? ஜகாத் பொருளை தூய்மைப்படுத்துமா? அல்லது ஆளைத் தூய்மைப்படுத்துமா? பொருளைத் தூய்மைப்படுத்தினால் அந்தப் பொருளுக்கு மறுமுறை ஜகாத் அவசியம் இல்லை தானே?
டி ஜகாத் பொருளையும் தூய்மைப்படுத்தும் என்றே நாம் கூறி வருகிறோம். ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டால் அது தூய்மையடைந்து விடுகிறது. எனவே மீண்டும் அதே பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக நாம் கூறிய கருத்தையும் இதை மறுப்பவர்களின் கருத்தையும் மீண்டும் தருகிறோம்.
தங்கத்தையும் வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன் என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1417
எஞ்சிய பொருட்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்ற நபிகள் நாயகத்தின் இந்தக் கூற்று நமது முடிவை வலுப்படுத்தும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.
பொருள்களைச் சுத்தமாக்கவே ஜகாத் என்ற கருத்தில் எந்த நபிமொழியும் அறவே கிடையாது என்று மாற்றுக் கருத்துடையவர்கள் மறுப்புப் புத்தகம் வெளியிட்டார்கள்.
ஆனால் இவர்கள் கூறியதற்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ் அமைந்துள்ளது.
பொருட்களைச் சுத்தப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகத் தான் ஜகாத் கடமை என்றால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பது மிகத் தெளிவு. இந்த ஹதீஸ் மிகத் தெளிவாக நமது முடிவை உறுதிப்படுத்துவதைக் கண்ட பின்னர், இந்த ஹதீஸ் தொடர்பு அறுந்தது என்று கூறி மாற்றுக் கருத்துடையவர்கள் இதை நிராகரிக்க முயல்கின்றனர்.
இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.
1. நூலாசிரியர் அபூதாவூத் 2. உஸ்மான் பின் அபீஷைபா 3. யஹ்யா 4. யஃலா 5. கைலான் 6. ஜஃபர் பின் இயாஸ் 7. முஜாஹித் 8. இப்னு அப்பாஸ் (ரலி) 9. உமர் (ரலி) 10. நபிகள் நாயகம் (ஸல்)
இந்த வரிசையில் ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமக்கு அடுத்த அறிவிப்பாளரிடமிருந்து இதை அறிவிக்கின்றார்கள். இந்தப் பட்டியலில் கைலான் (5) என்பவர் ஜஃபர் பின் இயாஸ் (6) என்பாரிடமிருந்து அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் சந்திப்பு ஏதும் இல்லை. எனவே இது தொடர்பு அறுந்த (முன்கதி) ஹதீஸாகும் என்று மறுப்பு கூறுகின்றனர்.
இருவரிடையே சந்திப்பு இல்லை என்று கூறுவோர் அதற்கான காரணத்தைக் கூற வேண்டும். அவ்வாறு கூறாமல் அல்பானி கூறி விட்டார் என்பதைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.
நாஸிருத்தீன் அல்பானியை விடப் பல மடங்கு ஹதீஸ்களை ஆய்வு செய்த இப்னு ஹஜர், தஹபீ, இப்னு மயீன், யஹ்யா பின் ஸயீத் உள்ளிட்ட பல அறிஞர்கள் காரணமின்றி செய்யும் விமர்சனங்களை நிராகரிக்கும் இவர்கள் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த நாசிருத்தீன் அல்பானியின் ஆய்வில் மட்டும் தவறே ஏற்படாது என்ற தவறான நம்பிக்கையில் இந்த ஹதீஸைத் தொடர்பு அறுந்தது என்று கூறுகின்றார்கள்.
நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் சரி என்று சொல்லி விட்டால் அதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகின்றது. ஆனால் அல்பானி அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் பலவீனமானது என்றும், பலவீனமான ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்றும், ஹதீஸில் இல்லாததை இருக்கின்றது என்றும் கூறியதற்கு ஆதாரம் உள்ளது. அல்பானி அவர்கள் சிறந்த அறிஞர் என்றாலும் மனிதர் என்ற அடிப்படையில் அவரிடமும் தவறுகள் ஏற்படவே செய்யும். இது போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்த ஹதீஸ் கலை அறிஞரும் கிடையாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்பு, தொடர்பு அறுந்தது என்பதற்கு அல்பானி எடுத்து வைக்கும் சான்று இது தான்.
ஜஃபர் பின் இயாஸ், உஸ்மான் பின் கத்தான், கைலான் என்ற அறிவிப்பாளர் வரிசையில் இதே ஹதீஸ் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கைலானுக்கும் ஜஃபருக்கும் இடையே உஸ்மான் இடம் பெற்றுள்ளார். இவர் அபூதாவூத் அறிவிப்பில் விடுபட்டுள்ளார். எனவே இது தொடர்பு அறுந்த ஹதீஸாகும் என்று அல்பானி கூறுகின்றார்.
ஆனால் ஹாகிமில் இடம் பெறும் இடையில் உள்ள அறிவிப்பாளர் உஸ்மான் பின் கத்தான் பலவீனமானவர் என்பதால் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல. பலவீனமான இந்த அறிவிப்பில் இடையில் ஒருவர் நுழைக்கப்பட்டதால் அபூதாவூதின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் அவர் விடுபட்டுள்ளார் என்று முடிவு செய்வது அர்த்தமற்ற ஆய்வாகும்.
உண்மையில் கைலான் என்பார் ஜஃபர் பின் இயாஸைச் சந்திக்க இயலுமா என்றால் நிச்சயம் முடியும். ஏனெனில் கைலானின் மரணம் ஹிஜிரி 132ஆம் ஆண்டாகும். ஜஃபர் பின் இயாஸின் மரணம் 126வது ஆண்டாகும். (தக்ரீபுத் தஹ்தீப் 1/443- 1/139)
இருவரின் மரணத்திற்கிடையே ஆறு வருட இடைவெளி தான் உள்ளது. ஒருவரையொருவர் சந்திப்பதற்கு ஏற்ற காலத்தை விட இது பன்மடங்கு அதிகமாகும்.
மேலும் ஜஃபர் பின் இயாஸ் பஸராவையும், கைலான் கூஃபாவையும் சேர்ந்தவர்கள். அருகருகே உள்ள இவ்வூர்களைச் சேர்ந்தவர்கள் சந்திப்பதில் எந்த வியப்பும் இல்லை.
ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இரண்டு அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்து, இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருப்பதற்கும், இருவரும் சந்தித்திருப்பதற்கும் சாத்தியமிருக்குமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் கேட்டார் என்பதற்கு அதுவே போதுமானதாகும் என்று முஸ்லிம் இமாம் தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்கள். இந்த அளவு கோலின் படியே தமது ஹதீஸ்களை முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்கள். ஹதீஸ் கலை அறிஞர்களும் இதை ஏற்றுள்ளார்கள். எனவே கைலான், ஜஃபரிமிருந்து செவிமடுத்தார் என்பதை மறுக்க முடியாது.
இருவரும் சந்திக்கவில்லை என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லை. யாருமே ஒப்புக் கொள்ளாத தவறான அளவு கோலின் படி அல்பானி செய்த தவறான முடிவு இது.
பலவீனமான ஹதீஸை வைத்து பலமான ஹதீஸை நிராகரிக்கும் விந்தையையும் இவர்கள் நியாயப்படுத்துகின்றார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்ற வாதம் தவறாகி விட்டதால் பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஸகாத் என்பது உறுதியாகின்றது.
--> Q/A Dheengula Penmani Feb 2008
No comments:
Post a Comment