பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, May 6, 2020

ஓதிப்பார்க்க மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

*ஓதிப்பார்க்க மார்க்கத்தில் அனுமதியுள்ளதா❓*
__________________________________

✅ *நோய்க்காக ஓதிப்பார்க்கலாம்*

நோயிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒதிப்பார்ப்பதற்கு அனுமதியுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்களிடம், விஷக்கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், *நபி (ஸல்) அவர்கள் ஓவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்* என்று சொன்னார்கள்.

அறி : அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்),
நூல் : புகாரி 5741

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட *குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக்கொள்வார்கள்.* நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) *ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.*

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 4439

*ஓதிப்பார்க்கும் முறை என்ன❓*
______________________________
திருக்குர்ஆனுடைய குறிப்பிட்ட சில சூராக்களை ஓதி குழந்தைகளின் உடம்பில் ஊதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவாறு மட்டுமே ஓதிப்பார்க்க வேண்டும். அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் சேர்த்துவிடக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் *குல் ஹுவல்லாஹு அஹத்’, “குல் அஊது பிரப்பில் ஃபலக்’, “குல் அஊது பிரப்பின் னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக்கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.*

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி (5017)

நோயாளி குணமாவதற்காக செய்ய வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். குழந்தைகள் நோயுறும் போது அவற்றை நாம் ஓதிக்கொள்ள வேண்டும்.

நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் *அபூஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்* என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?* என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்), *சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)* என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், *அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’* என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். 

(பொருள்: *இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக*.)

அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்),
நூல் : புகாரி 5742

*சூரத்துல் பாத்திஹாவை வைத்தும் ஓதிப்பார்க்கலாம்*. 

நூல்: புகாரி (5736)

*இணைவைப்பு இருக்கக்கூடாது*
________________________________

நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), *அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?* என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), *நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்லிக்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பித்தல் இல்லையானால் ஓதிப்பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை* என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக்
நூல் : முஸ்லிம் 4427
___________

ஏகத்துவம்

No comments:

Post a Comment