பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, February 5, 2018

தாயாருக்காக_ஹஜ்ஜுக்குச்_செல்ல_இயலாத_பட்சத்தில்_உம்ரா_செய்யலாமா

#ஹஜ்_உம்ரா

#தாயாருக்காக_ஹஜ்ஜுக்குச்_செல்ல_இயலாத_பட்சத்தில்_உம்ரா_செய்யலாமா?

ஹஜ்ஜுக்கு செல்ல மிகுந்த ஆவல் கொன்டிருந்த என் தாயாருக்கு வசதி இருந்தும், மற்றவர்களின் கஷ்டத்திற்குக் கடனுதவியாகக் கொடுத்திருந்தார்கள். கடன் திரும்பி வரும் முன்பே அவர்கள் மரணித்து விட்டதால், நான் என் உம்ராவை முடித்த பிறகு அவர்களுக்காக உம்ரா செய்யலாமா? ஏனெனில், ஒருவேளை ஹஜ்ஜுக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்ரா மட்டுமாவது அவர்கள் செய்யவேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது.

#பதில்

பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம். பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். எனவே பெற்றோருக்குக் கடமையாக இல்லாவிட்டால் அவருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்யக் கூடாது.

“என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யட்டுமா?” ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உன் தாய் மீது கடன் இருந்தால் நீதானே நிறைவேற்றுவாய்? எனவே அவருக்காக நீ ஹஜ் செய். அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்ற அதிக தகுதி உள்ளது” என்றார்கள்.

நூல்: புகாரி 1582, 7315

அல்லாஹ்வின் கடன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதில் இருந்து கடமையான ஹஜ்ஜாக இருந்தால் தான் பிள்ளைகள் அதைச் செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.

உம்ராவைப் பொருத்த வரை அது ஹஜ் போல் கடமையான வணக்கம் அல்ல. உம்ரா செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான். எனவே மற்றவருக்காக உம்ரா செய்ய முடியாது.

ஆயினும் ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா செய்வதும் ஹஜ்ஜின் வகையில் ஒன்றாக உள்ளதால் பெற்றோருக்காக ஹஜ் செய்யும் போது அதனுடன் உம்ராவையும் செய்யலாம்.

அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாது” என்றேன். “உனது தந்தைக்காக நீ ஹஜ்ஜும் உம்ராவும் செய்துகொள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதி (852)

பெற்றோருக்காக உம்ரா செய்யலாம் என்ற இந்த அனுமதி உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கான அனுமதி இல்லை. மாறாக ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவைச் செய்யும் போது மட்டும் தான் இந்த அனுமதியாகும்.

இந்த ஹதீஸைத் தவறுதலாக புரிந்து கொண்டு, ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டக்கூடாது.

ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. தனித்து உம்ரா செய்ய வேண்டும் என்பது நம்மீது கட்டாயக் கடமையும் இல்லை.

ஒருவரது பிள்ளைகள் தவிர மற்ற உறவினர்களும் அவருக்காக ஹஜ் செய்யலாம். ஆயினும் தனக்காக அவர் ஹஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு மனிதர் “லப்பைக்க அன் ஷுப்ருமா” (ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்) என்று கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஷுப்ருமா என்பவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கவர், என் சகோதரர் என்றோ என் நெருங்கிய உறவினர் என்றோ கூறினார். “உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். அதற்கவர் “இல்லை” என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “முதலில் உனக்காக ஹஜ் செய்! பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்” என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1546, இப்னுமாஜா 2894

பெற்றோர் அல்லாத மற்ற உறவினருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தமக்காக ஹஜ் செய்ய வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

No comments:

Post a Comment