அனைத்து பள்ளிகளையும் புறக்கணிப்பது �
தொழக் கூடாத பள்ளிகள் என்று குர் ஆனில் கூறப்பட்டதை காரணமாக வைத்து அனைத்து பள்ளிகளையும் புறக்கணிப்பது சரியா?
பதில் :
குறிப்பிட்ட நான்கு காரணங்கள் உள்ள பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.
وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(108)9
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் "நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல்குர்ஆன் (9 : 107)
மேற்கண்ட வசனத்தில் இறை மறுப்புக் காரியம், பிறருக்கு தீங்கிழைத்தல், முஸ்லிம்களிடையே பிரிவை ஏற்படுத்துவது, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக நடப்பவர்களுக்கு புகலிடம் அளிப்பது ஆகிய நான்கு தன்மைகள் உள்ள பள்ளிக்குப் போகக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இணைவைப்பு என்ற பெரும்பாவம் ஒரு பள்ளியில் அரங்கேறினால் இந்த ஒரு காரணம் இருந்தாலே அது பள்ளி என்ற அந்தஸ்தை இழந்து விடும். இது பற்றி விரிவாக ஏற்கனவே விளக்கம் தரப்பட்டுள்ளது.
இந்த நான்கு குற்றங்களும் நடத்தப்படாத பள்ளிகள் எத்தனையோ தமிழகத்தில் இருக்கின்றன. இந்தப் பள்ளிகள் தொழுவதற்கு தடை செய்யப்பட்ட பள்ளிகள் அல்ல. இவற்றுக்குச் சென்று தொழுதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
27 மடங்கு நன்மைகள்
"தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : புகாரி (645)
ஒருவர் தன் கடையில் அல்லது வீட்டில் தொழுவதை விட அவர் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழும் தொழுகைக்கு 27 மடங்கு நன்மை அதிகம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒவ்வொரு காலடிக்கும் நன்மைகள்
உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது, அவரது வீட்டிலோ, கடைவீதியிலோ தனியாகத் தொழுவதை விட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும். ஏனெனில், அவர் உளூச் செய்து,அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகின்றார். தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளிக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப்படுகின்றது. அல்லது ஒரு தவறு அவரை விட்டு நீக்கப்படுகின்றது. மேலும் உங்களில் ஒருவர் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக துஆச் செய்கின்றனர். அங்கே அவரது காற்று பிரிந்து, உளூ நீங்கி விடாமல் இருக்கும் வரை, (பிறருக்கு) துன்பம் தரும் எதையும் அவர் செய்யாமல் இருக்கும் வரை. "இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!'' என்று வானவர்கள் பிரார்த்திக்கின்றார்கள். உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கின்றார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (2119)
எவர் தன்னுடைய வீட்டில் உலூச் செய்து விட்டு, பிறகு அல்லாஹ்வின் கடமைகளில் ஒரு கடமையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களில் ஏதேனும் ஒன்றை நோக்கிச் செல்லும் போது அவர் எடுத்து வைக்கும் எட்டுக்கள் ஒரு தீமையை அழித்து விடுகின்றது. ஓர் அந்தஸ்தை உயர்த்தி விடுகின்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (1059)
அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். பள்ளியை விட்டு அவர் தூரமாக இருந்ததைப் போல் வேறு யாரும் தூரமாக இருக்க நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவருக்கு ஒரு தொழுகை கூட விடுபடுவது கிடையாது. "கும்மிருட்டிலும் கடும் வெப்பத்திலும் ஏறி வருவதற்காக ஒரு கழுதையை வாங்க வேண்டியது தானே?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "என்னுடைய வீடு பள்ளிக்கு அருகில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பள்ளிக்கு வரும் போது என் வருகையும் என்னுடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லும் போது என்னுடைய திரும்புதலும் பதியப்பட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு இந்த நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் வழங்குவானாக!'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உபை இப்னு கஅப் (ரலி) நூல் : முஸ்லிம் (1065)
பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகள் காலியாகி இருந்தன. சலமா கிளையினர் பள்ளிக்கருகில் வந்து விட விரும்பினர். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும், அவர்களை நோக்கி, "நீங்கள் பள்ளிக்கு அருகில் வந்து விட விரும்புகின்றீர்களாமே!'' என்று வினவினார்கள். அதற்கு அவர்கள் "ஆம் அல்லாஹ்வின் தூதரே! இடம் பெயர்ந்து வருவதை நாங்கள் விரும்புகின்றோம்'' என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஸலமா கிளையினரே! உங்கள் வீடுகள் தூரமாக இருப்பதால் உங்கள் அடிச்சுவடுகள் பதியப்படுகின்றன. உங்கள் வீடுகள் தூரமாக இருப்பதால் உங்கள் அடிச்சுவடுகள் பதியப்படுகின்றன'' என்று கூறினார்கள். உடனே சலமா கிளையினர் "நாங்கள் மாறி வருவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை'' என்று பதிலளித்தனர்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் 1068, புகாரி (656)
யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகின்றாரோ அவருக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. யார் ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்து இருந்து இமாமுடன் தொழுகின்றாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி) நூல் : புகாரி (651)
மனிதனின் ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும், தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழி தெரியாதவருக்கு) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (2891)
இரவு முழுவதும் தொழுத நன்மை
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) மக்ரிப் தொழுகைக்குப் பின் பள்ளியில் நுழைந்து அவர்கள் மட்டும் தனியே அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நான் அமர்ந்தேன். அப்போது அவர்கள், "எனது சகோதரன் மகனே! யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவின் நடுப் பகுதி வரை நின்று தொழுதவர் போலாவார். யார் சுப்ஹு தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவு முழுவதும் நின்று தொழுதவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அம்ரா நூற்கள் : முஸ்லிம், அபூதாவூத்
சொர்க்கத்தில் வீடு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் பள்ளிவாசலுக்கு (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும் போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) புகாரி (662)
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் பள்ளிக்குச் சென்று ஜமாஅத் தொழுகையைப் பேணி நன்மைகளை அடைவோமாக! பள்ளிகளுக்குச் செல்லாமல் வீட்டில் தொழுதால் இந்த நன்மைகளை இழக்க நேரிடும்.
அதே நேரத்தில் முழுக்க முழுக்க நபிவழி அடிப்படையில் செயல்படக்கூடிய பள்ளி ஒன்று இருக்கும் பட்சத்தில் மற்ற பள்ளிகளை விட்டுவிட்டு நபிவழி அடிப்படையில் நடக்கும் பள்ளிக்குச் செல்வதைத் தவறு என்று கூறக் கூடாது. மாறாக நபிவழி அடிப்படையில் நடக்கும் பள்ளிகளுக்கே முன்னுரிமை தர வேண்டும்.
எனவே நான்கு காரணங்களும் இல்லாத ஒரு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டைத் தேர்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அல்லது முழுமையாக நபிவழியில் நமது தொழுகைகளை அமைத்துக் கொள்ள பள்ளிகளை மர்கஸ்களை உருவாக்கி இந்த நன்மையை அடைய வேண்டும்
No comments:
Post a Comment