மவ்லிதை ஆதரிப்போரின் ஆதாரம்
قَالَ عُرْوَةُ وثُوَيْبَةُ مَوْلَاةٌ لِأَبِي لَهَبٍ كَانَ أَبُو لَهَبٍ أَعْتَقَهَا فَأَرْضَعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ أُرِيَهُ بَعْضُ أَهْلِهِ بِشَرِّ حِيبَةٍ قَالَ لَهُ مَاذَا لَقِيتَ قَالَ أَبُو لَهَبٍ لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ (رواه البخاري)
உர்வா அவர்கள் கூறுகின்றார்கள்: ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப் பட்டார். அபூலஹபிடம், (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர் கொண்டது என்ன? என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.
(புகாரி 5101)
அபூலஹப் நபியவர்கள் பிறந்த செய்தியைக் கூறிய மகிழ்ச்சியில் ஸுவைபாவை விடுதலை செய்தான். எனவே அபூலஹப் மீலாது விழா கொண்டாடியதால் நரகிலும் அவனுக்கு விரல்களினூடே நீர் புகட்டப்படுகிறது என்றால் ஈமான் உடையவர்களாகிய நாம் கொண்டாடினால் நமக்கும் எவ்வளவு பெரிய பாக்கியம் கிடைக்கும் என மவ்லிதுக் காவலர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பான முறையான விளக்கத்தைக் காண்போம்.
உர்வா அவர்களின் இக்கருத்து, புகாரி 5101 வது ஹதீஸின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் இது நபியவர்கள் கூறிய கருத்து அல்ல.
மேலும் புகாரியில் கூறப்பட்டிருக்கும் கருத்தை நன்றாக மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
“நபியவர்கள் பிறந்த செய்தியை கூறியதற்காக அபூலஹப் ஸுவைபாவை விடுதலை செய்தான்” என்று அச்செய்தியில் இடம் பெற்றுள்ளதா? என்பதைக் கவனியுங்கள்.
“ஸுவைபா அபூலஹபின் அடிமைப் பெண்” என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
“அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார்” என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
“ஸுவைபா நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார்” என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
“ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது“
என்று அபூலஹபின் குடும்பத்தார் கண்ட கனவில் அவன் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பகரமாகத்தான் அவனுக்கு நீர் புகட்டப்படுகிறது என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர நபியவர்கள் பிறந்த செய்தியை ஸுவைபா அறிவித்ததால் அபூ லஹப் ஸுவைபாவை விடுதலை செய்தான் என்றோ, அவன் மீலாது விழா கொண்டாடியதற்காகத்தான் விரல்கள் வழியாக நீர் புகட்டப்படுகிறது என்றோ குறிப்பிடப்படவில்லை.
இவ்விடத்தில் இன்னொன்றையும் நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். ஒரு வாதத்திற்கு நபியவர்களின் பிறப்புச் செய்தியை ஸுவைபா அறிவித்த காரணத்தினால் அந்த மகிழ்ச்சியில் ஸுவைபா அவர்களை அவன் விடுதலை செய்தான் என்று வைத்துக் கொண்டாலும் அபூ லஹப் தன் சகோதரரின் மகன் என்பதற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினானா?
அல்லது இறைத்தூதர் பிறந்து விட்டார் என்பதற்காக அதைக் கொண்டாடுவது இபாதத் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினானா?
தான் இறைத்தூதர் என்று நபியவர்கள் அறிவித்த மாத்திரத்திலேயே தனது இரு கைகளால் இறைத்தூதர் மீது மண்ணை வாரித் தூற்றிய அபூ லஹப் இறைத்தூதர் பிறந்துவிட்டார் என்பதற்காக மகிழ்ச்சியை ஒரு போதும் வெளிப்படுத்தியிருக்கமாட்டான். அதற்காக வெளிப்படுத்தியிருந்தால் அவன் நபியவர்களை எதிர்த்திருக்கவும் மாட்டான்.
அப்படியெனில் அபூ லஹப் தனது சகோதரர் மகன் என்பதற்காக வெளிப்படுத்திய இயல்பான மகிழ்ச்சி எப்படி இறைத்தூதர் பிறந்தார் என்பதைக் கொண்டாடுவதற்கான மார்க்க ஆதாரமாக இருக்க முடியும்.? மீலாதுப் பிரியர்கள் சிந்திப்பார்களா?
தாங்கள் மார்க்கமாகக் கருதும் ஒன்றுக்கு மாபெரும் இறைமறுப்பாளனான அபூ லஹபின் செயல்தான் இந்த மவ்லிதுக் காவலர்களுக்கு ஆதாரமாகிவிட்டதா?
அப்படியெனில் இவர்கள் நபியைப் பின்பற்றுகிறார்களா? அல்லது அபூ லஹபைப் பின்பற்றுகிறார்களா?
அது மட்டுமன்றி இந்தச் செய்தி பல விதங்களில் பொய்யான செய்தியாகும்.
முதலில் இது உர்வா அவர்களின் சுயக்கருத்துதான். உர்வா என்பவர் தாபியீ ஆவார். அவர் அபூ லஹபின் காலத்தையோ, நபியவர்களையோ சந்தித்தவர் அல்ல.
அடுத்து அபூ லஹபின் மரணித்திற்குப் பிறகு அவனது குடும்பத்தாரில் ஒருவர் அபூ லஹவை கனவில் கண்டதாக புகாரியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்த குடும்பத்தார் யார்? அவர் முஸ்லிமா? அவர் கண்ட கனவு உண்மைதானா? அது உண்மை என்பதை யார் உறுதிப்படுத்தியது? அவர் தான் கண்ட கனவை யாரிடம் கூறினார்? அந்த கனவுச் செய்தியை உர்வாவுக்கு அறிவித்தவர் யார்? என்ற எந்த கேள்விக்கும் இச்செய்தியில் எந்த விடையும் கிடையாது.
அது மட்டுமின்றி ஸுவைபா அவர்கள் விடுதலை செய்யப்பட்டது நபியவர்கள் பிறந்து மிக நீண்ட காலத்திற்குப் பிறகுதான். அதாவது நபியவர்கள் ஹிஜ்ரத் செய்தவற்கு முந்தைய காலகட்டத்தில்தான் அபூ லஹப ஸுவைபாவை விடுதலை செய்தான் என்பதே அதிகமான வரலாற்று ஆசிரயர்களின் கருத்தாகும.
மேலும் அபூ லஹப் தொடர்பான இந்தக் கட்டுக்கதை திருக்குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுகின்றது.
இதோ திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
அபூலஹபின் இரு கைகளும் நாசமாகி விட்டன. அவனும் நாசமாகி விட்டான். அவனுடைய செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயனளிக்கவில்லை. அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் நுழைவார்கள்.
(அல்குர்ஆன் 111 : 1-4)
அபூ லஹபின் இருகைகளும் நாசமாகிவிட்டன, அவனும் நாசமாகிவிட்டான் என்று திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகிறது. இருகைகளும் நாசமாகிவிட்டன என்று குறிப்பிடும் போது அது கைகளிலுள்ள பத்து விரல்களையும் சேர்த்துதான் எடுத்துக் கொள்ளும்.
அவ்வாறு இருக்கையில் எந்தக் கைகள் நாசமாகிவிட்டன என்று அல்லாஹ் குறிப்பிடுகிறானோ அந்தக் கைகளிலுள்ள இரு விரல்கள் வழியாக அல்லாஹ் அவனுக்கு நீர் புகட்டுகிறான் என்பது நேர் முரணான கருத்தாகும். எனவே அபூ லஹபிற்கு இருவிரல்கள் வழியாக நீர் புகட்டப்படுகிறது என்ற கருத்து திருக்குர்ஆனுக்கு எதிரான பொய்யான கருத்து என்பது சந்தேகம் இல்லாமல் உறுதியாகிவிட்டது.
அது மட்டுமின்றி “அவனுடைய செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயனளிக்கவில்லை.“ என்று அல்லாஹ் கூறியுள்ளான். அதாவது அபூ லஹப் உண்மையிலேயே நன்மையைச் சம்பாதித்திருந்தாலும் அது அவனுக்குப் பயனளிக்கவில்லை என்பதுதான் இவ்வசனத்தின் தெளிவான கருத்தாகும். அவ்வாறு இருக்ககையில் அவன் ஸுவைபாவை விடுதலை செய்தது நற்காரியமாகவே இருந்தாலும் அது எவ்வாறு அவனுக்குப் பயனளிக்கும்?
பயனளிக்காது எனும் போது அக்காரியத்திற்காக அல்லாஹ் அவனுக்கு நீர் புகட்டுகிறான் என்று குறைந்த பட்ச அறிவுடைய யாராவது வாதிப்பாரா?
அபூ லஹப் காஃபிராகத்தான் மரணிப்பான் என்று அவன் உயிருடன் இருக்கும் போதே திருக்குர்ஆன் முன்னறிவிப்புச் செய்தது. அது போன்றே அவன் காஃபிராகத்தான் மரணித்தான். ஒருவன் காஃபிராக மரணித்து விட்டான் என்றால் அவனது எந்த நல்லறமும் மறுமையில் பயணளிக்காது என்று திருமறைக் குரஆனில் ஏராளமான இறைவசனங்கள் குறிப்பிடுகின்றன. அது தொடர்பாக ஒரு சில ஆதாரங்களைக் காண்போம்.
நாம் அவர்கள் செய்த செயல்களில் கவனம் செலுத்தி, அவற்றைப் பரத்தப்பட்டப் புழுதியாக ஆக்கி விடுவோம்.
(அல்குர்ஆன் 25: 23)
அவர்கள்தான், தம் இறைவனின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் மறுத்தவர்கள். அதனால் அவர்களின் செயல்கள் அழிந்து விட்டன. எனவே மறுமை நாளில் அவர்களுக்காக எந்த எடையையும் நிறுவ மாட்டோம்.
(அல்குர்ஆன் 18 : 105)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே! இவை அவருக்கு (மறுமை நாளில்) பயனளிக்குமா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவருக்குப் பயனளிக்கா; அவர் ஒரு நாள்கூட "இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!' என்று கேட்டதேயில்லை'' என்று பதிலளித்தார்கள்
நூல் : முஸ்லிம் (365)
காஃபிர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகி விடும், அழிந்து விடும், அவற்றுக்கு எந்த நற்கூலியும் மறுமையில் கிடையாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் குறிப்பிட்ட பிறகு அபூ லஹப் என்ற காஃபிரின் செயலுக்கு மட்டும் அல்லாஹ் எவ்வாறு கூலி வழங்கியிருப்பான் என்பதை இந்த மவ்லிதுக் காவலர்கள் சிந்திக்க வேண்டாமா?
இப்படி முழுக்க முழுக்க திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ள இந்தக் கட்டுக்கதையைத்தான் தமது வழிகேட்டுக்கு ஆதாரவாக மவ்லித், மீலாதுப் பாதுகாவலர்கள் முன்வைக்கின்றனர்.
அது மட்டுமல்ல ஒன்றை மார்க்கச் சட்டம் என்று நிரூபிப்பதற்கு குர்ஆன் சுன்னா எனும் இறைச் செய்திகள் ஆதாரமா? அல்லது யாரென்றே தெரியாத ஒருவன் தான் கனவில் கண்டதாகக் கூறிய கட்டுக் கதை ஆதாராமா? மவ்லிதுப் பிரியர்கள் இதைச் சிந்திக்க வேண்டாமா?
இந்தக் கனவைக் கண்டவர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் என்று மற்றொரு பொய்யான அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்கள் இந்தக் கனவைக் கண்டதாகக் கூறியிருந்தால் அக்ககாலகட்டத்தில் அவர் காஃபிராக இருந்தார். ஒருவர் முஃமினாக இருந்தாலும் அவர் கண்ட கனவு மார்க்க ஆதாரமாகாது எனும் போது அப்பாஸ் அவர்கள் காஃபிராக இருக்கும் போது கண்ட கனவு எப்படி ஒரு மார்க்கச் சட்டத்திற்கு ஆதாரமாக ஆகும்?
இவ்வாறுதான் இந்த மீலாது. மவ்லித் வழிகேடுகளை நியாயப்படுத்துவதற்காக எடுத்து வைக்கப்படும் எந்த ஒரு ஆதாரமும் அதன் சரியான கருத்திலிருந்து திரிக்கப்பட்ட ஆதாரமாக இருக்கும்., அல்லது பொய்யான செய்திகளாக இருக்கும். இந்த வழிகேடுகளுக்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்பது மட்டுமே உண்மை. இந்த வழிகெட்ட அனாச்சாரங்களிலிருந்து அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுகாப்பானாக!
No comments:
Post a Comment