#தொழுகை
#பீடி_மண்டி_நடத்தும்_இமாம்_பின்னால்_தொழலாமா?
?????????????????
#கேள்வி : நான் ஐவேளைத் தொழுகைக்காக ……. உள்ள மஸ்ஜிதே நூர் தவ்ஹீத் பள்ளிக்குச் சென்று வருகிறேன். அங்கு தொழுகைக்காக இமாம் யாருமில்லை. ஆதலால் அங்கு யார் தவ்ஹீத் வாதி வருகிறாரோ (குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்தவர்) அவர் தொழவைக்கலாம். இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் ஒரு நபர் இமாமத் செய்கிறார். அவர் பீடி மண்டி நடத்துகிறார். அவர் இமாமத் செய்யலாமா? இதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் மார்க்கத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
#பதில் :
பீடி மண்டி நடத்துவது மார்க்க ரீதியிலும் பெரும் பாவமாகும். உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடியவற்றை பயன்படுத்துவதும் அவற்றை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகும்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான். ”நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ் வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!”
( அல்குர்ஆன் 2 : 172)
புகைப் பொருட்கள் அனைத்தும் மனிதனுக்கு கேடுவிளைவிப்பவை என்பதால் அவை இஸ்லாமிய மார்க்கத்தில் ஹராமானவை ஆகும். எதனை மனிதன் உண்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதோ அதனை வியாபாரம் செய்து சம்பாதிப்பதும் ஹராம் ஆகும். எனவே பீடி மண்டி நடத்தும் சகோதரர் தவ்பாச் செய்து அதனை விட்டும் விலகிக் கொள்வது அவசியம் ஆகும்.
இப்போது பாவமான காரியங்களைச் செய்பவர்கள் மக்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா? என்பதைப் பற்றி பார்ப்போம்.
இணைவைத்தல் அல்லாத ஏனைய பாவங்களைச் செய்பவர்களை பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் தடையேதுமில்லை. எனவே மார்க்கம் தடுக்காத காரியத்தை நாம் தடுக்க முடியாது. பாவமான காரியங்களைச் செய்யும் இமாமை பின்பற்றித் தொழுவதற்கு நபி மொழிகளில் ஆதாரம் உள்ளது.
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “தொழுகையை அதன் உரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?” என்று கேட்டார்கள். நான் “(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்துகொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்” என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் (1340)
தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதுதான் நபிவழியாகும். தொழுகையை பிற்படுத்தி தொழுவது பாவம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்தத் தவறில் நாம் பங்கெடுத்து விடக்கூடாது என்பதால் தொழுகை அதற்குரிய நேரத்தில் தொழுது விட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள்.
அதே நேரத்தில் தொழுகையை தாமதப்படுத்துதல் என்ற பாவத்தைச் செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் வந்தாலும் அவர்களைப் பின்பற்றி நாம் தொழுவது குற்றமில்லை என்பதால் அவர்களையும் பின்பற்றித் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் இந்த ஆட்சியாளர்கள் பல்வேறு விதமான பாவங்களைச் செய்வார்கள் என்றும் ஹதீஸ்களில் வந்துள்ளது.
உம்மு சலமா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையைத் தெளிவாக) அறிந்துகொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணைபோனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)” என்று கூறினார்கள். மக்கள், “அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை; அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை (வேண்டாம்)” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (3775)
சில அறிவிப்புகளில் لا ما صلوا لكم الخمس அவர்கள் உங்களுக்கு ஐவேளை தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் வரை வேண்டாம் (அஹ்மத் 26571) என்று நபியவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
பாவமான காரியங்களைச் செய்யும் ஆட்சியாளர்கள் தொழுகை நடத்தினாலும் அவர்களுக்குப் பின்னால் நாம் தொழுவது குற்றமில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
பாவமான காரியங்களைச் செய்பவர்களை பின்பற்றித் தொழுக்கூடாது என்றால் பாவமான காரியங்களைச் செய்யும் ஆட்சியாளர்களையும் பின்பற்றித் தொழக்கூடாது என்றே கூறியிருப்பார்கள். எனவே இணைவைத்தல் அல்லாத பாவமான காரியங்களைச் செய்பவர்களை பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.
ஆனால் நிர்வாக ரீதியாக பள்ளிவாசலுக்கு இமாமை நியமிக்கும் போது இது போன்ற வெளிப்படையில் பாவமான காரியங்களை செய்யாதவர்களையே நியமிக்க வேண்டும்.நிர்வாகத்திலும் இத்தகையோர் இல்லாமல் இருப்பது சிறந்ததாகும். இல்லையென்றால் அது தவ்ஹீத் பிரச்சாரத்தையும், நிர்வாகத்தையும் பாதிக்கும் என்பதையும் நாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment