பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் ??

? இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் கைகளை கட்டி விட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா?


ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 636, முஸ்லிம் 1053

தாமதமாக வந்தாலும் தொழுகையில் நுழைவதற்கு அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னரே சேர வேண்டும்.

தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தக்பீர் (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு தஸ்லீம் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்) ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56, இப்னுமாஜா 271, அஹ்மத் 957

கைகளைக் கட்டிய பின்னர் தான் இமாம் இருக்கும் நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்கு ஆதாரம் இல்லை.

? பால்குடிப் பருவம் இரண்டு ஆண்டுகள் என்று இறைவன் கூறியிருக்க பெண்கள் தங்கள் அழகு கெட்டு விடும் என்று பால் குடியை விரைவிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இது சரியா?

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:233)

இந்த வசனம் பாலுட்டுவதின் முழுமையான காலம் இரண்டு ஆண்டுகள் என்று கூறுகிறது.

குழந்தைக்கு மிக மிகச் சிறந்த உணவு தாய்ப்பாலை விட வேறு எதுவும் இல்லை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் தான் நிறைந்து கிடைக்கிறது. குழந்தையின் மீது அக்கறை உள்ளவர்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த மாட்டார்கள். தாயின் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டும் குழந்தையின் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டும் பாலூட்டுதலை நிறுத்தினால் தவறில்லை. அழகு கெட்டு விடும் என்று பாலூட்டுதலை நிறுத்தினால் அது குழந்தையின் நலனுக்குச் செய்கின்ற துரோகமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வசனம் தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர் ஸுஹ்ரி அவர்கள் அழகிய விளக்கத்தைத் தந்துள்ளார்கள்.

ஸுஹ்ரீ அவர்கள் (2:233ஆவது வசனத்தின் விளக்கவுரையில்) கூறினார்கள்:

எந்தத் தாயும் தன் குழந்தை மூலம் (குழந்தையின் தந்தைக்கு) இடையூறு அப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அது எவ்வாறெனில், தன்னால் குழந்தைக்குப் பாலூட்ட முடியாது எனத் தாய் மறுக்கிறாள். உண்மையில், தாய்ப்பால் தான் குழந்தைக்குச் சிறந்த உணவாகும். மற்றவர்களை விடத் தாயே தன் குழந்தை மீது அதிகப் பரிவும் பாசமும் கொண்டவள் ஆவாள். எனவே, (குழந்தையின்) தந்தை, தன் மீது இறைவன் விதித்துள்ள கடமையை (ஜீவனாம்சத்தை) அவளுக்கு நிறைவேற்றிய பின்பும் அவள் (பாலூட்ட) மறுக்கக் கூடாது. (இதைப் போன்றே,) குழந்தையின் தந்தை தன் குழந்தை மூலம் அதன் தாய்க்கு இடையூறு அக்கலாகாது. (உதாரணமாக) தாய் பாலூட்ட முன்வந்தும், அவளுக்கு இடரப்பதற்காக மற்றொரு பெண்ணைப் பாலூட்டுமாறு கூறி, தாயைத் தடுப்பது கூடாது. ஆனால், தாயும் தந்தையும் மனமொப்பி வேறொரு பெண்ணைப் பாலூட்ட ஏற்பாடு செய்தால் குற்றமாகாது. மேலும், இருவரின் திருப்தியோடும் ஆலோசனையின் பேரிலும் பால்குடியை நிறுத்த இருவரும் விரும்பினால் அதுவும் குற்றமாகாது. (புகாரி 5360வது ஹதீஸின் அடுத்து வரும் பாடம்)

--> Q/A Dheengula Penmani May 2008

No comments:

Post a Comment