பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

பெண்கள் பாங்கு சொல்லலாமா?

 

? பெண்கள் பாங்கு சொல்லலாமா?

அஜி

தொழுகைக்காகச் சொல்லப்படும் பாங்கில் இரண்டு வகை உள்ளது.

மக்களைப் பள்ளிவாசலுக்கு அழைப்பதற்காகச் சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த அனுமதியை பெண்கள் பயன்படுத்தியும் வந்தனர். அவர்களில் யாரும் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இடவில்லை. அனுமதிக்கவும் இல்லை.

தொழுகைக்கு வரும் பெண்கள் ஆண்களின் பின்னால் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும் என்ற ஏற்பாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தார்கள். ஆண்களின் வணக்க வழிபாடுகளுக்குப் பெண்கள் ஆண்களுக்கு தலைமை தாங்கக் கூடாது என்பதை இதில் இருந்து நாம் அறிகிறோம். மற்றவர்களை அழைப்பதற்காகப் பாங்கு சொல்வது ஆண்களை முந்துவதில் அடங்கும். எனவே இது போன்ற பாங்குகளை சொல்லக் கூடாது.

ஒரு பள்ளியில் சொல்லப்பட்ட பாங்கு கேட்காத போதும் மக்கள் வசிக்காத பகுதியில் தொழும் போதும் பாங்கு சொல்ல வேண்டும். இந்த வகையான பாங்கை அதாவது தனது தொழுகைக்காகச் சொல்லிக் கொள்ளும் பாங்கை பெண்கள் சொல்லலாம்; சொல்ல வேண்டும்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது “நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும்இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்” என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல்: புகாரி (2848)

யாரையும் அழைக்கும் நோக்கம் இல்லாமல் பயணத்தில் இருக்கும் போதும் பாங்கு சொல்ல வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன்” என்று மாண்பும் வல்லமையும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: அபூதாவூத் (1017)

தன்னந்தனியாக இருப்பவன் கூட பாங்கு சொன்னால் அதை இறைவன் விரும்புகிறான் என்பதால் நாம் தனியாக தொழுதாலும் பாங்கு சொல்ல வேண்டும். இந்த நன்மையை ஆண்களும் அடைந்து கொள்ளலாம். பெண்களும் அடைந்து கொள்ளலாம்

பெண்கள் தனித்துத் தொழும் போதும் அல்லது பெண்களுக்கு பெண்கள் ஜமாஅத் நடத்தும் போதும் தமக்காக பாங்கு சொல்லலாம்.

No comments:

Post a Comment