(ஆதமே!) முஹம்மத் (ஸல்) இல்லை என்றால் உன்னை படைத்திருக்க மாட்டேன்.
இச் செய்தி ஆதாரமானதா?
ஜே.எம். சாபித் (ஷரயி, ரியாதி)
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ الهَمْدَانِيُّ، ثنا أَبُو الحَسَنِ عَلِيُّ بْنُ إِبْرَاهِيمَ، ثنا أَبُو القَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ أَمِيرِ الطَّرَسُوسِيُّ، ثنا الحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا عُمَرُ بْنُ أَيُّوبَ، ثنا عَبْدُ الرَّحْمٰنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ رضي الله عنه قال: لَمَّا اقْتَرَفَ آدَمُ الخَطِيئَةَ قَالَ: «يَا رَبِّ! أَسْأَلُكَ بِحَقِّ مُحَمَّدٍ ﷺ لَمَّا غَفَرْتَ لِي».
فَقَالَ: «يَا آدَمُ! وَكَيْفَ عَرَفْتَ مُحَمَّدًا وَلَمْ أَخْلُقْهُ؟».
قَالَ: «يَا رَبِّ! لَمَّا خَلَقْتَنِي بِيَدِكَ، وَنَفَخْتَ فِيَّ مِنْ رُوحِكَ، رَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ عَلَى قَوَائِمِ العَرْشِ مَكْتُوبًا:
لَا إِلٰهَ إِلَّا اللهُ، مُحَمَّدٌ رَسُولُ اللهِ،
فَعَلِمْتُ أَنَّكَ لَمْ تُضِفْ إِلَى اسْمِكَ إِلَّا أَحَبَّ الخَلْقِ إِلَيْكَ».
فَقَالَ: «صَدَقْتَ يَا آدَمُ! وَلَوْلَاهُ مَا خَلَقْتُكَ».
(المستدرك للحاكم / البيهقي / الطبراني)
"ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) பாவத்தைச் செய்தபோது, அவர் கூறினார்:
'என் இறைவா! நான் உன்னிடத்தில், முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உரிமையைக் கொண்டு கேட்கிறேன், என்னை பொறுத்தருள்வாயாக!
அப்போது அல்லாஹ் கூறினான்: 'ஆதமே! நான் இன்னும் அவரை (முஹம்மதை) படைக்கவில்லையே, நீர் அவரை எப்படித் தெரிந்துகொண்டாய்?'
ஆதம் கூறினார்: 'என் இறைவா! நீ என்னை உமது கையால் படைத்தபோது, உனது ரூஹிலிருந்து ஊதிய போது, நான் தலையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது அர்ஷின் (அரியாசனத்தின்) தூண்களில் "லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்று எழுதப்பட்டிருந்தது.
உனது பெயருடன் சேர்க்கப்பட்ட அந்தப் பெயர், உம்மிடத்தில் மிகவும் பிரியமானவரின் பெயராகத்தான் இருக்க முடியும் என்பதை அறிந்தேன்.
அப்போது அல்லாஹ் கூறினான்: 'ஆதமே உண்மை உரைத்துவிட்டாய், (நான் உன்னை மன்னித்துவிட்டேன்.) முஹம்மத் இல்லாவிட்டால், உன்னைப் படைத்திருக்க மாட்டேன். (நூல்கள்:- தபரானி, பைஹகி, ஹாகிம்)
மக்கள் மத்தியில் பிரபல்யமான இந்த செய்தி ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.
இந்த செய்தியில் இடம்பெறும் பிரதான அறிவிப்பாளர் عَبْدُ الرَّحْمٰنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ அப்துர் ரஹ்மான் இப்னு ஷைத் இப்னி அஸ்லம் எனும் அறிவிப்பாளர் ஹதீஸ் கலை வள்ளுனர்களால் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்றும் மிக மிக பலயீனமாவர் என்றும் இவரது அறிவிப்புக்களை ஆதாரமாக கொள்ள முடியாதவர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
ஆகையால் மேற்க்குறித்த செய்தியில் இவர் இடம்பெற்றிருப்பதனால் இச் செய்தி ஆதாரமாக கொள்ள முடியாத நபியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.
இந்த ஹதீஸை இமாம் ஹாக்கிம் தனது ‘முஸ்தத்ரக்’ எனும் நூலில் பதிவு செய்து விட்டு தான் இதனை ஸஹீஹான ஹதீஸ் என நினைப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
ஆனால் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும்போது அவர்களின் பெயர் பட்டியலில் மேற்ச்சொன்ன அப்துர் ரஹ்மான் இப்னு ஷைத் இப்னி அஸ்லம் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமான ஒரு அறிவிப்பாளர், ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் என்பது ஹதீஸ் கலை அறிஞர்களின் (முஹத்திஸீன்களின்) கருத்தாகும் என விபரமாக மேலே விளக்கியிருந்தேன்.
இன்னும் இமாம் ஹாக்கிம் அவர்களால் அறிவிக்கப்படும் இந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் நிராகரிக்கப்பட வேண்டியதுதான் என்பதை கீழுள்ள விளக்கத்தை வைத்து புரிந்து கொள்வீர்கள்.
இமாம்களான அஹ்மத் பின் ஹன்பல், அபூ ஸுர்ஆ, அபூ ஹாத்தம், நஸயி, தாரகுத்னி போன்ற ஹதீஸ் அறிஞர்களில் பெரும்பாலோர் அப்துர்ரஹ்மானை ஒரு பலவீனமான அறிவிப்பாளராகவே கணித்துள்ளனர்.
அபூ ஹாத்திம் பின் ஹிப்பான் (இப்னு ஹிப்பான்)என்பவர் அப்துர்ரஹ்மானைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘இவர் தம்மை அறியாமலே ஹதீஸ்களை மாற்றியும், திருப்பியும் கூறிக் கொண்டிருந்தார். ஆதலால் அவரால் அறிவிக்கப்படும் ஹதீஸ்களை ஒதுக்கி விடுவதே சிறந்தது’ என்றார்.
இன்நிலையில் ஹதீஸ் கலையில் இமாம் ஹாக்கிம் இதை ஸஹீஹ் என்று கூறியிருப்பது கவனிக்கப்பட மாட்டாது. ஏனென்றால் ஹாக்கிம் ஸஹீஹ் எனக்கூறிய இதைப்போன்ற பல ஹதீஸ்களுக்கு ஹதீஸ் கலை அறிஞர்கள் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அறிஞர்களிடத்தில் பொய்யானது, புனையப்பட்டது என்றெல்லாம் நிரூபிக்கப்பட்ட பல ஹதீஸ்களை ஹாக்கிம் ஸஹீஹ் என்று கூறியிருக்கிறார்.
அறிஞர் பைஹகீ, இப்னுல் ஜவ்ஸீ மற்றும் ஹதீஸ் கலை அறிஞ்சர்கள் பலர் குறிப்பிடும் போது : ஈஸா நபியின் போதனைகளை கூறப்பட்டுள்ள (ஸர்பிப்னு ஸர்மலாவின்) ஹதீஸை இமாம் ஹாக்கிம் ஸஹீஹ் என்று கூறியுள்ளார். ஆனால் அது பொய்யானது என்று அறிஞர்கள் ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
புனையப்பட்ட ஹதீஸ் என்று அறிஞர்களால் தீர்ப்பு வழங்கப்பட்ட எத்தனையோ ஹதீஸ்களை ஸஹீஹானவை என இமாம் ஹாக்கிம் அவர்கள் தமது முஸ்தத்ரக் என்ற நூலில் கூறியிருக்கிறார். இதன் காரணத்தினால் மேற்கோள் காட்டுவதற்காக அறிஞர்கள் இமாமை ஹாக்கிமின் ஸஹீஹான ஹதீஸ்களை எடுத்து கொள்ள மாட்டார்கள். அவர் ஹதீஸ்களை தஸ்ஹீஹ் ஸஹீஹ் ஆக்குவதில் பலம் குன்றியவர் என்பதே சரியானதாகும்.
அதே நேரம் இந்த ஹதீஸின் பலயீனத்தால் இது அல்-குர்ஆனுக்கும் நேரடியாக முரண்படுகின்றது.
ஆதம் நபியின் பிரார்த்தனை அதனுடைய வார்த்தைகளோடு குர்ஆனிலேயே மிகத் தெளிவாக வந்துவிட்டது.
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
(ஆதமும், ஹவ்வாவும்) “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 7:23)
இவ்வசனத்தில் ஆதம் அலை அவர்கள் இறைவனிடம் மண்ணிப்புக் கோரிய போது "நீ எங்களை மண்ணித்து அருள் செய்யாவிட்டால்" என்றே வந்துள்ளது மாறாக முஹம்மத் (ஸல்) அவர்களின் பொருட்டால் என்று வரவில்லை.
فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டார், (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
(அல்குர்ஆன் : 2:37)
இங்கு ஆதம் நபிக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்த வார்த்தைகளைக் கொண்டே அவர் தவ்பா செய்தார் என்றும் அல்லாஹ்வும் மண்ணித்தான் என்று தெளிவாக வந்துள்ளது.
நபி ஸல் அவர்களை ஆதம் நபி வஸீலாவாக வைத்து பிரார்தித்ததாக ஒரு வார்த்தை கூட வரவில்லை.
மேலும், இச் செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பதனாலேயே அல்-குர்ஆனுடனும் முரண்படுகின்றது.
எனவே பொய்களை நம்பி ஏமாந்துவிடாமல் ஆதாரமான செய்திகளைப் பின்பற்றுவோம்.
No comments:
Post a Comment