பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, May 18, 2020

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை



பெருநாள் தொழுகை
பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை?

ஹமீத், குவைத்.

பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்வது தான் நபிவழி என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். 3+3 தக்பீர் சொல்வதற்கு தக்க ஆதாரம் இல்லை எனவும் கூறி வருகிறோம். 3+3 தக்பீர்கள் சொல்வதற்கு ஆதாரம் காட்ட முடியாததால் 7+5 தக்பீர்கள் சொல்வது தொடர்பான ஹதீஸில் சில சில சந்தேகங்களை எழுப்பி அது பலவீனமான செய்தி என்று சிலர் வாதிட்டு வருகின்றனர்.

பெருநாள் தொழுகைளில் முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்ற செய்தி, அன்னை ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஸஅத் பின் ஆயித் (ரலி), ஜாபிர் (ரலி), அம்ர் பின் அவ்ஃப் பின் ஸைத் (ரலி) ஆகியோர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் பல அறிவிப்புகள் பலவீனமானவையாக  உள்ளன. அவற்றை நாம் ஆதாரமாகக் கொள்ளவில்லை. ஆனால்  7+5 தக்பீர்கள் சொல்ல வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸும் உள்ளது. அதனடிப்படையில் தான் நாம் இவ்வாறு கூறுகிறோம்.

سنن أبي داود

1151 – حدثنا مسدد، حدثنا المُعتَمِرُ، قال: سمعتُ عبدَ الله بنَ عبد الرحمن الطائفيَّ يُحدث، عن عمرو بن شعيب، عن أبيه عن عبد الله بن عمرو بن العاص، قال: قال نبي الله – صلَّى الله عليه وسلم -: "التكبيرُ في الفطر سَبع في الأولى، وخَمْسٌ في الآخِرَةِ، والقراءَة بعدَهما كلتيهما"

பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். அதற்குப் பிறகு கிராஅத் ஓத வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : அபூதாவூத் 971

அறிவிப்பாளர் வரிசை :

1-அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

2-ஷுஐப்

3-அம்ர் பின் ஷுஐப்

4அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ

5-முஃதமிர்

6-முஸத்தத்

7-அன்னை ஆயிஷா (ரலி)

இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ என்பவரைக் காரணம் காட்டியே இந்த ஹதீஸ் பலவீனமானது என்று மாற்றுக் கருத்துடையோர் வாதிடுகிறார்கள்.

இவருடைய முழுப் பெயர் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் யஃலா பின் கஅப் அத்தாயிஃபீ என்பதாகும்.

இவர் விஷயத்தில் ஆட்சேபணை உள்ளது என்று புகாரி கூறியதாக இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டதை எடுத்துக் காட்டி இவர் பலவீனமானவர் என்று வாதிடுகின்றனர்.

புகாரி இவரைப் பற்றி கூறியதாக இப்னு ஹஜர் கூறுவது தவறாகும். இதை தஹபி அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்.

من تكلم فيه وهو موثق أو صالح الحديث الذهبي

قال ابن عدي: "أما سائر حديثه فعن عمرو بن شعيب، وهي مستقيمة، فهو ممن يكتب حديثه"، الميزان: 2/452. وقال الدَّارَقُطْنِيّ: "طائفي يعتبر به" سؤالات البرقاني: ص40، رقم 258. وقال أبو حاتم: "ليس هو بقوي، هو لين الحديث، بابة طلحة بن عمرو، وعمر بن راشد، وعبدالله بن المؤمل"، الجرح والتعديل: 5/97، وقال ابن معين أيضاً: "ضعيف"، التهذيب. وفيه قول النسائي. قال ابن حجر: "وقال البخاري: "فيه نظر" التهذيب: 5/299.

قلت: قد ترجم له البخاري في التاريخ الكبير: 5/133، ولم يقل فيه شيئاً ولم أره في التاريخ الصغير، ولا في الضعفاء الصغير، لكن رأيت في الضعفاء الصغير: 69: "عبدالله بن يعلى بن مرة الكوفي.. فيه نظر"، فلعل من نقل هذه اللفظة  البخاري وهم فظن أنها في "عبدالله بن عبدالرحمن بن يعلى عن  عن عطاء. قال أبو حاتم والنسائي: "ليس بالقوي""1".

இமாம் புகாரி அவர்கள் இவரைப் பற்றி அத்தாரிகுல் கபீர் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இவரைப் பற்றி எக்கருத்தையும் கூறவில்லை. மேலும் அவர்களுடைய அத்தாரிகுல் ஸகீர், அல்லுஅஃபாவுஸ் ஸகீர் ஆகிய நூல்களில் நான் இக்கருத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அல்லுஅஃபாவுஸ் ஸகீர் என்ற நூலில் அப்துல்லாஹ் பின் யஃலா பின் முர்ரா அல்கூஃபீ என்பவரைப் பற்றித் தான் இவர் விஷயத்தில் ஆட்சேபனை உள்ளது என்று கூறியுள்ளார்கள். தாயிஃபீ என்பவரைப் பற்றி அல்ல.

நூல்: மன் துகுல்லிம ஃபீஹி வஹு முவஸ்ஸகுன், பாகம் : 1, பக்கம்: 45

நாம் தேடிய வரையிலும் இமாம் புகாரி சொன்னதாக இப்னு ஹஜர் கூறியவாறு காணவில்லை.

மேலும் இவரை இமாம் புகாரி அவர்கள் நம்பகமானவராகவே எண்ணியுள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

علل الترمذي الكبير

في التكبير في العيدين سألت محمدا عن هذا الحديث يعني : حديث عبد الله بن نافع ، عن كثير بن عبد الله، عن أبيه ، عن جده ، أن النبي صلى الله عليه وسلم كبر في العيدين في الأولى سبعا قبل القراءة، وفي الآخرة خمسا قبل القراءة فقال : ليس في الباب شيء أصح من هذا، وبه أقول، وحديث عبد الله بن عبد الرحمن الطائفي، عن عمرو بن شعيب، عن أبيه، عن جده، في هذا الباب هو صحيح أيضا، وعبد الله بن عبد الرحمن الطائفي مقارب الحديث

(பெருநாள் தொழுகையில் 7+5 கூடுதல் தக்பீர்கள் தொடர்பாக) அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான், அம்ர் பின் ஷுஐப்,  வழியாக, அவர் தன் தந்தை வழியாக, அவர் தன் பாட்டனார் பாட்டனார் வழியாக அறிவிக்கும் ஹதீஸைப் பற்றி இமாம் புகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதே என்று கூறினார்கள் என்று இமாம் திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : இலலுல் கபீர், பாகம் :1, பக்கம் :190

எனவே இமாம் புகாரியின் கருத்துப்படி இவர் நம்பகமானவரே என்பதை அறியலாம்.

மேலும் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பெருநாள் தொழுகையில் 7+5 கூடுதல் தக்பீர்கள் தொடர்பாக அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் அம்ர் பின் ஷுஐப் அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்தியை தனது புலூகுல் மராம் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். இந்தச் செய்தியை புகாரி அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்று கூறியதாக திர்மிதீ அவர்கள் சொன்னதையும் எடுத்துரைத்துள்ளார்கள்.

நஸாயீ மற்றும் சிலர் அந்தளவுக்கு (அதாவது மிக உயர்ந்த தரத்திலுள்ள அளவிற்கு) வலிமையானவர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். நஸாயீ அவர்கள் அறிவிப்பாளர்களைப் பற்றி எடை போடுவதில் கடும் போக்கு உள்ளவர். அந்த அளவுக்கு வலிமையானவர் அல்ல என்று அவர் கூறுவது அறிவிப்பாளரின் பலவீனத்தைக் குறிக்காது.

இப்னு மயீன் இவரை நல்லவர் என்றும் இன்னொரு இடத்தில் பலவீனமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அவர்களின் முரண்பட்டதாக உள்ளதால் அவரது விமர்சனத்தை நாம் விட்டுவிடலாம்.

ميزان الاعتدال

قال ابن عدي: أما سائر حديثه فعن عمرو بن شعيب، وهى مستقيمة، فهو ممن يكتب حديثه.

அம்ர் பின் ஷுஐப் வழியாக இவர் அறிவிப்பவை உறுதியானவையாகும். அந்த ஹதீஸ்களைப் பதிவு செய்யலாம் என்று இப்னு அதீ குறிப்பிட்டுள்ளதாக தஹபீ குறிப்பிட்டுள்ளார்.

நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 2, பக்கம் : 452

تهذيب التهذيب – ابن حجر

 وقال بن عدي يروي عن عمرو بن شعيب أحاديثه مستقيمة وهو ممن يكتب حديثه وقال الدارقطني طائفي يعتبر به وقال العجلي ثقة

இவர் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவர் என்று தாரகுத்னீ குறிப்பிட்டுள்ளார்கள். நம்பகமானவர் என்று இஜ்லீ குறிப்பிட்டுள்ளார்கள்.

தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 5, பக்கம் : 261

மொத்தத்தில் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ என்பவரை இப்னுல் மதீனி, இஜ்லீ, புகாரி, இப்னு ஹிப்பான், இப்னு அதீ, தாரகுத்னீ, நஸாயீ ஆகியோர் ஏற்றுக் கொள்ளலாம் என்றே கூறியுள்ளார்கள்.

மேலும் இமாம் முஸ்லிம் அவர்களும் தமது ஸஹீஹ் முஸ்லிம் என்ற நூலில் (4540) இவருடைய ஹதீஸ்களைப் பதிவு செய்திருப்பதும் இவர் பலமானவர் என்பதை உறுதி செய்கிறது.

அபூஹாத்திம் அவர்கள் மட்டுமே இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அதற்குரிய காரணத்தைக் கூறவில்லை. எனவே அதிகமானவர்கள் நம்பகமானவர்கள் என்று கூறும் கூற்றையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெருநாள் தொழுகைளின் கூடுதல் தக்பீர் தொடர்பாக வந்துள்ள 7+5 தக்பீர்கள் தொடர்பான நபிமொழி ஆதாரப்பூர்வமானதே!

No comments:

Post a Comment