பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, May 8, 2020

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

❓ *நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?*

✅ *அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது.* எந்த மனிதனோ, அல்லாஹ்வின் தூதர்களோ அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. *மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.*

*அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான்*. அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் *6:103*

*முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான்.* எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய அசல் உருவிலும், அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி கண்டார்கள்.

அறிவிப்பவர்: *ஆயிஷா* (ரலி),
நூல்: *புகாரி 3234*

*மஸ்ரூக் பின் அஜ்தஉ* அறிக்கின்றார் :

*முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைக் கண்டார்கள் என்று உங்களிடம் யார் அறிவிக்கின்றாரோ அவர் பொய் சொல்லி விட்டார்.* இறைவனோ *கண்கள் அவனைப் பார்க்காது* என்று கூறுகின்றான் 
(அல்குர்ஆன் *6:103*). 

மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று யார் உங்களிடம் அறிவிக்கின்றாரோ அவரும் பொய் சொல்லி விட்டார். இறைவனோ, *அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிய மாட்டார்*’ என்று கூறுகின்றான் (அல்குர்ஆன் 27:65) என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்: *புகாரி 7380*

புகாரியில் 4855வது ஹதீஸில் ஆயிஷா (ரலி) அவர்கள்,

*வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை*. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன் என்ற திருக்குர்ஆனின் 42:51 வசனத்தையும் தமது கூற்றுக்குச் சான்றாகக் காட்டுகின்றார்கள்.

*நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?* என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, *அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?* எனக் கூறினார்கள்.

நூல்: *முஸ்லிம் 261*

திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் ஆலிம்கள் பலர், *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜின் போது பார்த்ததாக கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர்.* இதற்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட வசனத்தை முன் வைக்கின்றனர்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.

திருக்குர்ஆன் *53:13*

இந்த வசனத்தில் அவரைக் கண்டார் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதைப் பற்றித் தான் குறிக்கின்றது என்பது இவர்களது வாதம். இந்த வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், *தாம் கண்டது ஜிப்ரீல் (அலை)* அவர்களைத் தான் என்று விளக்கமளித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய போது, 53:13 வசனத்தை ஆதாரமாகக் காட்டி, அவரை மற்றொரு முறையும் கண்டார் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே என்று இந்த ஹதீஸை அறிவிக்கும் மஸ்ரூக் கேட்கும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் *அது ஜிப்ரீலைக் குறிக்கின்றது* என்று பதிலளித்தார்கள்.

நூல்: *புகாரி 3235*

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது இறைவனைக் கண்டார்கள் என்பது பொய் என்பதில் சந்தேகமில்லை.
____________
    
ஏகத்துவம்

No comments:

Post a Comment