? நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன?
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 64:14
ஒரு நபித்தோழர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது அவரது மனைவி, மக்கள் அவரைத் தடுத்ததாகவும், அதைக் குறிப்பிட்டே இந்த வசனம் அருளப்பட்டதாகவும் திர்மிதி என்ற நூலில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும்.
இறை நினைவில் ஈடுபடுவதை விட்டும் தடுப்பதில் மனைவி, மக்கள், செல்வம் போன்ற அருட்கொடைகள் முன்னிலை வகிக்கின்றன. எனவே தான் இவற்றைச் சோதனை என்று மேற்கண்ட வசனத்திற்கு அடுத்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது.
அல்குர்ஆன் 64:15
உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 8:28
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.
அல்குர்ஆன் 63:9
மனைவி, மக்களில் இறை நினைவை விட்டுத் தடுப்பவர்கள் எதிரிகள் என்பதையே அந்த வசனம் குறிப்பிடுகின்றது என்பதை இங்கு நாம் எடுத்துக் காட்டியிருக்கும் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
--> Q/A Ehathuvam Magazine Apr 2009
No comments:
Post a Comment