? உருவப் படங்கள் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என்பது சரியான ஹதீஸாகும். இந்நிலையில் மார்க்க அறிஞர்கள் தொலைக் காட்சிகளில் உரை நிகழ்த்தும் போது மலக்குமார்களின் நிலை என்ன? நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? விளக்கவும்.
எம். சமீயுர்ரஹ்மான், திருமுல்லைவாசல்
“எந்த வீட்டில் உருவச் சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்‘ என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி)
நூல்: புகாரி 3224, 5957
உருவப் படங்கள் என்பதில் தொலைக்காட்சி, வீடியோவில் தோன்றும் உருவங்கள் சேராது. உருவப் படங்களுக்கும், தொலைக்காட்சி, வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
காணப்படுவது, பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. பதிவதும், நிலைத்திருப்பதுமே படங்கள்.
நமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் காண்ணாடியை யாரும் உருவப் படம் என்று சொல்வதில்லை. கண்ணாடி பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்றும் கூறுவதில்லை.
கண்ணாடியில் தெரிவதைப் படம் என்று சொல்லாமலிருக்க என்ன காரணம் கூறுவோம்?
நம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை. நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் அது நம்மைக் காட்டும். வேறு யாராவது நின்றால் அவர்களைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது.
தொலைக்காட்சியும் இது போன்றது தான். நாம் எதை ஒளி பரப்புகிறோமோ அது தெரியும். என்னை ஒளி பரப்பினால் நான் தெரிவேன். உங்களை ஒளி பரப்பினால் நீங்கள் தெரிவீர்கள். எதையும் ஒளி பரப்பாவிட்டால் எதுவுமே தெரியாது. தொலைக்காட்சியில் எதுவுமே பதியவுமில்லை. நிலைக்கவுமில்லை. உருவப் படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்க முடியாது.
மேலும் உருவப் படம் என்பதில் இயக்கமோ, அசைவோ, ஓசையோ இருக்காது. தொலைக்காட்சி, வீடியோக்களில் இவையெல்லாம் இருக்கின்றன. உருவப் படங்களிலிருந்து இந்த வகையிலும் தொலைக்காட்சி என்பது வித்தியாசப்படுகின்றது. சுருங்கச் சொல்வதென்றால் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையே தொலைக்காட்சி, வீடியோக்களில் காணப்படுகிறது. எனவே இவற்றை உருவப்படம் என்ற பட்டியலில் சேர்க்க முடியாது.
மேலும் உருவப் படங்களைப் பொறுத்த வரை அவற்றை ஒட்டுமொத்தமாக இஸ்லாம் தடை செய்து விடவில்லை. அவற்றில் சில விதிவிலக்குகளையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்த போது உருவப்படம் வரையப்பட்ட திரைச் சீலைகளைக் கண்டதும். அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2479
நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். உருவப் படங்கள் இருக்கும் நிலையிலேயே அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 24908
தலையணைகளாக ஆக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கட்டளையிட்டதாக மற்றொரு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நூல்: அஹ்மத் 23668
ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து “சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச் சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான்” என்று என்னிடம் கூறினார்கள். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள் என்றும் என்னிடம் கூறினார்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்கள்: அஹ்மத் 7701, திர்மிதீ 2730, அபூதாவூத் 3627
தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச் சீலை இருந்ததாகவும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிழித்ததும், அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 3935
இந்த ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும் போது “மதிப்பு மிக்கவையாகக் கருதப்படும் உருவப் படங்களே தடுக்கப்படுகின்றன; மதிப்பில்லாமல் மிதிபடும் உருவப் படங்கள் தடுக்கப்படவில்லை” என்பதை எவரும் அறிய முடியும்.
உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறு ஜிப்ரீல் (அலை) கூறிய வார்த்தை இதைத் தெளிவாக விளக்கும்.
எந்த உருவம் திரைச் சீலையாக தொங்கிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டதோ அதே உருவம் தலையணையாகத் தரையில் போடக் கூடியதாக ஆகும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை. மாறாக அதை அவர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
“அந்தத் திரைச் சீலையை இரண்டாகக் கிழித்த போது உருவமும், பாதி, பாதியாகச் சிதறுண்டு போயிருக்கலாம். அதனால் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்” என்று சிலருக்குத் தோன்றக் கூடும்.
அது சரியான அனுமானம் அல்ல. ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்கள் “உருவம் இருக்கும் நிலையிலேயே அதில் நபிகள் நாயகம் (ஸல்) சாய்ந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்கிறார்கள்.
சின்னஞ்சிறு வித்தியாசத்தையும் நுணுக்கமாகக் கவனிக்கும் அன்னை ஆயிஷா அவர்கள், உருவம் சிதைந்து போயிருந்தால் அதை உருவம் என்று குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.
மேலும் ஜிப்ரீல் (அலை) சம்மந்தப்பட்ட ஹதீஸில் உருவச் சிலையின் தலையை அகற்றுமாறு கூறிய ஜிப்ரீல் (அலை) அவர்கள், உருவப் படங்கள் உள்ள சீலையை உருவம் தெரியாதவாறு நீள வடிவில் பாதியாகக் கிழிக்குமாறு கூறவில்லை. உருவம் தெரியாத அளவுக்கு மாற்றினால் தான் தலையணையாகப் பயன்படுத்தலாம் என்றிருந்தால் “மதிப்பில்லாமல் மிதிபடும் வகையில்’ என்று கூறியிருக்கத் தேவையில்லை.
இன்னும் சொல்வதென்றால் தலையணையாக ஆக்குமாறு கூட அவர்கள் கூறத் தேவையில்லை. உருவம் தெரியாத வகையில் கிழிக்கப்பட்டு விட்டால் அதைத் திரைச் சீலையாகவே மீண்டும் பயன்படுத்தலாம்.
ஆக மதிப்பற்ற விதத்தில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைப் பயன்படுத்தத் தடை ஏதும் இல்லை என்பதே சரியாகும்.
தொங்க விடப்படும் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப் படங்கள், ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கும் போட்டோக்கள், பெட்டியில் பூட்டி வைத்துப் பாதுகாக்கும் உருவப் படங்கள் இவையெல்லாம் தடுக்கப்படுகின்றன. அதைப் பற்றி மதிப்பிருக்கின்ற காரணத்தினால் தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். இது போன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.
செய்தித் தாள்களில் காணப்படும் உருவப் படங்களுக்கும், பொட்டலம் கட்டிக் கொடுக்கப் பயன்படும் காகிதங்களில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கும், பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பெட்டிகளில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கும் (உதாரணம்: தீப்பெட்டி) எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இவைகளை வைத்திருக்கத் தடையும் இல்லை. ஒரு செய்திப் பத்திரிகை நம் வீட்டில் இருந்தால் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பதில்லை.
“நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் போது பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களைத் திருப்பி அனுப்புவார்கள். அதன் பின் அவர்கள் என்னோடு விளையாடுவார்கள்” என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 6130
இந்த ஹதீஸிலிருந்து பொம்மைகள் வைத்து விளையாட அனுமதி உள்ளது என்று அறியலாம்.
“உருவச் சிலைகளுக்கு பொதுவான தடை வந்துள்ளதால், இங்கே குறிப்பிடப்படும் பொம்மைகள் உயிரற்ற மரம், செடி, கப்பல் போன்ற பொம்மைகளாகத் தான் இருக்க முடியும்” என்று கூற இடமுண்டு. இதை மற்றொரு ஹதீஸ், மறுத்து “உயிருள்ளவைகளின் பொம்மைகளையே வைத்து விளையாடி இருக்கிறார்கள்” என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக்கோ, அல்லது ஹுனைனோ இரண்டில் ஏதோ ஒரு போர்க் களத்திலிருந்து திரும்பி வந்தனர். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைக்குப் போடப்பட்டிருந்த திரையை விலக்கியது. அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஆயிஷாவே என்ன இது?” என்றார்கள். “என் பொம்மைகள்” என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, “அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “குதிரை” என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். “குதிரையின் மேல் என்ன?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “இறக்கைகள்” என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். “குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்க, “ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?” என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். இதைக் கேட்டதும், கடவாய்ப் பற்களை நான் காணும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: அபூதாவூத் 4284
உயிருள்ள குதிரையின் உருவச் சிலையைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்காதது மட்டுமல்ல; தமது சிரிப்பின் மூலம் இதற்கு அங்கீகாரமும் அளிக்கிறார்கள்.
உயிரற்றவைகள் மட்டுமல்ல; உயிருள்ளவைகளின் பொம்மைகளைக் கூட சிறுவர்கள் விளையாடலாம்; அதை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
உருவச் சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது, சிறுவர்களின் விளையாட்டுக்காக இல்லாமல் ஏனைய நோக்கங்களுக்காக உள்ள உருவச் சிலைகளுக்கே என்று உணரலாம்.
மதிக்கப்படாத வகையிலும், சிறுவர் சிறுமியர்களின் விளையாட்டுப் பொருளாகவும் உருவப் படங்களுக்கும் பொம்மைகளுக்கும் அனுமதி இருப்பது போல் சிறிய அளவிலான உருவப் படங்களுக்கும் அனுமதி உண்டு.
உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் கூறிய செய்தியை அபூ தல்ஹா (ரலி) தன்னிடம் கூறியதாக ஸைத் பின் காலித் என்பவர் எங்களிடம் அறிவித்தார். ஒரு நாள் ஸைத் பின் காலித் நோயுற்றார். அவரை நோய் விசாரிக்க நாங்கள் சென்ற போது அவரது வீட்டில் உருவப் படங்களுடன் திரைச் சீலை தொங்க விடப்பட்டிருந்தது. அதைக் கண்ட நான் “இவர் உருவப் படங்கள் பற்றிய ஹதீஸை நமக்கு அறிவிக்கவில்லையா?” என்று உபைதுல்லாஹ் அல் கவ்லானி என்பவரிடம் கேட்டேன். அதற்கு அவர் “ஆடையில் சிறிய அளவிலான உருவத்தைத் தவிர” என்று அவர் கூறியதை நீ கேட்கவில்லையா? என்றார். நான் இல்லை என்றேன். அதற்கு அவர் “இல்லை. நிச்சயமாக அவ்வாறு அவர் கூறினார்” என்றார்.
அறிவிப்பவர்: புஸ்ரு பின் ஸயித், நுôல்: புகாரி 3226
சிறிய அளவிலான உருவப்படம் தவிர மற்ற உருவப்படம் உள்ள வீடுகளுக்குத் தான் வானவர்கள் வர மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
சிறிய அளவு, பெரிய அளவு என்பதை எவ்வாறு தீர்மானிப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கூறவில்லை.
இது போன்ற விஷயங்களில் நடை முறையைக் கவனத்தில் கொண்டு நேர்மையான சிந்தனையுடன் நாம் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
சிறிய அளவிலான உருவப்படம் என்று நமக்குப் படுகின்ற உருவப் படங்களை வைத்துக் கொள்வதில் குற்றம் இல்லை.
சுவரில் பிரேம் போட்டு மாட்டி வைக்கும் படம் தான் சாதாரணமான அளவாகும். அதனுடன் ஒப்பிடும் போது ரூபாய் நோட்டுக்கள், உறுப்பினர் அட்டைகள், பாடப் புத்தகங்களில் அச்சிடப்படும் படங்கள் போன்றவை பன்மடங்கு சிறியவையாகும். அளவில் சிறியதாக இருக்கும் காரணத்திற்காகவே இவை அனுமதிக்கப்பட்டதாக ஆகி விடும்.
மேலே குறிப்பிட்டவை அவசியத் தேவை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படும் என்பது மட்டுமன்றி இவை அளவில் சிறியதாகத் தான் இருக்கும்.
அளவில் சிறியதாக இருந்தால் அவசியத் தேவை இல்லாத போதும் உருவப் படங்களைப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல் போன்ற காரணத்துக்காக உருவங்கள் வரைந்து கற்றுக் கொடுப்பதையும் தடை செய்ய முடியாது. சிங்கம், புலி போன்ற விலங்குகளைப் படம் வரைந்து தான் கற்றுக் கொடுக்க முடியும்.
அது போல் சாட்சியங்களாகப் பயன்படக் கூடிய வகையிலும் படங்களைப் பயன்படுத்தலாம்.
ஒரு ஊரில் ஒரு சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அம்பலப்படுத்திட புகைப்படங்கள் சிறந்த சாட்சியமாகப் பயன்படும். சிலரது சந்திப்புகளை நிரூபிக்கும் அவசியம் ஏற்படும் என்றால் அப்போதும் புகைப்படங்களைத் தடுக்க முடியாது.
No comments:
Post a Comment