#தொழுகை
#விடுபட்ட_முன்_சுன்னத்_தொழுகைகளை_பின்னர்_தொழலாமா?
#பதில்_தொழலாம்
கடமையான தொழுகைக்கு முன்னால் நிறைவேற்றப்படுவதே முன் சுன்னத். இதை அதற்குரிய நேரத்தில் தொழத் தவறினால் கடமையான தொழுகையை முடித்த பிறகு நிறைவேற்றலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபித்தோழர் ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்தை ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றிய பின் தொழுதுள்ளார். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன்ன சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
அறிவிப்பவர் : கைஸ் (ரலி),
நூல் : இப்னுஹிப்பான் 2471
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹ்ருடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்களை அஸர் தொழுகைக்குப் பின் தொழுதுள்ளார்கள்.
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள் :நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அஸருக்குப் பின்) இரண்டு ரக்அத்கள் தொழுவதை தடை செய்ததை நான் கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை நான் பார்த்தேன். தொழுதுவிட்டு எனது வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் பனூஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுதுகொண்டிருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, ” நீ அவர்களுக்கு அருகில் சென்று அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே?’ என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு!” எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்து விட்டார். தொழுகையை முடித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அபூ உமைய்யாவின் மகளே! அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹ்ருக்குப் பின்னால் உள்ள இரண்டு ரக்அத்களைத் தொழ முடியவில்லை; அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்” என்றார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
புகாரி 1233
இதே போன்று தவறிப்போன வித்ருத் தொழுகையையும் பின்னர் தொழலாம்.
முஹம்மது பின் முன்தஷிர் என்பவர் அம்ர் பின் ஷர்ஹபீல் என்ற பள்ளியில் இருந்தார். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. தாமதமாக வந்த முஹம்மது பின் முன்தஷிர் “நான் வித்ரு தொழுது கொண்டிருந்தேன்” என்று சொன்னார். (இது குறித்து) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “பாங்குக்குப் பின் வித்ரு தொழுவது கூடுமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம்! இகாமத்துக்குப் பின்னரும் தொழலாம். நபியவர்கள் (வித்ரு தொழாமல்) உறங்கி விட்டால் சூரியன் உதயமான பின்னரும் தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்ராஹீம்
நூல்: நஸயீ 1667
எனவே சுன்னத்துகளை கடமையான தொழுகைக்கு முன்பு நிறைவேற்ற முடியாவிட்டால் தொழுகை முடிந்த பிறகு நிறைவேற்றிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment