இறைவனுக்கு மட்டுமே உரிய ஆற்றல், பண்புகள் இறைவன் அல்லாதவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களை இறைவன் அல்லாதவர்களுக்குச் செய்வதும் நிரந்தர நரகில் தள்ளக்கூடிய மாபெரும் இணைவைப்புக் காரியமாகும்.
இந்த மவ்லிதை ஓதக் கூடியவர்கள் எப்படியெல்லாம் இணைவைப்பில் வீழ்கிறார்கள் என்பதற்குரிய சான்றுகளைக் காண்போம்.
இறைவன் மட்டும்தான் நமது பிரார்த்தனைகளைச் செவியுறுபவன். இறைவன் மட்டும் எவ்வாறு செவியேற்று, அறிந்து, பதிலளிப்பானோ அது போன்ற ஆற்றல் இறைவன் அல்லாதவர்களுக்கு உள்ளது என்று நம்பி அவர்களை அழைப்பதும், இறைவன் மட்டுமே் நிறைவேற்றுவதற்கு ஆற்றல் பெற்ற விசயங்களை இறைவனல்லாதவர்களிடம் வேண்டுவதும் “துஆ” என்ற வணக்கத்தில் செய்கின்ற இணைவைப்பாகும்.
சுப்ஹான மவ்லித் என்று சொல்லப்படக்கூடிய இந்தப் புத்தகத்தின் பெரும்பகுதி பாடல்கள் இறைவனிடம் பிரார்த்திப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்களிடம் பிரார்த்திப்பதாகவே அமைந்துள்ளது.
நபி (ஸல்) பிரார்த்தனைக்குப் பதிலளிப்பார்கள் என்றும், நாம் அவர்களிடமே பிரார்த்திக்க வேண்டும் என்று நேரடியாகவே மவ்லிதுப்பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
مُتْسَجِيْبُ الدَّعَوَاتِ
அகமுணர்ந் திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே.
إِنَّا بِهِ نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ
நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பார்கள் என்றும், ஒவ்வொரு தண்டனையைத் தடுப்பதற்கும் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம் என்று குறிப்பிடுவதின் மூலம் தெளிவான இணைவைப்புக் கருத்துக்களை இந்த வரிகள் தாங்கி நிற்கின்றன என்பதை யாரும் மறுக்கவியலாது.
இதோ இஸ்லாம் போதிக்கும் அடிப்படையைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“துஆ” என்பதுதான் வணக்கமாகும். பிறகு
“என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அல்குர்ஆன் 40 60) என்ற வசனத்தை ஓதினார்கள்
அறிவிப்பவர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல் திர்மிதி (891)
உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்.
(அல்குர்ஆன் 1:5)
அவனே உங்கள் இறைவனான அல்லாஹ். அவனுக்கே அதிகாரம் உரியது. அவனையன்றி யாரை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் சிறிதளவு கூட அதிகாரம் பெற மாட்டார்கள். நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்தால் உங்கள் பிரார்த்தனையை அவர்கள் செவியுற மாட்டார்கள். (ஒரு வாதத்திற்கு) அவர்கள் செவியுறுவதாக இருந்தாலும் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். நீங்கள் இணை வைத்ததை மறுமை நாளில் அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போன்று உமக்கு யாரும் அறிவிக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 35 : 13, 14)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களின் பின்னால் (வாகனத்தில்) இருந்தேன். அப்போது நபியவர்கள் ”சிறுவனே ! நான் உனக்கு சில வார்த்தைக்களை கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டு ”நீ அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை அவனை உனக்கு முன்பாக பெற்றுக் கொள்வாய். நீ (எதைக்) கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! நீ அறிந்து கொள் ! ஒட்டுமொத்த சமுதாயமும் உனக்கு ஏதாவது ஒன்றி நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக ஒன்றுபட்டாலும் அல்லாஹ் உனக்கு விதித்த ஒன்றிலேயே தவிர அவர்கள் உனக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. அவர்கள் உனக்கு ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு விதித்த ஒன்றை தவிர வேறு எந்த பாதிப்பும் அவர்களால் உனக்கு ஏற்படுத்த முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டது. ஏடுகள் காய்ந்து விட்டது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : திர்மிதி (2440)
நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள ஆதாரங்கள் தவிர இன்னும் ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் அல்லாஹ்விடம் மட்டும்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற தவ்ஹீதின் அடிப்படையை தெளிவாக எடுத்துரைக்கும் போது அந்த வணக்கத்தை நபிகள் நாயகத்திடம் செய்தால் மறுமையில் நாம் நிரந்தர நரகத்தில் இருந்து தப்பிக்க இயலுமா? என்பதை இதை ஓதக்கூடியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment