பெண்கள் என்றால் மட்டமானவர்களா? பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்களா? கணவன் சொல்வதைத் தான் மனைவி கேட்க வேண்டுமா? கணவனுக்குப் பிடிக்காதவர்கள் வீட்டுக்கு வரக் கூடாதா? குடும்பத்தில் ஆண்கள் தான் முடிவு எடுக்க வேண்டுமா? ஆண்களைக் கேட்டுத் தான் பெண்கள் செயல்பட வேண்டுமா? இதைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது? இறைவன் படைக்கும் போதே ஆண்களை, பெண்களை விட உயர்வாகவும் மேன்மையாகவும் படைத்திருக்கிறான் என்று என் தந்தை கூறுகிறார். இது உண்மையா?
பதில்: பெண்களை விட ஆண்களுக்கு ஒரு உயர்வு உண்டு என இறைவன் கூறுகிறான்.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 2:228
எல்லா வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்கள்; பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பது இதன் கருத்தல்ல. காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் சிறப்புக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் இஸ்லாத்தின் கருத்தாகும்.
சில வகையில் பெண்களை விட ஆண்கள் சிறப்பிற்குரியவர் களாகவும், மற்ற சில வகையில் ஆண்களை விட பெண்கள் சிறப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.
எந்த ஒரு நிர்வாகமாக இருந்தாலும் அதற்கு ஒரு தலைவன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது நிர்வாகமாக இருக்கும். சிறிய நிறுவனம் என்றாலும் பெரிய நிறுவனம் என்றாலும் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு ஒருவரிடம் இருந்தாக வேண்டும். யார் வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம் என்று இருந்தால் அவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள் என்று ஆகுமே தவிர நிர்வாகமாக ஆகாது.
எவ்வளவு தான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களிடையே எல்லா விஷயத்திலும் ஒத்த கருத்து வராது. எந்த முடிவு எடுப்பது என்பதில் கருத்து வேறுபாடு வரும் போது யாராவது ஒருவருக்கு மற்றவர் கட்டுப்பட்டால் மட்டுமே குடும்ப நிர்வாகம் குலைந்து போகாமல் இருக்கும்.
முரண்பாடு வருகிறது என்பதற்காகக் குடும்பம் சிதைந்து விடக் கூடாது. எனவே கணவனுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதற்கான காரணங்களும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆண்கள் தான் குடும்பத்துக்காகப் பொருள் திரட்டக் கடமைப்பட்டுள்ளனர். உழைத்து, சம்பாதித்து, மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவிடுகிறார்கள் என்பது முதல் காரணமாகும். பொருளாதாரத்தைத் திரட்டுபவன் என்ற அடிப்படையில் தான் அவனுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடமையைச் செய்யாத ஒரு கணவன் தனக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாத்தின் பெயரால் உரிமை கொண்டாட முடியாது.
அடுத்ததாக, உடலமைப்பில் ஆண்கள் தான் பெண்களை விட வலிமையுள்ளவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் முடிவு எடுக்கும் போது மற்றவர் அதற்குக் கட்டுப்பட மறுத்தால் அப்போதும் குடும்ப அமைப்பு சீர்குலைந்து விடும். யாருக்கு வலிமை அதிகம் உள்ளதோ அவரிடம் அந்த அதிகாரம் இருந்தால் மற்றவர் கட்டுப்பட எளிதாக இருக்கும் என்பது மற்றொரு காரணமாக இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இவ்விரு காரணங்களையும் குறை சொல்ல முடியாது. இருவருக்கும் ஆசைகள் இருந்தாலும் ஆண் முடிவு செய்தால் தான் இல்லறமே நடக்கும். ஆணுக்கு ஆசை இல்லாமல் பெண்ணுக்கு மட்டும் ஆசை இருந்தால் பெண்ணால் ஒன்றும் செய்ய முடியாது. இவ்விரு காரணங்களால் தான் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்யும் உரிமையைப் பெறுகிறார்கள் என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்
சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:34
இப்படி குடும்பத் தலைவனாக கணவன் நியமிக்கப்பட்டதால் பெண்ணுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றோ அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றோ பெண்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அடக்கியாளலாம் என்றோ இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. இதையும் இஸ்லாம் தெளிவுபடுத்தத் தவறவில்லை.
உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 7095
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2911
நல்ல மனைவியை ஒருவன் அடைந்திருப்பது அல்லாஹ் செய்த அருள் என்று நினைக்கும் ஒருவன் பெண்ணை அடிமையாக நடத்த மாட்டான். மனைவிக்கு நல்லவனாக இருப்பவன் தான் மனிதரில் நல்லவன் என்ற அறிவுரையை நம்புபவன் மனைவியின் மார்க்கத்துக்கு உட்பட்ட ஆசைகளுக்குத் தடை போட மாட்டான். மனைவியின் உறவினரோடு இவனுக்கு ஏதும் மனவருத்தம் இருப்பதால் மனைவியையும் அவளது இரத்த பந்தங்களையும் பிரிக்க மாட்டான். ஒரு கணவன் இப்படியெல்லாமா நடப்பது என்று ஒரு பெண் கேள்வி கேட்டால் அந்தப் பெண்ணுக்கு அவன் நல்லவனாக நடக்கவில்லை என்று ஆகிவிடும்.
அடித்துச் சித்திரவதை செய்ய மாட்டான். அப்படிச் செய்தால் அவன் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவனாக ஆவான். கணவனுக்கு கட்டுப்படுவதற்கும் எல்லை உண்டு.
இவ்வுலகிலும், மறு உலகிலும் நன்மை பயக்கும் காரியங்களில் ஒரு பெண் தனது கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும். கணவன் தீமையான செயலைச் செய்யும் படி கட்டளையிட்டால் அதில் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. அவ்வாறான காரியங்களில் கணவனுக்குக் கட்டுப்படுதல் அறவே கூடாது.
அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, “என் மகளின் கணவர், எனது மகளின் தலையில் ஒட்டுமுடி வைக்கச் சொல்கிறார்” என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5205
எந்த மனிதனுக்குக் கட்டுப்படுவதாக இருந்தாலும் தீமைகளில் கட்டுப்படக்கூடாது என்பது பொதுவான விதியாகும். இது கணவன் மனைவி விஷயத்துக்கும் பொருந்தும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை அனுப்பி அவர்களுக்கு ஒருவரைத் தளபதியாக்கினார்கள். அவர் (ஒரு கட்டத்தில் படைவீரர்கள் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, “இதில் நுழையுங்கள் என்று சொன்னார். அவர்கள் அதில் நுழைய முனைந்தார்கள். (படையிலிருந்த) மற்றவர்கள், “நாம் நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே (இஸ்லாத்திற்கு) வந்தோம்” என்று கூறினர். ஆகவே, இதை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். “அவர்கள் அதில் புகுந்திருந்தால் மறுமைநாள் வரை அதிலேயே இருந்திருப்பார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். “அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்” என்றும் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: புகாரி 7257
கணவன் வெறுப்பவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாதா? என்று கேட்டுள்ளீர்கள். உங்களுக்கு மஹ்ரமான உறவு இல்லாத அந்நியர்கள் சம்பந்தமாக கணவர் அவ்வாறு கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படத் தான் வேண்டும். உங்களுக்கு மஹ்ரமான உறவினர்கள் விஷயமாக அவர் இது போல் கட்டளையிடக் கூடாது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். என்னுடன் ஒரு ஆண் இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். “ஆயிஷாவே இவர் யார்?” என்று கேட்டார்கள். “இவர் எனது பால்குடிச் சகோதரர்” என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆயிஷாவே உங்கள் சகோதரர்கள் யார் என்பதில் கவனமுடன் இருங்கள். பசியால் பால் குடித்தாலே பால்குடிச் சகோதரர் என்ற உறவு ஏற்படும்” எனக் கூறினார்கள்
நூல்: புகாரி 2647
பால்குடிச் சகோதரர் என்பது நெருக்கமான உறவாகும். அது போன்ற உறவுடையவர்கள் தமது மனைவியின் வீட்டுக்கு வருவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறுப்பு இல்லை. ஆனால் உண்மையில் பால்குடிச் சகோதாரர் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள்.
ஒருவரது மனைவியின் உறவினர்கள், மனைவியைப் பார்க்க வருவதற்கும் உறவைப் பேணுவதற்கும் கணவன் குறுக்கே நிற்கக் கூடாது. அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் கணவனுக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருப்பது மனைவியின் பொறுப்பாகும். பிரச்சனை இல்லாத இல்லறத்துக்கு இது அவசியமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களே) பெண்கள் விஷயத்தில் நல்லவிதமாக நடந்து கொள்வது பற்றி (என்னுடைய) அறிவுறைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள். நிச்சயமாக (பெண்களாகிய) அவர்கள் உங்களுடைய பொறுப்பில் இருக்கின்றார்கள். இதைத் தவிர அவர்களிடமிருந்து நீங்கள் எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தெளிவான மானக்கேடான காரியங்களைச் செய்தாலே தவிர. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களைப் படுக்கையறைகளில் காயம் ஏற்படாதவாறு அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழிகளைத் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாவன: மற்றவர்களுக்கு உங்கள் படுக்கைகளைக் கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவன: அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும்.
நூல்: திர்மிதி 1083
முடிவு எடுக்கும் அதிகாரம் கணவனுக்கு உண்டு என்றாலும் குடும்ப நலனுக்காகக் கணவன் தன் மனைவியிடத்தில் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். சரியான ஆலோசனைகளைச் சொல்லும் போது கணவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நபியவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தமது மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஆலோசனை கேட்டு அவர்களது முடிவின் அடிப்படையில் செயல்பட்டுள்ளார்கள்.
(பார்க்க: புகாரி 2734)
No comments:
Post a Comment