்கள் ஸஜ்தா செய்யவில்லை.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி),
நூல் : புகாரி 1072. 1073

எனவே நபிவழியைப் பின்பற்றி நற்கூலியைப் பெறுவோமாக!

🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵

Wednesday, January 17, 2018

ஜகாத் தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்

*ஜகாத்*

*ஜகாத் தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்*

*எம். ஷம்சுல்லுஹா*

*தர்மம் வழங்குவதன் சிறப்புகளையும் அதற்குக் கிடைக்கும் நன்மைகளையும் கடந்த இதழ்களில் பார்த்தோம். தர்மம் வழங்காதவர்கள் அடையும் தண்டனைகளைப் பற்றி குர்ஆனும் ஹதீசும் என்ன சொல்கின்றது என்பதை இப்போது பார்ப்போம்.*

*வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம்*

*கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி)*

*நூல்: புகாரி 1443, 1444, 5797*

*ஜகாத் கொடுக்காதவரின் தண்டனை*

*உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும். மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

*அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி)*

*நூல்: புகாரி 1402*

*நிதி சேகரிப்பு! நெருப்பில் சஞ்சரிப்பு!*

*அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும். பின்வாங்கிப் புறக்கணித்தவனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும். (அல்குர்ஆன் 70:11-18)*
*குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.*

*(அல்குர்ஆன் 104:1-9*

*செலவிடாதவர்கள் நஷ்டவாளிகள்*

*நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் கஅபாவின் நிழலில் இருந்தவாறு, கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள் என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகின்றதா? என் நிலை என்னாவது? என்று சொல்லிக் கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள், என்னால் பேசமாலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது என்று கூறினார்கள். உடனே நான், என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செலவிட்ட) சிலரைத் தவிர என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு கைகளால் சைகை செய்தார்கள்.*
*அறிவிப்பவர்: அபூதர் (ரலி)*

*நூல்: புகாரி 6638*

*சேர்த்து வைப்போருக்குப் போடப்படும் சூடு*

*நம்பிக்கை கொண்டோரே! மதகுருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!(என்று கூறப்படும்)*

*அல்குர்ஆன் 9:34,35*

*இன்றைய பணமழை நாளைய பாம்பு மாலை*

*அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக் கொண்டு தனது இரு விஷப்பற்களால் அவனது தாடையைக் கொத்திக் கொண்டே, நான் தான் உனது செல்வம், நான் தான் உனது புதையல் என்று கூறும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.பின்னர், அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், அது தங்களுக்குச் சிறந்தது என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் என்ற (அல்குர்ஆன் 3:180) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.*

*அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)*

*நூல்: புகாரி 1403*

*ஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும்*

*அந்தத் தோட்டத்துக்குரியோரைச் சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம். காலையில் அதை அறுவடை செய்வோம் என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர். இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை. எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிட மிருந்து சுற்றி வளைக்கக் கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது. அது காரிருள் போல் ஆனது.*

*நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம் என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரையொருவர் அழைக்கலானார்கள். தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் சென்றார்கள். அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தைக் கண்ட போது, "நாம் வழி மாறி (வேறு இடம்) வந்து விட்டோம் என்றனர். இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம்.*

*அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர், நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று கேட்டார். எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம் என்றனர். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள். எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறிவிட்டோமே! என்றனர். இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள் (என்றும் கூறினர்) இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?*

*(அல்குர்ஆன் 68:17-33)*

*பூகம்பத்தில் புதைந்த பொருளாதாரம்*

*காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது என்று அவன் கூறினான். இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான் என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர். உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.*

*(அல்குர்ஆன்28:76-81)*

*குறிப்பு : 2004 ஜூன்;மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை*

Sunday, January 14, 2018

தாயின்_கடனை_அடைக்க_ஜகாத்_பணத்தைச்_செலவிடலாமா?

தாயின்_கடனை_அடைக்க_ஜகாத்_பணத்தைச்_செலவிடலாமா?

#பதில்

பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை இஸ்லாம் பிள்ளைகளின் மீது சுமத்தியுள்ளது. பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமையாகும். எனவே உங்களுடைய தாயின் மீதுள்ள கடன் உங்கள் மீதுள்ள கடனாகும். அதை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும்.

ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்” என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 1852

ஒரு மனிதர் நபிகள் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு குழந்தையும், செல்வமும் உள்ளன. எனது தந்தைக்கு என் செல்வம் தேவைப்படுகின்றது என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீயும், உனது செல்வமும் உன்னுடைய தந்தைக்கு உரியனவாகும். நீங்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் உங்கள் குழந்தைகளே மிகத் தூய்மையான செல்வமாவர். எனவே உங்கள் குழந்தைகள் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள் என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

நூல் : அபூதாவூத் 3063

பெற்றோரின் கடனை அடைப்பது பிள்ளைகள் மீதுள்ள கடமையாகும். அதாவது பெற்றோர் பட்ட கடன் பிள்ளைகள் பட்ட கடனாகவே மார்க்கம் கருதுகிறது. உங்களுக்குக் கடன் இருந்தால் எப்படி அந்தக் கடனை அடைத்து விட்டு அதன் பிறகு எஞ்சியதில் இருந்து ஜகாத் கொடுப்பீர்களோ அது போல் உங்கள் சொத்தில் இருந்து பெற்றோரின் கடனை அடைத்து விட்டு எஞ்சியதற்கு ஜகாத் கொடுங்கள்.

பெற்றோரின் கடனுக்காக ஜகாத்தில் இருந்து செலவிட்டால் உங்களுக்கு நீங்களே ஜகாத் கொடுத்துக் கொண்டதாகவே ஆகும்

எனவே ஜகாத்துடைய பணத்திலிருந்து தாயின் கடனை அடைக்காமல் உங்களுடைய கடமை என்ற அடிப்படையில் உங்களுடைய பணத்திலிருந்தே அதை அடைக்க வேண்டும்.