மறைவானவற்றை அறியக்கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான். இந்த ஆற்றல் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறுயாருக்கும் கிடையாது.
ஆனால் மவ்லிதில் இடம் பெற்றிருக்கும் வரிகள் இந்த தவ்ஹீதின் அடிப்படைக்கு எதிராக மாபெரும் இணைவைப்பில் தள்ளக்கூடியவையாக அமைந்துள்ளன. இதோ சுப்ஹான மவ்லிதில் இடம் பெற்றிருக்கும் வரியைப் பாருங்கள்!
عَالِمُ سِرٍّ وَأَخْفى
அகமிய ரகசியம் அறிபவரே, ஆழிய மர்மம் அறிபவரே,
அது போன்று மவ்லிதுக்கு நிகராக பரேலவிகளால் மதிக்கப்படும் கவிதைகளில் ஒன்று புர்தாஹ் எனும் கவிதை நூல் ஆகும், இந்த நூலிலும் ஏராளமான இணைவைப்பு வரிகள் நிறைந்துள்ளது. அதில் இடம் பெற்றும் இரு வரிகைளைப் பாருங்கள்.
فَاِنَّ مِنْ جُوْدِكَ الدُّنْيَا وَضَرَّتَهَا وَمِنْ عُلُوْمِكَ عِلْمُ اللَّوْحِ وَالْقَلَمِ
ஏனெனில் நிச்சயமாக இவ்வுலகும் அதன் சக்களத்தி(யான மறுமை)யும் உங்களது கொடைத்தனை்மையில் இருந்து உள்ளவையாகும். லவ்ஹு(ல் மஹ்ஃபூழ்) எனும் ஏடு மற்றும் (அதில் பதிவு செய்யும்) எழுதுகோல் ஆகியவற்றினுடைய ஞானமாகிறது உங்களது ஞானங்களிலிருந்து உள்ளதாகும்.
(புர்தாஹ் 154 வது பாட்டு)
பாதுகாக்கப்பட்ட ஏடான லவ்ஹுல் மஹ்ஃபூழில் உள்ள ஞானம் கூட இறைத்தூதரின் ஞானங்களில் சிறு பகுதிதான் என்றால் இதைவிடவும் இணைவைப்பு வேறு ஏதேனும் இருக்க முடியுமா?
முகம்மது (ஸல்) அவர்களிடமிருந்துதான் அல்லாஹ்வே கல்வி பெற்றுள்ளான் என்று இந்த வழிகேடர்கள் துணிந்து கூறவருகிறார்களா?
இது போன்றவற்றிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோமாக!
மறைவான ஞானம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்பதை ஏராளமான திருமறை வசனங்களும், நபிமொழிகளும் எடுத்துரைக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றைக் காண்போம்.
“அல்லாஹ்வையன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவானதை அறிய மாட்டார்கள்; தாம் எப்போது (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவோம் என்பதையும் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 27:65)
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அவற்றை அறிய முடியாது. அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிகிறான். அவன் அறியாமல் ஓர் இலைகூட உதிர்வதில்லை. பூமியின் இருள்களிலுள்ள விதையும், பசுமையானதும், உலர்ந்ததும் தெளிவான ஏட்டில் இல்லாமலில்லை.
(அல்குர்ஆன் 6:59)
(நபியே!) “என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருப்பதாக நான் உங்களிடம் கூற மாட்டேன். மறைவானதை நான் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர எதையும் நான் பின்பற்றுவதில்லை” என்று கூறுவீராக! “பார்வையற்றவனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் 6:50)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்து. அல்லாஹ்வைத் தவிர அவற்றை வேறு யாரும் அறிய மாட்டார்கள். நாளை நடப்பதையும், கருவில் உள்ளவற்றையும், மழை எப்போது பொழியும் என்பதையும், ஒரு ஆத்மா எப்போது மரணிக்கும் என்பதையும் மறுமை நாள் எப்போது நிகழும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்.
அறிவிப்பவர். இப்னு உமர் ரலி நூல். புகாரி 4697
நாங்கள் மதீனாவில் ஆசூரா நாளன்று இருந்தோம். அப்போது சில சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்து பாடிக் கொண்டிருந்தார்கள்.அப்போது ருபைய் பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். இது பற்றி அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள், எனது திருமணநாளன்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள், பத்ருப் போரில் கொல்லப்பட்ட அவர்களின் முன்னோர்களைப் பற்றி புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். அதில் எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார் என்று அவ்விரு சிறுமிகளும் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள். நாளை நடப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஹுஸைன், நூல்: இப்னுமாஜா (1897)
இச்செய்தி புகாரி (4001) வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது.
மறைவானவற்றை அறியும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இத்தவ்ஹீதின் அடிப்படையை தகர்த்து, இணைவைப்பில் தள்ளக்கூடியதாகத்தான் மவ்லிதின் வாசகங்கள் அமைந்துள்ளன என்பதை அதை ஆதரிப்பவர்கள் சிந்தித்துப் பார்த்து இந்த இணைவைப்பு எனும் மாபாதகத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் இது போன்ற இணைவைப்புக் காரியங்களிலிருந்து நாம் அனைவரையும் பாதுகாப்பானாக!
No comments:
Post a Comment