? திருக்குர்ஆன் 2:62 வசனத்தில் நல்லறம் செய்யும் யூத, கிறித்தவர்களுக்குக் கவலை இல்லை என்று கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் யூத, கிறித்தவர்களை காஃபிர்கள் என்று கூறுவது சரியா?
நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 9:60)
இந்த வசனத்தில், நல்லறம் செய்யும் எல்லா யூத, கிறித்தவர்களுக்கும் கவலை இல்லை என்று கூறப்படவில்லை. யூத, கிறித்தவர்களில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பி, அதாவது ஈமான் கொண்டு நல்லறம் செய்பவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தான் இந்த வசனம் கூறுகின்றது.
யூதர்களும் கிறித்தவர்களும் தமக்கு அருளப்பட்ட வேதத்தை நம்பினால் மறுமையில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உண்மை தான்.
அவர்களின் வேதங்களில் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகை பற்றியும், அவர் வரும் போது அவரைப் பின்பற்றுவது பற்றியும் கட்டளையிடப்பட்டுள்ளது. அந்தக் கட்டளையை அவர்கள் மீறினால் அவர்கள் தமது வேதத்தையே நம்பவில்லை என்பது தான் பொருள்.
நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
அல்குர்ஆன் 2:146
இதே கருத்து 3:71, 6:20, 7:157, 23:69 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் வருவதற்கு முன் யூதர்களும் கிறித்தவர்களும் தமது வேதங்களின் அடிப்படையில் நடந்து மரணித்திருந்தால் அவர்கள் அஞ்சத் தேவையில்லை. நபிகள் நாயகம் வந்த பின் அவர்களை ஏற்றுக் கொண்டால் தான் அவர்கள் தமது வேதங்களை நம்பினார்கள் என்று சொல்ல முடியும். மேற்கண்ட வசனத்தை இப்படிப் புரிந்து கொண்டால் குழப்பம் வராது
ஈமான் கொள்ளாத யூத, கிறித்தவர்களை காஃபிர்கள் என்று அழைப்பதில் தவறில்லை. இதைக் கீழ்க்கண்ட வசனத்திலிருந்தும் அறியலாம்.
இவ்வாறே உமக்கு இவ்வேதத்தை அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இதை நம்புகின்றனர். (வேதம் கொடுக்கப்படாத) இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை.
அல்குர்ஆன் 29:47
முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்பாத, அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனை இறை வேதம் என்று நம்பாத அனைவருமே இஸ்லாத்தின் பார்வையில் காஃபிர்கள் - இறை மறுப்பாளர்கள் தான். காஃபிர்களைத் தவிர வேறு யாரும் நமது வசனங்களை மறுப்பதில்லை என்று இறைவன் கூறுவதிலிருந்து இதை அறிய முடியும்.
--> Q/A Ehathuvam Magazine Mar 2008
No comments:
Post a Comment