? முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் இவ்வீட்டுக்குச் செல்லலாமா?
ரஃபீக், நாகர்கோவில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவருக்கும் வெவ்வேறு நிலைபாடுகளை எடுத்துள்ளனர்.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து, நபியவர்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது திரைச் சீலையில் உருவம் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் வெளியேறி விட்டார்கள். பிறகு, “எந்த வீட்டில் உருவங்கள் உள்ளதோ அந்த வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: நஸயீ 5256
தமது மருமகன் அலீ (ரலி) அவர்கள் விருந்து ஏற்பாடு செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்த போது வீட்டில் உருவங்கள் உள்ள அலங்காரத் திரையைப் பார்த்தவுடன் வெளியேறி விட்டனர். உருவங்கள் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டனர்.
ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் விஷயத்தில் இப்படி நடந்து கொள்ளவில்லை.
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது அடக்கத்தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 1341
உருவம் வரைந்த கிறித்தவர்களைத் தான் கண்டித்தனர். நீங்கள் ஏன் அங்கு சென்றீர்கள் என்று தமது மனைவியரைக் கண்டிக்கவில்லை. அதன் அழகை வர்ணித்ததையும் கண்டிக்கவில்லை.
முஸ்லிம் அல்லாதவர்களின் வீடுகளில் சிலைகளோ இன்ன பிற உருவங்களோ இருந்தால் அங்கே நுழைவது தவறில்லை. அவர்களின் வழிபாட்டுத்தலங்களைப் பார்வையிடுவதும் தவறல்ல.
No comments:
Post a Comment