பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, June 21, 2020

வாஸ்து சாஸ்திரமும்


மறைவான விஷயங்கள்
இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்

கேள்வி : முஸ்லிம்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, கடைகள் அமைக்கின்றார்களே? இஸ்லாம் எப்படி அறிவுப்பூர்வமான மார்க்கம் எனக் கூற முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கம் தரவும்.


பதில் : 
முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது. இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.

வாஸ்துவை நம்பும் ஒருவன் இறைவனை மறுக்கும் குற்றம் செய்தவனாக ஆகிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுளை நம்புவோர் மனிதனை விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பதை நம்ப வேண்டும்.

நீங்கள் ஒரு கொலை செய்து விடுகிறீர்கள். அதற்காக உங்களுக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ விதிக்கப்படுகிறது.

உடனே நீங்கள் உங்கள் வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கிறீர்கள். மாற்றி அமைக்கப்பட்ட வீட்டைப் பார்த்து விட்டு இவர் வீட்டை மாற்றி அமைத்துள்ளதால் இவரது தண்டனையை ரத்துச் செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு மறை கழன்று விட்டது எனக் கூறுவோம். உலகமே கை கொட்டிச் சிரிக்கும்.

வாஸ்து சஸ்திரத்தை நம்புபவர்கள் இறைவனை இத்தகைய நிலையில் தான் நிறுத்துகின்றனர்.

ஒவ்வொரு மனிதனைப் பொருத்தே அவனுக்கு ஏற்படும் நன்மை - தீமைகளை இறைவன் நிர்ணயம் செய்கிறான். இந்த ஆளுக்கு இது தான் என இறைவன் தீர்மானம் செய்து விட்ட பிறகு வீட்டை மாற்றுவதால், வீட்டின் அமைப்பை மாற்றுவதால், அணிந்திருக்கும் ஆடையை மாற்றுவதால் இவர் வேறு ஆள்' என்று இறைவன் நினைத்து ஏமாந்து போவான் என்று நம்புகிறார்களா?

இறைவனைப் பற்றிய இவர்கள் நம்பிக்கை இது தான் என்றால் இதை விட நாத்திகர்களாக அவர்கள் இருந்து விட்டுப் போகலாம்.

'ஐயா! என் பெயரை மாற்றிக் கொண்டதால், அதிர்ஷ்டக்கல் மோதிரம் அணிந்துள்ளதால் என்னைத் தண்டிக்காதீர்கள்!' என்று நீதிபதியிடம் ஒரு குற்றவாளி முறையிட்டால் தப்பித்து விட முடியாது எனும் போது நுண்ணறிவாளனான இறைவனிடம் எப்படி இது போன்ற கிறுக்குத் தனங்களால் தப்பிக்க இயலும்?

நமக்கென விதிக்கப்பட்ட நன்மைகளும் இப்படித் தான்.

உங்கள் வீட்டுக்கு இரண்டு ஜன்னல்கள் இருக்கும் போது உங்களுக்கு ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புகிறார். அன்றைய தினம் தான் ஒரு ஜன்னலை வாஸ்துப்படி அடைக்கிறீர்கள். உங்களுக்கென அனுப்பட்ட தொகையை அவர் உங்களிடம் தராமல் திரும்பி விடுவாரா? பணம் ஆளுக்குத் தானே தவிர ஜன்னலுக்கு அல்ல.

சாதாரண மனிதனே இவ்வளவு தெளிவாக விளங்கும் போது, இறைவனுக்கு இது விளங்காது; ஏமாந்து விடுவான் என எண்ணுவது என்னே பேதமை!

நமது தமிழகத்தைப் பொருத்த வரை 95 சதவிகிதம் கட்டடங்கள் எல்லாவிதமான சாஸ்திரங்களும் பார்க்கப்பட்ட பிறகே கட்டப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரம் உண்மை என்றால் 95 சதவிகிதம் பேர் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பத்து சதவிகிதம் பேர் கூட நிம்மதியாக இல்லை.

வாஸ்து சாஸ்திரம் பித்தலாட்டம் என்பதற்கு இது ஒன்றே நிதர்சனமான சான்றாக உள்ளது.

வாஸ்து நிபுணர் என்ற ஃபிராடு பேர்வழிகள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். ஒரு கட்டடம் இப்படி இருந்தால் இன்ன விளைவு ஏற்படும் என்பதை இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். கடவுளே இவர்களிடம் இதைக் கூறினாரா? நிச்சயமாக இல்லை. எவனோ ஒருவன் உளறி வைத்ததைப் பிழைப்புக்கு உதவுவதால் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள்.

இஸ்லாத்தை நம்பும் ஒருவன் எந்த நிமிடம் இத்தகைய கிறுக்குத் தனங்களை நம்புகிறானோ அந்த நிமிடமே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான். உலகில் முஸ்லிம்கள் கணக்கில் இவன் சேர்க்கப்படுவானே தவிர இறைவனிடத்தில் இறைவனை விபரங்கெட்டவனாகக் கருதிய குற்றத்தைச் செய்தவனாவான். அறியாத முஸ்லிம்கள் இனியாவது திருந்திக் கொள்ள வேண்டும்.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)

No comments:

Post a Comment