பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 3, 2025

மவ்லித் எனும் நபிவழியில் இல்லாத செயலை ஆதரிப்போர்


மவ்லித் எனும் நபிவழியில் இல்லாத செயலை  ஆதரிப்போர்  அதை நியாயப் படுத்துவதற்காக பின்வரும் நபிமொழியை சான்றாகக் காட்டுகின்றனர். 

திங்கட்கிழமையன்று நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, "அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன்; அன்றுதான் "நான் நபியாக நியமிக்கப்பட்டேன்' அல்லது "எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது' என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி), நூல் : முஸ்லிம் (2152)

நபியவர்கள் தமது பிறந்த நாளான திங்களன்று நோன்பு நோற்குமாறு கூறியுள்ளார்கள். எனவேதான் நாங்கள் வேறுவடிவத்திலும் அதைக் கொண்டாடுகிறோம். அதாவது உணவளித்தல், மவ்லிது பாடல்களைப் பாடி கொண்டாட்டங்களில் ஈடுபடுதல் இன்னும் இது போன்று பலகாரியங்களைச் செய்கிறோம் என மவ்லிதை ஆதரிப்போர் கூறுகின்றனர். 

முறையான விளக்கம் : 

திங்கள் கிழமை நோன்பு நோற்பது பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்ட  போது அன்றுதான் அவர்கள் பிறந்ததாகவும், அன்றுதான் அவர்கள் நபியாக நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்கள் என இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. 

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட விதத்தில், குறிப்பிட்ட அளவில் ஒரு செயலை நபிவர்கள் நமக்கு மார்க்கமாக  வழிகாட்டினால் அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறுதான் நாம் செய்ய வேண்டும். நபியவர்கள் செய்த விதம், செய்த அளவு, நிர்ணயித்த காலம், நிர்ணயித்த இடம், செய்ததற்கான நோக்கம் இவற்றில் எதையும் மாற்றம் செய்யும் அதிகாரம் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் தவிர வேறு யாருக்கும் கிடையாது. இது இஸ்லாத்தின் அடிப்படையாகும். 

பின்வரும் சான்றுகளை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் தமது அக்காரியத்தில் சுயமாக முடிவு செய்வது இறைநம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தகுதியானதல்ல. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ அவன் பகிரங்கமாக வழிகெட்டு விட்டான். 

(அல்குர்ஆன் 33 : 36)

(நபியாகிய) அவரது கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குச் சோதனை ஏற்படுவதையோ, அல்லது துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளட்டும். 

(அல்குர்ஆன் 24 : 63) 

தூதர் உங்களுக்குக் கொடுத்ததை எடுத்துக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் 
கடுமையானவன்.

 (அல்குர்ஆன் 59 : 7)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி : 2697. ( முஸ்லிம் 3540 ) 

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : நம் கட்டளையில்லாத  காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (3541)

மேற்கண்ட இறைவசனங்கள் மற்றும் நபி மொழிகள் அனைத்தும் அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒன்றை நமக்கு மார்க்கமாக வழிகாட்டிவிட்டால் அதை மட்டும்தான் நாம் செய்ய வேண்டும். அதில் கூடுதலாகவோ, குறைவாகவோ எந்த ஒரு மாற்றத்தையும் செய்யும் அதிகாரம் நமக்கு இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. 

அவ்வாறு இருக்கையில் நபியவர்களிடம் திங்கள் அன்று நோன்பு நோற்பதைப் பற்றிக் கேட்கப்பட்ட போது அன்றுதான் நான் பிறந்தேன், அன்றுதான் நாம் நபியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறியிருப்பதால் ஒவ்வொரு திங்கள் அன்றும் நாம் நோன்பு நோற்கலாமே தவிர வேறு காரியங்களை மார்க்கம் என்ற பெயரில் உருவாக்குகின்ற அதிகாரம் யாருக்கும் கிடையாது. எனவே திங்கள் கிழமை நோன்பு நோற்பது தொடர்பான செய்தியில் மீலாது விழா கொண்டாடலாம் என்பதற்கோ, மவ்லித் ஓதலாம் என்பதற்கோ , வேறு காரியங்களைச் செய்யலாம் என்பதற்கோ கிஞ்சிற்றும் ஆதாரம் கிடையாது. 

மேலும் திங்கள் கிழமை என்பது ஒவ்வொரு வாரமும் மீண்டும் மீண்டும் வரக்கூடிய நாளாகும். நபியவர்கள் ஒவ்வொரு திங்களும் நோன்பு நோற்றுள்ளார்களே தவிர, தமது பிறந்த நாள் என்று கூறி வருடத்தில் ஒரு நாளை மட்டும் மீலாது விழா என்ற பெயரில் அவர்கள் கொண்டாடவில்லை. 

இன்னும் சொல்லப் போனால் நபியவர்கள் எந்த நாளில் பிறந்தார்கள் என்பதற்குக் கூட உறுதியான எந்த ஒரு சான்றும் கிடையாது. ரபீவுல் அவ்வல் 12 ல்தான் பிறந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல.  

நபியவர்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று நோன்பு நோற்றிருக்கும் போது நாங்கள் வருடத்தில் ஒரு நாளைக் கொண்டாடுவோம் என்பது நபிகள் நாயகத்தை மட்டம் தட்டுகின்ற அதிகப் பிரசங்கித் தன்மையாகும். இதைத்தான் இந்த மீலாது விழா அனாச்சாரத்தை ஆதரிப்போர் நபியை நேசிக்கிறோம் என்ற பெயரில் செய்கின்றனர். 

. இந்தச் செய்தி மீலாது விழா மற்றும் மவ்லித் போன்ற அனாச்சாரங்களை செய்வதற்குரிய ஆதாரமாக இருந்திருந்தால் நபியவர்களும் அருமை ஸஹாபாக்களும் அதைச் செய்து அவற்றை நற்காரியமாக வழிகாட்டியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்ததாக எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.  எனவே இந்தச் செய்தியிலிருந்து இவர்கள் புரிந்து கொள்ளும் விளக்கம் மாபெரும் வழிகேடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.  

“திங்கள் கிழமை நோன்பு பற்றி கேட்கப்பட்ட போது அன்றுதான் நான் பிறந்தேன் என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.” இதன் பிரகாரம் ஒருவர் திங்கள் கிழமை நோன்பு நோற்கலாம் என்றுதான் விளங்கிக் கொள்ளலாம். 

ஆனால் மீலாது விழா மற்றும் மவ்லித் போன்ற அனாச்சாரங்களை ஆதாரங்களை ஆதரிப்போர் அன்று விதவிதமான உணவுகள், குடிபானங்கள், இனிப்புப் பலகார வகைகளை உண்டு ருசித்து சுகபோகத்தில் மூழ்கித் திளைக்கின்றனர். நோன்பு நோற்றல் என்பது இதற்கு நேர் எதிரான காரியமாகும். 

அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை எதையும் உண்ணாமல் பருகாமல் இருப்பதாகும்.  நபிவழிக்கு நேர் எதிரான காரியங்களைச் செய்வதற்கு நபிமொழியை ஆதாரம் காட்டுவதுதான வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. 

நபியவர்கள் ஒவ்வொரு  திங்கள் கிழமையும் பகலில்தான் நோன்பு வைத்துள்ளார்கள். ஆனால் இந்த மீலாது, மவ்லிதுக் காவலர்களோ பகலில் உண்டு ருசித்து, இரவ நேரங்களிலும் சுகபோகத்தில் திளைக்கின்றனர். 

மார்க்கம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் இந்த அனாச்சாரங்களுக்கு இந்த நபிமொழி எப்படி ஆதாரமாக அமையும்? என்பதை அறிவுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

நபியவர்கள் நோன்பு நோற்குமாறு கூறிய நபிமொழியை பண்டிகையாகக் கொண்டுவதற்குரிய ஆதாரமாக குறைந்த பட்ச அறிவுள்ளவர் கூட முன்வைக்கமாட்டார். நோன்பு நோற்பதை பண்டிகைக் கொண்டாட்டமாக நபியவர்கள் கருதியிருந்தால் முஸ்லிம்களுக்கு நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் இரண்டு நாட்கள் மட்டும்தான் பெருநாள் என்று கூறியிருப்பார்களா? பெருநாட்களில் நோன்பு நோற்பதை தடை செய்திருப்பார்களா? இதிலிருந்தே நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதிலிருந்தே பண்டிகையாகக் கொண்டாடுவதற்குரிய ஆதாரமாக இந்த நபிமொழியை முன்வைப்பது மாபெரும் அறியாமையாகும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment