கேள்வி : நபி தாவூத் (அலை) அவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
விளக்கம் : பொதுவாக இறைத்தூதர்கள் "அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு யாதுன்றையும் இணை கற்பிக்கக் கூடாது " என்கிற ஏகத்துவ முழக்கத்திற்க்கே அனுப்பப்பட்டார்கள்.
இந்த இறைத்தூதர்களில் ஏராளமானவர்கள் அனுப்பப்பட்டிருந்தாலும் அவர்களில் ஒரு சிலருடைய பெயர்களே திருமறை குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது .
அது மட்டுமின்றி இறைத்தூதர்களின் பிறப்பு ,இறப்பு காலங்களை குறித்து சொல்வது குர்ஆனுடைய அல்லது நபிமொழிகள் உடைய நோக்கம் கிடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் நபி தாவூத் ,நூஹ் ,ஆதம், முஹம்மத் (ஸல்) போன்ற இறைத்தூதர்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்பன போன்ற தரவுகள் திருக்குர்ஆனிலோ அல்லது நபிமொழியில் பார்க்கும்பொழுது நமக்கு கிடைக்க பெறுகின்றது .
அதன் அடிப்படையில் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்நாள் காலம் பின்வரும் நபிமொழியின்படி நூறு ஆண்டுகள் என்று விளங்க முடிகிறது.
அல்லாஹ், ஆதமைப் படைத்து அவரிடம் உயிரை ஊதினான். அவர் உடனே தும்மி, “அல்ஹம்துலில்லாஹ்‘ என்று கூறி, அவனது அனுமதியுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்தார். அவரிடம் அவரது இறைவன், “ஆதமே! யர்ஹமுக்கல்லாஹ் – அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக! இதோ அமர்ந்திருக்கின்ற இந்த மலக்குகளின் கூட்டத்திடம் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வீராக!‘ என்று கூறினான். (அவ்வாறு அவர் கூறியதும் அம்மலக்குகள்) பதிலளித்தனர். பின்னர் அவர் தன்னுடைய இறைவனிடம் திரும்பியதும், “இது உம்முடைய முகமனும், உமது பிள்ளைகள் தங்களுக்கிடையில் (பரிமாறுகின்ற) முகமனும் ஆகும்” என்று இறைவன் கூறினான்.
பிறகு தன்னுடைய இரு கைகளும் பொத்தப்பட்டிருக்கும் நிலையில், “இவ்விரண்டில் நீர் விரும்பிய எதை வேண்டுமானாலும் தேர்வு செய்க” என்று கூறினான். “நான் என்னுடைய இறைவனின் வலது கையைத் தேர்வு செய்தேன். எனினும் என்னுடைய இறைவனின் இரு கைகளுமே பாக்கியமாக்கப்பட்ட வலது கை தான்” என்று ஆதம் கூறினார். பிறகு அதை அல்லாஹ் விரித்தான். அதில் ஆதமும் அவரது சந்ததியினரும் இருந்தனர். “என்னுடைய இறைவா! இவர்கள் யார்?” என்று ஆதம் கேட்டார். “இவர் உன்னுடைய மகன் தாவூத்! அவருக்கு வயது நாற்பதாக எழுதியிருக்கிறேன்” என்று பதிலளித்தான். “இறைவா! அவருக்கு வயதை அதிகமாக்கு!” என்று கேட்டார். “நான் அவருக்கு எழுதியது அது தான்” என்று பதில் சொன்னான். “என்னுடைய இறைவா! அவருக்கு என்னுடைய வயதிலிருந்து அறுபதை வழங்குகிறேன்” என்றார். “அது நீ கேட்டது போல் தான்” என்று அவன் கூறினான்.
பிறகு அல்லாஹ் நாடியவரை அவர் சுவனத்தில் குடியமர்த்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து இறக்கப்படுகின்றார். ஆதம் தனக்குள் இதைக் கணக்கிட்டுக் கொண்டே இருந்தார். அவரிடம் மலக்குல் மவ்த் வந்தார். ஆதம் அவரிடம், “நீர் அவசரப்பட்டு வந்து விட்டீர். எனக்கு ஆயிரம் வருடங்கள் எழுதப்பட்டிருக்கின்றது” என்று கூறினார். அதற்கு மலக்குல் மவ்த், “சரிதான். ஆனால் உம்முடைய மகன் தாவூதுக்கு நீர் அறுபது வயதைக் கொடுத்து விட்டீர்” என்றார். ஆதம் மறுத்தார். அவருடைய சந்ததியும் மறுத்தது. ஆதமும் மறந்தார். அவருடைய சந்ததியும் மறந்தது. அன்றிலிருந்து தான், எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டு விட்டது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 3290
No comments:
Post a Comment