பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 23, 2020

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா?



மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா?

திருமணம் முடிவாகும் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைக் கேட்டுப் பெறுகின்றனர். திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து தொகையாகவோ, நகையாகவோ ,பொருளாகவோ எதைப் பெற்றாலும் அது வரதட்சனையாகும்.

மாப்பிள்ளை வீட்டார் மணமகளுக்கு இவ்வளவு நகை போட வேண்டும் என பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துகின்றனர். இந்த அடிப்படையில் தந்தை தன் மகளுக்கு நகைகளை வாங்கிக் கொடுத்தால் இது அன்பளிப்பாகாது. மாறாக அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கப்படும் வரதட்சனையாகும்.

அன்பளிப்பு என்பது தந்தை தானாக விரும்பிக் கொடுப்பதாகும். அவர் விரும்பினால் கொடுப்பதற்கும், கொடுக்காமல் இருப்பதற்கும் உரிமை உள்ளது. எவ்வளவு அன்பளிப்புச் செய்ய வேண்டும் என்பதையும் தந்தையே தீர்மானிப்பார்.

உங்கள் மகளுக்கு நீங்கள் நகை போட வேண்டும். அந்த நகை இவ்வளவு இருக்க வேண்டும் என்று கேட்பதற்கு மாப்பிள்ளை வீட்டாருக்கு எந்த உரிமையும் இல்லை.

அப்படி கேட்பதற்குக் காரணம் இவள் நம்முடைய வீட்டுக்கு வர இருக்கின்றாள். இவள் அதிகமான நகைகளுடனும் சீர் வரிசைகளுடனும் வந்தால் பிறகு அந்த நகைகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஆசையே இதற்குக் காரணம். எனவே இது தந்தை மகளுக்கு கொடுப்பது என்ற போர்வையில் வாங்கப்படுகின்ற வரதட்சனையாகும்.

மேலும் சீர் என்ற பெயரில் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு பொருட்களை வாங்கித் தருகின்றனர். இதுவும் வரதட்சனையாகும்.

நீங்கள் உங்கள் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்பே அவருக்காக நகைகள் வாங்கிக் கொடுத்திருந்தால் அது உங்கள் மகளின் உடமையாக இருக்கும் வரை வரதட்சனையாக ஆகாது. உங்கள் மகளுக்கு நீங்கள் கொடுத்ததை திருமணத்தைக் காரணம் காட்டி மாப்பிள்ளை வீட்டார் உரிமை கொண்டாடினால் அது வரதட்சனையாகிவிடும்.

திருமணம் முடிந்து மருமகன் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஆன பின் உறவினர் என்ற முறையில் அவருடைய முன்னேற்றத்துக்கு உதவினால் அதுவும் வரதட்சனையாகாது.

திருமணம் செய்வதற்கு நேரடியான அல்லது மறைமுகமான நிர்பந்தனையாக பணமோ, பொருளோ கேட்கப்பட்டால் அல்லது நாம் கொடுக்காவிட்டால் நம் மகளை நல்லபடி நடத்த மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாக கொடுத்தால் அது வரதட்சனையாக ஆகும். இது மிகவும் நுணுக்கமான விஷயம். கவனமாக இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் நிஜமான அன்பளிப்பும் பாவமாகத் தென்பட்டு விடும். அல்லது வரதட்சனையும் அன்பளிப்பாக கருதப்பட்டு விடும்.

ஏகத்துவம்.

No comments:

Post a Comment